போர்க்கால இலக்கியம் -- ஈழப்போருக்கு முன்பும் பின்னரும் ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 15 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பித்த உரை ! முருகபூபதி

 

போர்க்கால இலக்கியம்பற்றி பேசுவதற்கும் நாம் மற்றும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடும் காலத்திலும் தயாராகியிருக்கின்றோம்.

 

இனி கொரோனா கால இலக்கியம் என்பதும்  பேசுபொருளாகிவிடும். சமகால போராட்டத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி தேவைப்பட்டிருந்தமைபோன்று,  ஈழவிடுதலைப்போரில் எமது மக்களின் பாதுகாப்பிற்கு  பதுங்கு குழிகள்தான் தேவைப்பட்டன. அப்படியிருந்தும் பதுங்கு குழிகளை நோக்கியும் எறிகணை வீச்சுக்கள் நிகழ்ந்தன. குண்டுகள் பொழியப்பட்டன.

 


அவ்வாறு 1937 ஏப்ரல் 26 இல், நாஜி விமானப் படை,  குவர்னிக்கா நகர் மீது குண்டுவீசித் தாக்கியது.  இதுவே  உலக வரலாற்றிலேயே முதலாவது சர்வாதிகாரக் குண்டுவீச்சு என்பதை அடையாளப்படுத்தும்  ஓவியர் பிக்காசோ வரைந்த  குவார்னிக்கா ஓவியத்தில்  போரின் கொடுமை சித்திரிக்கப்பட்டவாறு,  உலகெங்கும் நிகழ்ந்திருக்கும் -  நீடித்திருக்கும்  போரின் கொடுமைகளை -  மக்கள் சுமந்த வலிகளை போர்க்காலத்திலும் போர்கள் முடிவுற்ற பின்னரும்   இலக்கியங்கள் வரைந்துள்ளன.

 

2003  ஆம் ஆண்டு, ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையிலும்கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயக்கத்தின் வெளிப்பாட்டை -  குறிப்பிட்ட குவார்னிக்கா ஓவியத்தையும்   தற்காலிகமாக மறைக்க முயன்ற  செய்தியையும் நாம் கடந்துவந்துள்ளோம்.

 

ஒரு ஓவியத்திற்கே இந்தக்கதி என்றால்,  இலக்கியத்திற்கும் அந்தத் துர்ப்பாக்கியம் நேராது என்பது என்ன நிச்சயம்..? அதனால் போர்க்கால இலக்கியம் பற்றி தொடர்ந்தும் பேசப்படுகிறது.

 

போர்க்காலத்தை   எமது கீழைத்தேய காவிய மரபிலிருந்தும் தமிழ்மரபிலிருந்தும்,  மேற்கத்தைய உலக வரலற்றிலிருந்தும் அவதானித்திருக்கின்றோம்.

 

மகாபாரதமும், இராமாயணமும் போரைச் சித்திரித்தவை. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாற்றிலும் போர்க்காலம் தவிர்க்கமுடியாதது.

 

இலங்கையில் எள்ளாலன் -  துட்டைகைமுனு தொடக்கம்,  போர்த்துக்கீசிய – ஒல்லாந்தர் – பிரிட்டிஷார் காலம் வரையில் நீடித்த போர்க்காலத்தை வரலாற்று ஏடுகள் மட்டுமல்ல, சிங்களத் திரைப்படங்களும் சித்திரித்துள்ளன.

 

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் சந்தேசிய – மற்றும் வீரபுரன் அப்பு முதலான திரைப்படங்கள் உதாரணம்.

 

அலெக்ஸாண்டர் – நெப்போலியன் காலமும் போர்க்காலம்தான்.  மனிதகுலம் தோன்றியது முதல் போரும் இணைந்திருக்கிறது.

 

கண்ணகி காவியத்திலும் மதுரை மீதான  தீவைப்பும் ஒருவகை போர்க்குணம்தான்.

 

ஈழத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் போர்க்கால இலக்கியம் முக்கிய பேசுபொருளாகியது.

 

கதைக்குள்  கதைசொல்தல் என்பார்களே – அவ்வாறு இக்கட்டுரைக்குள் ஒரு கதை சொல்கின்றேன்.

 

1971 – 1972 காலப்பகுதி இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒரு இளைஞர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அதேசமயம் மற்றும் ஒரு  பாடசாலை ஆசிரியரும் அங்கே தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

 

மீசை அரும்பும் பருவத்திலிருந்த அந்தத்  தமிழ்இளைஞன், அந்த ஆசிரியரைப்பார்த்து, “  அய்யா… உங்களைப் பார்த்தால் அப்பாவியாக தோற்றமளிக்கிறீர்கள். எதற்காக உங்களை இங்கே தடுத்துவைத்து விசாரிக்கிறார்கள்…? “  எனக்கேட்கிறான்.

 

அதற்கு அவர். நான் புங்குடுதீவில் ஒரு பாடசாலையின் ஆசிரியர். அங்கிருக்கும் கண்ணகி அம்மன் கோயில் கிணற்றில்  தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மேல்சாதிக்காரர் மறுக்கிறார்கள். அதனைக்கண்டித்து,  அந்தக்  கோயில் முற்றத்தில் நான் உண்ணாவிரத அகிம்சைப்போராட்டம் நடத்தினேன்.

அந்தச்  சாதிமான்கள் பொலிஸை ஏவிவிட்டு, என்னை அடித்து இழுத்துவந்து இங்கே விசாரிக்கிறார்கள்.  “  எனச்சொல்கிறார்.

 

உடனே அந்த இளைஞர்,  “  சேர்… உங்களுக்கு என்ன விசரா… பைத்தியமா… உதுக்குப்போய் அகிம்சை -   உணவு மறுப்பு சத்தியாக்கிரகம் என்று ஏதோவெல்லாம் செய்து உங்களை வருத்தி மினக்கெட்டுள்ளீர்கள். நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும் தெரியுமா….?  அந்த மேல்சாதிக்காரன்களின் வீடுகளிலிருக்கும் கிணறுகளில் எல்லாம் கிருமிநாசினி, பொலிடோல் ஊற்றியிருக்கவேண்டும். அவ்வாறு அவர்களுக்கு எதிராக போராடாமல் செத்துப்போன காந்தீயத்தை உவங்களுக்கு போதிக்கப்போனீர்களா..?  “ எனக்கேட்டான்.

 

உடனே அந்த ஆசிரியர், “ தம்பி… நீர் யார்… உமது பெயர் என்ன.? எதற்காக உம்மை இங்கே தடுத்துவைத்துள்ளார்கள்..?“ எனக்கேட்கிறார்.

 

 “ நான் யாழ்ப்பாணம் மேயர் அல்ஃபிரட் துரையப்பாவின் காருக்கு குண்டு பொறுத்தினேன். இன்ஸ்பெக்டர் சந்திரசேகராவின் பொலிஸ் வாகனத்திற்கு கைக்குண்டு எறிந்தேன் .. “ என்று அந்த இளைஞர் சொன்னார்.

 

அந்த இளைஞரின் பெயர் உரும்பராய் சிவகுமாரன்.

அந்த ஆசிரியரின் பெயர் மு. தளையசிங்கம்.

 

 பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் தளையசிங்கம் தனது தம்பி பொன்னம்பலத்திடம், “ எதிர்கால இளைஞர்கள் இனிமேல் அகிம்சைப்பாதையை தெரிவுசெய்யமாட்டார்கள். அவர்களுக்கு ஆயுதம்தான் போராயுதமாக இருக்கும்.  “ எனச்சொல்கிறார். 

 

தளையசிங்கம் ஏற்கனவே பொலிஸ்தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமையால், உட்காயங்களின் பாதிப்பில் 1973 ஆம் ஆண்டு இறந்தார்.

 

உரும்பராய் சிவகுமாரன் அடுத்த  1974 ஆம் ஆண்டு சயனைற் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

 

ஆனால்,  மு.தளையசிங்கம்  இந்தச்சம்பவங்களுக்கு முன்னர் எழுதிய  ஒரு தனி வீடு இலங்கையில் 1958 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் பின்னணியை சித்திரிக்கும்  நாவலாக  அமைந்தது.  அது நகரும் காலம்: 1950 – 1960.

அவரது முதல் நாவல், தனி வீடு 1962 இல்  எழுதப்பட்டு 1984 இல் அவர் இறந்து 22 வருடங்களுக்குப் பிறகு தான் வெளிவந்தது.

 

ஈழத்தமிழருக்கு தனிநாடுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும் என்ற செய்தியைக்கூறும் படைப்பாகவும்,  இன ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு முதலான மார்க்ஸீய – கம்யூனிஸ  சுலோகங்களை விமர்சிக்கும் நாவலாகவும் அமைந்தது.

 

ஈழத்தின்  இடதுசாரி  முற்போக்கு இலக்கிய விமர்சகர்கள் பலரின்  எதிர்வினைகளுக்கு ஆளாகிய மு. தளையசிங்கம்,  பொலிஸ் நிலையத்தில் அடக்குமுறைக்கு ஆளாகியிருந்தபோது சந்தித்த முதல் ஈழ தற்கொலைப் போராளி பற்றியும் சொல்லிவிட்டுத்தான் மறைந்துள்ளார்.


அவர் இறப்பதற்கு முன்னர், இலங்கையில் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும் அறிகுறியை, தான் சிவகுமாரன் என்ற இளைஞரிடம் கண்டுகொண்டதாக சொல்லியிருக்கிறார்.

 

இதேவேளை,  இலங்கையின் வடபுலத்தில்  அடிநிலை மக்களின் ஆலயப்பிரவேசப்போராட்டம், தேநீர்க்கடை பிரவேசப்போராட்டம் என்பன,  ஈழத்தின் மூத்த எழுத்தாளர்கள் கே. டானியல், செ. கணேசலிங்கன் ,  என். கே. ரகுநாதன், டொமினிக்ஜீவா,  முதலானோரின் மக்களின்  பாதிக்கப்பட்ட  மக்களின் போர்க்குணம் பற்றிய படைப்புகள்  தமிழ் ஈழப்போருக்கு  முன்னரே வெளியாகிவிட்டன.

 

டானியலின் பஞ்சமர், போராளிகள் காத்திருக்கின்றனர், அடிமைகள், செ. கணேசலிங்கனின்  நீண்டபயணம், சடங்கு,  மண்ணும் மக்களும் முதலான நாவல்கள் முக்கியமானவை.

காலங்கள் உருண்டோடின. அகிம்சையில் ஆரம்பித்த போராட்டம்,  ஆயுதப்போராட்டமாக பல்லாயிரம் மக்களை பலிகொடுத்துவிட்டு, தற்போது கடந்த இரண்டுவருடகாலமாக , போரின்போது சரணடைந்து காணாமல் போனவர்களை மீட்டுத்தாருங்கள் என்ற கோசத்துடன்  தாய்மாரின் கவனஈர்ப்பு போராட்டமாக  மாறி, மீண்டும் அகிம்சைப்போராட்டங்களின் பாதைக்கு திரும்பியிருக்கிறது.

இந்தப்பின்னணியில் போருக்கு முந்திய – பிந்திய போர்க்கால இலக்கியம் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்.

 

எனது இந்த உரையில் நான் பிரதானமாக எடுத்துக்கொண்டது, ஈழத்தில்  போருக்கு முந்திய போர்க்கால இலக்கியம் என்ற தலைப்புத்தான்.

 

ஈழத்தில் ( இலங்கையின் மறுபெயர் ஈழம்  ) தமிழ் இளைஞர்கள் மாத்திரம் ஆயுதம் ஏந்திப்போராடவில்லை. அவர்களது விடுதலைப்போராட்ட வரலாறு இலக்கியமானது போன்று,  தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி என்ற சிங்கள இளைஞர்களினால் தொடங்கப்பட்ட  ஜே.வி.பி என்ற அமைப்பு 1971 ஆம் ஆண்டில் நடத்திய போராட்டம் குறித்தும் சிங்களத்தில் இலக்கியங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 

இவை பற்றிய பொதுவான புரிதல் தமிழர் தரப்பில் இன்னமும் இல்லை என்பதையும்  நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

கிருஷாந்தி குமாரசுவாமி  என்ற  19 வயதுள்ள   யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி  கைதடி இராணுவ காவலரணில்  தடுக்கப்பட்டு  மானபங்கப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டது போன்று 1971 ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் புனிதத்தலம் எனக்கருதப்படும் கதிர்காமத்தில் பிரேமாவதி மனம்பேரி என்ற இளம் யுவதியும் இராணுவத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்.

 

செல்வி கிருஷாந்தி  பற்றிய  உஷ்- இது கடவுள்கள் துயிலும் தேசம்  என்ற சிறுகதையை நாம்  இந்த 2020 ஆம் ஆண்டில் வாசிக்கின்றோம்.

 

இச்சிறுகதையை எழுதியிருப்பவர்:  இன்றைய அரங்கில் பங்கேற்றிருக்கும் எழுத்தாளர் ஜே.கே. ஜெயக்குமாரன். 

இதுவும் ஈழத்திற்கான இறுதிப்போருக்கு  முந்திய கதைதான். எழுதப்பட்டது பிற்காலத்தில்.

 

 

ஈழத்தவரின் ஈழப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு நாவல்  லங்காராணி.  கடந்த ஆண்டு இலங்கையில் மறைந்துவிட்ட  அருளர்  1978 இல் எழுதி சென்னையில்  வெளியிடப்பட்ட  நாவல்.  இதன் இரண்டாவது பதிப்பு பத்து ஆண்டுகளின் பின்னர் 1988 இல் அவர் சார்ந்திருந்த ஈரோஸ் இயக்கத்தினால் வெளியிடப்பட்டது.

 

இலங்கையில்  1977 ஓகஸ்டில் நடந்த இனக்கலவரத்தின் போது கொழும்பிலிருந்த தமிழர்களை அகதிகளாக ஏற்றி, வடபுலத்திற்குக் கொண்டு வந்த கப்பலின் பெயர்தான்  லங்காராணி.  அந்த கடற்பயணத்தின் பின்னணியில்  தென்னிலங்கையிலிருந்து புறபபட்ட  தமிழ் அகதிகளின்  உணர்வலைளை வெளிப்படுத்தி,  எரியத்தொடங்கிய ஈழத்தவரின் உயிர்பாதுகாப்பிற்கான  பிரச்சினையின் முகங்களையும்   விடுதலைப் போராட்டத்தின் தேவையையும்  இந்த நாவல் சித்திரித்தது.

 

1981 இலும் ஒரு கலவரம் வெடித்தது. இதில் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் பலர் கொல்லப்பட்டதுடன்,  தமிழர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டன.

மலையத்திலிருந்து அகதிகளாக வெளியேறிய இந்திய வம்சாவளி மக்கள், வவுனியா – முல்லைத்தீவு உட்பட்ட வன்னிப்பிரதேசங்களில் தஞ்சமடைந்தனர். அந்த வன்னி பெருநிலப்பரப்பில் முள்ளிவாய்க்காலில்தான்  இறுதிக்கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

 

 1983 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மற்றும் ஒரு இனக்கலவரம் கொழும்பில் ஆரம்பித்தது.  அந்தக்கலவரம் வெலிக்கடை சிறை படுகொலையிலும் இரண்டறக்கலந்திருந்தது.   அந்தச்சிறையிலிருந்து உயிர்தப்பிய போராளிகள்  மீண்டும் அரசியல் பிரவேசம் செய்து ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து,  வடக்கு – கிழக்கு முதலமைச்சரானது முதல்   இன்றைய  அரசின்  அமைச்சராகியிருக்கும்  செய்திகளையும் நாம் கடக்கின்றோம்.

 

போர்க்கால இலக்கியத்தில் இச்செய்திகளும் பேசுபொருளாகும் !

 

1983 இற்குப்பின்னர், ஈழவிடுதலைப் போராட்டம் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதன் பின்னணியில் புதியதோர் உலகம் என்ற நாவல் கோவிந்தன் என்ற போராளியால் எழுதப்பட்டு சென்னையில்  வெளியானது.

 

1977 – 1981 காலப்பகுதியில் தென்னிலங்கை மற்றும் மலையகத்திலிருந்து மன்னார் – வன்னிப்பகுதிக்கு அகதிகளாகச்சென்று குடியேறிய மக்களின் தேவைகளை கவனித்த உமாமகேஸ்வரனின் புளட் என்ற இயக்கத்திலிருந்து வெளியேறிய கோவிந்தன்,  அவ்வியக்கத்தின் உள்முரண்பாடுகளை அதில் சித்திரித்திருந்தார். சகோதரப் படுகொலைகளின் தொடக்கப்புள்ளியை இந்த நாவல் காண்பித்தது.

 

அந்த கோவிந்தனும் பின்னர் கொல்லப்பட்டார்.

 

முறிந்த பனை என்ற மற்றொரு நூலும் ஈழப்போராட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டது. அது நாவல் அல்ல.  எனினும் அதனை எழுதியவர்களில் ஒருவரான மருத்துவ விரிவுரையாளர்  ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

 

இலங்கையின் போர்க்காலத்தில் இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரான பொலிஸ், கடற்படை,  விமானப்படை, அதிரடிக் கொமான்டோ படையினரால் கொல்லப்பட்டவர்கள் பற்றியும்,  அதே சமயம் இனந்தெரியாதவர்கள் என்ற நாமத்திற்குரியவர்களினாலும் கொல்லப்பட்டவர்கள் பற்றியும் படைப்பு இலக்கியங்கள் வெளிவந்துள்ளன.   இந்த இனந்தெரியாதவர்கள் யார் என்பதை என்போன்ற போர்க்காலச்செய்திகளை எழுதியவர்கள் கூர்ந்து அவதானித்தால் யார் அவர்கள்…?  என்பதை  துல்லியமாக அடையாளம் கண்டுவிடுவார்கள்.

 

எனினும் அவர்கள் தங்கள்  தற்காப்பிற்காக பாவிக்கும் புனிதமான சொல்தான் இனந்தெரியாதவர்கள்..!

 

சோசலிசத் தமிழீழத்தை நோக்கி 

அரசியலும் இராணுவமும் -     ஒன்றிணைந்து போராடுவோம் -  சோசலிசத் தத்துவமும் கெரில்லா யுத்தமும் -   தமிழ்த் தேசியமும் சமுதாயக் கொந்தளிப்பும்

முதலான பல வரலாற்று நூல்களும்

 

  மரணத்துள் வாழ்வோம் - மரணம்  -

ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை -

இரண்டாவது சூரிய உதயம் -   யமன் -  கானல் வரி -  எலும்புக்கூடுகளின் ஊர்வலம் -   நீ இப்பொழுது இறங்கும் ஆறு  -   மீண்டும் கடலுக்கு  -     ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் -   சூரியனோடு பேசுதல் - 

நமக்கென்றொரு புல்வெளி  -  ஒரு அகதியின் பாடல் -  இரத்த புஷ்பங்கள்  -  பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்  -  வியாசனின் உலைக்களம் - இனி ஒரு வைகறை - இந்த மண்ணும் எங்கள் நாட்களும் 

 உட்பட ஏராளமான கவிதைத் தொகுப்புகளும்   இறுதி ஈழப்போருக்கு முன்னரே வெளியாகிவிட்டன.

 

கவிஞர்கள் சேரன், செழியன்,  வ.ஐ.ச. ஜெயபாலன் , காசி ஆனந்தன் , புதுவை இரத்தினதுரை , கி.பி. அரவிந்தன் ,  மு.புஷ்பராஜன், , க.ஆதவன், எம்.ஏ.நுஃமான், ஹம்சத்வனி, கவியரசன், சு.வில்வரத்தினம், அ.யேசுராசா,  சிவரமணி, செல்வி உட்பட பலர் ஈழப்போரியல் வரலாற்றை கவிதைகளாக வடித்தவர்களில்  குறிப்பிடத்தகுந்தவர்கள்.

 

கவிஞர் செல்வியும் காணாமல்போனார். கவிஞர் சிவரமணி தற்கொலை செய்துகொண்டார். !

 

    வலிசுமந்தவர்கள், பரதேசிகளாய் உலகெங்கும் அலைந்துழல்பவர்கள் படைப்புகளில் ஈழக்கனவு முன்பும் இருந்தது. தற்பொழுதும் இருக்கிறது.

புனைவு இலக்கியமான சிறுகதைகள் – நாவல்களிலும் எதிரொலித்தது.

 

வாசல் ஒவ்வொன்றும் என்ற பெயரில் புதுவை இரத்தினதுரை - கருணாகரன் இணைந்து வெளியிட்ட  சிறுகதைத் தொகுதி - போர்க்காலத்தில் வெளிச்சம் இதழின் ஆசிரியர் கருணாகரன் தொகுத்து வெளியிட்ட வெளிச்சம் சிறுகதைகள்   - சிறுகதைகள் கொண்ட தொகுதி   மற்றும்  அம்மாளைக் கும்பிடுறானுகள் என்ற    உண்மைக் கதைகள் சிலவற்றைக் கொண்ட தொகுதி,  தாமரைச் செல்வியின் அழுவதற்கு நேரமில்லை -  பச்சை வயல் கனவு  -  வீதியெல்லாம் தோரணங்கள்  ஷோபாசக்தியின் தேசத் துரோகி, கொரில்லா,  மலைமகள் எழுதிய

புதிய கதைகள் என்ற தொகுதி செங்கைஆழியானின்

யாழ்ப்பாணத்து இராத்திரிகள்,  

அக்கினிக் குஞ்சு (  குறுநாவல்  ) இரவு நேரப் பயணிகள்,                                    ( ராத்திரிய நொனசாய் என்ற தலைப்பில் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது )  கொழும்பு லொட்ஜ், தீம்தரிகிட தித்தோம், மரணங்கள் மலிந்த பூமி, வானும் கனல் சொரியும் என்பன குறிப்பிடத்தகுந்தன.

 

பிரான்ஸில் வதியும் ஷோபாசக்தி எழுதி  2004 ஆம் ஆண்டு வெளியான  ம் என்ற  நாவலும்  யாழ்ப்பாணம்  கந்தன் கருணை இல்லத்தில் நிகழ்ந்த சகோதரப்படுகொலைகள் பற்றி சித்திரித்த படைப்புத்தான்.

 

 

“  முப்பது வருடங்களாகக் கொடிய யுத்தம். ஒரு இலட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். அய்ம்பதினாயிரம் அங்கவீனர்கள். இருபதினாயிரம் விதவைகள். பத்தாயிரம்பேருக்கு பயித்தியம். பூசா, மகசீன், களுத்துறை, பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், இயக்கங்கள், மாவீரர்கள், தமிழீழ ஒறுப்புச்சட்டம், தமிழீழச்சிறை, துரோகிகள், பேச்சுவார்த்தைகள், மனுட ஒன்றுகூடல்கள், பொங்கு தமிழ், தமிழ்க்கதைகளும் பெருங்கதைகளும் சொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. எல்லாக்கதைகளையும் கேட்டுக்கேட்டு, ‘ ம் ‘ சொல்லிக்கொண்டேயிருக்கும் எம் சனங்களுக்கு…. “ என்று  ஷோபாசக்தி தனது   ‘ ம் ‘  நாவலை மக்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.

 

ஈழப்போர்க்காலக்கதைகளின் குறியீடாக இந்த சமர்ப்பணம் அமைந்துள்ளது.

 

 கனடாவில் வதியும்  தேவகாந்தன்,  ஈழப்போராட்ட வரலாற்றை முழுமையாக படைக்க முயன்றவர். அவர் எழுதிய  பெரிய  நாவல் கனவுச்சிறை . 

 

இனி வானம் வெளிச்சிடும்,  ஊழிக்காலம்  முதலான படைப்புகளை எழுதிய தமயந்தி என்ற இயற்பெயர்கொண்ட தமிழ்க்கவி ,   சந்திரகலா என்ற இயற்பெயர்கொண்ட வெற்றிச்செல்வி எழுதிய போராளியின் காதலி, வெண்ணிலா,  தமிழ்நதியின் பார்த்தீனியம்  என்று பல நாவல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

 

போராளிகள்  இனத்தை, மக்களை,  மொழியை,  போர்க்களத்தில் ஏந்திய ஆயுதங்களை எவ்வாறு நேசித்தார்களோ அதேயளவு நேசிப்பு காதலிலும் அவர்களுக்கு  இருந்திருக்கிறது என்பதையும்  இந்த புனைவுகள் சித்திரித்துள்ளன.

 

தமிழ்நதியின் பார்த்தீனியம்  1987 இல் கொழும்பில் கைச்சாத்தான இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் இந்திய அமைதிப்படையின் பிரவேசம் முதல் அது  வெளியேறிய காலப்பகுதிவரையில் சித்திரித்த நாவல்.

 

அமைதிப்படை என்ற பெயரில் வந்தவர்கள் விடுதலைப்புலிகளை தேடி அழிக்கும் வேட்டையில் ஈடுபட்டபோது, ஒரு வீட்டின்   சுவரில் தொங்கிய மகாத்மா காந்தியின் படமும் சுடுபட்டு சிதறி விடுகிறது.

 

தமிழக எழுத்தாளர் வாசந்தியும் நிற்க நிழல்வேண்டும் என்ற பெயரில் ஒரு புதினம் ஈழப்போராட்டம் குறித்து எழுதியிருக்கிறார். அத்துடன் ராஜம் கிருஷ்ணனும்  நீடித்த ஈழப்போரினால் அகதிகளாகி இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தஞ்சமடைந்த ஈழ அகதிகள் பற்றி மாணிக்க கங்கை என்ற நாவலை எழுதியுள்ளார்.

 

செங்கை  ஆழியானின் கதைகள்  ஜனரஞ்சகமாக அமைந்திருந்தமையினால் அதில் இசங்கள் தேடுவோரும் நவீனத்துவத்திற்கு பல பெயர்களை   சூட்டியிருப்போரும், இவரை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால்,  அவர் தனக்கென பெரிய வாசகர் கூட்டத்தை   வைத்திருந்தார். அவருடைய கையெழுத்தும் அழகானது. விரைந்து  எழுதும்  ஆற்றல் அவருக்கு கைவந்த  கலை.   யாழ். நூலகம்  எரிக்கப்பட்ட வேளையிலும் அதன்  பின்னர்  அங்கு  நடந்த  அநியாயங்களையும் ஒரே இரவில் கண்விழித்து இவர்  புனைபெயரில்  நூல்கள் எழுதியிருக்கிறார்.

 

மூத்த  இலக்கியவாதி  வரதரின் வேண்டுகோளை ஏற்று அவர் அந்தப்பணியை செய்தார். இவருடைய  அண்ணன்  புதுமைலோலன் என்ற    எழுத்தாளர்  தமிழரசுக்கட்சி கொழும்பு  காலிமுகத்திடலில்  1961 இல் நடத்திய  சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது  பொலிசாரின் குண்டாந்தடி   பிரயோகத்திற்கு  இலக்காகி கைமுறிந்து  சிகிச்சை பெற்றவர். பின்னாளில்  அவருடைய  ஒரு  மகன் இயக்கப்போராளியாக களத்தில் மரணமுற்றார். சாத்வீகத்தையும்  ஆயுதப்போராட்டத்தையும்  இணைத்து                             தீம்  தரி கிட  தித்தோம்   என்ற   நாவலையும் செங்கை ஆழியான்  எழுதியுள்ளார்.

 

ஈழப்போராட்டத்தில்    புலிகள்,   பிரபாகரன்  தலைமையில்                                  நடத்திய ஒரு   முக்கியமான  கெரில்லாத்தாக்குதல் கொக்குவில்   பிரம்படி  என்ற  இடத்தில் நடந்தது.    அதில்  பல  இந்தியப்படையினர்  கொல்லப்பட்டனர்.   இந்தத்  தாக்குதல்    பற்றி  புலிகளிடம்  மாற்றுக்கருத்துக்கொண்டிருந்த புஷ்பராசாவும்  ஈழப்போராட்டத்தில்   எனது    சாட்சியம்         என்ற   தமது    நூலில்  குறிப்பிட்டுள்ளார்.   இச்சம்பவத்தின்              பின்னணியில்  செங்கை   ஆழியான்  ஒரு வித்தியாசமான                     சிறுகதை  எழுதியிருந்தார்.   அச்சம்பவத்தில்  கொல்லப்பட்ட  இந்தியத் தளபதியின்  மகள்  ஒருத்தி  தனது  தந்தை   கொல்லப்பட்ட    இடத்தை   தேடிவந்து  பார்ப்பது  பற்றிய  சிறுகதை.

அத்துடன்  இரவுப்பயணிகள்  என்ற   தலைப்பில்         மல்லிகையில்  சில போர்க்காலச் சிறுகதைகளையும்                         கிளாலிப்பாதை  ஊடாக  மக்கள் அனுபவித்த   சொல்லொனா   துயர்  பற்றிய  கதைகளும்  எழுதியவர் செங்கை ஆழியான்.

 

விடியலைத் தேடி என்ற அவருடைய மற்றும் ஒரு நாவல், நம்பி நம்பி ஏமாற்றமடைந்த தமிழ்மக்களின் ஏக்கப்பெருமூச்சுகளை சித்திரித்தது.

 

தமிழ்  ஈழத்திற்காக ஆயுதம் ஏந்திய போராளிகளினாலும் அவர்களை முறியடிக்க இலங்கை பேரினவாத அரசுகளும் இந்திய அரசும் தொடர்ச்சியாக மேற்கொண்ட  பாரிய நடவடிக்கைகளினால் தோன்றிய போர்க்கால இலக்கியம் பற்றி பேசும்போது, ஆயுதம் ஏந்தாத தமிழ்த்  தலைவர்கள் சிலர் இன்று திருவாய் மலர்ந்தருளி சொல்லும் வார்த்தைகளையும் கவனத்தில் கொள்வோமாக…

 

அவர்கள் சொல்கிறார்கள்:  “ முன்னர்  மூத்த தலைமுறையினரின்   அகிம்சைப்போர் நடந்தது. பின்னர் இளம் தலைமுறையினரின் ஆயுதப்போர் நடந்தது. இரண்டும்  தோல்வியில் முடிந்தது. அதனால், நாம் இப்போது இராஜதந்திரப்போரில் இறங்கியிருக்கின்றோம்.  “

 

இந்த இராஜதந்திரப்போர் குறித்து இன்று பேசுவோர், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர்                  “ ஐ.நா. சபையின்  அனுசரணையுடன்  போர்க் குற்றவாளிகளை மின்சாரக்கதிரைகளில் அமரவைப்போம் .   “ என்று  சூளுரைத்தார்கள்.

 

ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்னர்  அவர்கள் யாரைப்போர்க்குற்றவாளிகள் எனச்சொன்னார்களோ, அவர்களை  காலம்  இன்று அரசியல்  அரியாசனத்தில் ஏற்றிவைத்துள்ளது.

 

இந்தக்  காணோளி அரங்கு நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையிலும் யாழ்ப்பாணம் புதைகுழிகளிலிருந்து  மனித எச்சங்கள் வெளிக்கிளம்பிக்கொண்டிருக்கின்றன..!

 

இந்தக்காலம் குறித்தும் பிந்திய போர்க்கால இலக்கியம் பேசும் என நம்புவோமாக.

 

இங்கு  எனது உரையின்  முடிவற்ற முடிவிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை பற்றி  மீண்டும் ஏன் சொல்கின்றேன் என்றால்  - இந்த உரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட,

 “ 2003  ஆம் ஆண்டு, ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையிலும்கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயக்கத்தின் வெளிப்பாட்டை -  குறிப்பிட்ட குவார்னிக்கா ஓவியத்தையும்   தற்காலிகமாக மறைக்க முயன்ற  செய்தியையும் நாம் கடந்துவந்துள்ளோம்.  “ என்ற வரிகளை நினைவுபடுத்துவதற்காகத்தான் !

 

இறுதியாக அடல்ஃப்  ஹிட்லர் சொன்ன வாசகத்துடன் எனது உரையை நிறைவுசெய்கின்றேன்:

அவர் அந்த இரண்டாம் உலகப்போர் முற்றுப்பெறுவதற்கு முன்னர்,

“ போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை.  தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது “    எனச்சொல்லியிருந்தார்.

 

எமது படைப்பாளிகள் போருக்கு முந்திய காலத்தையும் பிந்திய காலத்தையும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அவைபற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.!

 

----0---

letchumananm@gmail.com

 

 

 

 

 

 No comments: