பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 13 - காதல் ஜோதி - சுந்தரதாஸ்


தமிழ் திரை உலகில் தனது கதை வசனங்களால் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் அறிஞர் அண்ணா . இவர் எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு , ரங்கூன் ராதா சொர்க்கவாசல் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை உருவாக்கி திரை உலகில் புரட்சி செய்த அண்ணா பின்னர் அரசியலிலும் சாதனை புரிந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1967 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்த அண்ணா 1969 ஆம் ஆண்டு மறைந்தார். அதற்கு அடுத்த ஆண்டு அவர் கதைவசனம் எழுதிய காதல் ஜோதி படம் வெளிவந்தது .

அண்ணாவின் பாணியிலேயே சமூகநீதி சாதிக்கு எதிரான போராட்டம் கலப்புத்திருமணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கால மாற்றத்தை கருத்தில் கொண்டு அண்ணாவின் அடுக்குமொழி வசனங்கள் படத்தில் இடம் பெறவில்லை.ஆனாலும் வசனங்கள் கவரும் வகையிலேயே அமைந்திருந்தன.



படத்தில் கதாநாயகர்களாக ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரரும் நடித்திருந்தார்கள் இவர்களுடன் காஞ்சனா நாகேஷ் சச்சு ஆகியோரும் நடித்தனர். ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக புதுமுகமான எம் பானுமதி நடித்திருந்தார். 500 படங்களுக்கு மேல் சிறுசிறு காட்சிகளில் நடித்தவர் கரிக்கோல் ராஜா அவருக்கு இந்தப்படத்தில் நல்லதொரு பாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.


இளம் விதவைக்கு மறுமணம், கலப்புத் திருமணம் என்று படத்தின் காட்சிகள் அமைந்திருந்தாலும் படத்தை பரபரப்பு குறையாமல் திருமலை, மகாலிங்கம் இருவரும் இயக்கியிருந்தார்கள் . வாலியின் பாடல்களுக்கு டி கே ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். காதல் ஜோதி அணையாதது பாடல் எஸ் பி பாலு சுசீலா குரலில் இதமாக ஒலித்தது . அறிஞர் அண்ணாவின் கடைசி படமாக அமைந்தது காதல் ஜோதி


No comments: