முரசு/நகரா – தோற்கருவி
அமைப்பு
பிரம்மாண்டமான கோப்பை அல்லது அரைக்கோள வடிவ மரப்பாண்டத்தில் எருமை அல்லது மாட்டுத்தோலால் வார்க்கப்படுவது நகரா. இப்போது புழக்கத்தில் உள்ள சில நகராக்கள் பித்தளை அல்லது இரும்பால் உருவாக்கப்பட்டவை. தோலைச் சுற்றி வார்கொண்டு இழுத்து, கீழ்ப்பகுதியில் உள்ள கயிற்றோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும்.
குறிப்பு
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பாசறைக் கருவியாகத் திகழ்ந்தது முரசு. வீரத்தின் அடையாளமாக, வெற்றியின் சின்னமாக, எதிர்ப்பின் குரலாக, எச்சரிக்கை உணர்வாக, மகிழ்ச்சியின் ஒலியாக முழங்கி, தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றிய தோற் கருவி முரசு. ஒரு தலைவனுக்கு உரிய சிறப்புகள் என்று குறிக்கப்படும் மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, கொடி, முரசு, ஆணை ஆகிய பத்தில் ஒன்றாக இடம் பெற்றது முரசு.
பண்டை இலக்கியங்களில் நகரா, முரசு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய தோற்கருவி என்பதும் மன்னர் காலங்களில் போரில் பயன்படுத்தப்பட்டது என்பதும் தகவல். தொடக்கத்தில் முரசு அரசர்களுக்கு உரியதாகவே இருந்தது(முரசுடைத் தானை மன்னர் – பெரியபு). பகைவர்களின் காவல் மரத்தை வெட்டி செய்யப்பட்டது வெற்றிமுரசு. முரசு இசைத்து பூசைகள் செய்து குருதி பலியிடப்பட்ட செய்திகள் நமக்கு இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது. “மயிர்க்கண் முரசோடு வான் பலியூட்டி” என்பது சிலப்பதிகாரம்.
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை,
ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும்பலி தூஉய்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித்தோள் இயவர்,
அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந்தலைப் பைந் நிலம் வருக, இந்நிழல் என” (பதிற்.17:5-9)
என்ற பதிற்றுப்பாடல் அடிகள் உணர்த்தும். ‘அசைதலையுடைய நீர் துளித்துளியாகச் சிதறும்படி பெரிய கடலைக் கடந்து அங்குள்ள பகைவரது காவல்மரமாகிய கடம்ப மரத்தினை வெட்டி அம்மரத்தினால் வெற்றி பொருந்திய பெரிய முரசத்தினைச் செய்தான் சேரலாதன். வீரவளையினை அணிந்த தோள்களையுடைய வீரர்கள் வீரக் கூத்தினை ஆடியவாறே அம்முரசத்தின் அருகே சென்று அரிய பலிக்குரிய பொருள்களைத் தூவி, வணங்கிப் பின்னர்க் குறுந்தடி கொண்டு அம்முரசினை அடித்தனர்’ என்று உரை விரிகிறது. ஆக சேரலாதன் கடல் கடந்து சென்று போர் செய்ததோடு மட்டுமின்றி, பகைவர்களின் காவல் மரமாகிய கடம்பினை வெட்டி அதில் தனக்கான வீர முரசினை அமைத்துக் கொண்டுள்ளான். பண்டைய தமிழர்கள் பகைவர்களின் காவல்மரத்தினால் முரசு செய்யும் மரபினைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவர் என்போர் முரசறைந்து அறிவிப்புகள் செய்த காட்சிகள் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது.
இலக்கியங்கள் பணைமுரசம் என்கிற முரசைப் பற்றி பேசுகின்றன. பெரிய புராணத்தில் திருமண நிகழ்வுகளில் இசைக்கப்பட்டதாக இது குறிப்பிடப்படுகிறது(பணைமுரசியம்ப வாழ்த்திப்
பைம்பொன்நாண் காப்புச் சேர்த்தார் - தடுத்தாட்கொண்ட புராணம்/ பணைமுரசம் எழுந்தார்ப்பக் காரைக்கால் பதிபுகுந்தார் - காரைக்காலம்மையார் புராணம்). இதற்கு பெரிய பருத்த முரசு என்று தான் விளக்கவுரைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தென் தமிழ்நாட்டில் பனைமரத்தின் அடிப்பகுதியை பயன்படுத்தி செய்த முரசு பனைமுரசு என்று அழைக்கப்பட்டதாக அறிகின்றோம். இவை இரண்டும் ஒன்று தானா என்பது எனக்குத் தெரியவில்லை.பார்க்க படம்.
நகரா மொகலாயர் கொடுத்த பெயர். நகடா, நகரா எல்லாம் ஒன்றே. முரசின் வடிவான நகரா, மொகலாயர் காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கியது. அறிவிப்புக் கருவியாக இருந்த நகராவை இசைக்கருவியாகப் பயன்படுத்திய பெருமை மொகலாயர்க்கே உரியது. மொகலாய இசைவடிவான ‘நவ்பத் கானா’வில் இசைக்கப்படும் 9 இசைக்கருவிகளில் நகராவும் ஒன்று.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு சன்னதி நேர் எதிரில் அமைந்த சிறிய மண்டபம் நகரா மண்டபம். மீனாட்சியம்மன் பூசையின் போது இம்மண்டபத்தில் உள்ள நகரா முரசு நாள்தோறும் அதிகாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும், மாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும் கொட்டப்படும். இம்மண்டபம் நகரா முரசு அடிக்கப் பயன்படுவதால் இம்மண்டபத்திற்கு நகரா மண்டபம் எனப் பெயராயிற்று. மதுரை நாயக்க மன்னர் அச்சுதராயர் காலத்தில் நகரா மண்டபம் கட்டப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இம்மண்டபத்தில் தற்போது சில வணிகக் கடைகள் உள்ளது. நகராவுடன் திமிரி நாதசுரம் மற்றும் பெரிய தாளம் ஆகிய்வையும் இசைக்கப்படும்.
"இது ராணி மங்கம்மாவின் ஆட்சியில் இருந்தே ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது" என்று பி. பாஸ்கரன் கூறுகிறார், அவர் கடந்த 25 ஆண்டுகளாக இம்மண்டபத்தில் திமிரி நாதசுரம் இசைத்து வருகிறார். "பாரம்பரிய நாயுடு சமூகத்தைச் சேர்ந்த எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பல நூற்றாண்டுகளாக இசைக்கருவிகளை வாசித்து வருகின்றனர்" என்கிறார். திரு பி.செல்வராஜ் அவர்கள் இக்கோவிலின் நகரா கலைஞர். செல்வராஜ், தனது தந்தையுடன் நகரா இசைத்து வந்தார். தாளம் இசைக்கும் திரு ஏ.சீனிவாசனும் பரம்பரையாக இதை செய்து வருகிறார். காலையில் பூபாளம் மற்றும் மாயாமாளவகௌளையும், மாலை நேரங்களில் கல்யாணி மற்றும் அம்சத்வனியையும் திமிரியில் இசைத்து நகராவும் தாளமும் உடன் இசைக்கப்படுகிறது. இந்நகரா மிகவும் தேய்ந்து போய் உள்ளது. பழுது சரி செய்ய வேண்டியுள்ளது. திரு செல்வராஜ் மற்றும் திரு. சீனிவாசன் ஆகியோர் தினசரி கூலிகள். ரூ 100 வாத்தியங்களை வாசிப்பதற்கும் கோவிலில் வேலை செய்வதற்கும் சம்பளம். முறையே எட்டு மற்றும் ஒன்பது வருட சேவைக்குப் பிறகும், அவர்களுக்கு ஒரு நிரந்தர பதவிகளைப் பெற முடியவில்லை. அப்படி கிடைத்தால் அது அவர்களுக்கு ஒரு நல்ல மாத சம்பளத்தைப் தரும். நாதசுரத்தில் தனது டிப்ளோமா சான்றிதழுடன் கோயில் சேவைகளில் நுழைவதற்கு பாக்கியம் பெற்ற திரு. பாஸ்கரனைப் போலல்லாமல், இந்த இருவரும் தங்கள் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டனர். நகரா மற்றும் தாளம் கற்பித்து அவர்களுக்கு டிப்ளோமா கொடுப்பதற்கு இசைக்கல்லூரிகள் இல்லை. மூன்று குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் யாரும் மரபுரிமையை எடுத்துக்கொண்டு நகரா மண்டபத்தின் சுவர்களுக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தயாராகவும் இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் வேறு வேலைவாய்ப்புகளை நோக்கிச் செல்கிறார்கள். இந்த மூன்று இசைக்கலைஞர்களும் நகர்ந்தவுடன், அவர்களின் நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம் பிழைக்குமா? தெய்வீக இசையைத் தொடர்வது யாருடைய பொறுப்பு? கோவில் நிர்வாகமா? அரசா?
வைணவரான திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் பூசை முடிந்த செய்தி அறிய மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரை ஒவ்வொரு மைல் இடைவெளியிலும் 50க்கும் மேற்பட்ட நகரா மண்டபங்களை அமைத்தார். இதே போன்று வீரபாண்டிய கட்டபொம்மனும் திருச்செந்தூர் முருகனுக்கு அபிஷேகம் நிறைவு பெறும் செய்தி அறிய பாளையங்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் வரை நகரா மண்டபங்களை அமைத்ததாக குறிப்புகள் உண்டு. இன்று நகராக்கள் அங்கு இல்லை. இடிந்த மண்டபங்கள் தான் அங்கு உள்ளன. வீரப்பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் நாம் இந்த செய்தி காட்சிப் படுத்தப்பட்டு இருப்பதை நாம் காணலாம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும் நகரா இசைக்கப்படுகிறது. இங்கே நகரா மண்டபம் உள்ளது. காலை மாலை வேளைகளில் காந்திமதி அம்மன் கோவில் பூசை வேளைகளில் நகரா இசைக்கப்படுகிறது. மேலும் நெல்லையப்பரின் ஆணி தேரோட்தின் பொழுது தேரின் பின்புறம் நகரா பொருத்தப்பட்டு இசைக்கப்படுகிறது. இது தேரை இழுப்பவர்கள், முட்டுக்கட்டை போடுபவர்கள் ஆகியோரை உற்சாகப்படுத்துகிறது. தேர் வளைவுகளில் திரும்பும் பொழுது நகரா வின்னதிர முழங்கி அனைவரையும் ஆரவாரம்கொள்ளச் செய்கிறது. சங்கரன் கோவிலில் சங்கரனயினார் கோவிலிலும் நகரா மண்டபமும் நகராவும் இருந்தாலும் அது இசைக்கப்படுவதாக தெரியவில்லை.
திருக்குறுங்குடி அழகிய நம்பி கோவிலில் பெருமாள் புறப்பாட்டை அறிவிக்க நகரா முழக்கப்படுகிறது. இதை நகரா சேவித்தல் என்று கூறுகிறார்கள். தரையில் வைத்து இசைக்கப்படுகிறது. மற்ற நகராக்களைக் காட்டிலும் சற்று சிறியது. நகராவுடன் தம்பாளம் மற்றும் பிரம்ம தாளமும் இசைக்கப்படுகிறது. ராமேச்வரம் போன்ற கோவில்களில் நகராவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. திருப்புல்லாணி ஆதிஜகன்னாத பெருமாள் கோவிலில் மதிய பூசை வேளையில் நகரா இசைக்கப்படும்.
”இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும், அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும், அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே” என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்தில் பாடிய பள்ளியெழுச்சி. இப்படி தொன்மையாக முரசு கொட்டப்பட்ட இடம். திருவரங்கம் பெரிய கோவிலிலும் நகரா உள்ளது. பெருமுரசு என்று அழைக்கிறார்கள். பாழடைந்து கிடந்த நகராவை அன்மையில் மருத்துவர்கள்/செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்க இசைத்தார்கள். தொடருமா என்று தெரியவில்லை.
திருக்குடந்தை ஆராவமுதன் கோவிலில் பெரிய நகரா உள்ளது. பட்டுக்கோட்டை தாலுகா மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள தெய்வ நாயக பெருமாள் கோவிலில் நடுத்தர அளவில் பழமையான நகரா உள்ளது. திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி அதிஷ்ட்டானத்தில் சரபோஜி மன்னர் காணிக்கையாக அளித்த பெரிய நகராவை நாம் காணலாம்.
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா நாட்களில் இன்றளவும் பெரிய அளவிலான நகரா வீதி உலாவின் பொழுது இசைக்கப்படுகிறது. இதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள பழமைவாய்ந்த உலகளந்த பெருமாள் கோவிலிலும் பெரிய நகரா விழா நாட்களில் மற்ற இசைக்கருவிகளுடன் சேர்த்து இசைக்கப்படுகிறது. முற்காலங்களில் மாட்டுவண்டியில் வைத்தோ அல்லது யானை மீது வைத்தோ இசைக்கப்பட்ட இந்த நகரா தற்காலங்களில் தள்ளுவண்டியில் வைத்து இசைக்கப்படுகிறது. குமரகோட்டம் முருகன் கோவிலில் இசைக்கப்பட்ட நகரா கேட்பாரின்றி பழுதடைந்து கிடக்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பெருவிழா நாட்களில் நகரா வீதி உலாவின் போது இசைக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி பவித்திர உற்சவம் எனப்படும் விழா நாட்களிலும் நகரா தரையில் வைத்து கோவிலினுள் இசைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள மற்ற கோவில்களான கச்சபேஸ்வரர், சொன்ன வண்ணம் செய்த பெருமாள், விளக்கொளி பெருமாள் போன்ற கோவில்களிலும் நகரா வழக்கிலிருந்து தற்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது. அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் வீதி உலாவின் போது இசைக்கப்பட்டு தற்காலத்தில் வழக்கொழிந்து விட்டது என்கிறனர் இக்கோவில் இசைக்கலைஞர்கள். காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலிலும் நகரா உள்ளது. திருபெரும்பூதுர் ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் பெரிய நகரா உள்ளது. பெரும்பாலும் கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள். இதற்கென்று தனி இசைக்கலைஞர்கள் நியமிக்கப்படுவதில்லை.
சைவ வைணவ சமயக் கோயில்களில் மட்டுமல்லாது நகரா தமிழகத்தில் உள்ள பல மசூதிகளில் புழக்கத்தில் உள்ளது. நகரா அடித்து மசூதியை சுற்றியுள்ள இஸ்லாமிய மக்களை தொழுகைக்கு அழைக்கும் வழக்கம் முன்பு பரவலாக தமிழகத்தில் வழக்கிலிருந்தது. தற்காலத்தில் சில பகுதிகளில் மட்டும் இந்த நகரா அடிக்கும் வழக்கம் தொடர்கிறது. மேலும் இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு மாதத்தில் விடியற்காலையில் அவர்களை எழுப்புவதற்கு நகராவை ஒரு வண்டியில் வைத்து அடித்துக்கொண்டு இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருக்களில் சென்று இசைக்கும் வழக்கம் ஆற்காடு போன்ற பகுதிகளில் வழக்கில் இருந்திருக்கிறது. தற்காலத்தில் இசுலாமியர்கள் மற்ற மக்களோடு சேர்ந்து வசிக்கின்ற காரணங்களால் மற்றவர்களின் வசதி கருதி இந்த பழக்கம் நின்று விட்டதாக கூறுகிறார் இஸ்லாமிய அன்பர் ஒருவர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் நகரா இசைக்க நகரா மண்டபம் உள்ளது. அங்கு சற்று சிறிய அளவிலான பழமையான இரண்டு நகராக்கள் உள்ளன. இவை இரண்டும் ஒருவரால் சேர்த்து இசைக்கப்படுகிறது. இரண்டு நகராக்களை சேர்த்து ஒருவரே இசைக்கும் வழக்கம் ராஜஸ்தானில் பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. இதன் சுவடுகளை தமிழகத்தில் நாம் நாகூரில் காணலாம்.மூன்றாவதாகவும் ஒரு தனி நகரா உள்ளது. அரசர் திப்பு சுல்தான் “நக்காரா” அல்லது நகராவை மேலகோட்டை நரசிம்மர் கோவிலுக்கு கொடையளித்த செய்தி அக்கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளது.
அருந்ததியர் சாதி பிள்ளை அல்லது பகடை என்று ஒரு சாதிப்பிரிவு தமிழகத்தில் உள்ளது. சக்கம்மாவை வழிபடுபவர்கள். இவர்கள் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று நகரா இசைத்து அவ்விடங்களில் சில நாட்கள் தங்கி அவர்கள் கொடுக்கும் உணவு பொருட்கள், தானியங்கள் மற்றும் குறிப்பிட்ட அளவிலான வரி பணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு செல்லும் வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ளது. இவர்கள் இசைக்கும் நகரா கோயில்களில் காணப்படும் நகராவை விட அளவில் சற்று சிறியதாக இருந்தது. தரையில் வைத்து அமர்ந்து கொண்டு இசைக்கிறார்கள்.
இலங்கையில் உள்ள சில கோவில்கலில் பேரிகை/ஈழபெரும் பேரிகை ஆகிய பெயர்களில் பெருமுரசு விழா நாட்களில் இசைக்கப்படுகிறது. நல்லூர் கந்தசாமி, காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் கோவில்களில் முரசுகள் காணக்கிடைக்கின்றன.
முரசின் அளவை பொருத்து பெருமுரசு மற்றும் சிறுமுரசு என்று அழைக்கப்படுகிறது. சிறு முரசு அளவில் சிறியதாக உள்ளது இடுப்பில் கட்டிக்கொண்டு அல்லது தரையில் வைத்து இசைக்கும் சிறிய அளவில் உள்ளது. இவ்வாறான நகரா திருவரங்கம் பெரிய கோயிலில் மற்றும் தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்து தற்போது மெல்ல வழக்கொழிந்து வருகிறது. திருவரங்கம் கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா நடக்கும்போது, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் இருந்தெல்லாம் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பெருமாளுக்கு கோதானம் செய்வார்கள். அவ்விதம் வரும்போது, மாட்டின் மேல் பெருமுரசு, சிறுமுரசு வாத்தியங்களை கட்டித் தொங்கவிட்டு இசைத்துக்கொண்டும், வாங்காவை ஊதிக்கொண்டும் வருவார்கள் என்று அறிகின்றோம். நகராவும் சிறுமுரசும் இன்னும் சில காலம் கழித்து ஒலிக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
புழக்கத்தில் உள்ள இடங்கள்
· மதுரை மீனாட்சியம்மன் கோயில்
· திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
· சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில்
· திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயில்
· திருவரங்கம் பெரிய கோயில்
· ராமேச்வரம் கோயில்
· திருப்புல்லாணி ஆதிஜகன்னாத பெருமாள் கோயில்
· திருக்குடந்தை ஆராவமுதன் கோயில்
· காஞ்சி காமாட்சியம்மன் கோயில்
· காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
· காஞ்சி குமரகோட்டம் முருகன் கோயில்
· காஞ்சி உள்ள வரதராஜ பெருமாள் கோயில்
· காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்
· திருபெரும்பூதுர் ஆதிகேசவ பெருமாள் கோயில்
· மேலநம்மங்குறிச்சி தெய்வ நாயக பெருமாள் கோயில்
· சில பள்ளிவாசல்களில்
பாடல்:
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - திவ்யப்பிரபந்தம்
அடி சேர் முடியினராகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ - திவ்யப்பிரபந்தம்
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே - திவ்யப்பிரபந்தம்
கானொளி:
https://www.youtube.com/watch?v=-Pai7Soqqvk
https://www.youtube.com/watch?v=oRL3TDUjMGA
https://www.youtube.com/watch?v=aod4QX6FY9w
https://www.youtube.com/watch?v=Jk0ptTt1-pA
https://www.youtube.com/watch?v=jd609r5yKkI
https://www.youtube.com/watch?v=g4uzIIEs5vk
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:
1. தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 4, முனைவர் வீ.ப.கா சுந்தரம் அவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2. வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
3. திரு நாதன், திருநெல்வேலி
No comments:
Post a Comment