மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 48 முருகபூபதி


 வீடு வெறிச்சோடிப்போயிருந்தது.  கலகலப்பாகவிருந்த வீடு.    ஆளரவமில்லாமல்  சுவரில் நகரும் பல்லியின் மெல்லிய குரலோடும்  தனது பெருமூச்சுக்காற்றுடனும்தான் சஞ்சரித்திருக்கிறதோ..! 

அபிதா நடைப்பிணமாக வீட்டுக்குள் அலைந்துகொண்டிருந்தாள்.

அனைவரும் வீட்டிலிருந்தபோதும் வேலைகளுக்கு குறைவில்லை. ஒவ்வொருவராக அகன்ற பின்னரும் குறைவில்லை.

அவர்களில் யாராவது ஒருவருடன்  பேசிக்கொண்டு வேலையில் மூழ்கும்போது களைப்புத் தெரியாது .  ஆனால், இப்போது எவரும் இல்லாமல் நான் மட்டும்தான் சுவரில் நகரும் பல்லியோடு பேசவேண்டியிருக்கிறது.



பல்லிக்கும் மொழியிருப்பதாக ஒருநாள் பாட்டி சொன்னது அபிதாவுக்கு நினைவுக்கு



 வந்தது.


வவுனியாவில் குளம் ஒன்றில் முதலை கடித்து உயிர்தப்பிய யாரோ ஒருவருக்கு சிகிச்சையளிக்க வந்த நாட்டுவைத்தியர், காயப்பட்டவரை, பல்லி தீண்டாதிருக்க மேலே வெள்ளை வேட்டி கட்டி படுக்கையை பாதுகாக்கச்சொன்னாராம்.

ஏன்..? எனக்கேட்டதற்கு,  இந்த ஆளைக்கடித்த முதலை ,                     ‘ தப்பிவிட்டாயா… போ… போ.. உன்னை உனது வீட்டிலிருக்கும் எனது தம்பி பார்த்துக்கொள்ளுவான்.  ‘  என்றதாம்.

அதன் அர்த்தம். முதலை கடித்த காயத்தின் மீது பல்லி எச்சம் பட்டால் காயம் குணமாவதற்கு நெடுங்காலம் எடுக்குமாம். முதலை, உடும்பு,  கபறக்கொய்யா, பல்லி  யாவும் ஒரு இனத்தைச்சேர்ந்த ஜீவராசிகளாம்.

குழந்தைப்பருவத்தில்  ஒருநாள் இரவு சாப்பிட்டுவிட்டு சரியாக வாய் கழுவாமல் படுத்து, பல்லி எச்சமிட்டு வந்த காயம் சுகமாக பலநாட்கள் எடுத்தபோது,  அதற்கு மருந்து தடவிய பாட்டி, அபிதாவுக்கு  சொன்ன கதைகளில் அதுவும் ஒன்று.

பாட்டி பல கதைகள் சொல்லித்தந்துவிட்டு போய்விட்டா…! நான் எனது கதைகளை யாரிடம் சொல்வது.  இதுவரையில் இந்த வீட்டில் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் ஜீவிகா தவிர்ந்து மற்றவர்கள் விடைபெற்றுவிட்டார்கள்.


புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் பதவிப்பிரமாணச் செய்தியையும் படங்களையும்  எடுப்பதற்கு ஜீவிகாவும் ஜெயசீலனும் சோடியாக கண்டிக்கு கிளம்பிவிட்டார்கள்.

அவர்கள் புறப்படும்போது சொன்னதும் அபிதாவுக்கு நினைவுக்கு வந்தது.

“  முன்னரெல்லாம், இதுபோன்ற பதவிப்பிரமாணங்கள் நாடாளுமன்றத்தில்தான் நடக்கும். அதன்பிறகு அனைவரும் நாடாளுமன்றத்திற்கு முன்பாக வரிசையில் நின்று படம் எடுத்துக்கொள்வார்கள்.

 அதென்ன, தற்போது தலதா மாளிகை, அநுராதபுரம் விகாரை என்று செல்கிறார்கள்.  தமது அரசாங்கம் பௌத்தத்திற்குத்தான் விசுவாசமானதேயன்றி,  நாடாளுமன்றத்திற்கு அல்ல என்று பெரும்பான்மை இனத்திற்கு காண்பிப்பதற்காகவா….?  “    என்று ஜீவிகா கேட்டதும்,  “  எங்கட தமிழ்த்தலைவர்கள் மட்டும் என்னவாம்… அவர்களும் தாங்களும் தங்கள் இனத்திற்கு விசுவாசமானவர்கள் என காண்பிப்பதற்குத்தானே தேர்தலில் வென்றதும் முள்ளிவாய்க்காலுக்குச்சென்று அஞ்சலி செலுத்திவிட்டு நாடாளுமன்றம் செல்லத்தயாராகிறார்கள்.  எல்லாம்  அரசியல் தந்திரம்தான்.  “  என்றான் ஜெயசீலன்.

“ அப்படித்தான் சென்றாலும்,  பேரினவாத அரசின் அரசியலமைப்புக்கு தாங்களும்தான் விசுவாசம் என்றுதானே சத்தியப்பிரமாணம் எடுக்கிறார்கள். இந்த விடாக்கண்டர்களையும்  கொடாக்கண்டர்களையும் பற்றித்தான் தொடர்ந்து எழுதுகிறோம்.  நீங்கள் படம் பிடிக்கிறீர்கள்.   அபிதா… ஒவ்வொருத்தியளும் போட்டது போட்டபடியே போட்டுவிட்டு போய்விட்டாளுகள்.  இனி உங்களுக்குத்தான் இருக்கிறது வேலை.  ஏதோ முடிந்தவரைக்கும் செய்யுங்க… நாங்க வாரோம்… “  எனச்சொல்லிக்கொண்டு ஜீவிகா பத்திரிகை அலுவலகத்தின் வாகனத்தில் ஏறியபோது,

  “ இன்றைக்கே திரும்பிவிடுவீங்களா..?  “ எனக்கேட்டாள் அபிதா.

“  இல்லை. கண்டியிலிருந்து நேரே கொழும்புக்கு போய்விடுவோம். இரவாகிவிடும். இரவு இவருடைய வீட்டில் நின்று நாளைக்கும் வேலை முடிந்தபிறகுதான் வருவேன்.  தனியே இருப்பீங்கள்தானே…. ?  இடையில் நானும் போன் பண்ணுவன். நீங்களும் எடுக்கலாம்.   வோஷிங் மெஷினில் கிடக்கும் உடுப்புகளை மறக்காமல் எடுத்து காயப்போட்டுவிடுங்க.  “  

மஞ்சுளாவும் சுபாஷினியும் திரும்பிவருவார்களா..? திருமணம் நிச்சயமான செய்தியுடன்தான் தொடர்புகொள்வார்களா..? கற்பகம் ரீச்சரின் இடமாற்ற உத்தரவு ஊர்ஜிதமாகிவிடுமா..?

இனி எதுவும் நடக்கலாம்.  வெறிச்சோடிப்போயிருந்த வீட்டில் பாட்டொலியாவது கேட்கட்டும் என்று வானொலியை இயக்கினாள் அபிதா. 

இடைக்கிடை செய்திகளுடன் பாடல்களும் ஒலிபரப்பாகியது. ஒவ்வொரு அறையிலும் அபிதாவுக்கு சுத்திகரிப்பு வேலை குவிந்திருந்தது. 

ஜீவிகாவின் துவைக்கப்பட்டிருந்த உடைகளை அப்புறப்படுத்திவிட்டு, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துவாய்கள், கழற்றிப்போட்டிருந்த உள்ளாடைகள் அனைத்தையும் வோஷிங் மெஷினில் அடுத்தடுத்துப்போட்டு, சுத்திகரிப்பு பவுடரையும் கொட்டினாள்.

ஏற்கனவே சமைத்த உணவு போதியளவு குளிர்சாதனப்பெட்டியில் இருந்தமையால், தனக்கென பிரத்தியோகமாக ஏதும் செய்யவேண்டிய தேவை அவளுக்கிருக்கவில்லை.

விரைந்து வீட்டுப்பணிகளில் ஈடுபட்டாலும், நேரம் ஆமைவேகத்தில் ஊர்வதாகவே அவளது மனதிற்குப்பட்டது.  யாருடனாவது பேசவேண்டும்போலிருந்தது. 

பல நாட்களுக்கு முன்னர் தன்னிடம் பேச்சுப்போட்டிக்கு எழுதி வாங்கிச்சென்று பேசி,  பரிசுவாங்கிய இரண்டு மாணவர்களின் முகங்கள் மனதில் வந்தது.  அதில் ஒரு மாணவனின் தாய் தனக்கு கேக் கொடுத்துவிட்டதும்  நினைவுக்கு வந்தது.

அந்த பெண்ணின் பெயர் நினைவுக்கு வராமல்… ‘   என்ன பெயர்…?   தானாவில் தொடங்குமே… அட…  தனலட்சுமியா..? தனபாக்கியமா…? தங்கேஸ்வரியா…. இல்லை… இல்லை….  ‘  அபிதா,  தனது படுக்கை அறையான அந்த வீட்டின் களஞ்சிய அறைக்கு விரைந்தாள்.

டயறியை எடுத்து பக்கங்களை புரட்டித் தேடினாள். கிடைத்தது. அவள் நினைத்தபெயர்கள் இல்லை.

தமயந்தி. 

தொடர்புகொண்டாள்.  மறுமுனையில் ஒரு சிறுவனின் குரல். 

 “ அம்மா  இருக்கிறாங்களா…?இது தமயந்தியின் வீடுதானே…?  “

 “ ஓம்… இருக்கிறாங்க…. நீங்க…. யாரு…?  “

 “  என்னை தெரியாதா… ஞாபகம் இருக்கிறதா… முன்பொருநாள் உங்கள் தமிழ்த்தினவிழாவுக்கு பேச்சு எழுதிக்கொடுத்த அன்ரி.  அபிதா… அன்ரி…. “ 

 “  ஓ… நீங்களா… எப்படி இருக்கிறீங்க அன்ரி.  இருங்க அம்மாவை கூப்பிடுறன்.   “

அவன் ரசீவரை வைத்துவிட்டு,  “ அம்மா… அம்மா  “ என அழைத்துக்கொண்டு செல்லும் குரல் அபிதாவுக்கு கேட்டது.

சில நிமிடங்களில் தாய் தமயந்தி இணைப்பில் வந்தாள்.

 “  எப்படி இருக்கிறீங்க அபிதா…?  கணநாளாகிப்போச்சுதில்லையா…?  நானும் அடிக்கடி உங்களை நினைக்கிறதுதான்.  சவூதியிலிருக்கும்  சங்கரின் அப்பாவும் திரும்பி வரமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.  சம்பளத்தையும் அரைவாசியாக குறைத்துவிட்டார்களாம்…  அது சரி… என்ன திடீரென்று… எடுத்திருக்கிறீங்க… இன்னமும் அந்த வீட்டில்தானே… கோயில் பக்கம் வரும்போது, உங்களையும் வந்து பார்க்கவேணும் என்று நினைப்பதுண்டு. முடிவதில்லை. “

 “  வீட்டில் எவரும் இல்லை. போரிங்காக இருக்கிறது.  அதுதான் உங்களுடன் பேசலாம் என்று தோன்றியது.  இன்றைக்குப்பின்னேரம் நேரம் இருந்த… இந்தப்பக்கம் வாங்களேன்.  மகனையும் அழைத்து வாங்க… பெயர் என்ன சங்கரா… மறந்தும்போய்விட்டது…. “

 “ உதயசங்கர்.  அதற்கென்ன வாரன்.  ஏதும் விசேடமா… அபிதா…  “

 “ விசேடம் ஒன்றும் இல்லை. வீட்டில் எவரும் இல்லை.  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணங்களோடு வெளியே போய்விட்டார்கள். தனிய இருப்பதனால் போரிங்காக இருக்கிறது.  நேரத்தை போக்கமுடியவில்லை.  “

அதனைக்கேட்டு தமயந்தி சிரித்தாள்.

 “ வீட்டில்   வம்பளப்பதற்கு பெண்கள் இல்லை.  அப்படித்தானே..?   “

 “ பெண்கள் என்றாலே வம்பளப்பவர்கள் என்ற தீர்மானத்தில்தான் நீங்களும் இருக்கிறீர்களா தமயந்தி.   “ எனக்கேட்டுவிட்டு, அபிதாவும் சிரித்தாள்.

 “ சரி… வாரன்…  “

 “ வரும்போது மகனையும் அழைத்து வாருங்கள்… சரியா… அவரைப்பார்த்தும் கணநாட்கள்.   “

 “ அவரா…. !? அவன் என்ன பெரிய மனுஷனா… சும்மா அவன் என்றே கூப்பிடுங்க… டேய்… அந்த அன்ரி உன்னை அவர் என்று சொல்றாங்கடா…  “ என்று மகனைப்பார்த்து தமயந்தி சொன்னாள்.

அதற்கு அவன், “அந்த அன்ரிக்கு மரியாதையா பேசத்தெரியும் “  என்றான்.

 “ கேட்டீங்களா… அபிதா…. இந்த வாலு என்னசொல்கிறது… கேட்டீங்களா…?   “

அபிதாவும் சிரித்தாள்.

வெளியே வெய்யில் எரித்தது.  துவைத்த உடைகளை எடுத்துச்சென்று பின்புற வளவில் கட்டியிருந்த கொடியில் காயப்போட்டு கிளிப்புளை பொருத்தினாள்.

மரம் செடிகளிலிருந்து உதிர்ந்திருந்த சருகுகளை கூட்டிப்பெருக்கினாள்.  கூட்டும்போது  எழுந்த சரசரப்பு ஒலியை ரசித்தாள்.   ‘ அந்த அன்ரிக்கு மரியாதையாகப் பேசத்தெரியும் ‘  என்று அந்தச்சிறுவன் உதயசங்கர்  மறுமுனையிலிருந்து சொன்னதை நினைத்து நினைத்து மனதிற்குள் சிரித்தாள்.

 ‘ என்ர தமிழ்மலர் இப்போது இருந்திருந்தால், எப்படியெல்லாம் பேசியிருப்பாள். அவளின் மழலைக்குரலைக்கூட கேட்கவழியற்ற  பாவியாகிவிட்டேன்.  மார்பில் பால் அருந்தும்போது,  அவள் மென்மையாக கடித்த உணர்விலிருந்து மீளுவதற்கு முன்பே பறித்துக்கொண்ட அந்த அரக்கர்களுக்கோ, அவளை கருவில் சுமக்கவைத்த படைத்தல் கடவுளுக்கோ, துளியளவும் ஈவிரக்கம் இல்லாமல் போய்விட்டதா…?

அந்தச்சிறுவனுக்கும் பத்து அல்லது பதினொரு வயதுதானிருக்கும்.  என்ர தமிழ் இருந்திருந்தால், இப்போது அவளுக்கும் பத்து பதினொரு வயதிருக்கும்.  எத்தனை கனவுகளுடன் அவளைப்பெற்றெடுத்தேன்.  எஞ்சியிருப்பது,  அவருடனும் குழந்தையுடனும் எடுத்துக்கொண்ட படம் மாத்திரம்தான்.

மரங்களிலிருந்து ஆயுளை முடித்துக்கொண்டு நிலத்தில் உதிர்ந்துவிடும் சருகுகளுக்கு ஒப்பான வாழ்க்கையாகிவிட்டதா எனது குழந்தையின் அற்பாயுளும்.

அவளால் தொடர்ந்தும் நிலத்தை கூட்டிப்பெருக்க முடியவில்லை. விம்மல் வெடித்துக்கொண்டு வந்தது.  கூட்டுமாற்றை சாய்த்து வைத்துவிட்டு, வேப்பமரக்குற்றியில் அமர்ந்தாள்.

குனிந்து அணிந்திருந்த  சோர்ட்டியின் விளிம்பால் கண்களை துடைத்துக்கொண்டாள்.

 ‘ இழந்தவற்றை மீளவும் பெறமுடியாது போனால்,  அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஏற்ற வழிவகைகளை காணவேண்டும்.  அதனை விடுத்து,  நிரந்தரமாக தொலைந்தவற்றை நினைத்து நினைத்து ஏங்கினாலும் எந்தப்பலனும் இல்லை.  ‘   இயக்கத்தில் வகுப்பெடுத்துவிட்டு வந்த பார்த்திபன் அன்றொருநாள் சொன்னது எனக்கும் சேர்த்துத்தானா…?

 “ ஏன்… அப்படிச் சொன்னனீங்கள்….?   உங்களுக்கும் தீர்க்கதரிசனம் ஏதும் இருந்ததா…?  போராட்டம் பற்றி உங்களுக்கும் ஒரு கணிப்பு இருந்ததா…? அப்படியானால்,  ஏன் அதிலிருந்து விடுபட்டு, எங்களை அழைத்துக்கொண்டு வேறு எங்காவது செல்வதற்கு ஏன் உங்களுக்கு துணிவு வரவில்லை.  நீங்களும் சூழ்நிலையின் கைதியாகத்தான் இருந்தீர்களா…?  “

ஒரு தேர்தலிலே தோற்றவுடன், ஏன்  தோற்றோம் என்பதற்கு காரணம் கண்டு பிடிப்பதற்கு சில மதியுரைஞர்களை தற்போதைய கிழடு தட்டிப்போன தலைவர் நியமிக்கிறாராம்.

அப்படியென்றால்,  இலட்சக்கணக்கில் மக்களை பறிகொடுத்து,  ஆயிரக்கணக்கான என்போன்ற பெண்களை அநாதரவாக்கிவிட்ட, ஏராளமானவர்களை அங்கவீனர்களாகவும் அனாதைகளாகவும் மாற்றிவிடக்காரணமாக இருந்த போராட்டத்தின் படுதோல்விக்கான காரணத்தை ஆராய்வதற்கு எந்தவொரு மதியுரைஞர்களும் இல்லாமல் போய்விட்டார்களா…?

இந்தத் தலைவர்களுக்கு மக்களின் வரிப்பணமாவது நாடாளுமன்றில் சம்பளமாக கிடைக்கும், கார், வீடு செளகரியங்கள் கிடைக்கும்.  அந்த வன்னி பெருநிலப்பரப்பில் அடைபட்டு, உணவுக்கும் தண்ணீருக்கும் கையேந்திய மக்களுக்கு என்னதான் கிடைத்தது..?

அபிதாவுக்கு இந்தத் தனிமை பற்றி எழுதுவதற்கும் அவளது நாட்குறிப்பில் பக்கங்கள் தேவைப்பட்டது.

என்ர குழந்தையோடு நானும் போயிருக்கலாம்.   அவர் வருவார் வருவார் என்றுதானே காத்திருந்தேன். சரணடைந்தவர்களில் அவரும் ஒருவர்தான் என்று அக்காட்சியை கண்டவர்கள் சொன்னதும் நிஜம் என்று நம்பி, மீண்டு வருவார் என்றுதானே நம்பியிருந்தேன்.  அப்படியானால்,  அந்த சிவகாமிப்பெட்டையும் சரணடைந்தவள்தானே… ! அவள் மாத்திரம் எப்படி வெளியே வந்தாள்…? வந்தவள் புத்தகமும் எழுதிவைத்துவிட்டு போய்ச்சேர்ந்துவிட்டாள்.

அதனை சிங்களத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள் என்று ஒருநாள் ஜீவிகா சொன்னாவே… ஜீவிகா வந்ததும் அந்த சிவகாமி எழுதிய தமிழ்ப்புத்தகம் கேட்டு வாங்கிப்படிக்கவேண்டும்.  அப்படி என்னதான் எழுதியிருப்பாள்…?

அபிதா,  மரக்குற்றியிலிருந்து எழுந்து,  கூட்டிப்பெருக்கிய சருகுகளை ஒரு  மூலைக்குத்தள்ளி,  தீப்பெட்டி எடுத்துவந்து தீமூட்டினாள்.

காய்ந்த சருகுகள்  கொளுந்துவிட்டு எரிந்தன.  அந்தச்சுவாலையை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்றாள்.

மனக்கவலைகளையும் இவ்வாறு எரித்து சாம்பராக்கிவிடமுடிந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்.  துயரங்களை, இழப்புகளை நினைக்கத் தெரிந்த மனதால், ஏன் மறக்கமுடியவில்லை….?

தமயந்தி வந்தால், அவளிடத்தில்   மகன் உதயசங்கரை , இங்கே அடிக்கடி வரச்சொல்லி அழைக்கவேண்டும்.

அவனது உருவத்தில் மகள் தமிழ்மலரை தேடுவதற்கு அபிதா மனதிற்குள் தீர்மானிக்கத் தொடங்கினாள்.

சருகுகள் புகைமூட்டத்தை பிரசவித்துக்கொண்டிருந்தன.

அபிதா, கண்களை மீண்டும் துடைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள்.

( தொடரும் )


 

 

 

 



No comments: