பாராளுமன்றப் பொதுத் தேர்தல் பரபரப்புகள் ஓரளவு தணிந்து விட்டன. இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி வாகை சூடியுள்ளது. நாட்டு மக்களில் பெரும்பாலானோர் அக்கட்சியின் மீது வைத்திருந்த உறுதியான நம்பிக்கை இன்னுமே சற்றும் குறையவில்லை என்பதை பொதுத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டுள்ளார். புதிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்திருப்பது மாபெரும் வெற்றியென்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. உறுதியான நிலையான ஆட்சியொன்றை நெருக்கடி எதுவுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான பலத்தைப் பெற்றுள்ளது அரசாங்கம்.
அறுதிப் பெரும்பான்மைக்காக வேறு கட்சிகளின் துணையைப் பெற வேண்டிய அவசியம் அரசுக்கு அறவே கிடையாது. குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் ஈட்டப்பட்டுள்ள மாபெரும் செல்வாக்கு இதுவாகும்.
அது ஒருபுறமிருக்க, அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி மீண்டெழுந்து வருவதென்பது இலகுவான காரியமல்ல. ஐ.தே.கவுக்குள் உருவெடுத்த தலைமைத்துவப் போட்டியும், கட்சியின் ஆளுமையற்ற தலைமைத்துவமுமே இவ்வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாகும். அதேசமயம், முன்னைய நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இன்னுமே தணியவில்லை என்பதையும் பொதுத் தேர்தல் முடிவு புலப்படுத்துகின்றது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சிறிதளவு பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட எவருமே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை. தேசியப் பட்டியல் ஊடாக ஒரேயொரு பாராளுமன்ற ஆசனத்தை மாத்திரமே ஐ.தே.க பெற்றுக் கொண்டது.
ஏழு தசாப்த காலத்துக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த பாரம்பரிய தேசியக் கட்சியொன்றுக்கு அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி இதுவாகும். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் பலம் குன்றிய எதிர்க் கட்சியாகவே செயற்படப் போகின்றதென்பது உண்மை.இவையெல்லாம் ஒருபுறமிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக விளங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்தும் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னைய பாராளுமன்றத்தில் கொண்டிருந்த ஆசனங்களில் பலவற்றை தமிழ்க் கூட்டமைப்பு இப்போது இழந்து விட்டது. வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்க் கூட்டமைப்பின் சரிவு நன்றாகவே தெரிகின்றது. அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தி கொண்ட தமிழ் அரசியல் அமைப்புகள் வடக்கு, கிழக்கில் ஓரிருஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
தமிழ்க் கூட்டமைப்பை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்கி விட்டனரென்பதற்கான அறிகுறியே இதுவாகும். தமிழ்க் கூட்டமைப்புக்குப் பதிலாக மாற்று அரசியல் தலைமையை மக்கள் நாடத் தொடங்குகின்றனரென்றும் கூற முடியும். தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையை ஏற்றிருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும், அதன் பொதுச் செயலாளரான கி.துரைராஜசிங்கமும் இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளனரென்றால் தமிழ்க் கூட்டமைப்பின் வீழ்ச்சியை விளக்குவதற்கு இதனை விட வேறு உதாரணம் தேவையில்லை.
தமிழ்க் கூட்டமைப்பு இவ்வாறான வீழ்ச்சியில் இருந்து மீண்டும் எழுந்து வருவதென்பது சாத்தியமான விடயமாகத் தோன்றவில்லை. தமிழ்க் கூட்டமைப்பு மீது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முன்வைக்கின்ற வெறுப்பான குற்றச்சாட்டுகளைப் பார்க்கின்ற போது இதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
மக்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஏராளம். கடந்த 2015 டிசம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரத்துக்கு வந்த மைத்திரி_ரணில் கூட்டரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்த நெருக்கமும் தோழமையும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னொரு போதுமே கண்டிருக்காத அனுபவங்களாகும். தமிழ்க் கூட்டமைப்பு அன்றைய நல்லாட்சி அரசில் எதிர்க் கட்சியாக பெயரளவில் இருந்து வந்ததே தவிர, மறைமுகமாக அரசின் பங்காளியாக செயற்பட்டு வந்ததென்பதே உண்மையாகும்.
சர்வதேச நெருக்கடிகளைச் சமாளிப்பதிலும், பாராளுமன்றத்தில் பலம் பெறுவதற்காகவும் தமிழ்க் கூட்டமைப்பில் அன்றைய அரசு தங்கியிருந்தது. நல்லாட்சி அரசின் நெருக்கமான சக்தியாகவே கூட்டமைப்பு அன்று விளங்கியது. இவ்வாறான நெருக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தியபடி தமிழ் மக்களுக்காக ஏராளமான விடயங்களைச் சாதித்திருக்க முடியுமென்பதே தமிழர்களின் ஆதங்கம். அந்த வெறுப்பே இன்று பொதுத்தேர்தலில் பிரதிபலித்திருக்கிறது.
தமிழ்க் கூட்டமைப்பு தனது வீழ்ச்சியிலிருந்து மீள்வதாயின் தமது மக்களின் ஆதங்கங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழர்களின் அரசியலில் இருந்து கூட்டமைப்பு விடைபெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். நன்றி தினகரன்
No comments:
Post a Comment