உலகச் செய்திகள்

ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம்: பத்திரிகை உரிமையாளர் கைது

ஆப்கான் அரசுடனான அமைதி பேச்சுக்கு தலிபான்கள் தயார்

உலகில் முதல் நாடாக கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்யா ஒப்புதல்

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் பாடகருக்கு மரண தண்டனை

பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: லெபனான் அரசு இராஜினாமா

530,000 வெளிநாட்டு ஊழியரை வெளியேற்ற குவைட் திட்டம்

பைடனின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

லெபனான் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்க ஒப்புதல்

சிவிலியன், இராணுவத்திற்கு இடையே தென் சூடானில் மோதல்: 127 பேர் பலி

உணவில் வைரஸ் பரவல்: சுகாதார அமைப்பு மறுப்பு

இஸ்ரேல் - ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்த வரலாற்று உடன்பாடு

எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு


ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம்: பத்திரிகை உரிமையாளர் கைது

ஹொங்கொங்கின் பெரும் தொழில் அதிபரான ஜிம்மி லாய், அவரது பத்திரிகை அலுவலகங்களில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவினால் கடந்த ஜூன் மாதம் அமுல்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் மிக முக்கிய புள்ளியாக அவர் உள்ளார். ஜனநாயக ஆதரவு குரல் எழுப்புவதில் முன்னணியில் இருப்பவரான ஜிம்மி லாய், கடந்த ஆண்டு ஹொங்கொங்கில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆதரவு வெளியிட்டிருந்தார்.

71வயதான லாய் பிரிட்டன் நாட்டு பிரஜையும் ஆவார். சட்டவிரோதமான ஒன்றுகூடல் மற்றும் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக கடந்த பெப்ரவரியில் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். எனினும் அவருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டது.

ஜிம்மி லாய் கலகத்திற்கு ஆதரவு அளிப்பவர் என்றும் அவரது பத்திரிகை வெறுப்புணவர்வு, வதந்தி மற்றும் சீன தலைநிலம் மற்றும் ஹொங்கொங் நிர்வாகத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக பாதகமான செய்திகளை பரப்பியதாகவும் சீன அரச பத்திரிகையான ‘கிளோபல் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.    

இதன்போது அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

பெரும் அளவான பொலிஸாரும் அவரது ஆப்பிள் டெய்லி பத்திரிகை அலுவலகத்திற்குள் நேற்று சோதனை இட்டனர். வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்தது மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளில் 39 தொடக்கம் 72 வயதுக்கு இடைப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.   நன்றி தினகரன் 





ஆப்கான் அரசுடனான அமைதி பேச்சுக்கு தலிபான்கள் தயார்

கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தலிபான்கள் நேற்று அறிவித்துள்ளனர்.

இந்த இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதில் சுமார் 400தலிபான் கைதிகளின் விடுதலை தீர்க்கமான ஒன்றாக இருந்து வந்த நிலையில் அந்தக் கைதிகளை விடுவிக்க ஆப்கான் அரசு தரப்பின் மாநாட்டில் ஒப்புதல் கிடைத்துள்ளது. 

“எமது நிலைப்பாடு தெளிவானது. கைதிகளின் விடுதலை பூர்த்தியானால், ஒரு வாரத்திற்குள் ஆப்கான் உள்ளக பேச்சுவார்த்தைக்கு நாம் தயார்” என்று தலிபான் பேச்சாளர் சுஹைல் ஷஹீன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்ட பேச்சுவார்த்தை கட்டாரின் டோஹாவில் நடைபெறும் என்று ஷஹீன் குறிப்பிட்டுள்ளார்.

“400 தலிபான் கைதிகளையும் விடுவிக்கும் நடவடிக்கையை இன்னும் இரண்டு நாட்களில் ஆப்கான் அரசு ஆரம்பிக்கும்” என்று தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜாவித் பாசில் நேற்று தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 







உலகில் முதல் நாடாக கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்யா ஒப்புதல்

ரஷ்யாவின் கமலேயா நிறுவனத்தினால் மேம்படுத்தப்பட்ட உலகின் முதலாவது கொவிட்–19 தடுப்பு மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்திருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்தார். 

இந்த தடுப்பு மருந்து இரண்டு மாதத்திற்கும் குறைவான காலமே மனிதர்களிடம் சோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பிலான இறுதிக் கட்ட மருத்துவ சோதனை தொடரும் நிலையிலேயே இது ஒரு தடுப்பூசியாக பயன்படுத்துவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. “உலகில் முதல்முறையாக புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து ரஷ்யாவில் இன்று காலை பதிவு செய்யப்பட்டது” என்று அமைச்சர்களுடனான வீடியோ கொன்பிரன்ஸ் வழியான சந்திப்பின்போது புட்டின் தெரிவித்தார்.  

பாரிய அளவில் இந்த தடுப்பு மருந்தை தமது நாடு உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.  யா மேம்படுத்தி இருக்கும் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து உலகளலில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றை தடுப்பதற்காக உலகெங்கும் 100க்கும் அதிகமான சாத்தியம் கொண்ட தடுப்பு மருந்துகள் மேம்படுத்தப்பட்டபோதும் அதில் குறைந்தது நான்கு மாத்திரமே இறுதிக் கட்டமாக மனிதர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.  

அவ்வாறான தடுப்பு மருந்து ஒன்று அடுத்து ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  நன்றி தினகரன் 






மதநிந்தனைக் குற்றச்சாட்டில் பாடகருக்கு மரண தண்டனை

நைஜீரியாவின் வட மாநிலமான கானோவில் முஹமது நபியை அவமதித்ததாக குற்றங்காணப்பட்ட பாடகர் ஒருவருக்கு தூக்குத் தண்டை விதிக்கப்பட்டுள்ளது.  

22 வயதான யஹ்யா ஷரீப் அமினு என்ற அந்தப் பாடகர் கடந்த மார்ச் மாதம் வட்ஸ்அப் ஊடாக வெளியான பாடல் ஒன்றில் மத நிந்தனையில் ஈடுபட்டிருப்பதாக உயர் ஷரீயா நீதிமன்றம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.  

ஷரீப் அமினு தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை. எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவரால் மேன்முறையீடு செய்யலாம் என்று நீதிபதி காதி அலியு முஹமது கானி தெரிவித்துள்ளார்.  

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நைஜீரிய வடக்கு மாநிலங்களில் மதச்சார்பற்ற சட்டத்துடன் முஸ்லிம்களுக்கு மாத்திரமான ஷரீயா சட்டமும் அமுலில் உள்ளது.  

1999 ஆம் ஆண்டு மரண தண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஷரீயா நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஒரு மரண தண்டனையே இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளது.  

இந்த பாடகரின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இஸ்லாமிய பொலிஸ் தலைமையத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.   நன்றி தினகரன் 






பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: லெபனான் அரசு இராஜினாமா

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் அதிகரித்து வரும் எதிர்ப்பை அடுத்து லெபனான் அரசு இராஜினாமா செய்துள்ளது.  

பிரதமர் ஹசன் டியாப் கடந்த திங்கட்கிழமை மாலை தேசிய தொலைக்காட்சி ஒன்றில் இதனை அறிவித்தார்.  

நாட்டுத் தலைவர்களில் அலட்சியப் போக்கு மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களிடையே பரவலான குற்றச்சாட்டு உள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாரிடையே கடந்த திங்கட்கிழமை மோதல் வெடித்தது.  

பெய்ரூட் துறைமுகத்தில் பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படும் வரை காபந்து அரசொன்றாக செயற்படும்படி தற்போதைய அரசை ஜனாதிபதி மைக்கல் அவுன் கேட்டுக்கொண்டுள்ளார்.  

பல மாதங்கள் இடம்பெற்ற இழுபறிக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட டியாப், “நாட்டை காப்பதற்கான திட்டத்திற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டி இருப்பதாக” தெரிவித்துள்ளார்.  

வெடிப்புச் சம்பவம் பெருமளவிலான ஊழலின் விளைவால் ஏற்பட்டதாய் கூறிய பிரதமர், குற்றவாளிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். 

தேர்தலை முன் கூட்டியே நடத்தக் கேட்டுக்கொள்ளப்போவதாகப் பிரதமர் டியாப் கூறினார்.   நன்றி தினகரன் 







530,000 வெளிநாட்டு ஊழியரை வெளியேற்ற குவைட் திட்டம்

அரை மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை வெளியேற்றுவது தொடர்பான புதிய பரிந்துரை ஒன்று குவைட் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.  

நாட்டின் தொழிலாளர் சந்தையில் சமநிலையை கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக குவைட்டின் அல்–கபாஸ் பத்திரிகை இது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.  

பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மர்யம் அல் அகீல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் இந்தத் தீர்மானத்தின்படி குறுகிய கால இலக்காக 120,000 சட்டவிரோத தொழிலாளர்கள் உட்பட சுமார் 360,000 வெளிநாட்டினர் வெளியேற்றப்படவுள்ளனர். இந்த கட்டத்தின் கீழ் 90,000 தேர்ச்சியற்ற தொழிலாளர்கள், அதேபோன்று நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட 150,000 தொழிலாளர்களும் களையெடுக்கப்படவுள்ளனர்.  

அரச மற்றும் தனியார் துறைகளில் 160,000 வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளை குவைட் பிரஜைகளுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

இந்த பரிந்துரையின் கீழ் சுமார் 530,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் நீக்கப்படவுள்ளதாக அந்த திட்டத்தை மேற்கோள்காட்டி அல்–கபாஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.    நன்றி தினகரன் 






பைடனின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன், துணை ஜனாதிபதியாக தம்முடன் இணைந்து போட்டியிட கமலா ஹரிஸைத் தேர்வு செய்துள்ளார். 

கலிபோர்னியா மாநில செனட்டரான ஹரிஸ், பைடனுடன் இணைந்து நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக போட்டியிடுவார். 

ஹரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முதல் வெள்ளை இனத்தவரல்லாத தெற்காசிய அமெரிக்கப் பெண்ணாவார். 

55வயதான ஹரிஸின் பெற்றோர் ஜமைக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். குறிப்பாக இவரது தாய் சென்னை நகரைச் சேர்ந்தவராவார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதற்குமுன் இரண்டு பெண்கள் மட்டுமே துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர். 

2008ஆம் ஆண்டு அலாஸ்கா மாநில ஆளுநரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சாரா பாலின் அவர்களில் ஒருவராவார். மற்றொருவர் 1984ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சிக்காகப் போட்டியிட்ட ஜெரால்டின் பெராரோ ஆவார். இருவருமே தேர்தலில் வெற்றி பெறவில்லை. 

இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே ஹரிஸ் பொலிஸ் சீர்திருத்தத்தை அதிகமாக வலியுறுத்திவந்தார். துணை ஜனாதிபதியாக போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதோடு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.   நன்றி தினகரன்







லெபனான் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்க ஒப்புதல்

லெபனான் அரசு இராஜினாமா செய்துள்ள நிலையில் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் கடந்த 4ஆம் திகதி வெடித்துச் சிதறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்திற்கு எதிர்ப்பு, ஊழல், அரசின் நிர்வாகத்தோல்வி, நிலைத்தன்மையற்ற அரசியல் போன்றவற்றை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் லெபனான் அரசு மொத்தமாக இராஜினாமா செய்ய முடிவு செய்தனர்.

அதற்கு முன் அவசரகால நிலையை அறிவித்து, நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவை என்பதால் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றம் கூட்டப்பட்டது. அப்போது அவரசகால நிலை அறிவிக்கப்பட்டதுடன் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின் அனைவரும் இராஜினாமா செய்தனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, பொதுமக்கள் கூடுவதை தடுக்க, ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு மீறல்களுக்காக பொதுமக்களை இராணுவ தீர்ப்பாயங்களுக்கு பரிந்துரைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன்







சிவிலியன், இராணுவத்திற்கு இடையே தென் சூடானில் மோதல்: 127 பேர் பலி

தென் சூடானில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களிடையே இரண்டு நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்டு பெண்கள், சிறுவர்கள் என பலரும் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.  

வட மத்திய மாநிலமான வர்ரப்பில் இராணுவத்தினர் ஆயுதக்களைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த பொதுமக்களுடன் மோதல் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக் தெரிவித்துள்ளார்.  

தென் சூடான் ஜனாதிபதி சல்வா கிர் மற்றும் அவரின் போட்டியாளரான கடந்த பெப்ரவரி மாதம் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரீக் மச்சர் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் ஓர் அங்கமாகவே பொதுமக்களிடம் உள்ள ஆயுதங்களை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதில் இளைஞர் ஒருவரிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியபோதே மோதல் வெடித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர். தப்பிக்க முயன்ற இளைஞர் ஒருவர் மீது இராணுவத்தினர் பின்புறமாக சுட்டதை அடுத்தே மோதல் வெடித்ததாக சிறிய ஆயுதங்களின் தென் சூடான் நடவடிக்கை வலையமைப்பு பணிப்பாளர் ஜெப்ரி டுக் தெரிவித்துள்ளார்.  

இந்த மோதல்களில் 45 இராணுவத்தினர் மற்றும் 82 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 32 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டு சூடானிடம் இருந்து தனி நாடாக சுதந்திரம் பெற்ற தென் சூடானில் இரண்டு ஆண்டுகளின் பின் சிவில் யுத்தம் ஒன்று வெடித்தது.    நன்றி தினகரன்







உணவில் வைரஸ் பரவல்: சுகாதார அமைப்பு மறுப்பு

உணவுப் பொட்டலங்களில் காணப்படும் கொரோனா வைரஸ் உணவில் பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுகுறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அது குறிப்பிட்டது.

சீனாவின் இரண்டு நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உறையவைக்கப்பட்ட உணவின் பொட்டலங்களில் கொரோனா வைரஸ் இருந்தது அடையாளம் காணப்பட்டது. அதன் காரணமாக வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைப் பிரிவு தலைவர் மைக் ரயா, உணவு மூலமாகவும் உணவு பொட்டலங்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதற்கான சான்று எதுவும் இல்லை என்றார்.

சீனாவில் உள்ள ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்கள் பரிசோதிக்கப்பட்டதையும் அவற்றில் ஒருசில பொட்டலங்களில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.  நன்றி தினகரன்








இஸ்ரேல் - ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்த வரலாற்று உடன்பாடு


‘முதுகில் குத்தும் துரோகம்’ என பலஸ்தீனர்கள் சாடல்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. இதனை ‘முதுகில் குத்தும் துரோகச் செயல்’ என்று பலஸ்தீனர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை அறிவித்த இந்த உடன்படிக்கையின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன நிலங்களை தன்னகப்படுத்தும் திட்டத்தை ஒத்திவைப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்தத் திட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தும் முதலாவது வளைகுடா அரபு நாடு என்பதோடு எகிப்து மற்றும் ஜோர்தானுக்கு அடுத்து மூன்றாவது அரபு நாடாகும்.

இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே எதிர்பாராத இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இஸ்ரேலின் கூட்டு அறிக்கை ஒன்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ட்விட்டரில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இந்த உடன்படிக்கை ஒரு ‘பெரும் திருப்பம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் அபூதாபி முடிக்குரிய இளவரசர் ஷெய்க் முஹமது பின் செயித் அல் நஹ்யான் இடையே கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற தொலைபேசி பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்படிக்கை பற்றிய அறிவிப்பு வெளியானது.

“வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த இராஜதந்திர திருப்புமுனை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்தும் என்பதோடு துணிவுமிக்க இராஜதந்திரத்திற்கு சான்றாகவும் மூன்று தலைவர்களின் நோக்கு மற்றும் பிராந்தியத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய பாதைக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இஸ்ரேலை ஊக்குவிப்பதாகவும் உள்ளது” என்று கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய பிரதிநிதிகள் எதிர்வரும் வாரங்களில் சந்தித்து முதலீடு, சுற்றுலா, நேரடி விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, தொலைத்தொடர்புகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இரு தரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் ஏனைய முஸ்லிம் நாடுகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தை பின்பற்றும் என்று தாம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன் டிரம்ப் தெரிவித்தார்.

“தற்போது பனிக்கட்டி உடைந்துவிட்டது. மேலும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஐக்கிய அரபு இராச்சியத்தை பின்பற்றும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் டிரம்பின் ட்விட் அறிவிப்பு பற்றி பதில் அளித்த நெதன்யாகு, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நெதன்யாகு, இந்த உடன்படிக்கையின் ஓர் அங்கமாக மேற்குக் கரையை இஸ்ரேல் ஆட்புலத்துடன் இணைக்கும் திட்டத்தை ஒத்திவைக்க இணங்கியதாக குறிப்பிட்டபோதும், “எமது நிலத்தை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என்றும் தெரிவித்தார்.

இதுநாள்வரை வளைகுடா அரபு நாடுகளுடன் ராஜீய ரீதியிலான உறவை இஸ்ரேல் வளர்த்துக் கொண்டதில்லை.

எனினும், வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு தொடர்பான கவலைகள் அதிகரித்து வருவதால், அலுவல்பூர்வமற்ற வகையில் உடன்பாட்டை எட்டியிருக்கும் நாடுகளுக்கு இடையே தொடர்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த உடன்பாடு தொடர்பாக அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதர் யூசுப் அல் ஓடைபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இது ராஜீயத்துக்கும் பிராந்தியத்துக்குமான வெற்றி" என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல்–ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையிலான இந்த உடன்படிக்கையை பலஸ்தீன தரப்புகள் கடுமையாக சாடியுள்ளன. இது பலஸ்தீனர்களின் அபிலாசையை பாதுகாக்காது என்றும் பலஸ்தீன மக்களின் உரிமைகளை புறக்கணிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளன.

இதனை கண்டித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு இது “முதுகில் குத்தும் துரோகச் செயல்” என்று குறிப்பிட்டுள்ளது.

“இது நிச்சயம் பலஸ்தீனிய அபிலாசையை பாதுகாக்காது. பதிலாக சியோனிச சிந்தனையையே பாதுகாக்கும். இது (இஸ்ரேல்) ஆக்கிரமிப்பை ஊக்குவித்து பலஸ்தீன மக்களின் உரிமைகளை தொடர்ந்து மறுப்பதோடு எமது மக்கள் மீதான குற்றச் செயல்கள் கூட தொடர்ந்து இடம்பெறும்” என்று ஹமாஸ் பேச்சாளர் ஹாசெம் கசாம் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனர்கள் தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியம் “தேசிய, மத மற்றும் மனிதாபிமான பணியை மறுத்துவிட்டது” என்று பத்தாஹ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன்









எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு

ஹார்முஸ் ஜலசந்தி அருகே எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளது.

ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென தானாக விலகிக்கொண்டதில் இருந்து, அவ்விரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில், அதிலும் குறிப்பாக பாரசீக வளைகுடா பகுதியில் பயணிக்கின்ற கப்பல்களை ஈரான் இலக்காக கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகிறது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே லைபீரியா கொடியேந்தி எம்.வி. விலா என்ற எண்ணெய் கப்பல் வந்து கொண்டிருந்தது. அந்த எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் ஒரு ஹெலிகொப்டரில் வந்து கைப்பற்றியதாகவும், 5 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருந்து விட்டு விடுவித்து விட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளது.

அதே நேரத்தில் அந்த எண்ணெய் கப்பலில் இருந்து எந்த ஒரு துயர அழைப்பும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் அந்த எண்ணெய் கப்பலை எதற்காக ஈரான் கைப்பற்றியது என்பது குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் இந்த விவகாரம் ஈரான், அமெரிக்கா இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி தினகரன்










No comments: