Friday, August 14, 2020 - 6:00am
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் பதவியேற்றதைத் தொடர்ந்து வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடத்தியுள்ளனர்.
1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த டக்ளஸ் தேவானந்தா தனது கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றிருந்தார்.
தமிழர் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்ப கால போராளிகளில் முக்கிய ஒருவராக அவர் திகழ்ந்ததுடன் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தளபதியாகவும் விளங்கினார்.
பின்னாளில் ஆயுதப் போராட்டம் திசைமாறிச் சென்றமையால் 1987 களில் இலங்கை_ இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் பின்னர் ஜனநாயக அரசியலுக்கு அவர் மாறினார். இந்நிலையில், 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதற் தடவையாக யாழ் – கிளிநெச்சி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்தார் டக்ளஸ் தேவானந்தா.
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், 2001, 2004, 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாகவும் வெற்றி பெற்று தமிழ் மக்களின் தோற்கடிக்கப்பட முடியாத ஏக பிரதிநிதியாக நாடாளுமன்றுக்கு செல்கிறார் டக்ளஸ் தேவானந்தா .
இக்காலப் பகுதிகளில் பல்வேறு அமைச்சுக்களை பொறுப்பேற்று தமிழ் மக்களின் துயர் நிறைந்த காலங்களில் பெரும்பணியாற்றி வருவதுடன் நல்லிணக்கம், இனநல்லுறவு போன்றவற்றுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகின்றார். தமிழ் மக்களின் ஏக அரசியல் தலைவராக மட்டுமல்லாது தென்னிலங்கை அரசுகளினதும் பெரும்பான்மை மக்களினதும் நம்பிக்கைக்குரியவராகவும் காணப்படுகின்றார்.
குறிப்பாக 2000ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கின் புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்து கலாசார அமைச்சராக பொறுப்பேற்று அளப்பரிய பணியாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 2001ம் ஆண்டு தமிழ் விவகாரங்கள், வடக்கு மற்றும் கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மக்களின் எதிர்காலத்துக்கு ஒளிவிளக்கை ஏற்றி வைத்தவராகவும் விளங்குகின்றார்.
அத்துடன் 2005ம் ஆண்டு இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அன்று ஜனாதிபதியாக இருந்த போது, சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் அமைச்சராகவும் அதன் பின்னர் யுத்தம் நிறைவுற்று நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்ட பின்னரான காலப் பகுதியில் 2010ம் ஆண்டின் அமைச்சரவையில் பாரம்பரிய தொழில்கள் மற்றும் சிறு நிறுவன மேம்பாடு அமைச்சராகவும் பொறுப்பேற்று தமிழ் மக்களுக்கு அளப்பரிய பணியாற்றியுள்ளதுடன், இன்று வடபகுதியில் காணப்படும் எண்ணற்ற அபிவிருத்திகள் அனைத்துக்கும் காரணகர்த்தாவாகக் காணப்படுகின்றார்.
2019ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியானதும் அவரது தலைமையில் உருவான காபந்து அரசில் கடற்றொழில் மற்றும் நீரகவள அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில் 2020 ஆண்டு நடந்துமுடிந்த தேர்தலில் தொடர்ந்து ஏழாவது தடவையாக தமிழ் மக்களின் தோல்வி காணாத தமிழ் தலைவராக பாராளுமன்றம் செல்லும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment