கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 26 “ இங்கிவரை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் ! “

இலங்கையில் வடக்கு – கிழக்கு பிரதேசங்கள் எங்கும் சென்று, கவியரங்குகள், தமிழ் விழாக்கள், ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளில் எல்லாம் கலந்துகொண்டிருக்கின்றேன்.

                                               

அவ்வாறு சென்றதனால் எனக்கு பல புதிய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.  அந்த நண்பர்களில் பலர் என்னோடு தொடர்ந்தும் உறவாடிவருகிறார்கள்.  சிலர் இந்த தொடர்பயணத்தில் மறைந்து விடைபெற்றுவிட்டார்கள்.

முக்கியமாக நாவற்குழியூர் நடராசன்,  இரசிகமணி கனகசெந்திநாதன், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை,  மஹாகவி உருத்திரமூர்த்தி, நீலாவணன், சில்லையூர் செல்வராசன், எஃப். எக்.ஸி . நடராசா, எஸ்.பொன்னுத்துரை, இ. இரத்தினம், சு.வேலுப்பிள்ளை, இ.முருகையன், சுகேர் மீட், ஏ. ரகுநாதன்,  

இவர்கள் அனைவரும் இலங்கையின் வடபகுதியை அல்லது கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், மேற்குப்பகுதியைச்சேர்ந்தவர்களும் எனது வாழ்வில் மிகவும் முக்கியமானவர்கள்.  அவர்கள் பற்றியும் நான் சொல்லாவிட்டால், இந்த சொல்லாத கதைகள் முற்றுப்பெறல்மாட்டாது என கருதுகிறேன்.

நான் கொழும்பில் கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் பணியிலிருந்தபோது,  மேற்குப்பிரதேச தமிழ் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளில் உரையாற்றுவதற்கும் செல்வது வழக்கம்.

அவ்வேளையில் தலைநகரத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் வரும் நீர்கொழும்பு பிரதேசத்திற்கும் பல தடவைகள்  சென்றிருக்கின்றேன்.

எனது பார்வையில் அது ஒரு தமிழ்ப்பிரதேசம்தான்.  தமிழ்ப்பேசும் கத்தோலிக்கர் செறிந்து வாழும் அழகிய கடற்கரை நகரம்.  அங்கே  கடற்கரை வீதியை Sea Street   என்று அழைப்பார்கள்.  அப்படித்தானே அழைத்தல் வேண்டும்.

ஆனால், பாருங்கள் கொழும்பிலும் புறக்கோட்டையில் ஒரு Sea Street   இருக்கிறது. ஆனால், அதனை கடற்கரை வீதி என அழைக்காமல்,   செட்டியார் தெரு என்றுதான் இப்போதும் அழைக்கிறார்கள். சிலவேளை கொழும்பு செட்டியார் தெருவில், அந்த சமூகத்தைச்சேர்ந்தவர்களின் கோயில்கள், நகைக்கடைகள், அடைவுகடைகள் இருப்பதனால் அவ்வாறு அழைக்கப்படலாம் எனவும் நினைக்கின்றேன்.


நீர்கொழும்பிலும் அந்த வீதியில் செட்டிமாரின்  ஶ்ரீமுத்துமாரியம்மன் கோயில் இருக்கிறது. அதனையடுத்து ஶ்ரீசித்திவிநாயகர், ஶ்ரீ சிங்கமாகாளி அம்மன் கோயில்களும் இருக்கின்றன. ஆலய உற்சவங்களுக்கும் அங்கு குறைவில்லை.

சைவசமயத்தவர்கள் அந்த வீதியில் செறிந்து வாழ்ந்தமையால், அதே வீதியில் ஒரு இந்து தமிழ்ப்பாடசாலையும் ஒரு இந்து இளைஞர் மன்றமும் இருக்கிறது.

அந்த இந்து இளைஞர் மன்றத்தில் 1960 ஆண்டு காலத்தில் தமிழ்விழா மூன்று நாட்கள் நடந்தன. அதற்கு நானும் எஸ்.பொ, கனகசெந்தி, ஏ.ரி.பொன்னுத்துரை, வி. கந்தவனம்  உட்பட பலரும் சென்றிருந்தோம். அவ்வாறு சென்றதனால் அந்த ஊர் பற்றி மேலும் தெரிந்துகொண்டேன்.

அந்த மன்றம் அமைந்திருந்த இடத்திற்குப்பின்புறத்தில் விஜயரத்தினம் மகா வித்தியாலயம் இருந்தது.  அதன் ஸ்தாபகர்  விஜயரத்தினம் அவர்கள் முன்பொரு காலத்தில் அங்கே நகரபிதாவாகவும் இருந்திருக்கிறார் என்பதை அறிந்து வியப்படைந்துள்ளேன்.

அந்த வித்தியாலயத்தில் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வ. சண்முகராசா என்பவர் அதிபராக கடமைக்கு வந்தார். அவர் இணுவிலைச்சேர்ந்தவர். இராகத்துடன் பாடுவார். நாடகங்களும் நடிப்பார். அவர் ஒரு கலைஞர். அத்துடன் உதைபந்தாட்ட வீரர்.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் பாடசாலைகள் மட்டத்தில் மாணவர்களுக்கு உதைபந்தாட்டப்போட்டி நடக்கும்போது, அவர் மத்தியஸ்தராக வருவார்.

எனது மற்றும் ஒரு நண்பர் கனகசெந்தி மாஸ்டர். அவரும்

உதைபந்தாட்டப்பிரியர். சம்பளம் எடுத்தவுடன் அவர் செல்லும் முதல் இடம் யாழ்ப்பாணத்திலிருக்கும் புத்தக கடைகள்தான். அதன்பிறகு அவர் செல்லும் இடம் முற்றவெளி.

நான் அவரையும் சண்முகராசாவையும் அங்கு பார்த்துமிருக்கின்றேன்.

பிற்காலத்தில் கனகசெந்திநாதன் மறைந்த பின்னர்,  எனக்கு கொழும்பில் மல்லிகை இலக்கிய சஞ்சிகை ஆசிரியரான டொமினிக் ஜீவாவினால் அறிமுகமான எழுத்தாளர் முருகபூபதி, அந்த ஊரில்  விஜயரத்தினம் மகா வித்தியாலய அதிபர் சண்முகராசாவின் தலைமையில் இரசிகமணி விழாவை நடத்தினார்.  அதற்கு முருகபூபதி என்னையும் அழைத்திருந்தார்.

அதற்கு யாழ்ப்பாணம் குரும்பசிட்டியிலிருந்து கனகசெந்தியின் மகன் முருகானந்தனும் வந்திருந்தார். அன்று அங்கே கனகசெந்தியின் ஒரு பிடி சோறு என்ற நாடக நூலும் வெளியிடப்பட்டது.


நான் அக்கூட்டத்தில் பேசும்போது,  “ யாழ். முற்றவெளிக்கு சண்முகராசா, விசிலுடனும் -  கனகசெந்தி புத்தகங்களுடனும் வருவார்கள்   “ என்று பேசியதும் சபையிலிருந்தவர்கள் சிரித்து கைதட்டினார்கள்.

அக்கூட்டத்தினால் நானும் சண்முகராசாவும் மீண்டும் நீண்ட நாட்களுக்குப்பின்னர் இணைந்தோம். தமது பாடசாலையில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளை ஒழுங்கு செய்துவிட்டு என்னையும் பேசவருமாறு அவர் அழைப்பதுண்டு.

இவ்வாறு அந்தவூருக்கு அடிக்கடி சென்றதனால், அங்கிருந்த அவரது குடும்பத்தினருடனும் பழகும் சந்தர்ப்பங்கள் கிட்டின.

பிற்காலத்தில் சண்முகராசாவின் குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்திற்கு  புலம்பெயர்ந்தனர்.


நானும் இந்தக்கண்டத்திற்கு வந்துவிட்டமையால் அவர்களுடனான நட்புறவு,  நண்பர் முருகபூபதியினால் மீண்டும் துளிர்த்தது.

முதலில் நண்பர் சண்முகராசாவும், அதன்பின்னர் சிறிது காலத்தில் திருமதி கமலாதேவி சண்முகராசாவும் மறைந்துவிட்டார்கள். 

நீர்கொழும்பில் இந்து இளைஞர் மன்றத்தில் வருடாந்தம் நடக்கும் கலைமகள் விழா பேச்சுப்போட்டிகளுக்கு நான் பலதடவைகள் நடுவராகச்சென்றுள்ளேன்.

அவ்வாறு செல்லும்போது, எனது பையில் ஒரு வேட்டியும் எடுத்துச்செல்வேன். எதற்குத் தெரியுமா..?

காலை முதல் மாலை வரையில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறும்.

மாலை மங்கியதும், கலைமகள் விழா தொடங்கும். அவ்விழாவில் நான் பேசவேண்டும்.  மாணவர்கள் நிறைந்திருக்கும் சபையென்பதனால், கல்வி, செல்வம், வீரம் பற்றி அவர்களுக்கு எளியமுறையில் விளக்கி பேசவேண்டும்.  காலை முதல் மாலை வரையில் ஆங்கில நாகரீக உடையில் அவர்கள் முன்னால் தோன்றியிருக்கும் நான், இரவானதும் நவராத்திரியின் மகிமை பற்றிப்பேசும்போது, தமிழ் நாகரீக உடையில் தோன்றிவிடுவேன்.

அதன்பின்னர், இரவு நான் மீண்டும் கொழும்புக்கு திரும்பல் வேண்டும். எனது உரை முடிந்ததும் அந்த மேடையின் பின்புறம் சென்று உடைமாற்றிக்கொண்டு, கடற்கரை வீதியால் நடந்து சென்று பஸ்நிலையத்தில்  இ. போ. ச. பஸ் எடுத்து கொழும்பு செல்வேன். நண்பர் முருகபூபதி என்னுடன் பேச்சுத்துணைக்காக உடன் வந்து வழியனுப்பிவைப்பார்.

அவ்வாறு சுமார் அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்னர் தொடங்கிய நட்புறவு  இற்றைவரையில் எந்தவொரு விக்கினமோ பிரச்சினைகளோ இல்லாமல் தொடருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சிட்னி வாழ் அன்பர்கள் எனது 90 ஆவது அகவை விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கும் பிரதான தூண்டுகோளாக இருந்தவரும் முருகபூபதி என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நான் சொல்லவேண்டும்.

எனது பழைய மாணவர் மாவை நித்தியானந்தன், மெல்பனில் சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் பாரதி பள்ளியை ஆரம்பித்தபோது அதன் அங்குரார்ப்பண நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தார்.  நண்பர் முருகபூபதியும் அதற்கு வந்திருந்தார்.

மீண்டும் எமது நட்புறவு தொடருவதற்கு, மாவை நித்தியானந்தனும் பாரதி பள்ளியும் முக்கிய காரணம்.

1997 ஆம் ஆண்டில் முருகபூபதி இலக்கியப்பிரவேசம் செய்து 25 வருடங்கள் ஆகிவிட்டதை முன்னிட்டு ஒரு மெல்பனில் ஒரு விழா நடந்தது.  அதற்கு அவர் சிட்னியில் வசித்த என்னையும் எஸ்.பொ. வையும் மெல்பனில் வசித்த அண்ணாவியார் இளைய பத்மநாதனையும் ஓவியர் செல்வத்துரையையும் கடிதம் எழுதி வரவழைத்தார்.

தனக்கு வாழ்த்துக்கூறி பேசவருமாறுதான் அழைக்கிறார் என நினைத்துக்கொண்டு சென்றோம்.

ஆனால், அவர் அந்த விழாவில் எங்களது கலை, இலக்கிய சேவைகளை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கத்தான் அழைத்திருந்தார் என்பதை அந்த மேடைக்குச் சென்றபின்னர்தான் தெரியவந்தது.

அன்றைய விழாவிற்கு எனது மற்றும் ஒரு இலக்கிய நண்பர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமை வகித்தார்.  அவ்விழாவில் எம்மைப்பற்றிய கட்டுரைகளுடன் நம்மவர் என்ற மலரும் வெளியிடப்பட்டது.

அந்த விழா முடிந்ததும், நண்பர் முருகபூபதியின் இல்லத்தில் நான் தங்கியிருந்தேன். நடு இரவு வரையும் பேசிக்கொண்டிருந்தோம்.  அவர் பத்திரிகையாளராக இலங்கையில் வீரகேசரியில் பணியாற்றிவிட்டு வந்திருந்தவர்.

மெல்பனில் எனக்கு அறிமுகமான மற்றும் ஒரு நண்பர் விலங்கு மருத்துவரும் எழுத்தாளருமான நடேசன் அவர்கள் குறிப்பிட்ட 1997 ஆம் ஆண்டு காலத்தில் நடத்திக்கொண்டிருந்த உதயம் பத்திரிகையின் ஏற்பாட்டில் நடத்திய கருத்தரங்கிலும் நானும் எஸ்.பொ.வும், ஆசி. கந்தராஜாவும் கலந்துகொண்டோம்.

அதனால் அந்த நம்மவர் விழாவுக்காக சென்றிருந்த நான் முருகபூபதியுடன் இரண்டொரு நாட்கள் மேலதிகமாக தங்கநேர்ந்தது.  அவருடன் அங்கே பல இடங்களுக்கும் சென்று வந்தேன்.

அவர் என்னுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார். என்னிடம் பல கேள்விகளை துருவித்துருவி கேட்டுக்கொண்டிருந்தார். நானும் அவருடைய இனிய பொழுதுகளுக்கு இசைந்து பலதும் பத்தும்பேசினேன்.

அதன்பின்னர் 2001 ஆம் ஆண்டு மெல்பனில் அவர் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை ஒழுங்கு செய்துவிட்டு என்னையும் அழைத்திருந்தார்.

சிட்னியிலிருந்து பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், எழுத்தாளர்கள் பாஸ்கரன், சந்திரகாசன், கருணாகரன், கலாமணி, குணசிங்கம், குலம் சண்முகம்… இவ்வாறு பலரும் சென்றோம்.

முருகபூபதி மீண்டும் 1997 ஆம் ஆண்டு விட்ட இடத்திலிருந்து என்னுடனான உரையாடலை தொடர்ந்தார்.

ஏன் அவர் என்னிடம், என்னைப்பற்றி அதிகம் அறிந்துகொள்வதற்கு முயற்சித்தார் என்பதை அதன்பின்னர், 2003 ஆம் ஆண்டுதான் தெரிந்துகொண்டேன்.

அவர் அந்த ஆண்டு செப்டெம்பர்மாதம் என்னைப்பற்றிய  அம்பி வாழ்வும் பணியும் என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். அந்த நூல் சென்னையில் அச்சிடப்பட்டிருந்தது.

எனக்கு அந்த நூலின் பிரதியை தபாலிலும் அனுப்பியிருந்தார். அவ்வேளை எனக்கு 75 வயது  பிறந்த பவளவிழாக்காலமாகும். அதனைப்பார்த்து நான் வியப்படைந்தேன்.

அவர்   தனது பத்திரிகைத்துறை அனுபவத்தை அந்த நூலில்  காண்பித்திருந்தார்.

1997 ஆம் ஆண்டு முதல் அவர் என்னை தொடர்ந்து அணுகியதற்கான காரணத்தை அந்த நூலைப் படித்துப்பார்த்த பின்னர்தான் தெரிந்துகொண்டேன்.

அவரால் 2004 ஆம் ஆண்டு கன்பரா மாநிலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாவில் எனது பவளவிழாவையும் நடத்தி குறிப்பிட்ட அம்பி வாழ்வும் பணியும் நூலையும் வெளியிட்டுவைத்தார்.

அதற்கும் சிட்னி, மெல்பன், கன்பராவிலிருந்து பல அன்பர்கள் வருகை தந்தார்கள். முக்கியமாக ஆசி. கந்தராஜா,  ஓவியர் ஞானகேரம்,  நாடகக் கலைஞர் கருணாகரன், அரசியல் ஆய்வாளர் முருகர் குணசிங்கம், எஸ்.பி. எஸ். ஊடகவியலாளர் ரைசெல், திருநந்தகுமார், காவலூர் இராசதுரை, அண்ணாவியார் இளைய பத்மநாதன், சிசு. நாகேந்திரன், திருமதி பராசக்தி சுந்தரலிங்கம், இலங்கையிலிருந்து உடுவை தில்லை நடராஜா, தேவகௌரி,  ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவருடைய துணைவியார் திருமதி ஞானலக்‌ஷ்மி ஞானசேகரன் ஆகியோருடன் மெல்பனிலிருந்து ஒரு வாகனம் நிறைந்து அன்பர்கள் பலரும் வந்தார்கள்.

அவ்விழாவில் நான் இயற்றிய பாடலை இசைக்கலைஞர் திருமதி ரமாசிவராஜாவின் மாணவர்கள் பின்னணி இசையுடன் பாடினார்கள். வீரம்மா என்ற மலையக மக்கள் பற்றிய பாடலுக்கு பல்மருத்துவர் அபிராமி யோகநாதனின் நடன வகுப்பு மாணவிகள் அபிநயம் பிடித்து ஆடினார்கள்.

எனது நினைவிலிருந்து இன்னும் எத்தனையோ சொல்லாத கதைகள் தப்பிச்சென்றிருக்கவும் கூடும்.

நினைவிலிருப்பவற்றையாவது சொல்வது எனது கடமையன்றோ…!?

இந்த சொல்லாத கதைகள் தொடர் வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு வருவதற்கும் நண்பர் முருகபூபதிதான் முக்கிய காரண கர்த்தா.

இந்த ஆண்டு ( 2020)  பெப்ரவரி மாதம் எனது பிறந்த தினம் வந்தசமயத்தில் அவரும், தம்பி கானா. பிரபாவும் என்னைப்  பார்க்கவந்தார்கள். கனா. பிரபா, என்னையும் முருகபூபதியையும் பேசவிட்டு விட்டு,  தான் எடுத்து வந்த சாதனங்களினால் பதிவுசெய்தார்.

அப்போது, நான் ஏற்கனவே எழுதிவைத்திருந்த சொல்லாத கதைகள் தொடரின் சில அங்கங்களை தேடி எடுத்து முருகபூபதியிடம் கொடுத்தேன்.

 “ அதனை எழுதி முடித்தல் வேண்டும். வயதும் போய்விட்டது. முதுமை மற்றும் உடல் உபாதைகள் அதற்கு இடமளிப்பதாகத் தெரியவில்லை.  என்ன செய்யலாம்..?   “ எனக்கேட்டேன்.

அவர் அவற்றை படித்துப்பார்த்துவிட்டு எடுத்துச்சென்றார். மீண்டும் கணினியில் பதிவுசெய்யத்தொடங்கினார்.

அதனால், நான் இதுவரையில் சொல்லாத பல கதைகளை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

எனது வாழ்நாளில் இப்படி எத்தனையோ நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

நல்ல நண்பர்கள் கிடைப்பதும் பாக்கியம் அல்லவா..? அதனால் நானும் மகாகவி பாரதி போன்று,   “  இங்கிவரை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் !   “ எனச் சொல்கின்றேன்.

( தொடரும் )

 

 

 

 

 

 


No comments: