விவாதங்கள் செய்வதை விட்டிடுவோம் - என்றும்
விரும்பாத சொற்களைக் கழைந்திடுவோம்
குறைகூறும் பழக்கத்தை ஒழித்திடுவோம் - நாளும்
குன்றாத நட்புடன் வாழ்ந்திடுவோம்
பேராசை கொள்வதை விட்டிடுவோம் - நிதம்
பெரும்பொருள் சேர்ப்பதைத் தவிர்த்திடுவோம்
யாருக்கும் உதவாத பொறாமதனை - நாங்கள்
வாழ்வினில் இருந்துமே எறிந்திடுவோம்
மன்னிக்கும் இயல்பினை வளர்த்திடுவோம் - என்றும்
மற்றவர் மகிழ்ந்திடச் செய்திடுவோம்
வெறுப்பினை வெறுப்புடன் பார்த்திடுவோம் - நிதம்
விருப்புடன் யாவர்க்கும் உதவிநிற்போம்
உழைப்பினை உயர்வெனக் கருதிடுவோம் - நாளும்
உண்மையை நேசித்தே நின்றிடுவோம்
கிடைப்பதை நல்லதாய் ஆக்கிடுவோம் - என்றும்
கீர்த்தியுடன் வாழ முயன்றிடுவோம்
புத்தியை நன்றாகத் தீட்டிடுவோம் - நாளும்
புத்துணர் வோடென்றும் இருந்திடுவோம்
சத்தியம் நேர்மை யெலாமெமக்கு - நல்ல
சொத்தெனக் கொண்டுமே வாழ்ந்திடுவோம்
நட்புடன் நாளுமே நடந்திடுவோம். - என்றும்
நயமிகு சிந்தனை இருத்திடுவோம்
வெட்கிடும் செய்கையை விரட்டிடுவோம் - புவி
மெச்சிடும் வகையிலே வாழ்ந்திடுவோம்
No comments:
Post a Comment