நுழைய முடியாத
இந்த நகரத்தின் மழைச் சாலையில்
ஒரு பறவை கத்திக் கொண்டிருக்கிறது.
தனித்து விடப்பட்டிருக்கும்
இந்தப் பறவையின் சிறகுகளை அமைதிப் படுத்த
பூச்சிகளின் கொடுக்குகளால் தைக்கப்பட்ட பூவிதழ்கள்
தன முனகல்களை மறந்தபடி
வீசத்துவங்குகிறது தன் வாசத்தை.
வேதனைகளால் நிரம்பிய
ஒரு பைத்தியக்காரனின் நகர்வலம்
அங்கு மௌனத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது.
சோடியம் விளக்கொன்றின் கீழ் நிற்கும் சிறு மிருகம்
சொல்லப்படாத கதையொன்றை...
தன் வாலை அசைத்துச் சொல்லிச் செல்கிறது.
தனித்துக் கிடந்த ஒற்றைப் புல் ஒன்று
ஒளிர்கிறது ஈரத்துளியில்...
எதிரொலிக்கும் பிம்பங்களுடன்
இரவை உடைக்கும் பிரயாசையோடு.
விடையில்லாத புதிர்களால் நிறைந்த
இந் நகரத்தின் இரவை...
குளத்து நிலவை வெறித்தபடி...
துரத்திக் கொண்டிருக்கிறது சிறு மீன் ஒன்று.
உதிரும் சூரியனையும்...
உதிரும் நிலவையும் ...
எல்லாத் திசைகளிலும் பொறுக்கியபடி...
இந்தக் கணத்தில் நுழைகிறேன்
யாரும் வெறுக்கும் அந்த நகரத்திற்குள்.
No comments:
Post a Comment