வெள்ளப் பெருக்காலே வேதனைகள் ஒருபக்கம்
வெந்தணலால் பலவுயிர்கள் கருகுகிறார் ஒருபக்கம்
நொந்திடுவார் நிவாரணத்தில் சுகம்காண்பார் மறுபக்கம்
சந்ததும் துன்பமாய் விளைகிறதே பலபக்கம் !
பேயெனவே வெறியாடும் பெருநோயோ ஒருபக்கம்
பெரிதாக மனமெண்ணா வர்க்கமோ மறுபக்கம்
நோயெதிர்ப்பு திட்டத்தில் நயம்காண்பார் ஒருபக்கம்
தாறுமாறாய் பிரச்சினைகள் சமூகத்தைக் கலக்கிறதே !
எதிர்ப்பதனைக் கொள்கையாய் கொண்டிருப்பார் ஒருபக்கம்
எல்லாமே தாமென்று எண்ணிடுவார் மறுபக்கம்
தலைக்கனத்தால் அரசுதனைக் குலைத்திடுவார் ஒருபக்கம்
தறிகெட்டு சமுதாயம் தாடுமாறிக் கிடக்கிறதே !
உயிர்காக்கும் பணிகளிலே உருகுகிறார் ஒருபக்கம்
உன்னதத்தை வாழ்வாக்கி உழைக்கின்றார் ஒருபக்கம்
நலனனைத்தும் தமக்கென்று நினைக்கின்றார் மறுபக்கம்
நாநிலத்தில் நாளுமே பெருகிறதே துயரநிலை !
உபதேசம் செய்வாரை ஒதுக்குகிறார் ஒருபக்கம்
உண்மைதனை குழியிட்டுப் புதைக்கின்றார் மறுபக்கம்
அறவுணர்வை மறுத்துரைப்பார் பெருகுகிறார் ஒருபக்கம்
அகிலத்தில் கஷ்டமெலாம் அதிகரித்தே நிற்கிறது !
வேதனையும் சோதனையும் மிகுந்திருக்கு மேதினியில்
வேடிக்கை எனநினைப்பார் நாளுமே பெருகுகிறார்
ஆதியொடு அந்தமிலா அரும்பொருளே ஆண்டவனே
அகிலத்தைக் காத்துவிட அனுப்பிடுவாய் நற்தூதுவனை !
No comments:
Post a Comment