உலகச் செய்திகள்


கொரோனா மீட்புக்காக பெரும் நிதிக்கு ஐ. ஒன்றியம் இணக்கம்

லிபியாவுக்கு படையை அனுப்ப எகிப்து பாராளுமன்றில் ஒப்புதல்

 'வைரஸில் இருந்து பாதுகாப்பு' விளம்பரம் செய்த ஆடை நிறுவனத்திற்கு அபராதம்

பதில் நடவடிக்கை: செங்டுவில் அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவு

ஈரான் பயணிகள் விமானத்தை நெருங்கி அச்சுறுத்திய அமெரிக்க போர் விமானம்

தகாத உறவு: நியூசிலாந்தின் மூத்த அமைச்சர் பணிநீக்கம்

93 வயது நாஜி வதை முகாம் காவலருக்கு ஒத்திவைத்த சிறை

பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்த நபர்: ஜனாதிபதி தலையீடு

அடுத்த ஆண்டு வரை கொரோனா தடுப்பு மருந்து சாத்தியம் இல்லை


கொரோனா மீட்புக்காக பெரும் நிதிக்கு ஐ. ஒன்றியம் இணக்கம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமை அலுவலகத்தில், பட்ஜெட் மற்றும் பொருளாதார மீட்பு நிதி தொகுப்பு உள்ளிட்டவை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த ஐந்து நாட்களாக நடந்த ஆலோசனைக்கு பின்னர், இறுதியாக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஒற்றை வரியில் 'டீல்' என டுவிட்டரில் பதிவிட்டார்.
கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி தொகுப்புடன், முன்னெப்போதும் இல்லாத வகையில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் தொகையாக 1.82 டிரில்லியன் யூரோக்கள் ஒதுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் குறித்து “ஐரோப்பாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தினம்” என பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் பாராட்டு தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 
லிபியாவுக்கு படையை அனுப்ப எகிப்து பாராளுமன்றில் ஒப்புதல்

லிபியாவுக்கு துருப்புகளை அனுப்புவதற்கு எகிப்து பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. அண்டை நாடான லிபியாவில் துருக்கி ஆதரவு படைக்கு எதிராக தமது இராணுவத்தை அனுப்பப் போவதாக எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குற்றவியல் ஆயுதக் குழுக்கள் மற்றும் வெளிநாட்டு தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக எகிப்து தேசிய பாதுகாப்பிற்காக எகிப்து எல்லைகளுக்கு வெளியில் போர் நடவடிக்கைக்கு எகிப்து படைகளை அனுப்ப அந்நாட்டு பாராளுமன்றம் ஒருமனதான ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. 
இந்த படை நடவடிக்கை மேற்கு முன்னணியாக உருவாக்கப்படவுள்ளது. தமது மேற்கு எல்லை நாடாக லிபியா இருப்பதை குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயர் அமையவுள்ளது. எனினும் இது லிபியாவின் போட்டி அரசுக்கு ஆதரவு அளிக்கும் துருக்கிக்கும் எகிப்துக்கும் இடையிலான மறைமுக போர் நேரடிப் போராக மாற வாய்ப்பு உள்ளது.   
லிபியாவின் கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் கலீபா ஹப்தர் படைக்கு எகிப்துடன் ஐக்கிய அரபு இராச்சியம், ரஷ்யா ஆதரவு அளிப்பதோடு துருக்கி திரிபோலியை தளமாகக் கொண்ட லிபிய அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.    நன்றி தினகரன் 
 'வைரஸில் இருந்து பாதுகாப்பு' விளம்பரம் செய்த ஆடை நிறுவனத்திற்கு அபராதம்

தங்கள் உடற்பயிற்சி ஆடைகள் கொவிட்–19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று கூறி விளம்பரப்படுத்திய குற்றத்திற்காக அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதை அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லோர்னா ஜேன் எனப்படும் அந்த நிறுவனத்திற்கு சுமார் 28,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இணையத்தளத்தில் விற்பனைக்குள்ள உடற்பயிற்சி ஆடைகள் பலவகை வைரஸ் தொற்றிலிருந்தும் கொவிட்–19 நோய்த் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது போன்ற விளம்பரங்கள் மக்களுக்கு ஒரு பொய்யான பாதுகாப்பு உணர்வை அளிப்பதாக அதிகாரிகள் கூறினர்.
அதனால், மக்கள் சுகாதாரத்தையும் பாதுகாப்பு இடைவெளியையும் சரியாகக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
“எங்கள் ஆடைகள் வைரஸ் தொற்றிலிருந்து முழுப் பாதுகாப்பு அளிக்கும் என்று கூறவில்லை. கைகளைக் கிருமி நாசினி பாதுகாப்பதுபோல், எங்கள் ஆடைகளும் கூடுதல் பாதுகாப்புத் தரும் என்று கூறவே முயற்சி செய்தோம்” என்று நிறுவனம் விளக்கம் அளித்தது.   நன்றி தினகரன் பதில் நடவடிக்கை: செங்டுவில் அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவு
சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவிட்டுள்ளது. அந்தத் தூதரகம் செயல்படுவதற்கான உரிமத்தை சீனா ரத்துசெய்துள்ளது.
அமெரிக்காவின் ஹியூஸ்ட்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூடுமாறு, அமெரிக்கா உத்தரவிட்டதை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“அமெரிக்கா எடுத்த நியாயமற்ற நடவடிக்கைக்கு, சட்டரீதியான இந்த பதில் நடவடிக்கை தேவையான நியாயமான ஒன்று” என சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
தனது முடிவு குறித்து சீனாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
செங்டு நகரில் உள்ள அமெரிக்கத்  துணைத் தூதரகத்தின் செயல்பாட்டையும் நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்குத் தேவையான குறிப்பிட்ட விதிமுறைகள், அதனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. 
பல முக்கிய விவகாரங்கள் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. வர்த்தகம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று, ஹொங்கொங் மீது சீனா கொண்டுவந்திருக்கும் புதிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் சீனாவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வருகிறது. 
இதில் செங்டு நகரில் இருக்கும் அமெரிக்க துணைத் தூதரகம் 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். இங்கு 200க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த தூதரகமானது சுயாட்சி பிராந்தியமான திபெத்திற்கு அருகில் இருப்பதால் அமெரிக்காவுக்கு மூலோபாயம் மிக்கதாகவும் உள்ளது.
சீனாவின் இந்த பதில் நடவடிக்கை இரு நாட்டு உறவிலும் மேலும் விரிசைலை அதிகரித்துள்ளது.  நன்றி தினகரன் 


ஈரான் பயணிகள் விமானத்தை நெருங்கி அச்சுறுத்திய அமெரிக்க போர் விமானம்
சிரிய வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானம் ஒன்றை அமெரிக்க போர் விமானம் ஒன்று அபாயகரமான வகையில் நெருங்கி வந்ததாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.
இதனால் மஹன் ஏயார் விமானம் தனது பயணப்பாதையை விரைவாக மாற்றியதால் பல பயணிகளும் காயம் அடைந்ததாக ஈரானின் இரிப் அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பயணி ஒருவரின் முகத்தில் இரத்தம் கொட்டுவது மற்றும் போர் விமானம் ஒன்று நெருங்கி வருவதை விமானத்தின் ஜன்னல் ஊடாக காண்பிக்கும் வீடியோக்களை இரிப் வெளியிட்டுள்ளது. 
எனினும் எப்-15 ஜெட் விமானமானது பாதுகாப்பான இடைவெளியுடனேயே இருந்ததாக அமெரிக்க இராணுவம் பின்னர் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க விமானப்படை கெப்டன் பில் அர்பன்; பிற்பாடு கூறும்போது, அமெரிக்க எப்-15 ரக போர் விமானம் வழக்கமான முறையில்தான் மஹன் ஏர் பயணிகள் விமானத்தைக் காண்காணித்தது. 1000 மீற்றர்கள் தள்ளித்தான் பறந்தது என்றார்.
ஈராக் மற்றும் ஜோர்தான் எல்லைக்கு அருகில் உள்ள அல் தன்ப் அமெரிக்க இராணுவத் தளத்தில் இருக்கின்ற இராணுவத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த பயணிகள் விமானம் தனது பயணப்பாதையில் டெஹ்ரானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
இதில் விபத்து நேர்ந்திருந்தால் மக்கள் உயிருக்கு அமெரிக்கா தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று ஈரான் சாடியுள்ளது.   நன்றி தினகரன் 


தகாத உறவு: நியூசிலாந்தின் மூத்த அமைச்சர் பணிநீக்கம்
முன்னாள் ஊழியருடன் தகாத உறவில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் இயன் லீஸ் கொலோவை பிரதமர் ஜெசின்டா ஆர்டன் பதவி நீக்கியுள்ளார்.  
குடிவரவுத்துறை அமைச்சர் பொறுப்புடன் நடந்து கொள்ளத் தவறி விட்டதாக ஆர்டன் கூறினார். 
ஊழியருடன் தகாத உறவு வைத்திருப்பதாகக் கூறப்பட்டது தொடர்பில் இயனிடம் விளக்கம் கேட்டபோது, அது தங்கள் இருவருக்கும் இடையிலான ஒருமித்த உறவு என்று அவர் பதிலளித்ததாக ஆர்டன் தெரிவித்தார். 
எனினும் திருமணம் முடித்து மூன்று குழந்தைகளின் தந்தையான இயன், தமது நடத்தை முற்றிலும் முறையற்றது என்று சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டதோடு தமது குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.  
செப்டம்பர் மாதம் நியூஸிலாந்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையிலேயே இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. தேர்தலில், ஆர்டனின் தொழிற்கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதில் அவருடைய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.   நன்றி தினகரன் 


93 வயது நாஜி வதை முகாம் காவலருக்கு ஒத்திவைத்த சிறை
இரண்டாவது உலகப் போரில் நாஜி வதை முகாம் ஒன்றில் பல யூதர்கள் உட்பட 5,232 பேரை கொலை செய்வதற்கு உதவியதாக 93 வயது ஜெர்மனி ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாஜி காலத்து குற்றச் செயல்கள் குறித்து இடம்பெற்ற கடைசி வழக்கு விசாரணைகளில் ஒன்றாக இது உள்ளது.
இன்றைய போலந்துக்கு அருகில் இருந்த வதை முகாம் ஒன்றில் ப்ரூனோ டி என்பவர் காவலராக இருந்துள்ளார். இங்கு 1944 ஓகஸ்ட் தொடக்கம் 1945 ஏப்ரல் வரை இடம்பெற்ற கொலைகளுக்கு இவர் உடந்தையாக இருந்ததாக ஹம்பர்க் நீதிமன்றத்தால் நேற்று குற்றங்காணப்பட்டது. இந்த முகாமில் தாம் இருந்ததை அவர் ஒப்புக்கொண்டபோதும் இத்தனை குற்றங்கள் புரியவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.ட்டோப் முகாமில் பல யூதர்கள் உட்பட சுமார் 65,000 பேர் கொல்லப்பட்டு அல்லது உயிரிழந்திருப்பதாக அந்த அருங்காட்சியக இணையதளம் குறிப்பிடுகிறது.
அப்போது 17 அல்லது 18 வயதாக இருந்த ப்ரூனோவுக்கு சிறுவர் குற்றங்கள் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்த நபர்: ஜனாதிபதி தலையீடு
உக்ரைனின் லுட்ஸ்க் நகரில் பஸ் வண்டியில் 10 பேரை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து தனது முற்றுகையை கைவிட்டுள்ளார்.
இதனை அடுத்து பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார். அவர் தரையில் தலைகுப்புற வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் துப்பாக்கிதாரி கைது செய்யப்படும் முன், அவரது கோரிக்கைக்கு ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உடன்பட்டு குறுகிய நேர வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “2005 ஆம் ஆண்டு வெளியான ஏர்த்லிங்ஸ் என்ற ஆவணப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்வையிட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பணயக் கைதிகள் அனைவரும் காயம் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். 44 வயதான மக்சிம் கிரிவோஷ் என்ற துப்பாக்கிதாரி முன்னரும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை பஸ் வண்டி ஒன்றை முற்றுகையிட்ட கிரிவோஷ், சமூக அமைப்புக்கு எதிர்ப்பை வெளியிடுபவர் என்று கூறப்படுகிறது. அவர் பரிந்துரைத்த ஆவணப்படம் விலங்குகள் சித்திரவதை செய்யப்படுவது தொடர்பானதாகும். இந்த ஆவணப் படம் சிறந்தது என்றபோதும் அதற்காக ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்தக் கூடாது என்று உக்ரைன் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 

அடுத்த ஆண்டு வரை கொரோனா தடுப்பு மருந்து சாத்தியம் இல்லைஉலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
கொவிட்–19 தொற்றுக்கான தடுப்பு மருந்தினை மேம்படுத்துவதன் பிந்திய கட்ட சோதனைகளில் ஆய்வாளர்கள் முன்னேற்றம் கண்டபோதும் 2021 முற்பகுதி வரை அது பயன்பாட்டுக்கு வருவதை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தீர்க்கமாக இருக்கும் நியாயமான முறையில் தடுப்பு மருந்தினை விநியோகிப்பதை உறுதி செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு செயற்பட்டு வருவதாக அந்த அமைப்பின் அவசர திட்டங்களுக்கான தலைவர் மைக் ரியான் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வைரஸ் தொற்று எண்ணிக்கை சாதனை அளவுக்கு அதிகரித்து வரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பல தடுப்பு மருந்துகளும் தோல்வி இன்றி 3 ஆம் கட்ட சோதனையை தற்போது முன்னெடுத்துள்ள நிலையில், “நாம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம்” என்று ரியான் தெரிவித்தார். இந்தத் தடுப்பு மருந்துகள் இதுவரை பாதுகாப்பான அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. “உண்மையில் அடுத்த ஆண்டு முதல் பகுதியிலேயே மக்கள் தடுப்பூசி பெறுவதை பார்க்கலாம்” என்று அவர் சமூக ஊடகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டார்.    நன்றி தினகரன் 

ரஷ்யா விண்வெளியில் ஆயுத சோதனை: அமெ. குற்றச்சாட்டுபூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் செய்மதிகளை இலக்கு வைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் விண்வெளியில் ஏவுகணை போன்ற ஆயுதம் ஒன்றை ரஷ்யா சோதிப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளன.
அண்மைய செயற்பாடுகள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செய்மதி எதிர்ப்பு ஆயுதமாக இருக்கக் கூடும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய விண்வெளி உபகரணங்களின் செயற்பாடுகளை சரிபார்ப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
எனினும் ரஷ்யாவின் புதிய செய்மதி செயற்பாடுகள் பற்றி அமெரிக்கா முன்னதாக கவலையை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டனும் முதல் முறையாக, விண்வெளியில் ரஷ்யா ஆயுத சோதனை ஒன்றை மேற்கொண்டிருப்பது பற்றி குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தலை மோசமான வகையில் குறைத்து மதிப்பிட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.   
இது விண்வெளி சோதனை என்று ரஷ்யா கூறிவரும் நிலையில், இந்த ஏவுகணையானது ஆயுதங்கள் போல இருப்பதாக, அதாவது ஓர் ஆயுதத்திற்கான பண்புகளைக் கொண்டிருப்பதாக பிரிட்டன் கூறுகிறது.    நன்றி தினகரன் 


No comments: