பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 10 - காலம் வெல்லும் - சுந்தரதாஸ்

.

 தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் கர்ணன். சாரதா, கற்பகம். கைகொடுத்த தெய்வம் போன்ற பல குடும்ப கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்களை ஒளிப்பதிவு செய்த கர்ணன் 1970 ஆம் ஆண்டு படத் தயாரிப்பாளராகவும், நெறியாளராகவும் அவதாரம் எடுத்தார் அவ்வாறு அவர் டைரக்ட் செய்த முதல் படத்தை குடும்ப கதையாக எடுக்காமல் கவ்பாய் பாணியிலான ஆக்ஷன் படமாக உருவாக்கினார் கர்ணன் . அப்படி கர்ணன் உருவாக்கிய படம்தான் காலம் வெல்லும்.

இது போன்ற படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு என்று இருந்த ஒரே நடிகர் ஜெய்சங்கர் எனவே அவரையே கதாநாயகனாக்கி படத்தை உருவாக்கினார் . தலையில் தொப்பி இடுப்பில் துப்பாக்கி பயணம் செய்ய குதிரை என்று ஓர் ஏற்பாட்டுடன் கதாநாயகனை படம் முழுவதும் உலாவ விட்டார். அவரின் எதிர்பார்ப்பிற்கு குறை வைக்காமல் ஜெய்சங்கரும் கவ்பாய் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

ஊரை அடித்து உலையில் போடும் ஒரு ஜமீன்தார் அவருக்கு சற்றும் சளைக்காத தம்பி இவர்களின் அட்டூழியத்தால் கதாநாயகனின் குடும்பம் பாழாகிறது. அவன் தங்கையும் கொல்லப்படுகிறார், இதற்கு மேலும் விட்டுவைப்பாரா கதாநாயகன் வீறு கொண்டு எழுந்து எதிரிகளை ஒழித்துக் கட்டுகிறார்.ஜெய்சங்கரின் ஜோடியாக விஜயகுமாரி நடித்தார் குணச்சித்திர நடிகையான அவருக்கு இந்த அடிதடி படத்தில் நடிக்க கிடைத்த சந்தர்ப்பம் குறைவு தான் ஜமீன்தாராக ஓ ஏ கே தேவரும், எம் ஆர் ஆர் வாசுவும் நடித்தார்கள் . அதட்டல் உருட்டல்களை தேவர் செய்ய அடிகளை வாசு கவனித்துக் கொண்டார். நாகேஷ் சுருளிராஜன் ஆகியோர் கதையோட்டத்திற்கு உதவியதுடன் அவ்வப்போது சிரிக்க வைத்தார்கள். தாயாக வந்த காந்திமதி உருக்கமாக நடிக்க, கவர்ச்சி நடனம் மூலம் ரசிகர்களை விஜயலலிதா கிறங்கடித்தார் . எல் ஆர் ஈஸ்வரியின் குரல் அதற்குத் துணை போனது.படத்தில் சண்டை மரத்தின் மீது, குதிரை மீது, துப்பாக்கியோடு என்று பலவிதமான சண்டை காட்சிகள் படத்தில் இடம்பெற்றன. இது தவிர மிஸ்டர் மெட்ராஸ் என்று விருது பெற்றிருந்த ராமகிருஷ்ணன் என்ற ஆஜானுபாகுவான உடல் கொண்டவருடான் ஜெய்சங்கர் மோதுகிறார். எல்லா சண்டை காட்சிகளையும் கர்ணனின் கெமரா விறுவிறுப்பாக படமாக்கியது.மாதங்கனின் கதைக்கு குருசாமி வசனம் எழுதியிருந்தார் இப்படத்தில் கண்ணதாசன் எழுதிய எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணை பார்க்கும்போது அந்த பாடல் பரபரப்பை ஏற்படுத்தியது படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் சண்டைக்காட்சிகளை உருவாக்கியவர் ஸ்டண்ட் மாஸ்டர் மாதவன் காலம் வெல்லும் படத்தின் வெற்றி பின்னர் இது போன்ற பல படங்கள் உருவாவதற்கு ஏதுவாக அமைந்தது

No comments: