சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலும் தலைப்பு செய்தியாக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளும் - 2 பரமபுத்திரன்


ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், தமிழர்களின் இருப்பு நிலை நிறுத்தப்படவேண்டும், உலகுக்கும், சிங்கள மக்களுக்கும் நாங்கள்  யாரென்று காட்டவேண்டும், தமிழ் மக்களின் ஒருமித்த பலத்தை நிரூபிக்கவேண்டும், என்ற முக்கிய கருப்பொருள் முன்வைக்கப்படும். தமிழர்களும் இந்த வசனங்களை உண்மையென நம்பி  போடு புள்ளடி என்று வாக்களிப்பர். சிங்கள அரசுகள், அரசியல்வாதிகளின் புத்திசாலித் தனமான செயல்பாடுகளின் விளவுகளால் இன்று தமிழர்கள் பங்களிப்பு  அற்ற தலைமையை  உருவாக்கி நாட்டினை ஆளும் நிலைக்கு சிங்கள ஆட்சியாளர்கள் வந்துவிட்டார்கள். ஆனால்   தமிழ்மக்களின் அரசியல் பலமும் போய், நிலமும் குறுகி, மொழியும் தளர்ந்து, வாழ்ந்தால் போதும் என்ற நிலைதான்   தமிழர்களுக்குக் கிடைத்த முடிவு என்று சொல்லலாம்.     

“நான்  சிங்கள மக்களின் அரசுத்தலைவன்” என்று சொல்லும் வல்லமை கொண்ட முதல் தலைவன் உருவாக காரணமாக அமைந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் வழிகாட்டலில் அமைந்த தேர்தல் புறக்கணிப்பு (2005) என்று உறுதியாக சொல்லமுடியும். அதற்கு நன்றியுள்ளவராக இருக்கவேண்டியவர் மகிந்த ராசபக்ச. ஆனால் அவரே புலிகளை அழித்தேன், நாட்டை மீட்டேன், மக்களை காப்பாற்றினேன், பெளத்தத்தை நிலை நிறுத்தினேன்  என்று பெருமை பேசுபவராகவும், சிங்கள மக்களின் வாக்குகளாலேயே சிறிலங்காவின் அரசுத்தலைவரை உருவாக்கவேண்டும் என்று  சிங்களவரிடம் என்று பரப்புரை செய்பவராகவும் அமைந்தார். அதுமட்டுமல்ல ராசபக்ச குடும்பம் நிலைத்த ஒரு முத்திரையை அரசியல் வரலாற்றில் பதிய காரணமாக அமைந்ததும் அதே தேர்தல்தான். சுருக்கமாக சொன்னால் பிரேமதாச (இறப்பு 1993), மைத்திரிபால ( ஒருமுறை மட்டும் தலைவராக இருப்பேன் என்றவர்) இருவரையும் தவிர்த்தால் ஆட்சிக்கு வருவோர் இருமுறை அரசுத்தலைவராக இருந்தே வெளிச்செல்வர். விடுதலைப்புலிகளின்  ஆதரவுடனான வருகை  இருமுறை அரசுத்தலைவராக இருப்பதையும் தாண்டி  மீண்டும் அரசியலுக்குள் இருந்து நாடாளுமன்றில் செயல்பட சட்டமூலம் உருவாக்கவும் வழிவகுத்தது. எனவே தமிழரைப் பயன்படுத்தி தமிழரை தோற்கடித்தவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் என்ற வரலாறு மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்று தனித்த  சிங்கள வாக்குகளுடன்  வெற்றிகரமாக அரசுகள் அமைகின்றன. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ மக்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளும் காரணமாக அமைந்தார்கள் என்பது தவிர்க்க முடியாத செய்தி. ஒர் அரசுத்தலைவரின் தயவில் அல்லது பாராளுமன்றின் முடிவில் நாம் தனிநாடு அமைக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டால் அவர்கள் தேர்தல்  நடைமுறை தொடர்பான அக்கறை அற்று இருந்திருக்கலாம். 

இதேவேளை சனநாயக முறையில் போராடுவதாக சொல்லும் தலைவர்கள் அவ்வாறு இருக்கமுடியாது. இருப்பினும் தேர்தலில் வெல்லும்  தமிழ்த்  தலைவர்களிடம் தமிழர்களும் நீங்கள் என்ன  செய்தீர்கள் என்று கேட்பதில்லை. கேட்கமுன்பே சிங்கள அரசு எம்மை  ஏமாற்றி விட்டது என்ற புராணம் பாடுவார்கள். இருந்தாலும் முழு உலகும் எமக்கு உதவும் என்பர். மக்களும் ஏற்பர். எனவே ஆங்கிலேயருக்கு தமிழரை அரசியலில் இருந்து விலக்கும்  நுட்பம் தெரிந்துள்ளது. அவர்களிடம் அரசு உரிமையை வாங்கிய சிங்களருக்கு பாராளுமன்றம் வரும் தமிழரை கையாளத் தெரிந்திருக்கிறது. புரட்சியாளர்கள் என்று பெயர் கொண்டவர்களையே தமக்கு சேவை செய்ய வைத்தவர்கள். ஆங்கிலேயரின் கல்விமுறையில் படித்த தமிழ் தலைமைகளுக்குத் தெரியும்  மக்களுக்கு என்ன சொல்லவேண்டும் என்பது. ஆயுதமேந்திய, வன்முறைப் பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் கூட அரசுடனான தங்கள் பேச்சு வார்த்தைகளை வெளியிடுவார்கள். ஆனால் இந்த மக்களாட்சியில் வந்த அரசியல் தலைவர்கள் மக்கள் தெரிவு செய்த மக்களின் தலைவர்கள் என்பதால் அவர்கள் யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சிங்கள அரசுடன் மட்டும் பேசுவர்.  மீறி கேள்வி கேட்டால் “மக்களின் அனுமதியுடன் பாராளுமன்றம் செல்பவர்கள், வாக்குகளுக்காக மக்களிடம் மட்டும் கூட்டம் போட்டு  பேசுவார்கள், மக்களுக்கு செய்தி சொல்ல செய்தி ஊடகங்களில் பேசுவார்கள், அரசியல் தீர்வுக்காக அரசுடன் பேசுவார்கள்”  இதன் விளைவாக தமிழர்கள் தொடர்பாக கவலை கொண்டவர்கள்  ஒதுங்கவேண்டிய நிலைகளும் உண்டு. அதன் காரணமாக பலர் அமைதியாக தாமாக ஒதுங்கினார்கள் அல்லது ஒதுங்க வைக்கப்பட்டார்கள். சிலர் சிங்கள கட்சிகளுடன் இணைந்து கொண்டனர். அத்துடன் அவர்களின் செய்திகள் அல்லது கூற்றுக்கள் தமிழருக்கு அப்பாற்பட்டது என்று கூறி அவர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது மட்டுமல்ல தமிழர்களுக்கு உதவுபவர்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுதலே வரலாறு. அதனையும் சற்றுத்  திரும்பிப் பார்க்கவேண்டும்.

ஆரம்பத்தில் பண்டாரநாயக்க  தமிழ்  மொழியை ஏற்றுக்கொண்டவர்.  அதாவது சிங்களம், தமிழ்  இரண்டும் (1944) ஆட்சிமொழியாக இருக்கலாம் எனவும், இனசமத்துவம் (1951) பேணப்படவேண்டும் எனவும் கூறிய  ஒருவர் என்பதனை ஜி. நடேசன் குறிப்பிடுகின்றார் (இலங்கை இனமுரண்பாடுகளின் வரலாறு). அதன் பின் இன்னும் பல சிங்களர்  தமிழர்கள் உரிமையை மதித்துக் குரல் கொடுத்துள்ளார்கள். இன்றும் குரல் கொடுப்பவர்கள் சிங்களர் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து எங்கள் இனச்சிக்கலை வெளிக்கொண்டுவர தமிழ்  அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. காரணம் அரசாளும் கட்சியுடனோ அல்லது மற்றைய கட்சியுடனோ முரண்படுவது தமிழ்  அரசியல்வாதிகளுக்கு நல்லதல்ல. ஆதலால் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களை தமிழர்களும் ஆதரிப்பதில்லை. சிங்களவர்களும் ஆதரிக்கமாட்டார்கள். அரசியலில் தோல்வியை மட்டும் பெறும் நபர்களாக அவர்கள் மாறுவார்கள். இது தமிழ் தலைவர்களுக்கும் பொருந்தும். அதனால் அரசியல் இலாபத்தை நோக்காக கொள்ளாமல் மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் ஒருவர் தவிர்ந்த எவரும் தமிழரின் உரிமை தொடர்பாக பேசவிரும்பமாட்டார்கள். மேலும் தமிழ் அரசியல்வாதிகள் இயல்பாகவே சிங்கள ஆளும் கட்சிகளுக்கு முண்டுகொடுக்கவே விரும்புவார்கள்.

தேசிய சிந்தனை உடைய, சமத்துவம் பேசுகின்ற, தமிழுக்கும் உரிமை கொடுக்கவேண்டும் என்று விரும்புகின்ற, தமிழரை மதிக்கின்ற   பொதுநல சிங்கள அரசியல் சிந்தனையாளர்களை பயன்படுத்தி தமிழர்களின் நிலையினை சிங்கள மக்களுக்கு சொல்ல வைப்பதில் தமிழ் அரசியலாளர்கள் விருப்பம் கொள்வதில்லை. இந்த தவறு விடுதலைப் புலிகளாலும் இழைக்கப்பட்டது எனலாம். ஏனெனில்  விடுதலைப்புலிகள் சிங்கள மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் ஆபத்தானவர்கள் என்ற எண்ணமே சிங்கள மக்களிடம் வலுவாக வேரூன்றச் செய்யப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் பெருந்தொகையான தமிழர்கள் இறந்தபோது மனிதர்கள் இறக்கிறார்களே என்று கூட கவலைகொள்ளாது  சிங்கள மக்கள் அமைதியாக இருந்தது மட்டுமன்றி, பிரபாகரன் இறந்துவிட்டார் என்றவுடன் வீதிவீதியாக சென்று நடனமாடி இருக்கமாட்டார்கள். தனக்கு என்ன நடக்கப்போகின்றது என்று தெரியாது, அமைதியாக காவலரனில் அமர்ந்திருந்த ஒரு சிறிய பிள்ளையான பாலச்சந்திரன் சுட்டுக்  கொல்லப்பட்டதை மனசாட்சி உள்ள எவரும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். சரியென்று கூறவோ அல்லது பொய் என்று வாதிடவோ விரும்பார்கள். எனவே எல்லாவற்றுக்கும் ‘சிங்களவர் ஏமாற்றுகிறார்கள்’ என்ற ஒற்றைத் தொடர் விடையுமல்ல. விளக்கமுமல்ல. எங்களை அனுப்பினால் நாங்கள் எல்லாவற்றையும் முடித்துவைப்போம் என்பது உண்மையும் அல்ல. விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டமை போர். ஆனால் அங்கிருந்த மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாகவும் பேச விரும்பாதவர்கள் தமிழ்  அரசியல்வாதிகள். அவர்கள்தான் தமிழருக்காக வந்து நிற்கிறார்கள்.   சிங்கள அரசியல் எங்களை ஏமாற்றுகிறது என்றால் ஏமாறுதல் தொடர்ந்து நடக்கலாமா?


சிங்கள அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தமிழரைப் பயன்படுத்தி தமிழர்களை தோற்கடிப்பார்கள். அதற்கான உதாரணங்கள் நான் சொல்லத் தேவையில்லை. ஒன்றல்ல பலவுண்டு. தமிழரிடம் வாக்கு கேட்பது, சிங்கள அரசுடன் இணைந்து அவர்கள் கொள்கைகளை ஏற்றுக் கையெப்பமிடுவது. வாழும் வரை எதையும் விருப்புடன் செய்வது.  சாகும் தருவாயில் பொறுப்புடன் வாழந்தவர்கள் போல்  தெரியாமல் செய்துவிட்டோம் என்று அனுதாபம் தேடுவது. இதில் தமிழருக்காக போராடப்  புறப்பட்டவர்களும் இணைந்தது கவலைக்குரியது. ஆனால் எல்லாவற்றையும் மறக்கும் தமிழரின் இயல்பு மிகவும் கொடியது. ஆங்கிலேயரின் மதிப்பீட்டு அடிப்படையில் யார் திறமைசாலி என நிறுவும் நோக்கில் தமக்குள் அடித்துக் கொண்டு முன்னிற்பர் தமிழர்.   எது எப்படியோ ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் பின் அரசியல் நடத்தும் எல்லோருக்கும் பொதுவான கருப்பொருளாக விடுதலைப் புலிகள் அமைந்துவிட்டார்கள். ஆனால் சிங்களர் விடுதலைப் புலிகளை பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்லமுடியாது அவர்களின் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு ஏராளமான காரியங்களை சாதித்தார்கள், சாதிக்கிறார்கள், சாதிப்பார்கள்.  தமிழர்கள் விடுதலைப் புலிகளின் பெயரை யார் வெற்றிகரமாக பயன்படுத்துவது என  தமக்குள் அடித்துக் கொண்டார்கள், அடித்துக் கொள்கிறார்கள், இனியும் அடிபட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

இன்றும்கூட வன்முறை எதிர்ப்பாளர்களான தமிழ்  மக்களாட்சித் தலைவர்கள் வெளிநாடுகளை குறிப்பாக இந்தியாவையும், உலக நாடுகளையும் தமிழ் மக்கள் நம்பினால் போதுமானது என்கிறார்கள்.  எங்களின் பின்னால் உலகநாடுகள் நிற்கிறது முன்னால் இந்தியாவும் பார்க்கின்றது. எனவே திருகோணமலை எங்களுக்கு, மட்டக்களப்பு எங்களுக்கு, யாழ்ப்பாணம் எங்களுக்கு என்று காட்டவேண்டும் எனக்கூறுகிறார்கள். தமிழர்கள் உணவின்றி, மருந்தின்றி, புகையில் கருகி, நச்சுள் அமிழ்ந்து இறந்தார்களே, அப்போது நீங்களும், உங்களின் பின்னால் நின்ற உலகமும் எங்கே சென்றன. தமது செயல்பாடுகளை சுட்டிக்காட்டி வாக்குக்கேட்க வேண்டியவர்கள் தேர்தலில் மக்களின் சாவுக்கும்  விடுதலைப்புலிகளின் தியாகத்துக்கும்  முன்னுரிமை கொடுக்கின்றார்கள். உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் பலரை தமக்கு எதிராக சதி செய்யும் புலிகளாக சிங்கள அரசுக்கு சொல்கிறார்கள். சிங்களரோ விடுதலைப்புலிகள் மீள உருவாக விடக்கூடாது என்று அவர்களை வைத்து பிரசாரம் செய்கிறார்கள். தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சிந்தித்து செயல்படும் நேரம் இது.  உண்மையில்  ஆங்கிலேயரின் எண்ணத்துக்கும் அதன் பின்னரான தமிழரின் பாராளுமன்ற அரசியலுக்கும் சரியான இணைப்புக் கொடுத்தால் தமிழ் அரசியல்வாதிகள் ஆங்கிலேயரின் எண்ணத்துக்கு மாறுபட்டு உள்ளார்களா என்று மதிப்பிடமுடியும். வன்முறையற்ற பாராளுமன்ற மக்களாட்சி தமிழருக்கு  தொடர் தோல்விகளை  மட்டுமே பெற்றுக் கொடுத்துள்ளது. இதற்கு காரணம் யார் என்பது சிந்திக்க கூடியது. நாம் எது செய்தாலும் தமிழ்  மக்களின் வாக்கு எமக்குரியது என்று மீண்டும் மீண்டும் வாக்குக் கேட்கும் துணிவினை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய தமிழர்கள் உண்மையில் மிகவும் நல்லவர்கள் என்றே சொல்லவேண்டும்.

வரலாற்று வழியில் ஒரு உதாரணம். அமிர்தலிங்கம் என்பவர் (1956-1970) அவரது தொகுதியான வட்டுக்கோட்டையில் 1970 ல் நிராகரிக்கப்பட்டார். அதன்பின்பு காங்கேசன் துறைத்தொகுதியில் (1977) வெற்றிக்கொண்டார். சொந்தத் தொகுதியில் புறக்கணிக்கப்பட்ட அவர் வேறு தொகுதியில் அங்கீகரிக்கப்பட்டார். இதுதான் தமிழரின் சிந்தனை வேகமும், அரசியல் வாதிகளின் புத்திசாலித்தனமும்.  தமிழர்கள் அரசியல் உரிமையில் கேள்வி கேட்க தொடங்கிய நிலையிலும் பார்க்க (1920) இன்று  மிகத்  தாழ்வான நிலைக்கு  வந்து விட்டார்கள். தமிழருக்கு எதிரான தமிழரின் தொழிற்பாடு  என்று தம்பிமுத்துவிலிருந்து ஆரம்பித்துப்  பார்த்தால் சிங்கள அரசுடன் இணைந்து அல்லது சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுத்து தமிழர்கள்தான் தமிழர்களுக்கு கெடுதல்  செய்கின்றார்கள் என்பது தெளிவானது.  சாத்வீக போராட்டம் தொடர்பாக, தனிப்பட்ட வகையில் என்னிடம் ஒரு கேள்வி எழுவதுண்டு. ‘ஸ்ரீ’ எதிர்ப்பு போராட்டம் ஏன்  நடந்தது. தமிழ் நெடுங்கணக்கில் இந்த எழுத்து ஒரு இடமும் இல்லை. பிறகு ஏன் சண்டையிட்டார்கள். அந்த எழுத்துக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு. “ஸ்ரீலஸ்ரீ” என்பது தமிழ் அல்ல. “தவத்திரு” என்பதுதான் தமிழ்  என நான் படித்திருக்கின்றேன்.   எனவே தேவை எதுவென சரியாக உணராது போராடி மக்களை குழப்பத்துக்கு ஆளாக்குகிறார்கள் என்றே சொல்லமுடியும். இங்கு திரு. க. வி. விக்கினேஸ்வரன் அவர்கள் கூற்று முக்கியமானது. “தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை தினத்தில் பங்குபற்றவேண்டும், சிங்களத் தலைவர்களுடன் ஒத்துப் போகவேண்டும்” என்று உள்ளவர்கள் எப்படி தமிழ்  மக்களுக்கு வெற்றியைத்  தேடித்தருவார்கள். வாக்களித்த மக்களை சிந்திக்காது தங்கள் வாழ்க்கையை சிந்திக்கும் தலைவர்களை பெற்றமை தமிழர்கள் பெற்ற பெரும் சாபம்  எனலாம். தலை நிமிர்ந்து கேள்வி கேட்கும் தைரியம் அற்றவர்கள் எப்படி தமிழருக்காக பேசுவார்கள். உலகம் உண்டு, இந்தியா உண்டு, ஆனாலும் 1958, 1977, 1983 பாரிய இனக்கலவரம் நடந்ததும் உண்டு. அதைவிட இன்னும்பல சம்பவங்களுமுண்டு. அப்போதும் உலகம் இருந்தது, இந்தியா இருந்தது, ஆயுதக்குழுக்கள் இருக்கவில்லை. தமிழ்  அரசியல் தலைவர்களும் இருந்தார்கள். 

தங்களை  எதிர்த்து போரிட்டவர்களை சிங்களர் சொல்லி வாக்கு கேட்கலாம். சிங்களமொழி, பெளத்தம் இந்த இரண்டையும் காப்பாற்ற புலிகள் அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் சொல்லலாம். அரசே வேண்டாம் என்று ஓடிய புத்தனின் பெயரால் அரசினை பிடிக்கிறார்கள் அவர்கள். தமிழர்களிலும் புலிகளை எதிர்ப்போர் உண்டு. சிலர் நிரந்தரமாக எதிர்க்கிறார்கள். சிலர் தேவைக்கேற்ப எதிர்க்கிறார்கள். அதாவது தேவைப்படும்போது பயன்படுத்துவது.  ஆனால் தமிழ்  மக்களின் சிறப்பான வாழ்வுக்காக உயிர்களை வழங்கியவர்களை கூறி தங்களை வளம்படுத்த வாக்கு கேட்பது சிந்திக்கப்படவேண்டியது. ஒருமுறை புலிப்பிரமுகர் ஒருவர் பேசியதைக் கேட்டேன். “நாம் போராட்டக் களத்தில் இருந்து விலகினால் தர்மபுரம் “அதர்மபுர” ஆகும் விசுவமடு “விசுவமடுவ” ஆகும், கிளிநொச்சி “கிளிநொச்சிய” ஆகும். அப்போது நான் இருக்க மாட்டேன் நீங்கள் இருப்பீர்கள்.” மக்களாட்சியில் மக்களுக்கு கிடைக்கும் ஒரே உரிமை வாக்குரிமை. அந்த உரிமையையும் எங்களுக்கு எதிராக நாம் பயன்படுத்துவது மிகவும் கவலையான ஒன்றுதான்.

செய்திகள் பல நாளும் வருகின்றன. தமிழ்  மக்கள் செய்திகள் தொடர்பாக சிந்திக்க வேண்டும். போராட்டம் செய்த இனம் ஒன்று தோல்வி கண்டால் அது பாரிய சிக்கல்களை சந்திக்கும் என்பது வரலாறு. அந்த இனத்தைக்  காப்பாற்ற வேண்டியவர்கள் தமக்கு ஆதாயம் தேட தோல்வியை பயன்படுத்துவது கவலைக்குரியது. விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தவறு என்று சுட்டிக்காட்டும் அரசியல் தலைவர்களை விடுதலைப்புலிகளின் தெரிவு என்று பலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் விடுதலைப்புலிகள் வழிவந்தவர்கள் என்று தங்களை இனம்காட்டவே இல்லை. இதனை தமிழ்மக்கள் உணரவில்லை என்றே சொல்லமுடியும்.  சில கேள்விகள் என்னைப் பார்த்தும் எழும் “நீயா தமிழ் மக்களின் காவலன். அவர்களை வழிநடத்தும் தேசிகன் என்று” அப்படியானால் இனத்துக்காக பேசும்  ஒருவரும் பூமியில் இல்லை எனலாம்.  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னதாக செய்தி படித்தேன். “நான் கள்ள வாக்கு போட்டவன்” என்பதுதான் அது. அவர் சொன்ன இச்செய்தி உண்மையென்றால், முன்பு அவர் ஓர்  ஆசிரியர், பின் அதிபர், அதன்பின் அரசியல்வாதி. அவரின் கூற்று எவ்வளவு மக்களை பாதிக்கும். தவறான பழக்கமுள்ள ஓர்  ஆசிரியரின் வழிகாட்டலில் வந்த மாணவர்கள் எப்படி இருப்பார்கள்?. அவர்  வாக்குகள் செலுத்திய நிலையங்களில் தொழில் பார்த்தவர்கள்  நிலை என்ன?. மாற்றுக் கட்சிகளுக்காக தேர்தல் நிலையத்தில் இருந்தவர்கள்  நிலை என்ன? அதேபோன்று இன்னும் பலர் வேறுபட்ட பல செய்திகளை கூறுகிறார்கள். அது விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அமைகிறது. நேரடியாக தொடர்புடைய, அல்லது  ஆராய்ந்து தெளிவடைந்த ஒரு செய்தி தவிர மற்றவை எல்லாம் மகாபாரதம், இராமாயணம் போன்ற சுவையூட்டலுடன் சொல்லப்படும் கற்பனைகள் அல்லது கட்டுக்கதைகள் என்கிறார்கள் சுய சிந்தனையாளர்கள். ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகள் தமக்குள் உருவாக்கும் கட்டுக்கதை என்கிறார்கள். நாம்  அவர்களைப்பற்றி அனுமானிப்பது கட்டுக்கதைகள் என்கிறார்கள். எனவே கற்பனைகள் கதையாகிறது. ஆகவே கட்டுக்கதைகள் உண்மையாகாது.  விவாதிக்கவும், சண்டையிடவும் வழிவகுக்குமே தவிர பயனளிக்காது. பயன்படாது. தமிழ்  மக்கள்தான் சிந்திக்கவேண்டும்.

மாற்றங்களை உருவாக்கவேண்டும். அதனை ஏற்கவும் வேண்டும். அதற்கு தயாராக இருக்கவும் வேண்டும். சிலவேளை ஏற்றங்களும் கிடைக்க வாய்ப்புண்டு. ‘கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பர்” எனவே எதிர்க்கடை வருவது நன்றுதானே. தேர்தலில் வாக்கு கேட்பவர்கள் முன்பு இருந்தவர்கள் எனின் இதுவரை என்ன  செய்தார்கள், புதியவர்கள் எனின் இனி என்ன  செய்வார்கள் அதனைக்கேட்டு வாக்களித்தால் நன்மை கிட்டலாம். தொடர்ந்து நாங்கள்தான் என்ற நிலையை பெற்றுக்கொள்ளும் கட்சிகள் ஒருபோதும் மக்களுக்கு எதுவும் செய்யாது. செய்யவும் விரும்பாது. செய்யவும் தேவையில்லை  என்பது மூன்றாம் மண்டல நாடுகளின்  வரலாறு. பெளத்தம் இலங்கையில் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளில் உண்டு. சிங்களர் தவிர்ந்த வேறு இனத்தவர்களிடமும் உண்டு. ஆனால் உருவாகிய நாட்டில் பெளத்தம் இன்று  இல்லை. அவர்களே பெளத்தத்தை வைத்து பலமாக வாழும் போது வாக்கு வளமுள்ள தமிழ் மக்கள் ஏன் தோற்கிறார்கள். இது சிந்திக்கும் வேளை. பாராளுமன்றம் செல்லும் தமிழ்  அரசியல் வாதிகள் பலத்தில் வீங்குறார்கள். தமிழ்மக்கள்
ஏங்கியே சாகிறார்கள்.  

No comments: