இலங்கைச் செய்திகள்


கனத்த மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு

பிதுர் தர்ப்பணம் செய்யும் ஆடி அமாவாசை

கருணாவுக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

முன்னாள் புலிகளுடனான உறவு தேர்தலின் பின்னரும் தொடரும்

19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றம் ஒன்று அவசியமே

கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்து வரும் தமிழர் பிரதிநிதித்துவங்கள்

முன்பள்ளிகள் அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வரப்படும்

தொல்பொருள் சட்டத்தை திருத்துவது தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்க முடிவு

 UNP ஒரு கட்சிதான்; கிளைகள் கிடையாது

பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய நபரிடம் 1,000 கோடி நஷ்டஈடு


கனத்த மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு




வானிலையில் திடீர் மாற்றம்; இருவர் மரணம்; தொடரும் அபாயம்:
05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிகை

நாட்டின் தென்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள  தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட பிரதேசத்தில் 219 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் காலியில் சில பிரதேசங்களில் 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 117 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் இரத்தினபுரி பறக்கடுவ பிரதேசத்தில் 106 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கம்பஹா பகுதியில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் அதைவிட அதிகமான மழை வீழ்ச்சி இடம்பெறலாம் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.  
அதே வேளை கடும் மழை காரணமாக வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குத் தொடருமெனவும் அறிவித்துள்ளது.  

அத்துடன் நிலவும் சிரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
அதே வேளை சாதாரணமாக மணித்தியாலத்துக்கு 40-, 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடும்காற்று வீசும் என்றும் இடியுடன் கூடிய மழை நிலவும் பகுதிகளில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.  
நேற்றைய தினம் அதிக மழை காரணமாக கொழும்பின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.கொழும்பு ஹைலெவல் வீதி, கிருலப்பனை பிரதேசம் ஆமர் வீதி, பல்கலைக்கழக பகுதி உள்ளட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின.   அதேவேளை, ஹப்புத்தளை முதல் பெயரில் வரையிலான பிரதான வீதியில் நேற்று அதிக பனிமூட்டம் காணப்பட்டதால் அப்பகுதி வீதிகளில் செல்லும் வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.   காலி கடவத் சத்தர பிரதேச செயலாளர் பிரிவில் 262 குடும்பங்களைச் சேர்ந்த 3375 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பிரதேச செயலாளர் ஹிமாலி ரத்னவீர தெரிவித்தார்.  
அத்துடன் அப்பகுதியில் கடும்மழை காற்று காரணமாக பதினைந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  
அத்துடன் மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும் என்றும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் 75 மில்லி மீற்றர் வரை மழைவீழ்ச்சி  பதிவாகும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.  
தென் மாகாணத்தில் கடலோர பகுதிகளில் அதிக அளவிலான மழைவீழ்ச்சி இடம்பெறலாம் என்றும் அப்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 லிருந்து 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.   
அதேவேளை களுத்துறை தொடக்கம் காலி மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துக் காணப்படும்.
நீரில் சிக்கிய மூவர் மீட்பு 
காலி மாவட்டத்தில் மழைநீர் பெருக்கெடுப்பையடுத்து நியாகம பாலத்திற்கு அடியில் பாதுகாப்புக் கருதி ஒதுங்கிய மூவர் நீரில் சிக்கியுள்ளனர்.
உயிருக்காக  போராடிய   இவர்களை காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இராணுவ வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக  காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் லெப்டினன்ட்  கேணல் இந்துக்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.    லோரன்ஸ் செல்வநாயகம்   நன்றி தினகரன்  












பிதுர் தர்ப்பணம் செய்யும் ஆடி அமாவாசை





சூரிய பகவான் வடதிசை நோக்கிச் செல்லும் காலம் உத்தராயனம் எனவும் தெற்கு நோக்கி செல்லும் காலம் தட்சினாயனம் என்றும் வகுக்கப்பட்டுள்ளது.
ஆடி முதல் மார்கழி வரையான ஆறு மாத காலங்கள் தட்சினாயனம். இக்காலம் தேவர்களுக்கு இராப் பொழுது. குறிப்பாக ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சடங்குகள் மேற்கொள்ளாது தெய்வ வழிபாடுகளுக்கு இந்துக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இதுவே இந்துக்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் மரபாகும். இந்துக்களின் வாழ்வியலானது புனிதம் நிறைந்த, பக்தி சிரத்தையுடன் கூடிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆண்டின் பன்னிரண்டு மாதங்களுக்கும் இந்துக்கள் வாழ்வியலை மையப்படுத்தி சமய அனுஷ்டானங்களுடன் அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கின்றனர்.
இவ்வுலகின் இயக்க நாயகனான சூரிய பகவானின் நகர்வை மையமாகக் கொண்டு இந்துக்கள் ஒவ்வொரு கருமங்களையும் செய்து வருகின்றார்கள். இதனால்தான் சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும் வணங்கி வருகின்றார்கள்.
பன்னிரு மாதங்களிலும் வருகின்ற அமாவாசைகளில் ஆடி மாத அமாவாசைக்கு அதிக சக்தி இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. பிதுர் தேவதைகள் என்று கூறப்படுகின்ற தென்புலத்தாருக்கு உரிய திசையான தெற்கு நோக்கி சூரிய பகவான் தனது விஜயத்தை மேற்கொள்ளும் காலத்தில் வருகின்ற முதலாவது அமாவாசையே ஆடி மாதத்து அமாவாசையாகும்.
பிதிர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் எம் இறந்து போன மோட்ச நிலையினை அடைந்த மூதாதையர்களே. அதாவது இந்த உலகிற்கு எம்மை கொண்டு வந்த தாய் தந்தையர்களுடனான வம்சத்தினராவர்.
ஆடிமாதப் பிறப்பில் இருந்து சூரியன் தெற்கு நோக்கி தனது பயனத்தை ஆரம்பிக்கின்றது. தென்புலத்தாருக்கு உரிய திசை தெற்கு.
எனவே ஆடிமாத அமாவாசை தினத்தில் பிதுர் தேவதைகளுக்கு தர்ப்பணம் செய்வதற்கு உரிய நாளாக கொள்ளப்படுகின்றது .
அமாவாசை தினத்தன்று நாம் விரதமிருந்து எள் , தர்ப்பைப் புல் ஆகியவைகளைக் கொண்டு தர்ப்பணம் செய்து புனித ஆறுகள், நதிகள், குளங்கள் மற்றும் சமுத்திரங்களில் நீராடி பிதுர்களுக்கு சமர்ப்பணம் செய்தல் வேண்டும்.
இத்துடன் எம் முன்னோர்களை மனதில் நிறுத்தி எம்மாலான தானதர்மங்களை வழங்குவதுடன் எம் முன்னோர் எம்முடன் வாழ்ந்த காலங்களில் அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை சமைத்து தானமாக வழங்குதல் சிறப்பு என சொல்லப்படுகின்றது.
பிதிர் தேவைகளின் ஆசிர்வாதம் உலகில் நாம் சிறப்பாக வாழ மிக அவசியமானதாகும். அவர்களின் மனம் மகிழ நம் வாழ்வு சிறந்தோங்கும் என சமய குரவர்கள் எமக்கு எடுத்து சொல்லி இருக்கின்றனர்.மேலும் நாயன்மார்கள் ஆடி அமாவாசை தினத்தில்தான் நமது பாவங்கள் விலகுவதாகவும் சொல்லி இருக்கின்றார்கள்.
ஆடி அமாவாசை விரதம் நிறைந்த இந்த புனித நாளில் தீர்த்தோற்சவம் இடம்பெறும் ஆலயங்களுக்குச் சென்று பிதிர் கடமைகளைச் (தர்ப்பணம்) செய்து ஆலயங்களில் இடம்பெறும் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டு, மூதாதையர்களின் நல்லாட்சியுடன் மேலான வாழ்வுதனை பெறுவோம்.
இன்றைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இக்கடமையை இம்முறை இந்துக்களால் முறையாக நிறைவேற்ற முடியாதுள்ளது. ஆனாலும் அவர்கள் தத்தமது வீடுகளில் இருந்தபடியே அனுஷ்டானங்களில் ஈடுபடுவது பலன் தரும்.−ஆர்.நடராஜன்  (பனங்காடு தினகரன் நிருபர்)  நன்றி தினகரன் 












கருணாவுக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு





சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விநாயகமூருத்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஏ.எச்.எம்.டீ.நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரினால்  இம் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், யுத்த காலத்தில் ஆனையிறவு களமுனையில் 02 ஆயிரம் தொடக்கம் 03 ஆயிரம் படையினரை தான் கொன்றதாக கருணா அம்மான் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தக் கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன், கருணாவை கைது செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இவ்வாறிருக்கையில், கருணாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டதுடன் அவரைக் கைதுசெய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு, கடுவெல நகர சபை உறுப்பினரான போசெத் கலகே பத்திரனவினால் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 










முன்னாள் புலிகளுடனான உறவு தேர்தலின் பின்னரும் தொடரும்





போராளிகள் எனும் வகையில்  வரவேற்கிறோம்
தேர்தலின் பின்பும் முன்னாள் பேராளிகளுடன் தமிழ் கூட்டமைப்பு இணைந்து செயற்படுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயக போராளிகள் கட்சி தமக்கான ஆதரவை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னரும் நாங்கள் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் எவ்வாறானதாக அமையவேண்டும் என்பது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் பேசவுள்ளோமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் போராளிகள் என்ற அடிப்படையில் அவர்களை வரவேற்கின்றோமெனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 












19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றம் ஒன்று அவசியமே





SLFP யாழ் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன்
தமிழ் மக்களுக்கு அரசாங்கம் தவறிழைத்தால் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்து கொண்டே அதற்கு எதிராக குரல் கொடுப்போம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
தினகரனுக்கு வழங்கிய விசேட செவ்வியில், 19ஆம் திருத்தச் சட்டம் மற்றும் 13ஆம்  திருத்த சட்டம் என்பவற்றை நீக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் கூறுவது தொடர்பாக வினவியே போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
19வது திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில் உண்மையாகவே மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது. கடந்த ஆட்சியில் ஜனாதிபதியும், பிரதமரும் வேறு வேறு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த போது, மிகப் பெரிய முரண்பாடு ஏற்பட்டிருந்தது. நாடு முன்னோக்கிச் செல்லாது, இழுபறியில் நின்ற நிலையைக் கண்டோம்.
தற்போது அது சாத்தியமில்லை. அண்ணனும், தம்பியும் அரசாங்கம் நடத்துகின்றார்கள். எதிர்காலத்திற்காக, சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டிய தேவைகள் இருக்கின்றன. 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் தான் இருக்கின்றன. ஆனால் அதனை முழுமையாக எடுப்பதாக எங்கும் சொல்லவில்லை.
மாகாண சபை முறைமை எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அதை அகற்றுவற்கான நோக்கம் எதுவும் இல்லை.
எங்களுக்கும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கேட்கின்றோம்.
மாற்றத்தைச் செய்யாது, அந்த அதிகாரங்களைப் பெற முடியாது. எந்த அதிகாரங்கள் தேவை என்பது பற்றி மக்களுடன் பேசித் தான் அதை மாற்ற இருக்கின்றோம். ஆனால், நாங்கள் நிச்சயமாக மக்கள் சார் பக்கம் தான் இருப்போம் என்றார்.  சுமித்தி தங்கராசா   நன்றி தினகரன் 










கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்து வரும் தமிழர் பிரதிநிதித்துவங்கள்





கிழக்கு மாகாணத்தின் கடந்த காலப் பொதுத் தேர்தல்களில் இனத்துவ ரீதியாகத் தமிழர்கள் பின்தள்ளப்பட்டு வருவதைப் பொறுப்புடன் எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. வெறுமனே கிழக்கு மாகாணமும் தமிழரின் தாயகப் பிரதேசம் என்று கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. அதனை உறுதிப்படுத்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டியது தமிழர் பிரதிநிதிகளின் கடமை ஆகும்.
இலங்கையின் அரசியலமைப்பின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டும் தமிழ் மொழிக்கு முதன்மை நிர்வாக உரிமையுள்ள மாகாணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி மேற்படி  இரு மாகாணங்களும் தமிழர்களின் தாயகப் பகுதிகள் என்பதும் தெளிவாகின்றது.
இதனடிப்படையில் நோக்கும் போது கிழக்கு மாகாணம் அங்கு வாழும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இந்துக்கள், இஸ்லாமியர்கள் உட்பட அனைவரதும் தாயகப் பிரதேசமாகும்.
இவ்வாறுள்ள நிலையில், படிப்படியாக இம்மாகாணத்தின் அரசியல் பிரதிநித்துவங்கள் தமிழர்களால் இழக்கப்பட்டு  வருவதை அவதானிக்க முடிகின்றது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் மட்டுமே இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடைபெற்ற ஐந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் பாராளுமன்றப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய தொகுதி வரையமைப்பின் கீழ் அம்பாறை என்ற சிங்கள மக்களுக்கான தொகுதி உருவாக்கப்பட்டு ஒரு சிங்களவர் தெரிவாகும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
அதே போல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழருக்கிருந்த மூதூர் இரட்டை உறுப்பினர் தொகுதி  இல்லாததாக்கப்பட்டு சேருவில என்ற   தொகுதிஉருவாக்கப்பட்டது. இதன் மூலம் 1977 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து முதன் முறையாக இரு சிங்களப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகினர்.
இவ்வாறு உள்ள போது 1970 முதல் இன்று வரையான ஐம்பது ஆண்டு காலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர் பிரதிநிதித்துவங்களின் நிலை பற்றி கவனம் செலுத்துவது ஏற்புடையதாயமையும்.
1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆகும். அதில் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை, மூதூர் இரட்டை உறுப்பினர் தொகுதிகளிலிருந்து  இரு தமிழர்களும் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு இரட்டைஉறுப்பினர் தொகுதி, பட்டிருப்பு ஆகிய நான்கு தொகுதிகளிலிருந்து நான்கு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,நிந்தவூர் பொத்துவில், அம்பாறை ஆகிய நான்கு தொகுதிகளிலிருந்து மூன்று முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் தெரிவு செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் தெரிவாவதற்கு அம்மாவட்ட தமிழர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 06 தமிழர்களும் 04 முஸ்லிம்களும்  01 சிங்களவரும் தெரிவாகினர். இன்று அல்லது 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 02 முஸ்லிம்களும் 01 சிங்களவரும் 01தமிழரும் தெரிவான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 03 தமிழரும் 02 முஸ்லிம்களும் தெரிவாகியுள்ளனர்.
அவ்வாறே அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் இருந்து மூன்று சிங்களவரும், மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் தெரிவாகியுள்ளனர்.
அதாவது கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான பிரதிநிதிகளில் தமிழர்கள் 06 பேராகவும் முஸ்லிம்கள் 07 பேராகவும்,சிங்களவர் 04 பேராகவும் உள்ளனர். 1970 ஆம் ஆண்டில் தெரிவானஉறுப்பினர்கள் 11 பேரில் 06 அதாவதுஅரைப் பங்கிற்கும் மேலாகத் தமிழர் இருந்த நிலையில் இன்றுஅது 16 பேரில் 06 பேராக விகிதாசாரஅளவில் சுருங்கியுள்ளது. 1970 ஆம் ஆண்டில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் 04 ஆக இருந்த போது தற்போது அது 07 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் ஒன்றாக இருந்த சிங்களப் பிரதிநிதித்துவம் 04 ஆக அதிகரித்துள்ளது.
தமிழர் பிரதிநிதித்துவங்கள் இவ்வாறு குறைவடைவதற்கு தமிழர் மத்தியிலே பல்வேறு தரப்பினர் பிளவுபட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது ஒரு காரணியாயுள்ளது. அத்துடன் தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தி மாற்று சமூகத்தினரது பிரதிநிதித்துவ அதிகரிப்புக்காக செயற்படும்  தமிழர்  தரப்பும்,வாக்களிப்பில் அக்கறை செலுத்தாத தமிழர் தரப்பும் காரணமானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமையின்படி சிந்தித்து,ஒன்றுபட்டு இனத்துவ நலன் கருதி வாக்களிக்காவிட்டால் இருக்கும் தமிழர் பிரதிநிதித்துவங்களுக்கும் இழப்பு ஏற்பட வழி வகுத்ததாயமையும்.
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டைஆள, மாகாணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்றபடி தரமும்,தகுதியும்,திறமையும், இனநல நோக்கும் கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொறுப்பும் கடமையும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களைச் சார்ந்தது.
கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் காணிப் பிரச்சினை,கல்வி,தொழில்,குடியிருப்பு, பாதுகாப்பு உட்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது இன்றைய அவசர,அவசியத் தேவையாயுள்ளது. எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிந்தித்து,வாக்களிக்காது விட்டால் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமல்லஅதைத் தொடர்ந்து வரும் காலங்களிலும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் பல இழப்புகளுக்காளாகும் நிலையே ஏற்படும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை மறந்து விடக் கூடாது.
த.மனோகரன் (துணைத் தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்)  நன்றி தினகரன் 
















முன்பள்ளிகள் அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வரப்படும்




முன்பள்ளிகள் அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வரப்படும்-Pre schools to be brought under a Ministry
மாத்தறை மாவட்டத்தில் இன்று (25) பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ...
- ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு
- முன்பராயம், ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமத்துடன் அமைவது அவசியம்

முன்பள்ளி பாடசாலைகள் முறைமையினை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக ஜனாதிபதி சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சென்ற வியாழக்கிழமை காலியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.
இது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கும் முன்பராய அபிவிருத்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்துடனும் தரத்துடனும் திட்டமிடப்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் முக்கிய பணியாக கருதி முன்பள்ளி பாடசாலைகள் முறைமையை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரம்
பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (25) மாத்தறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அபேட்சகர் நிபுண ரணவக்க மாத்தறை கடற்கரை பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

நிபுன ரணவக்கவின் 2020 தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை உள்ளடக்கிய இணையத்தளமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ருகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் மாத்தறை மாவட்ட சுற்றுப் பயணம் ஆரம்பமானது. உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், கல்வி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இணையவழி மூலமான கற்பித்தல் செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாக உபவேந்தர் தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தெவிநுவர தேவாலயத்திற்கு முன்பாக உள்ள விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பிரதேச மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இடைநடுவே கைவிடப்பட்டுள்ள தெவிநுவர தேவாலயத்தின் புண்ணியபூமி மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்து தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, விரைவாக அப்பணியை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
அபேட்சகர் மனோஜ் சிறிசேன மாத்தறை உயன்வத்த விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக உரையாடினார்.   நன்றி தினகரன் 














தொல்பொருள் சட்டத்தை திருத்துவது தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்க முடிவு




தொல்பொருள் சட்டத்தை திருத்துவது தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்க முடிவு-Archaeological Sites Ordinance Amendment-President Decides to Appoint Expert Committee
நிபுணர் குழுவில் மகாசங்கத்தினர் உள்ளடக்கம்
  • நிதி ஏற்பாடுகளை அதிகரிப்பதற்கும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும் நடவடிக்கை
  • கலந்துரையாடி பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு பணிப்புரை
  • வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருள்களை கொண்டு வருவதற்கு முன்மொழிவு
  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை பாதுகாக்கும் யுகத்திற்கு மகாசங்கத்தினர் ஆசிர்வாதம்
தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
இச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது குறித்து ஆராய்வதற்கு மகாசங்கத்தினர் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி  தீர்மானித்துள்ளார். நீண்டகாலமாக இடம்பெற்று வரும் தொல்பொருள் அழிவுகளை நிறுத்தி நாட்டின் மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்குவதில் நடைமுறையில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பது இச்சட்டத்தை திருத்தவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
தொல்பொருள் சட்டத்தை திருத்துவது தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்க முடிவு-Archaeological Sites Ordinance Amendment-President Decides to Appoint Expert Committee
இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனை சபையின் 4வது கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. எந்தவொரு புண்ணியஸ்தளத்தினதும் வரலாற்று மரபுரிமைகளுக்கு அல்லது தொல்பொருள் பெறுமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டது என்பதுடன், அத்தகைய அனைத்து இடங்களும் தேசிய மரபுரிமைகளாக கருதப்பட்டு பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி  குறிப்பிட்டார். தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து மகாசங்கத்தினர் முன்வைத்த முன்மொழிவுகளை விசேட செயலணியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி  தெரிவித்தார். தொல்பொருள் திணைக்களத்திற்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளை அதிகரிக்கவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.
தொல்பொருள் சட்டத்தை திருத்துவது தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்க முடிவு-Archaeological Sites Ordinance Amendment-President Decides to Appoint Expert Committee
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தொல்பொருள்களை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் பாதுகாப்பு படையணியின் உதவியை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் இருந்துவரும் வழக்குகளை கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை குறித்தும் ஜனாதிபதி  கவனம் செலுத்தினார். தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்குமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு ஜனாதிபதி  தொல்பொருள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.
காலனித்துவ காலத்திலும் அதற்குப் பின்னரும் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருள்கள் பிரித்தானியா மற்றும் டென்மார்க்கின் கோப்பன் ஹேகன் தொல்பொருள் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாக மகாசங்கத்தினர் குறிப்பிட்டனர். யுனெஸ்கோ நிறுவனத்துடன் கலந்துரையாடி அவற்றை நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் தேரர்கள் முன்மொழிந்தனர்.
கடந்த 5 ஆண்டு காலப்பகுதியில் தொல்பொருள்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளதாக தேரர்கள் குறிப்பிட்டனர். விகாரைகளுக்கு சொந்தமான புண்ணிய பூமிகள் பல்வேறு தரப்பினரால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தேரர்கள் தெரிவித்தனர்.
இரண்டு ஊழியர்களின் சேவை தேவைப்படும் இடத்திற்கு 15 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். குறித்த சேவைகள் தொடர்பில் அவர்களுக்கு எவ்விதமான அறிவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் சம்பளத்திற்காக மத்திய கலாசார நிதியம் வருடாந்தம் 7,000 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணிப்பாளர் பதவிகளின் எண்ணிக்கை 11 ஆகும். எனினும் இவ்வெற்றிடங்களுக்கு எந்தவொருவரும் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் செனரத் திசாநாயக்க தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட உதவிப் பணிப்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆகும். எனினும் அதற்காக ஒருவர் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார். அத்தகைய நிலைமையில் திணைக்களத்தின் பணிகளை உரிய முறையில் நிறைவேற்ற முடியாதென ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழகங்களிலிருந்து ஒரு வருடத்தில் சுமார் 80 பட்டதாரிகள் தொல்பொருள் விசேட பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். தொல்பொருள் குறித்த நடைமுறை சார்ந்த அறிவை கொண்டுள்ளவர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யுமாறு ஜனாதிபதி  பணிப்புரை விடுத்தார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும்போது தொல்பொருள் துறைசார்ந்தவர்களை சுகததாச விளையாட்டரங்கில் சேவை செய்வதற்காக நியமிக்கபட்டுள்ளனர். துறைசார் அறிவு உள்ளவர்களை குறித்து துறைகளில் ஈடுபடுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதி  விளக்கினார்
புதையல் தோண்டும் கள்வர்களிடம் இருந்து தொல்பொருள்களுக்கு ஏற்படும் பாரதூரமான சேதங்கள் குறித்து தொல்பொருளியல் சக்கரவர்த்தி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் சுட்டிக்காட்டினார். தொல்பொருள்களில் இருந்த தங்கம், வெள்ளி, இரத்தினக்கற்கள் போன்று எந்தவொரு பெறுமதிவாய்ந்த பொருட்களும் எனது 65 வருடகால ஆய்வுக்காலப் பகுதியில் கிடைக்கப்பெறவில்லை. எனவே தொல்பொருள்களை பாதுகாப்பதற்கு மக்களுக்கு சரியான அறிவை வழங்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தொல்பொருள்கள் குறித்த ஆய்வு அறிக்கையை தயாரித்தல் மற்றும் வரைப்படங்களை தயாரிப்பது முக்கிய தேவையாகும். உரிய ஆய்வு வரலாற்றை திரிபுபடுத்தி கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேதானந்த தேரர் குறிப்பிட்டார்.
தொல்பொருள் கட்டளைச் சட்டம் திருத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்து மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் சுட்டிக்காட்டினார். தொல்பொருள் திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்பும்போது துறைசார்ந்த அறிவுள்ளவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென்றும் தேரர்  குறிப்பிட்டார்.
காலனித்துவக் காலத்தில் தயாரிக்கப்பட்ட தொல்பொருள் சட்டத்தின் மூலம் தொல்பொருள்கள் குறித்து மட்டும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்குரே விமல தம்ம நாயக்க தேரர் தேசிய மரபுரிகைள் மற்றும் சாசன வரலாற்றை பாதுகாக்கும் வகையில் அது திருத்தப்பட வேண்டுமென தெரிவித்தார்.
தொல்பொருள் சட்டத்தை திருத்தும்போது மகாசங்கத்தினர் ஆழமான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்வதன் அவசியத்தை அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி நாயக்க தேரர் குறிப்பிட்டார். கலாசார அமைச்சுப் பொறுப்பு ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.
தொல்பொருள்களை அழிவுக்குட்படுத்துபவர்களுக்கு அதனை சமயம் சார்ந்த ஒன்றல்லாது அது தேசிய மரபுரிமையாகும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென அமரபுர மகா நிக்காயவின் ஸ்ரீ தர்ம ரக்கித்த பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலையே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டினார். ஏனைய சமயத்தவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு மத்தியிலும் இதனை விளங்கிக்கொள்ளக்கூடிய கற்றவர்கள் இருப்பதால் தொல்பொருள்களின் பெறுமதிகளை சொல்லிக்கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தேரர்  விளக்கினார்.
சங்கைக்குரிய திவியகஹ யசஸசி தேரர் தொல்பொருள்களை பாதுகாப்பதற்கு முன்மொழிவுகளை முன்வைத்தார்.
ஜனாதிபதி  தொல்பொருள்களை பாதுகாப்பது குறித்த புதிய எண்ணக்கருவொன்றினை சமூகத்திற்கு முன்வைத்துள்ளார். அதனை சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியுமென கோட்டே ஸ்ரீ கல்யானி சாமசிறி தர்ம மகாசங்க சபையின் அனுநாயக்க தேரர் பேராசிரியர் சங்கைக்குரிய கொட்டபிட்டியே ராகுல தேரர் தெரிவித்தார். குருணாகலையில் உள்ள புவனேகபாகு மன்னனின் ராஜ சபை உடைக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் அரசியல் நோக்கம் கொண்டதாகும் என வட மேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய ரெக்கவ ஜினரத்ன தேரர் தெரிவித்தார். மரத்தினால் ஆன இம்மண்டபம் நகர சபைக்கு சொந்தமானது எனக்கூறி புவனேபாகுவின் பெயரில் ஹோட்டல் ஒன்று நடாத்திச் செல்லப்பட்டிருக்கிறது. அதற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக தேரர்  தெரிவித்தார் எனினும் புவனேகபாகு அரசர் இதனை நிர்மாணித்ததாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தேரர்  சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.    நன்றி தினகரன் 












UNP ஒரு கட்சிதான்; கிளைகள் கிடையாது



நீதிமன்ற தீர்ப்பும் உள்ளது
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியே வேறு கட்சிகளை உருவாக்க எந்தக் குழுவிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்​கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இல்லையென்றும் நாட்டைப் பாதுகாக்கும் திறன் தமது கட்சிக்கே இருப்பதாகவும் கூறினார். 
தாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி என்றும் வேறு கட்சியிலிருந்து போட்டியிட கட்சித் தலைமை அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது என்றும் சிலர் கருத்து தெரிவிப்பதை முற்றாக நிராகரிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். 
அத்தோடு இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இருப்பதாக நீதிமன்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். 
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஜூலை முதலாம் திகதி நீதிமன்ற ஆணை வழங்கப்பட்டது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.   நன்றி தினகரன் 












பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய நபரிடம் 1,000 கோடி நஷ்டஈடு



கனடா நிதி 22 கோடி ரூபா விவகாரம்
கனடாவில் சேகரிக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை  இலங்கைத் தமிழரசுக் கட்சியும், கட்சியின் கனடாக் கிளையும் முற்றாக  நிராகரித்திருக்கின்றன. குற்றச்சாட்டை வைத்த நபர் கட்சியின்  பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு அவரது உறுப்புரிமையும் இடை நிறுத்தப்பட்டது. 
ஆனால் அவர் இவற்றிற்குப் பிறகும் அதே பொய்க்குற்றச்  சாட்டுக்களை மீளத் தொடுத்ததால் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு  முன்னேற்பாடாக 1,000 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரியிருக்கிறேன். பதில்  கொடுக்கும் காலக்கெடு முடிந்த பின் வழக்குத் தாக்கல் செய்வேன் என  முன்னாள் எம்.பி சுமந்திரன்தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கிளைகளால் திரட்டப்படும் நிதி எந்த அரசியல் வாதியிடமும் கொடுக்கப்படுவதில்லை. நேரடியாக குறித்த பிரதேச மக்கள் அமைப்புக்களிடமே கொடுக்கப்படுவதுண்டு.
சம்பூர் நிலத்தை நாம் வழக்காடி மீட்ட பின், சம்பூர் மக்களைக் குடியேற்றவென வெளிநாட்டில் நிதி திரட்டி 42 வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் முக்கிய பிரதேசங்களான கொக்கிளாய்,-கொக்குத் தொடுவாயிலும் நாம் வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுத்து அங்கிருந்து 1981, 1984 ஆண்டுகளில் விரட்டப்பட்ட தமிழ்க் குடும்பங்களை மீளக் குடியமர்த்தினோம். இவற்றை யாரும் போய்ப் பார்வையிடலாம்.    நன்றி தினகரன் 





No comments: