மஞ்சுளாவின் தாய் சிவகாமசுந்தரி கூடத்திலிருந்த ஷோபாவில் காலை நீட்டி நிமிர்த்தி படுத்துக்கொண்டாள். அபிதா, மஞ்சுளாவின் அறைக்குச்சென்று ஒரு தலையணைக்கு உறைமாற்றி எடுத்துவந்து கொடுத்தாள்.
“ மஞ்சுவின்ர தலையணையா…? தேங்ஸ். அபிதா.. நான் கொஞ்சம் கண்ணயர்ந்துகொள்கிறேன். சமையல் முடிந்ததும் எழுப்பு. பயண அசதிபோவதற்கு தூங்கி எழுந்து ஒரு குளியல்போடவேண்டும். “
“ அம்மா.. நீங்க உள்ளேபோய் மஞ்சுவின் கட்டிலிலேயே படுக்கலாமே. “ என்றாள் அபிதா.
“ வேண்டாம்… இங்கே நல்ல காற்றோட்டம் இருக்கிறது “ அடுத்த கணம் சிவகாமசுந்தரி கண்களை மூடிக்கொண்டாள்.
‘ மஞ்சுவின்ர தலையணையா..? ‘ எனக்கேட்டபோது, அவளது கண்களில் தோன்றிய மின்னலில் நீரும் கசிந்திருந்ததை அபிதா அவதானித்தாள்.
மனதிற்குள் ‘ பெற்றமனம் ‘ என்று முணுமுணுத்தவாறு மதியவேளை சமையலில் மூழ்கிய அபிதாவுக்கு யோசனைகள் பலமாக எழுந்தன.
தனது தாய் இன்று வருவா என்பதை சொல்லாமலேயே மஞ்சுளா வேலைக்குச்சென்றிருப்பதற்கான காரணத்தை ஆராய்ந்தாலும் அவளுக்கு பதில் கிடைக்கவில்லை.
முதல்நாள் இரவு, மஞ்சுவுக்கு சொன்ன புத்திமதிகளினால் இவ்வளவு சீக்கிரம் அவள் மனம் மாறி, தாயை அழைக்கும் அளவுக்கு நிதானம் வந்தமைதான் அபிதாவுக்கு பேராச்சரியமாக இருந்தது.
இந்த வீட்டிலிருப்பவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச்சென்றுவிட்டால், தான் தனித்துவிடுவேன் என்ற கவலை அவளுக்கு வந்திருக்கவும் கூடும். அதனால்தான், என்னை தன்னுடன் வந்துவிடும்படி கூறினாளோ…?
அல்லது, தனது தாய், யாரையோ நம்பிச்சென்று, காலம் கடந்து தனிமரமாகியிருப்பதை அறிந்துவிட்டதனால் வந்த பச்சாதாபமா..?
எது எப்படி இருந்தாலும், நீண்ட இடைவெளிக்குப்பின்னர் தாயும் மகளும் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். அதனைக்கொண்டாடத்தான் வேண்டும்.
அபிதாவுக்கு ஒரு யோசனை பிறந்தது. களஞ்சிய அறைக்குள் சென்று துலாவினாள். சக்கரைப்பொங்கலும் கேக்கும் செய்வோம் என்ற முடிவோடு திரும்பினாள்.
சமையலறை மேசையிலிருந்த அவளது கைத்தொலைபேசி சிணுங்கியது. நிச்சயமாக அது மஞ்சுளாவின் அழைப்புத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினாள்.
‘ என்ன… மஞ்சு… எனக்கே சார்ப்பிரைஸா…. ? ‘ அவளை ஒரு பிடி பிடிக்கவேண்டும்.
ஆனால், அந்த அழைப்பு அவள் எதிர்பார்த்திருந்தது அல்ல.
மறுமுனையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜீவிகாவின் பெரியப்பா – லண்டன்காரர் சண்முகநாதன்.
“ சொல்லுங்க அய்யா…? எப்படியிருக்கிறது யாழ்ப்பாணம்…? “
“ வழக்கம்போலத்தான். தேர்தல் திருவிழாவும் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவும் தொடங்கிட்டுது. இங்கே வரும் பத்திரிகைகளில் வேட்பாளர்களின் படத்தோடும் சின்னத்தோடும் முழுப்பக்கம், அரைபக்கம், கால் பக்கம் விளம்பரங்கள் வருது. அவர்களிடத்தில் நிறைய பணம் இருக்கும்போலத் தெரியுது. “
“ பணம் போட்டால், திருப்பி எடுக்கலாம் என்ற நம்பிக்கையாக இருக்கும் அய்யா… அது கிடக்கட்டும் நீங்கள் போன காரியம் முடிந்ததா….? எப்போது வாரீங்க…? “
“ அபிதா… அதனைச்சொல்லத்தான் எடுத்தன். நான் இன்று இரவே புறப்படுறன். நாளைக்கு பின்னேரம் ஒரு ஃபிளைட் பாரிஸ் வழியா புறப்படுது. விசாரித்துவிட்டேன். ஜீவிகாவின் போன் அணைக்கப்பட்டிருக்கு. அவளும் எலக்ஷன் செய்திகளில் ஓடித்திரிகிறாள் போலக்கிடக்கு. நான் மீண்டும் ட்ரை பண்ணுறன். கொழும்புக்கு வரும் தெரிந்த ஒரு வாகனத்தில்தான் வாரேன். நிகும்பலைக்கு வந்தாலும், ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மறுகைக்கு கிளம்பவேண்டியதுதான். அங்கே என்ன புதினம். எல்லாம் கட்டுப்பாட்டுக்குள்தானே… நீங்கள் எல்லாம் மாஸ்க் போடுறீங்களா…? “
“ எனக்கு எதற்கய்யா… நான் வீட்டிலதானே இருக்கிறேன். ஒரு புதிய செய்தி உங்களுக்கு…. எங்கட மஞ்சுவின்ர அம்மா கண்டியிலிருந்து வந்திருக்கிறாங்க….” அபிதா இவ்வாறு சொன்னதும் சில கணங்கள் மறுமுனையில் மௌனம் நீடித்தது.
“ ஏதும் விசேடமா..? “
“ மகளைப்பார்க்க வந்திருக்கிறாங்க….”
“ கற்பகம் வீட்டுக்குத் திரும்பிவிட்டாவா..? “
“ அதுதானே பார்த்தேன். மறக்கமாட்டீங்களே… ? என்ன சொஃப்ட் கோணரா…? “
“ ஏய்…. ஏய்… சும்மாதான் கேட்டேன். நான் புறப்படப்போகிறேன். அவவை அங்கே வந்து தைரியமாக இருக்கச்சொல்லு…. சரியா…. நான் வைக்கிறன் “
நான் என்ன இவர்களுக்கெல்லாம் தூது செல்லும் சேவகியா..?
அபிதா உதட்டைப்பிதுக்கிக்கொண்டு வேலையில் மூழ்கினாள்.
அவளது கைத்தொலைபேசி மீண்டும் சிணுங்கியது.
‘ இன்றைக்கு சமையல் நடந்தமாதிரித்தான் ‘
ஷோபாவிலிருந்து சிவகாமசுந்தரியின் மென்மையான மூச்சு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அபிதா, கைத்தொலைபேசியை எடுத்தாள்.
மறுமுனையில் சுபாஷினி.
“ என்ன… அம்மா மிகவும் பிஸியோ..? தொடர்ந்தும் எங்கேஜாய் இருந்தது…? “
“ ஜீவிகாவின் பெரியப்பா பேசிக்கொண்டிருந்தார். சுபா… ஒரு செய்தி… மஞ்சுவின் அம்மா வந்திருக்கிறாங்க…. “
“ தெரிந்துதான் எடுத்தேன். இப்பதான் மஞ்சுவும் சொன்னாள்.“
“ அப்படியா..? “ என்ற பதிலை அபிதா உச்சரித்தபோது, ஏமாற்றமும் உடன்வந்தது. இன்னமும் மஞ்சு தன்னுடன் தனது தாயாரின் வருகை பற்றி மூச்சே விடவில்லை… ஆனால், தொலைவில்… நுவரேலியாவரையில் செய்தி போயிருக்கிறது. என்ன இருந்தாலும் நான் ஒரு சாதாரண வேலைக்காரிதானே… எனக்கு ஏன் எல்லாவற்றையும் சொல்லவேண்டும். சரி போகட்டும். இருக்குமிடத்தில் இருந்துகொள்ளவேண்டியதுதான்.
“ அபிதா, நாளைக்கு நான் வருகிறேன். அம்மாவுக்கு இப்போது நல்ல சுகம். மஞ்சுவின் அம்மாவை நானும் பார்க்கவேண்டும். “
“ வாங்க சுபா… அவுங்களோடு பேசப்போறீங்களா…? இப்போது அவுங்க அசதியில் நல்லாத் தூங்குறாங்க. எழும்பியதும் சொல்கிறேன். “
“ வேண்டாம்… வேண்டாம்… எல்லாம் வந்து நேரில் பேசிக்கொள்கின்றேன். எல்லாம் நல்ல செய்திதான்…. “ சுபா சொல்லப்போகும் அந்த நல்ல செய்தியை கேட்கும் ஆர்வம் அற்றவலாக, “ ஒகே… சுபா… நாளைக்கு புறப்படுமுன்னர் சொல்லுங்க… கையில் நிறைய வேலை இருக்கிறது. “
கடந்தவிட்ட சில மணிநேரங்களில் ஏதோவெல்லாம் நடந்துகொண்டிருப்பதாகவே அபிதாவின் மனதிற்கு பட்டது.
வேலைக்காரியாகவும் சமையல்காரியாகவும் வந்தால், அந்த எல்லையுடன் நின்றுகொள்ளவேண்டும். அதனைக்கடக்கும்போதுதான் வீண் கவலைகள், எதிர்பார்ப்புகள் வருகின்றன.
கேக் செய்வதற்கு எடுத்த முட்டைகளை உடைப்பதா… வேண்டாமா..? என்று அபிதா யோசித்தாள். எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றங்கள் தடுமாற்றங்களையும் தருமோ..?
மனம் அமைதியாக இரு என்று கடிவாளம் இட்டது.
கேக் அடித்து, அவனில் பேக் செய்வதற்கு வைத்துவிட்டு, சமையலைக்கவனித்தாள்.
சிவகாமசுந்தரி துயில் எழுந்து, “ அபிதா… என்ன நேரம்..? “ எனக்கேட்டாள்.
“ இன்னும் கொஞ்சம் நேரம் படுங்க அம்மா. இப்பதான் பகல் ஒரு மணியாகுது. “ என்றாள் அபிதா.
“ போதும் போதும்… பிறகு இரவு நித்திரை வராது. “
“ இனி உங்களுக்கு நித்திரை வராது அம்மா. முன்பு மகளை பார்க்கமுடியாமல் உங்கட நித்திரையை தொலைத்திருப்பீங்க… இப்போது மகளைப்பார்த்துவிட்டால், விடிய விடிய பேசிக்கொண்டிருப்பீங்க. பெண்ணாகப்பிறந்தாலே நித்திரையை தொலைக்கும் வாழ்க்கைதானே… அம்மா…. “ அபிதா அவ்வாறு சொன்னதும், “ அபிதா… மஞ்சு நேற்றுத்தான் எல்லாம் சொன்னாள். உன்னுடைய அவரைப்பற்றி ஒரு செய்தியும் இதுவரையில் இல்லையா…? “ சிவகாமசுந்தரி எழுந்துவந்து கேட்டவாறு கூசாவிலிருந்து தண்ணீர் எடுத்து அருந்தினாள்.
“ இல்லையம்மா… எல்லாம் எப்பவோ முடிந்துவிட்ட கதைகள். அதனைப்பேசுவதனால் எந்தப்பிரயோசனமும் இல்லை என்ற கட்டத்துக்கு நான் வந்து கணகாலம் அம்மா. அவரும் என்ர குழந்தையும் மனசில் நிறைந்திருக்கிறாங்க… இந்தப்பிறவியில் எனக்கு அதுபோதும் அம்மா…. சமையல் ரெடி. கைகால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம். “
சிவகாமசுந்தரி அதற்குமேல் அபிதாவுடன் எதுவும் பேசாமல், மஞ்சுவின் அறைக்குச்சென்று, தனது பேக்கைத் திறந்து ஒரு புத்தம்புதிய பட்டிக் சோட்டியும், ஒரு வொயில் சாரியும் எடுத்துவந்து அபிதாவிடம் நீட்டினாள்.
“ உனக்காகத்தான் கொண்டுவந்தேன். நீ இல்லையென்றால், இந்தப்பக்கம் எனக்கு வந்திருக்கவே முடியாது. என்ர மகளை இனிமேல் பார்க்கவே முடியாதுபோகும் என்றுதான் இவ்வளவு காலமும் நினைத்து நினைத்து கலங்கிக்கொண்டிருந்தேன். இந்தா… உனக்குப்பிடித்திருக்கா… பார்…. “
“ எதற்கம்மா… இந்த சம்பிரதாயங்கள். நீங்கள் வரவேண்டும் என்பதும் எனது தினசரி பிரார்த்தனைதானம்மா… ஆனால்… மஞ்சு இதுவரைக்கும் நீங்கள் வரப்போகும் செய்தியை இன்னமும் என்னிடம் ஏன் சொல்லவில்லை என்பதுதான் தெரியவில்லை. நுவரெலியாவில் நிற்கும் சுபாஷினிக்குத் தெரிந்திருக்கிறது. “
“ அவள் அப்படித்தான். சின்னவயதிலிருந்து சார்பிரைஸ் விளையாட்டுக்காரி. இன்று அவள் வேலையால் திரும்பி வரும்போது பார். ஒரு நாடகம் போடுவாள். நான் சொல்லாமல்கொள்ளாமல் வந்துவிட்டதாக தாம் தூம் என்று ஒரு குதியாட்டம் போட்டு கத்துவாள். இருந்துபார் “
சிவகாமசுந்தரி சொன்னவாறே நடந்தது.
மாலையில் மஞ்சுளா, வழக்கமாக வரும் ஓட்டோவில் வந்து இறங்கியபோது, தாய் எதிர்கொண்டு அழைக்கச்சென்றாள்.
அபிதா பின்தொடர்ந்து அரங்கேறப்போகும் நாடகத்தை தரிசிக்கத்தயாரானாள்.
மஞ்சுளா, வாசல் படியில் ஏறியதும், தாய் எட்டிச்சென்று அணைத்துக்கொண்டு விசும்பினாள். அவளது கன்னங்களில் முத்தம் இட்டாள்.
“ நடித்தது போதும். வழியை விடு…. “ மஞ்சுளா தாயின் அரவணைப்பை விலக்கிக்கொண்டு, சமையலறை வாசத்தை நுகர்ந்தாள்.
“ வந்திருக்கும் சீமாட்டிக்கு என்ன சமைச்சு வைத்திருக்கிறீங்க அபிதா… ? “
“ மஞ்சு… பிளீஸ்… போதும். முதலில் உங்கள் அம்மாவுடன் பேசுங்க… பாவம் எவ்வளவு காலத்திற்குப்பிறகு உங்களை பாரக்கிறா…? “
மஞ்சுளா, கைபேக்கை ஷோபாவில் வீசி எறிந்துவிட்டு, தாயை கட்டிப்பிடித்து குலுங்கிக் குலுங்கி அழுதாள். தாயும் சேயும் அழுவதை கண்ணிமைக்காமல் பார்த்த அபிதாவுக்கும் கண்கள் கலங்கின.
இப்போது நடிப்பது யார்..? என்பது புரியாமல் அபிதா யோசித்துக்கொண்டிருந்தாள்.
மஞ்சுளா, குளித்துவிட்டு உடைமாற்றிவந்ததும், தாயே அவளுக்கு உணவு பரிமாறினாள்.
“ அம்மா… ஊட்டிவிடுங்க… “ மஞ்சுளா வாயைத்திறந்தாள். சிவகாமசுந்தரி சேலைத்தலைப்பினால் கண்களை துடைத்துக்கொண்டு, மகளின் உச்சியில் முத்தமிட்டுவிட்டு உணவூட்டினாள்.
சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்போலும் என்று நினைத்த அபிதா, அக்காட்சியை வைத்த விழிவாங்காமல் பார்த்தாள்.
இன்றைய நாட்பொழுதின் காட்சிகளை எவ்வாறு தனது நாட்குறிப்பில் பதிவுசெய்வது…? எனவும் யோசித்தாள்.
இந்த அங்கத்திற்கு பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா..? என்ற தலைப்பிடலாம் என்று மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டு வெளியே பின்முற்றத்தில் கொடியில் காய்ந்துகொண்டிருந்த உடைகளை எடுக்கச்சென்றாள் அபிதா.
அங்கிருந்த மரக்கிளையில் ஒரு தாய்க்குருவி, தனது குஞ்சுக்கு இரைகொடுத்துக்கொண்டிருந்தது.
அதனைப்பார்த்ததும் அபிதா குமுறி அழுதாள்.
அவளுக்கு, அவளது குழந்தை தமிழ்மலர் நினைவுக்கு வந்தாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment