பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

.


பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அமிதாப் பச்சன் தனது ரசிகர்களுக்காக ட்விட்டரில் கவிதை வடிவில் ஒரு பதிவை நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விதி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிறைபடுத்தப்பட்டிருப்பதும் விதியால் நிகழ்ந்ததுதான். எந்த வகையான சிறைபடுத்தலுக்கும் நிச்சயம் ஒரு முடிவு உண்டு. அந்த வகையில், எனது இந்த சிறைவாசத்துக்கும் ஒரு முடிவு இருக்கும்.
அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் ஒரு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட விதியை வெற்றிக் கொள்பவர் யாரும் கிடையாது. மக்களில் பெரும்பாலானோர் தங்கள் விதியை ‘நான்’ என்ற அகந்தையால் வெற்றி கொள்ள நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறுவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: