குந்தளம் – தோற்கருவி
அமைப்பு
இரண்டு தனிக்கருவிகளைக் கொண்ட குந்தளம், வெண்கலம்
அல்லது பலா மரத்தால் செய்யப்படுகிறது. ஒன்று வளந்தலை, மற்றொன்று தொப்பி. இரண்டையும் இணைத்தே இசைக்க வேண்டும். ஒன்றில் ‘ந’கர ஒலியும், மற்றொன்றில் ‘த’கர ஒலியும் எழும்பும். தொப்பியில் சற்று மென்மையான தோலும், வளந்தலையில் சற்று கடுமையான தோலும் வார்க்கப்படுகிறது. வளந்தலைக்கு சவுக்கு அல்லது அழுத்தமான காட்டுமரக் குச்சியைப் பயன்படுத்துவர். தொப்பிக்கு ஆவாரங்குச்சி அல்லது புளியங்குச்சி. இக்குச்சியை நெருப்பில் இட்டு வளைத்து, வில்போல உருட்டி அடியையும், நுனியையும் இணைத்து ஒரு கயிறால் கட்டி, அதன் முனையால் இசைக்க வேண்டும்.
குறிப்பு
கொடுகொட்டியைப் போன்ற இருமுகத் தோலிசைக் கருவி
குந்தளம். கொடுகொட்டியின் சற்று மருவிய வடிவம் தான் குந்தளம். இக்கருவி கோந்தளம், கொந்தளம், குந்தாளம் ஆகிய பெயர்களாலும் குறிக்கப்படுகிறது. அம்மன் கோயில்களில் திருவிழாக் காலங்களில் வாசிக்கப்படுவது. இக்கருவி, மராட்டியர்கள் வழியாக தமிழகத்துக்கு வந்ததாக ஒரு கருத்து உண்டு. ஆனால் பல ஆய்வாளர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்த்திணைகளில் மருதநிலத்துக்கு உரியதாக ‘கிணை’ என்றொரு பறையை தொல்காப்பியர் சுட்டுகிறார். அதன் பிற்கால வடிவமே குந்தளம் என்பது, சென்னை இசைக்கல்லூரிப் பேராசிரியை டாக்டர் சுப்புலெட்சுமி மோகனின் கருத்து. குந்தளத்தின் பிறப்பிடம் தமிழகம்தான். இங்கிருந்து மராட்டிய மண்ணுக்குப் பரவி, மீண்டும் மராட்டியர்கள் வாயிலாக இங்கே வந்திருக்கலாம்’ என்கிறார் சுப்புலெட்சுமி மோகன். மகாராஷ்டிரத்தில் குந்தளம் "கோந்தாள்" என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள பவானி அம்மன் கோவில்களிலும் மராட்டிய மக்களின் இல்லச் சடங்குகளிலும் இசைக்கப்படுகிறது. குந்தளத்தை தமிழர் இசைக்கருவியாக குறிப்பிடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர் நிலத்தில் 300 ஆண்டுகளாக தமிழ் மக்களின் ஆதரவு பெற்றதும், தமிழ் மக்களை மகிழ்வித்து வருவதுமான குந்தள இசைக்கருவியை கண்டிப்பாக அந்த பட்டியலில் சேர்க்கலாம்.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் திரு கஜேந்திரன் அவர்கள். இவர் தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட பொய்க்கால் குதிரை ஆடும் மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர். நம்மிடம் விரிவாகப் பேசினார். அவரது பரம்பரையினர் பலரும் இதே தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் தான். குந்தளம் சில மாற்றங்களுடன் தற்பொழுது பயன்படுத்தப் படுவதாக கூறுகிறார். வலந்தலைக்கு ஃபைபர் பயன்படுத்தப் படுகிறது என்கிறார். தஞ்சை வடக்கு வாசல், கீழ வாசல் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோயில் திருவிழாக்களில் குந்தளம் முக்கிய இசைக்கருவியாக இசைக்கப்படும் என்கிறார் திரு கஜேந்திரன் அவர்கள்.
தஞ்சையில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் காளியாட்டம் அல்லது காளித் திருநடனம் எனப்படும் விழா இந்த வட்டாரங்களில் மிகப் பிரபலம். காளியம்மனின் மிகப் பெரிய முகத்தையும் கைகளையும் ஆண் ஒருவர் அணிந்து பயபக்தியுடன் ஆடுவது தான் காளியாட்டம் எனப்படும் விழா. இவ்வாட்டத்தில்
குந்தளம் ஆட்டதிற்கு ஏற்ப இசைக்கப்படும். தஞ்சையின் பிரபல குந்தள கலைஞர் நாடி ராவ் அவர்களின் மகன் ஜீவா ராவ் தான் பெரும்பாலும் இக்கருவியை கோவில்களில் இசைத்து வருகிறார். இவருக்கு பிறகு தஞ்சை மண்ணில் இந்த ஒசை கேட்குமா என்பது ஐயம் தான். இதற்கு முன்பு திரு துளஜாராம் என்கிற பெரும் கலைஞர் கோவில்களில் இசைத்து வந்துள்ளார்கள். ஒருங்கிணைந்த பழைய தஞ்சை மாவட்டத்தின் பல பழமையான அம்மன் கோவில் காளியாட்டங்களில் குந்தளம் இசைக்கப்படுகிறது. குந்தளம், தவில், நாதசுரம் ஆகியவை பெரும்பாலும் இசைக்கப்படுகிறது. (தஞ்சையின் புராதனமான கோடியம்மன் கோவிலில் நடைபெறும் பச்சைக்காளி-பவளக்காளி திருநடனத்தில் மட்டும் காளிகள் பறை/தமுக்கு இசைக்குத் தான் இன்றளவும் ஆடுகிறார்கள்) பல குந்தளங்கள் கொட்ட ஆடிய மற்ற காளிகள் இன்று ஜீவா ராவின் ஒற்றை குந்தளத்திற்கு ஆடுகிறார்கள்.
தஞ்சை வடக்கு வாசலில் குந்தளக் கலைஞர்கள் வசித்த இடம் குந்தளக்காரத் தெரு என்று அழைக்கப்பட்டது என்கிறார் திரு கஜேந்திரன். தஞ்சையில் நூற்றுக்கணக்கான குந்தள கலைஞர்கள் இருந்தார்கள். அன்மை காலம் வரை சுந்தர்ராவ், துளஜாராம் ஆகிய இரண்டு மூத்தக் கலைஞர்கள் இக்கருவியை இசைத்து வந்தார்கள். இவர்கள் தற்பொழுது மரணம் அல்லது முதுமையினால் இசைப்பதில்லை. ஆதம்ஷா, (டி.எஸ். சுந்தரராவ்) குந்தள கலைஞர்களில் மூத்தவர். ஆதம்ஷாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டனர், இப்போது குந்தள இசையை கற்ற நபர்கள் இவரது குடும்பத்தில் யாரும் இல்லை. இக்காலத்தில், குந்தளத்தை வாசிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் அதில் இல்லை, எனவே எங்கள் குடும்ப உறுப்பினர்களை வேறு ஏதேனும் ஒரு தொழிலைத் தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்டேன்” என்று ஆதம்ஷா முன்பு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இவரைத் தவிர, தஞ்சை கீழ வாசலில் வசிக்கும் அவரது மைத்துனர் திரு துளஜாராம் (எ) தாதாபாய், இந்தக் கருவியை இசைத்துவந்தார். தற்பொழுது இவர் உடல் நலம் குன்றியுள்ளார்.
2020ல் தமிழகத்தில் குந்தளத்தை வாசித்து வரும் குந்தளக் கலைஞர்கள் திரு நாடி ராவ், அவரது மகன் ஜீவா ராவ், மற்றும்
கஜேந்திரனின் உறவினர் ஒருவர் என்று 3 பேர் தான். கஜேந்திரனும் இந்த இசையைப் பழகி வருகிறாராம். தொடக்க காலத்தில், குந்தளம் மட்டுமே பொய்க்கால் குதிரை ஆட்டத்திற்கான இசைக்கருவியாக இருந்தது. ஒளி மாசு இல்லாத அந்த நாட்களில் அது நேர்த்தியாக இருந்தது. தற்காலத்தில் பல்வேறு சூழ்நிலைகளினால் குந்தளத்துடன் நையாண்டி மேளமும் சேர்த்து பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் இசைக்கப்படுகிறது. அம்பிகாபதி படத்தில் ஒரு குந்தளம் மட்டுமே இசைத்து ஆடப்பட்ட ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டப் பாடல் வரும். இதில் இசைத்தது கஜேந்திரனின் முன்னோர் தான் என்கிறார் இவர். மேலும் திருவிளையாடல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவரது தாத்தா குந்தளம் இசைத்ததாக தெரிவிக்கிறார். புரவியாட்டம், புரவிநாட்டியம் என பகுதிக்கொரு பெயரால் அழைக்கப்படும் பொய்க்கால் குதிரை ஆட்டக்கலை, கோயிலும் சமூகமும் சார்ந்தது. நேர்த்திக்கடனாக பொய்க்கால் குதிரை ஆடுவதாக வேண்டிக்கொண்டு, வேண்டுதல் பலித்தபிறகு கோயிலின் முகப்பில் அக்கலையை நிகழ்த்தி வழிபடும் வழக்கம் தஞ்சைப்பகுதியில் இருந்துள்ளது. 

தமிழ் மண்ணில் தோன்றி தழைத்திருந்த பல கலைகளும் இக்காலகட்டத்தில் வழக்கொழிந்து வரும் நிலையில் மராத்திய மாநிலத்தில் இருந்து வந்த குந்தளக் கருவி எம்மாத்திரம்? சில நூற்றாண்டுக் காலம் தமிழ் மக்களோடு கலந்து இருந்த இந்த இசை இனி வரும் காலங்களில் ஒலிக்குமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எல்லா சிக்கல்களுக்கும் மேலாக இந்த கொரானா என்னும் பெரும் நோய் இவர்களை மேலும் முடக்கியுள்ளது. இக்கலைஞர்களுக்கு மக்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை. இல்லையென்றால் வருங்காலத்தில் இக்கருவியை பொம்மைகளிலும் அருங்காட்சியகத்திலும் தான் பார்க்க வேண்டும்.
இசைப்போர்/புழக்கத்தில் உள்ள இடங்கள்
· தஞ்சை – கலைமாமணி T.A.R. நாடி ராவ் (# 2711, குந்தளக்கார தெரு, வடக்கு வாசல், தஞ்சாவூர், +91 4362 250876/+91-9865421959, + 91-9443783209)
· சவுக்கார்பேட்டை – திரு கஜேந்திரன்,+919710609608
· சில பொய்கால் குதிரை ஆட்டங்களில்
· தஞ்சை கரந்தை கீரைக்காரத்தெரு திரௌபதியம்மன் கோவில்
· தஞ்சை கீழவாசல் திரௌபதியம்மன் கோவில்
· கும்பக்கோணம் காளியாட்டம்
· வயலுர் ராமாபுரம் காளியாட்டம்
காணொளி:
https://youtu.be/NOIT-_Js53g
https://youtu.be/bnrg3bLbwEo
https://youtu.be/spQb4CjRsJc
பொய்கால் குதிரை:
https://www.youtube.com/watch?v=gZC1f0e8mEc
https://www.youtube.com/watch?v=SNeispY9hrA
https://youtu.be/_SOfV0WVpKc
https://youtu.be/EUPNC0LutYc
https://youtu.be/5BH_oVbUWpc
காளியாட்டம்:
https://youtu.be/7FD0o9CwUOw
https://youtu.be/3e-eajh8Hd8
https://www.youtube.com/watch?v=xoACEbIg50c
https://www.youtube.com/watch?v=nSFPjNzzmGw
https://www.youtube.com/watch?v=lHQdxw1ZZ5E
https://www.youtube.com/watch?v=o1jXwvHecoA
மஹாராஷ்ட்டிரம்:
https://www.youtube.com/watch?v=kIJPAhazJ1o
https://www.youtube.com/watch?v=ee6B8Mz7WCE
https://www.youtube.com/watch?v=bz0TTC2zfXg
https://www.youtube.com/watch?v=EZcSaDMpAKQ
https://youtu.be/Wka1VJWRbjo
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:
1. வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
2. திரு கஜேந்திரன், +919710609608 , சவுக்கார்பேட்டை, பொய்க்கால் குதிரை கலைக்குழு
கலைமாமணி T.A.R. நாடி ராவ் ,+91 4362 250876/+91-9865421959, + 91-9443783209, , பொய்க்கால் குதிரை கலைக்குழு, வடக்கு வாசல், தஞ்சாவூர்
No comments:
Post a Comment