கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் - 23 கைரேகைச் சாத்திரமும் தலைவிதி மாற்றமும் ! பால்ய காலமும் பாப்புவாநியூகினியும்


“ திரைகடல் ஓடியும் திரவியம் தேடு “  என்று சொன்ன பரம்பரையிலிருந்து வந்தவர்கள் நாம். ஆழ்கடலைக்கடந்து கப்பலோட்டிய தமிழர்கள்தான் எமது முன்னோர்கள்.
எமது தாயகத்திலும் எம்மவர்கள் 1956 காலப்பகுதியில் கப்பலேறிய கதையும் தெரியும்தானே…? அதன்பின்னரும்  1977 இல் லங்காராணி கப்பலில் ஏறிச்சென்ற கதையும் தெரியும்தானே..? இதற்கெல்லாம் முன்பு வல்வெட்டித்துறையிலிருந்து தமிழர்கள் அமெரிக்காவுக்கும் கப்பலில் சென்றார்கள்.
தமிழ்நாடு தூத்துக்குடியிலிருந்து  சுதந்திர போராட்ட வீரர்  வ. உ. சிதம்பரப்பிள்ளையும் கப்பலோட்டினார்.  இந்த வரலாறுகள் புத்தகங்களில், திரைப்படங்களில், நாவல்களில் சொல்லப்பட்டுள்ளன. அவை பற்றி நான் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை.
எத்தகைய இக்கட்டு நேர்ந்தாலும் விடா முயற்சியில் ஈடுபட்டவர்கள்தான் எமது  வழித்தோன்றல்கள்!
அந்தப்பரம்பரையில் வந்திருக்கும் நானும், பாப்புவாநியூகினி நாட்டுக்குச்  செல்வதற்கு ஏன் தீர்மானித்தேன்..?
திரவியம் தேடி சீமானாக வாழ்வதற்கா..?
மாடி மனையும் கூடகோபுரமும் கட்டி எழுப்புவதற்காகவா..?

அவ்வாறு வாழ்ந்து பலரதும் கவனத்தையும் என்பால் திசைதிருப்புவதற்காகவா…?

இல்லை… இல்லை… ! பிள்ளைகளை பெற்று வளர்த்துவிட்டால் மாத்திரம் போதுமா..? பேணி வளர்க்கவேண்டும் தெரியுமா…?
அல்லலைக்கண்டு மனசு அஞ்சுமா…?
எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், உரிய பருவத்தில்
பிள்ளைகளுக்கு கல்விச்செல்வம் அளித்தல் எமது கடமையன்றோ..?
அதற்கு நிதிவளம்தேவைப்பட்டது. அதற்காகவே கடல் கடந்து செல்லத்தீர்மானித்தேன்.
இல்லை… இல்லை… நான் தீர்மானிக்கவில்லை..! எனது விதிதான் தீர்மானித்தது..! எனச்சொல்வதே பொருத்தம்.
நான் ஏன் இப்படிச்சொல்கின்றேன்..? என்று சிலர் கேட்கவும்கூடும்.
அதுவும் எனது சொல்லாத கதைகளில் ஒன்றாகும். எமது ஒரே மகன் மேற்கல்வியைத் தொடரவேண்டிய காலம்  1980 இல் வந்தது. அதுதொடர்பான செலவுகளுக்கு கையிலே பணம் இல்லை.  நாட்டின் சூழ்நிலைகளும் பாதகமாக இருந்தது.
அக்காலப்பகுதியில் எனது மகனின் வயதிலிருந்த ஆண்பிள்ளைகள் பாதை மாறி விடுதலைவேட்கையுடன் திசைதிரும்பிக்கொண்டிருந்தனர். விடுதலை இயக்கங்களுக்கு செல்லாதவர்களையும் இரண்டு  தரப்பும் துரத்திப்பிடித்துக்கொண்டிருந்த காலம்.
இந்நெருக்கடி நிலையில் எனது தம்பியார் தியாகராஜா என்ற தியாகர்,  எனக்கு ஆறுதல் தந்தார்.
அவர் அவ்வேளையில் தொழில் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் அவர் ஒரு செய்தியுடன் வந்தார்.
 “ பாப்புவாநியூகினி நாட்டுக்கு சில ஆசிரியர்களை தெரிவுசெய்வதற்கு அந்நாட்டின்  கல்வி அமைச்சின் அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு உதவியும் ஆலோசனையும் வழங்கும் பிரதிநிதியை  நான் அறிவேன்.  அவர்,  “ உங்கள் அண்ணாவும் ஆசிரியர்தானே..? அவர் செல்வதற்கு விரும்புவாரா..?  “எனக்கேட்கிறார். உங்கள் எண்ணத்தைச் சொன்னால்  பேசிப்பார்க்கலாம்.”  என்றார்.
நான் யோசித்தேன். செல்வது நல்லதுதான். ஆனால், வீடு, எனது சொந்தம், விளைநிலம், நாடு, இவை அனைத்தையும் விட்டுத்தான் செல்லவேண்டுமா..? இது தேவைதானா..? சற்றுத்தயங்கினேன். எனது மனநிலையை அச்சமயம் காலியில் அரச அதிபராக பணியிலிருந்த மைத்துனர் சிவானந்தனிடம் கூறினேன்.
அவரும்,  “ அம்பி… மற்றவற்றை பிறகு யோசிப்போம். முதலில் விண்ணப்பத்தை அனுப்புங்கள்  “ என்றார்.
அதுவே சரியென்றும் எனக்குத்தோன்றியது.
விண்ணப்பத்தை அனுப்பினேன்.
சில நாட்களில் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு  வந்தது. அதிலே தெரிவுசெய்யப்பட்டேன். ஆனால், நான் எனது  பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச்செல்வதற்கு   “ ஒருவன் “ தடையாக இருந்தான். அதற்கு  “ சம்திங்  “ பெறுவதற்கும் முயற்சித்தான். எனது மைத்துனர் – அரச அதிபர் சிவானந்தன் அதையும் முறியடித்தார்.
இறுதியில், நான் ஓய்வுபெற்று, ஓய்வூதியத்துடன் பாப்புவாநியூகினி செல்லும்  வாய்ப்பு கிட்டியது. என்னைப்போன்று மேலும் ஈழத்து ஆசிரியர்கள் பன்னிரண்டுபேர் அங்கு சென்றார்கள் என்பது எனது நினைவு.
1981 ஆம் ஆண்டு நான் அந்த நாட்டுக்குச்சென்ற கதையின் முன்கதைச்சுருக்கம் இதுதான்.
எனினும்,   நான் சற்றுப்பிந்திச்செல்லநேர்ந்தது. ஏனையோர், எனக்கும் முன்பே சென்று அந்த நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கும் கடமைகளுக்காக அனுப்பப்பட்டுவிட்டனர்.
நான்தான் இறுதியாகச்சென்றடைந்தேன்.
என்னை அந்த நாட்டில் மேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு கல்லூரிக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்தனர். எனது  வசிப்பிடத்திற்காகத் தரப்படவிருந்த வீடு சில திருத்தவேலைகளுக்குட்பட்டிருந்ததனால், என்னை அங்கே அனுப்பவில்லை.
 “ இரண்டு மாத காலம் தாமதமாகும்.  “  என்றனர்.
அதனால், தலைப்பட்டினம் Port Moresby யில் அமைந்துள்ள தபால்மூலம் கல்விச்சேவை வழங்கும் தொலைக்கல்விக் கல்லூரிக்கு என்னை தற்காலிகமாக அனுப்பினார்கள்.
அங்கே இரண்டு மாதகாலம் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டனர். நானும் அதற்குடன்பட்டு, மறுநாள் முதலாக பணியை தொடங்கினேன்.
அக்கல்லூரியின் அதிபர் என்னுடன் கலந்துரையாடி, எனது பின்னணி பற்றி தெரிந்துகொண்டார். இலங்கையிலே நான் பாடவிதானத்துறையிலே பெற்ற அனுபவம், கணித பாட நூல் எழுத்தராக பெற்றுக்கொண்ட தேர்ச்சி எல்லாமே அவரது கவனத்தை  ஈர்த்தன.
அங்கே என்னை நியமிக்க  அவர் பெரிதும் விரும்பினார். எனக்கோ பெரு மகிழ்ச்சி. ஊர்.. தேசம்… எல்லாம் அலைந்து திரியாமல், தலைநகரிலேயே வேலையும் , தங்குவதற்கு வீடும் தருவார்கள். மனைவி மக்களையும் அழைக்கமுடியும். எனது பிள்ளைகள் அங்கேயே சர்வதேசப் பாடசாலையில் படிக்கவும் முடியும். எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி!
1981 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் அங்கே பணியாற்றினேன். 1982 டிசம்பர் மாத விடுமுறையில் கொழும்பு சென்று திரும்புவதற்கும் விமான வசதியும் செய்து தந்தார்கள். 1983 ஜனவரி வரையில் அவ்வாறு விடுமுறையில் தாயகம் சென்று திரும்பிக்கொண்டிருந்தேன்.
அவ்வாறு ஒரு விடுமுறையில் சென்று திரும்புகையில்,  அந்த நாட்டில், மற்றும் ஒரு மகிழ்ச்சி  எனக்காக  காத்திருந்தது. அங்கே கணிதத்துறையில் எனக்குத் தலைவராக இருந்த அவுஸ்திரேலியர் ஒருவர், பணியிலிருந்து ஓய்வுபெற்று நாடு திரும்பினார். அதனால், அக்கல்லூரியில் நான் அந்தத் துறையின் தலைவரானேன்.
1983 ஜனவரி முதல் அந்தப்புதிய பொறுப்பினை ஏற்றேன். 1992 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறும் வரையில் அந்தப்பொறுப்பிலேயே இருந்தேன்.
ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் அந்தப்பணியிலிருந்தேன். பாப்புவாநியூகினியில் கணிதத்துறை ஊழியனாக அந்த நாட்டின் பல்வேறு மாகாணங்களுக்கும் செல்லநேர்ந்தது.
அங்கே ஒரு மாகாணத்திலிருந்து மற்றும் ஒரு மாகாணத்திற்கு விமானத்தில் செல்லமுடியும். அடிக்கடி விமானப்பயணங்கள் வந்தன.
அப்போது, எனக்கு 1950 ஆம் ஆண்டு காலப்பகுதி நினைவுக்கு வந்தது. அப்போது எனக்கு 24 வயது என்பது எனது நினைவு. ஒருநாள் எங்கள் வீடிருந்த வீதியில் ஒருவன்  “ சாத்திரம்… சாத்திரம்… “ என்று கூவிக்கொண்டு சென்றான். எனது ஆச்சி அவனை அழைத்தார். அவவுக்கு எனது எதிர்காலம் பற்றி அறியும் ஆவல்.
அந்த சாத்திரக்காரன் எனது கரம்பற்றி கைரேகைகளை ஆராய்ந்தான். கண்ணைச்சிமிட்டினான்.  “ அம்மா… இவன் பிற்காலத்திலே நாடு நாடாகத்திரிவான். ரயில்  -  பஸ்களில் அல்ல. பிளேனில்தான் ஊர்  ஊராய்ச் சுற்றுவான்.  அதனை நான் சொல்லவில்லை. இந்தத்தம்பியின் கைரேகைகள் சொல்கின்றன.  “ – இவ்வாறு அவன் சொன்னதும், எனது ஆச்சி பதிலுக்குச் சொன்னதும்  இப்போதும் நினைவில் தங்கியிருக்கிறது.
 “ இப்போது ஐந்துக்கும் பத்துக்கும் அலையும் குடும்பம் எங்களது. இவன் விமானத்தில்தான் பறக்கப்போகிறானா..? சரி… சரி… இடத்தை காலிபண்ணிட்டுப்போ… “  அவ்வாறு சொன்ன எனது ஆச்சி, நான் பின்னாளில் விமானங்களில் பறந்து திரிந்த காட்சியை காணாமலேயே கண்களை மூடிவிட்டார்.
பாவம் அவர். போய்விட்டார். நான் தேசாந்திரியாய் அலைகின்றேன்!
பாப்புவாநியூகினி,  மலைகளும் மடுவும் நீர்வளமும் நிரம்பிய ரம்மியமான நாடு. காடுகளும் கனிவளர் மரங்களும் நிரம்பிய நாடு. நல்லவர்களும் அல்லவர்களும் வாழும் நாடு. கள்வரும் இருக்கிறார்கள். இவர்கள் எங்குதான் இல்லை…?!
நாம் ஒரு வீட்டுக்கு  காரில் விருந்தினராகச்சென்றால், திரும்பி வந்து பார்க்கும்போது  நாம் வந்த காரைக்காணமாட்டோம்.
ஆம்..! நல்லோர் சிலரும் அல்லோர் பலரும் செறிந்த அந்த நாட்டிலே நானும் 12 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றேன். அங்கிருந்து நான் ஆங்கிலத்தில் எழுதிய சிறுவர் கவிதைகளுக்கும் நல்ல வரவேற்பிருந்தது.
பாப்புவா நியூகினி நாட்டைப்பற்றி நான் எழுதிய சில நெடுங்கவிதைகளை எனது அம்பி கவிதைகள் நூலில் நீங்கள் படிக்கலாம்.
பனைமரக்கலாசார வேர்களிலே பிடுங்கியெறியப்பட்டு அந்நிய சூழலிலே வாழும் பொழுது ஏற்படும் இரண்டு உலகைப்பற்றிய ஒரு காவியத்தேடல் என்ற மகுடத்தில் அக்கவிதைகளை படைத்திருந்தேன்.
அங்கிருந்து நான் எழுதிய LINGERING MEMORIES நூல் பற்றி, அங்கே வெளியாகும் Post Courier என்ற பத்திரிகை இவ்வாறு எழுதியிருந்தது:
School children throughout the country will soon be reading poems from LINGERING MEMORIES, a book written by a Srilankan writer. Amby, who has lived in PNG for more than 11 years, works with the college of Distance Education… The book of poems is considered by the Education Department to be good reading material for school children and copies will soon be printed and distributed to school in PNG.
-      Post Courier, PNG, 19 -01-1993.

அன்று எங்கள் ஊரில் வீதிவழியே சென்ற அந்த சாத்திரக்காரன்,  எனது விதியைச்  சொன்னானா…? அவனது முகம் மறந்துபோய்விட்டது. 

ஆச்சி இன்றும் மனதில் நிறைந்திருக்கிறார்.

( தொடரும் )
No comments: