பாட்டி சொல்லைத் தட்டாதே - V.S.கணநாதன்

.
 கண்ணா, அந்தக் காலத்திலே,” என்று சொல்ல, “பாட்டி, என்னை தொந்தரவு பண்ணாதேங்கோ.  நான் என் mobile phonil பகிடிக்கதை கேக்கிறேன்.

அவுஸ்திரேலியாலே பிறந்து வளர்ந்த உனக்கு எப்படி புரிய வைக்கிறது? உன் பெற்றோரும் நானும் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். உன் பாட்டா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். காத்தாலே நாலரை மணிக்கு அலாரம் வைச்ச மாதிரி படுக்கை விட்டெழுந்து, கிணத்தடியில் குளிச்சு ……
பாட்டி, நான் நம்பிற மாதிரி கதை சொல்லுங்கோ. நடுங்கிற குளிரில் பாட்டா கிணத்தடியில் குளிச்சு.. என்று சொல்லிச் சிரித்தான்.
கண்ணா, மெல்போர்ன் குளிர் மாதிரி இல்லை எங்கள் ஊரில். அது உடம்புக்கு இதமாக இருக்கும். ஆனால் மாரி காலத்திலே மட்டும் பெரிய அண்டாவில் தண்ணி கொதிக்க  வைச்சு சுடுதண்ணீரில் குளிப்பார். நான் கோப்பி செய்து குடுக்க, அதை அருந்தி, எங்கள் அத்தியடி வீட்டில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு நடந்தே போய் முருகனை தரிசித்து வருவார்.
மழை நாட்களிலும் நடந்து போவாரா?
மழை நாட்களில் மட்டும் காரில் போயிட்டு வருவார். அவர் வெளிக்கிட்டவுடன் நான் உன் அப்பாவை எழுப்பி பல் துலக்கிட்டு படிக்கச் சொல்லுவேன். அவனும் அஞ்சு மணியில் இருந்து ஏழு மணிவரை பாடமாக்க வேண்டியதை, பெலத்து பாடமாக்குவான். அவன் தப்பா ஏதும் சொன்னால் நான் உடனே திருத்திடுவேன். சின்னப் பிள்ளைகள் 12 ஆம் வாய்ப்பாடு வரையும், மேல் வகுப்பில் 16 ஆம் வாய்ப்பாடு வரையும் பிழை விடாமல் பாடமாக்க வேண்டும்.
பாட்டி, கஷ்டமான கணக்கு செய்ய, என் calculator மின்னல் வேகத்தில் விடை தந்திடும்.
தெரியும்டா. அந்தக் காலத்தில் ஆத்தி சூடி, நன்னெறி, மேலும் அந்தந்த வகுப்புக்கு ஏற்ற தமிழ், ஆங்கிலக் கவிதைகளை ஒரு சொல்லுத் தவறாமல் பாடமாக்க வேண்டும்.
பாட்டி, நாங்கள் இங்கே அப்படி பாடமாக்க கூடாது. பக்கத்திலிருக்கும்  மாணவனிடம் இருந்து கொப்பி அடித்திட்டான், அல்லது Plagiarism என்று டீச்செர் குற்றம் சாட்டி மாணவனுக்கு மார்க்ஸ் வெட்டுவார்.



எங்கட காலத்திலே கொப்பி என்றால் எழுதுற புத்தகம். கொப்பியாலே அடிக்கிறதில்லை.”
பாட்டி, முழு நேரமும் படிப்பும் பாடமாக்கிறதும் என்றால் பிள்ளைகளுக்கு விளையாட நேரமிருந்திராதே.
“கண்ணா, சுப்ரமணிய பாரதியார் சொன்ன மாதிரி, ‘காலை எழுந்தவுடன் படிப்பு. பின் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்துக் கொள்ளு பாப்பா.’”
பாட்டி, நான் தமிழ் பள்ளியில் பாரதியார் மாதிரி நடித்து பாடினேன். ‘சின்னஞ் சிறுகுருவி போலே – நீ திரிந்து பறந்துவா பாப்பா, வண்ணப் பறவைகளைக் கண்டு நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.’
உன் அம்மா சொல்லி நாங்கள் பெருமைப் பட்டோம்.பாட்டி திரும்பவும் அந்தக் காலத்திலே,” என்று சொல்ல கண்ணன் கைபேசியை தள்ளிவைச்சான். அந்தக் காலத்தில் உன் அப்பா ஊக்கத்தோடு படிச்சு பட்டதாரி ஆனார். அதனாலே இந்த நாட்டிலே குடியேற வசதி வந்தது அவர் குடும்பத்துக்கு. அது மட்டுமல்ல. உன் அப்பா, தன் இனஞ்சனத்தை மறவாமல் ஊரில் கஷ்டப் படுறவர்களுக்கு உதவி ...
உடனே கண்ணனின் அப்பா குறுக்கிட்டு, “அம்மா, குழந்தைக்கு அதெல்லாம் சொல்லுகிற நேரம் இல்லை இப்போதைக்கு. கண்ணா, உன் பள்ளி பாடங்களோடு, தமிழ் பாடங்களையும் ஊக்கத்தோடு படி. சனி ஞாயிறு நாட்களில் வலை பந்து விளையாடு. உன் கைபேசியை பள்ளி நேரத்திலோ படிக்கிற நேரத்திலோ பார்க்காதே.”
ஒரு  விடுமுறை  நாளன்று  கண்ணனின்  சிநேகிதர்  இருவர்  வாசல்  மணியை   அடிக்க,  பாட்டி முன்  கதவைத்  திறந்தார்.  “Kannan is taking a bath. Please come on in,” என்று அழைக்க, அவர்கள் ஒவ்வோர் கதிரையை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்கள். “I am Thangam, Kannan’s grandma. I came from Sri Lanka five years ago. Can I know your names please?” நல்ல வேளை கண்ணனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தார்கள். இந்த ஊரில் முன் பின் தெரியாதவரோடு வீண் பேச்சு பேசப்பிடாதெண்டு சொல்லியிருக்கிறார்கள்.
“I am Michael and he is James.”
Michael, Kannan said that your class camping trip is cancelled because of the Corona Virus problem."
"Yes, madam. It’s a pity."
பாட்டி அவர்களோடு பலதையும் பேசிக்கொண்டிருக்க, கண்ணன் அங்கே வந்தவன், ஆச்சரியம் தாளாமல் மூவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
“Kannan, your grandma is great,” said James. “She quoted passages from Shakespeare and Wordsworth. And she is up to date with state politics and problems of climate change.”
ஒன்றும் பேசாது கண்ணன் தோழருடன் வெளியே விளையாடக் கிளம்பினான்.
அன்று மதியம் அவன் தகப்பன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். "Appa, could you please spare me a few minutes?"
"மகனே, நாங்கள் வீட்டிலே தமிழில் பேசவேண்டும் என்பதை மறந்திட்டியா?"
“நான் ஆங்கிலத்தில் கதைச்சா பாட்டி தனக்கு ஒண்டும் விளங்கேல்லே. தமிழிலே சொல்லச் சொல்லுவா. இன்று அவர் ஆங்கிலத்தில் என் தோழரோடு நிறைய கதைச்சிருக்கார்.  ஏன் பாட்டி என்னோட ஆங்கிலத்தில் கதைக்க மாட்டீர்கள்?"
நீ குழந்தையாய் இருக்கையில் வீட்டில் தமிழில் எங்களோட கதைச்சுப் பழக வேண்டும் என்று நான் உன் அம்மா அப்பாக்கு சொன்னேன். ஒருத்தர் தன் தாய் மொழியை தெரிந்திருப்பது நன்றல்லவா?”
கண்ணன் பாட்டியைக் கட்டிப் பிடித்து இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தான்.
இஞ்சே வா, உனக்கு விருப்பமானதொன்றைச் செய்து வைத்திருக்கிறேன்.
கொழுக்கட்டையா?” என்று சொல்லி குசினிக்கு ஓடி ஒன்றை எடுத்து ருசித்தான்.
கண்ணா, எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
“Martin Luther King, Junior “I have a Dream,” என்று சொன்ன மாதிரி கனவோ?”
அது மாதிரிதான், கண்ணா. ஈழத் தமிழருக்கு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கெதியா விடிவு காலம் வரவேண்டும் என்ற கனவு.”
உங்கள் கனவு நனவாக வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கண்களை மூடி தியானிப்போம், பாட்டி.”
உணர்ச்சி மேலிட அந்த மூதாட்டி அவனைக் கட்டி அணைத்தார்.

No comments: