புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் 05 முருகபூபதி


( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய  காணொளி ஆய்வரங்கில்  சமர்ப்பிக்கப்பட்ட  கட்டுரை )

தமிழ் எழுத்தாளர் விழா இயக்கமும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் !
  விக்ரோரியா ,  நியூசவுத்வேல்ஸ்,  குவின்ஸ்லாந்து, கன்பரா, மேற்கு – தெற்கு  அவுஸ்திரேலிய  மாநிலங்களில்  எழுத்தார்வமுடன் இயங்குபவர்களை இனங்கண்டுகொண்டதன் விளைவாக 2001 ஆம் ஆண்டில்  உருவானதே அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம்.
  “  அறிந்ததைப்பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்   “  என்ற சிந்தனையை  அடியொற்றி,  கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் என்பதையும் வலியுறுத்தி  2001 ஆம் ஆண்டு முதல் மாநிலங்கள் தோறும் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்று வருகிறது.  அந்த இயக்கம் 2004 ஆம் ஆண்டு விக்ரோரியா மாநிலத்தில் அரசில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற பெயரில் தொடர்பயணத்தில் ஈடுபடுகின்றது.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கரங்களினால் ஓர் ஆதி இனம் நசுக்கப்பட்டு, அந்த இன மக்களின் குழந்தைகள் திருடப்பட்டு வெள்ளை இனக்கலப்பிற்கான எத்தனம் உருவாகி Stolen Kids என்ற பிரயோகம்   ஆக்க இலக்கியத்திலும் பேசுபொருளானதை அறிவீர்கள்.
புலம்பெயர்வாழ்வு அவலமும் பதட்டமும் வலிகளும் நிரம்பப்பெற்றது. இரண்டகத்தன்மையை உள்வாங்கியிருப்பது. அதனால்   இங்கு வந்து குடியேறியவர்கள்,  தத்தம் இன அடையாளம் குறித்த அக்கறையோடு வாழத்தலைப்பட்டனர். 

எங்கள் பூட்டன் மகாகவி பாரதி  தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச்செய்வோம் என்ற கனவைக்கண்டார். இங்கு புகலிடம் பெற்ற தமிழர்கள், அந்தக்கனவை நனவாக்குவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். எந்தவொரு செயலும் மூன்று படிமுறை வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டிருக்கும்.
DREAM – STRUGGLE – VICTORY
முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர்  ( அமரர் ) அப்துல்கலாம் சொன்னதுபோன்று கனவுகள் கண்டு -  அவற்றை நனவாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு -  இறுதியில் வெற்றியின் படிக்கட்டுகளை தொடுவதற்கான முயற்சியில் ஈடுபடும் புகலிட வாழ்க்கை,  தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே சொன்னதுபோன்று ஆறாம் திணையை கண்டடைந்து புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – புகலிட இலக்கியம் என்ற கருதுகோளை நிறுவியுள்ளது.
2001 ஆம் ஆண்டு மெல்பனில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவின் அங்குரார்ப்பணத்தின்போது நான் சமர்ப்பித்த தொடக்கவுரையிலிருந்து சில பகுதிகளை உங்களிடம் இக்காணோளியூடாக தெரிவிக்கின்றேன்.
மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் கருங்கல்லில் உளியினால் பொழியப்பட்ட தமிழ், பனை ஓலை ஏட்டிலே எழுத்தாணியால்  பதியப்பட்ட தமிழ், பாக்கர் பேனாவும் குமுழ் முனைப்பேனாவும் எழுதிய தமிழ், மரக்கட்டையினாலும் வெள்ளீயத்தினாலும் அச்சில் வெளியாகிய தமிழ், கணினியிடம் வந்துள்ளது.
உலகமயமாதலில் ஒருபுறம் பொருளாதாரச் சுரண்டல் நிகழ்ந்துகொண்டிருக்க, இந்த உலகமயமாதலிலும் தமிழின் – தமிழ் கலை, இலக்கியத்தின் தேவை உணரப்பட்ட காலகட்டத்தை கடந்துகொண்டிருக்கின்றோம்.
அயர்லாந்தைச்சேர்ந்த கால்டுவல், பிரிட்டனில் பிறந்த எல்லீஸ், டாக்டர் ஜி. யூ. போப், இத்தாலியரான கொன்ஸ்ட்டன்ரைன் ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவர், ஜெர்மனியரான சீகன் பால்கு, ருஷ்யா உக்ரேயினைச்சேர்ந்த விதாலி புஃரினிக்கா, அமெரிக்காவிலிருந்து வட இலங்கைக்கு வந்து தமிழ் மருத்துவ முன்னோடியாக விளங்கிய டாக்டர் கிறீன் இப்படி எத்தனையோபேர் தத்தம் தாயகம் விட்டுவந்து, தமிழ்நாட்டில், இலங்கையில் தமிழைத்தேடினர். ஆராய்ந்தனர், தமிழுக்கு அணிசேர்த்தனர். சிலர் தமிழ் மண்ணிலேயே அடக்கமாகினர்.
இந்த வரலாற்றை அறிந்துள்ள நாம், - தாய் மண்ணை விட்டகன்று அந்நியம் புலம்பெயர்ந்து வேர் பதிக்க முனையும்போது, எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனச்சொல்லிக்கொள்ளும் நாம், எமக்குப்பின்னர் வரும் அடுத்த சந்ததி – நாளைய உலகை நிர்மாணிக்கும் – நிர்ணயிக்கும் புதிய தலைமுறைக்கு விட்டுச்செல்லவிருப்பது சொத்து சுகமோ தேட்டங்களோ அல்ல.
எமது முன்னோர்கள் எம்மிடம் விட்டுச்சென்ற தமிழ்ப்பணியை நாம் இனிவரும் தலைமுறையிடத்திலும் எடுத்துச்செல்ல வேண்டும்.
இவ்வாறு இருபது ஆண்டுகளுக்கு  (  2001 இல் ) முன்னர் நாம் பிரகடனப்படுத்தி தொடங்கிய தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம் ,  இதுவரையில்   19   வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் ,  கருத்தரங்கு, கவிதா மண்டலம்,  வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்குகளையும் , இசை, நடன, நாடக, நாட்டுக்கூத்து அரங்கு , குறும்பட அரங்கு என களைகட்டி தொடர்ந்தும் தங்கு தடையின்றி பயணித்து வருகிறது.
இவ்விழாக்களுக்கு இலங்கை, தமிழக,  எழுத்தாளர்களும் வருகை தந்து உரையாற்றிவருகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த விழாவில் தமிழக எழுத்தாளர்  நாஞ்சில் நாடனும் கலந்துகொண்டார் என்பதையும் தெரிவிக்கின்றேன்.
தமிழ் எழுத்தாளர் விழாக்கள் நடத்தப்படும் கால கட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள்  எவரேனும் உலகில் எந்தப்பாகத்திலும்  மறைந்திருக்கும் பட்சத்தில், அவர்களின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் உரைகளும் நிகழ்த்தப்படுகின்றன.
இந்த அமைப்பு அவ்வப்போது வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துவருகிறது.  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினரும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான தெய்வீகன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துவருகிறார்.
ஈழத்து , தமிழக, புகலிட  படைப்பு இலக்கியங்கள் இந்த வாசிப்பு அனுபவப்பகிர்வில் இணைக்கப்பட்டுவருகின்றன.
இவை தவிர மெல்பனில் சில தேர்ந்த இலக்கிய வாசகர்களின் கூட்டுமுயற்சியினால்,  வாசகர் வட்டம் என்ற அமைப்பினை திருமதி சாந்தி சிவக்குமார் ஒருங்கிணைத்துவருகிறார்.  இவர் தமிழகத்திலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்திருக்கும் இலக்கிய வாசகர். மெல்பன் வாசகர் வட்டம் மாதாந்தம் வாசிப்பு அனுபவ அரங்குகளை நடத்திவருகிறது.  இதனை இங்கு வந்து மூன்று  வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபித்தவர் உங்கள் மதுரை மாநகரைச்சேர்ந்த சமூக, கலை, இலக்கிய ஆர்வலர் திரு. முத்துக்கிருஷ்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால்,  வாசகர்களிடத்திலிருக்கும்  தேர்ந்த ரஸனையை இனம்காண முடிகிறது.
குவின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் தமிழ்நதி இலக்கிய அமைப்பு அந்த மாநிலத்தில் வதியும்  கலை, இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைத்து அடிக்கடி ஒன்றுகூடல்களை ஒழுங்குசெய்து வருகின்றது.   
அவ்வாறே நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கம்பன் விழா ,  சிலப்பதிகார விழா, வள்ளுவர் விழாக்கள் வருடந்தோறும் நடக்கின்றன.  கலை, இலக்கியம், கல்வி, சமூகம் சார்ந்த பணிகளில் அயர்ச்சியின்றி ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
விக்ரோரியா தமிழ்ச்சங்கமும் வருடந்தோறும் முத்தமிழ்விழாக்களை நடத்திவருகிறது.  ஏனைய மாநிலங்களிலும் தமிழ்விழாக்களுக்கு குறைவில்லை.  இங்கு வாழும் இளம் தலைமுறையினரிடத்தில் தமிழை வளர்க்கவேண்டும் என்ற அக்கறையின் உந்துதலால் தமிழ் விழாக்களும் குறைவின்றி தொடருகின்றன.
 அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் ஒரு பாடமாக தமிழ் மொழியும் இருக்கின்றமையால், இங்கு குறிப்பிட்ட பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்கும் நவீன தமிழ் இலக்கியப்பிரக்ஞை ஊட்டப்படுகிறது.  ஈழத்து, தமிழக இலக்கியம் தொடர்பாகவும் இம்மாணவர்கள் ஆய்வறிக்கை எழுதியிருக்கின்றனர்.
 ஒரு மாணவி அவுஸ்திரேலியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ் இதழ்கள், பத்திரிகைளைப்பற்றிய ஒப்படை (Assignment) எழுதியிருந்ததை அவதானித்திருக்கிறேன்.
இம்மாணவர்கள் நவீன தமிழ் இலக்கியவாதிகளின் படைப்புகளை மாத்திரமன்றி தமிழ் சினிமாவின் செல்நெறி- மக்களின் ரஸனை தொடர்பாகவும் ஆய்வேடுகளை சமர்ப்பித்துவருகின்றனர்.  அதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தும் தமிழ் ஆசிரியர்களும் கலை இலக்கியப் பிரக்ஞையுள்ளவர்கள்தான்.
 இனி வரும் நூற்றாண்டில் தமிழரின் புகலிட நாடுகளில் தமிழ் முற்றாக மறைந்துவிடும் என்ற அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், இறந்த காலமும் எம்மிடமில்லை, எதிர்காலமும் எம்வசமில்லை, நிகழ்காலம் மாத்திரமே தற்போது எம்முடன் இருக்கிறது எனவே இந்த நிகழ்காலத்தில் சாதகமாகவே சிந்திப்போம் என்ற யதார்த்த சிந்தனையுடன் இயங்குபவர்கள் அவுஸ்திரேலியாவிலும் இருப்பதனால் நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது.
  இனி வரும் தலைமுறையிடமும் தமிழ் இலக்கியத்தை கொண்டு சேர்க்கவேண்டிய பாரிய பொறுப்பை இங்கு வருடந்தோறும் எழுத்தாளர்விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் உணர்ந்திருப்பதனால்தான் கருத்தரங்கு அமர்வுகளில் இளம் தலைமுறையினரையும் கவனத்தில் கொண்டிருக்கிறது.
 இங்கிருக்கும் எழுத்தாளர்கள்,   தரமான இலக்கியங்களை இனங்கண்டு படித்து தம்மை வளர்த்துக்கொண்டால்தான் அவர்களிடமிருந்தும் தரமான படைப்புகள் வெளியாகும்.
அவுஸ்திரேலியா ஒரு பல்லின கலாசார நாடு என்று முன்னரே சொல்லியிருக்கின்றேன்  அரச வானொலியான எஸ்.பி. எஸ். வானொலி    Special Broadcasting Service   ஐம்பத்தியாறு மொழிகளில்  ஒலிபரப்புகளை வாராந்தம் நிகழ்த்திவருகிறது. அதில் தமிழும் ஒன்று.
வாரத்தில்  நான்குநாட்கள் ஒலிபரப்பாகும் இவ்வானொலியை இணையத்தின் ஊடாகவும் செவிமடுக்கமுடியும்.
முன்னர் கதையும் கதையாளரும் என்ற நிகழ்ச்சியை அதன் ஊடகவியலாளர் திரு. ரெய்சல்  ஒலிபரப்பி வந்தார். இவர் தமிழ்நாடு கன்னியாகுமரியைச்சேர்ந்தவர்.
  ஒரு தமிழ்ச்  சிறுகதையை ஒலிபரப்பி, அத்துடன் அதனை எழுதியவரைப்பற்றிய அறிமுகத்துடன்,   குறிப்பிட்ட கதையை ஏன் எழுதினார்..?  என்ற தகவலையும் தெரிவிக்கின்ற கதையும் கதையாளரும் என்ற நிகழ்ச்சி மிகத்தரமானது. சிட்னியில் வதியும் இவர், தமிழக – இலங்கை மற்றும் புகலிட  நாடுகளைச்சேர்ந்த படைப்பிலக்கியவாதிகளையும் பேட்டிகண்டு ஒலிபரப்பிவருகிறார். 
சமகாலத்தில் கானா. பிரபா தமது ரேடியோஸ்பதி இணையத்தின் ஊடாக அடிக்கடி  தரமான  சிறுகதைகளை தேர்வுசெய்து ஒலிபரப்பிவருகிறார்.  வீட்டிலிருக்கும் முதியவர்களும் இணையத்தின் மார்க்கத்தில் இக்கதைகளை செவிமடுக்கமுடிகிறது.
 எனவே இங்கு எழுத்தூடகங்களில் மட்டுமன்றி வானலைகளிலும் தமிழ் இலக்கியம் பரவுகின்றது.   
  இயந்திரமயமான வாழ்க்கையோட்டத்தையும் ஜீரணித்துக்கொண்டு இலக்கியம் படைத்துவரும் இங்குள்ள எம்மவர்கள், குளிர்காலத்தில் பனிக்குள் நெருப்பாகவும், கோடைகாலத்தில் வெப்பத்துக்குள்ளிருந்து குளிர்மையை தேடுகிறவர்களாகவும் வாழ்கின்றமையால்,  அடுத்த தலைமுறையிடம் இலக்கியக்கோலை ஒப்படைப்பதற்காக அஞ்சலோட்டம் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
( தொடரும் )
   No comments: