உயர்நிலையாய் அமையாதே ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... ஆஸ்திரேலியா


அரசியல் பிழைத்தோர்க்கு
       அறமேகூற் றாகுமென்று
அன்றுரைத்த காப்பியத்தை
      படிக்கிறோம் விளக்கிறோம்
பட்டிமன்றப் பொருளாக்கி
      பலவாறு பேசுகிறோம்
கருத்ததனை மட்டுமே
      கருத்திருக்கத் தவிர்க்கிறோம் !

ஒருவனுக்கு ஒருத்தியென
      உரைக்கவந்த காப்பியத்தை
வீட்டிலும் படிக்கிறோம்
     கோவிலிலும் விளக்குகிறோம்
காப்பியத்து நாயகனை
     கடவுளாக்கிப் போற்றுகிறோம்
நாயகனின் கருத்தைமட்டும்
      நட்டாற்றில் விட்டுவிட்டோம் !

நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி
       நம்நினைவில் பதிந்திருக்கு
நாலையும் தொலைத்தோம்
      இரண்டையும் ஒதுக்குகிறோம்
வேலிக்குச்  சாட்சியாய்
      ஓணானும் வருவதுபோல்
வேண்டாத பலவற்றை
      துணையெனவே வைத்துள்ளோம் !


புராணமெலாம் புழுகென்று
     புகலுகின்ற மேதைபலர்
புதுமையெனும் பெயராலே
      புலம்புகிறார் தத்துவங்கள்
உள்ளீடைப் பார்க்காமல்
     உயிரோட்டம் உணராமல்
உண்மைகளை ஒதுக்குவது
      உயர்நிலையாய் அமையாதே  !No comments: