மருந்து கண்டுபிடிக்கப்படுவது இருக்கட்டும்;| கொரோனாவை நாமே வெற்றி கொள்ளலாம்!




உலகத்தையே கொரோனா முடக்கிப் போட்டிருக்கலாம். ஆனால், ஒரு நேர்மறை தகவலையும் நாம் மறுப்பதற்கு இல்லை. ஆம், கொரோனா வெல்லக் கூடிய ஒரு வைரஸ்தான்.
சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்து உலகம் முழுதும் பரவிக் கொண்டுள்ள ஒருவித வைரஸ் இந்த கொரோனா. இதன் நோய் பாதிப்பை விட இது ஏற்படுத்திய பீதி மற்றும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம்.

உலகம் முழுக்கப் பரவினாலும், இதன் தாக்கம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலேயே அதிகமாக உள்ளது. உலகின், மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை கொண்ட ஆசியா, ஆபிரிக்காவைக் காட்டிலும் வெறும் 15மூ கொண்ட ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையே அதிகம் தாக்கியுள்ளது. ஏன்... தென் அமெரிக்காவில் கூட அவ்வளவு பாதிப்பு இல்லை.
கொரோனா ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பரவ மிக முக்கிய காரணம் விமானப் போக்குவரத்து. ஆனால் உள்நாட்டிற்குள் பரவுவது அந்நாட்டில் தட்பவெப்ப நிலை மற்றும் அந்நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அமைகிறது. புள்ளிவிபரப்படி வுஹான் நகரில் இருந்து அதிக விமானங்கள் டோக்கியோ, மும்பை, ஜகார்த்தா , பாங்கொக், தெஹ்ரான், கோலாலம்பூர், சிங்கப்பூர், இஸ்தான்புல், துபாய் போன்ற நகரங்களுக்கே அதிக அளவில் நேரடியாக இயக்கப்படுகின்றன. பரிஸ், பிராங்போர்ட், சான் பிரான்சிஸ்கோ, அம்ஸ்டெர்டாம் போன்ற மேற்கத்திய நகரங்களுக்கு குறைவான அல்லது இணைப்பு சேவைதான் இயக்கப்படுகிறது.
அப்படிப் பார்த்தால் கூட இது ஆசியாவில்தான் விரைவாக பரவியிருக்க வேண்டும். பொதுவாக வைரஸ் கிருமிகள் குளிர்காலங்களில் நீண்ட நாள் வாழ்வதால் ஃப்ளு, சளி, காய்ச்சல் போன்றவை அதிகம் பரவுகின்றன. கொரோனாவும் ஒரு வைரஸ் என்பதால், இது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற வெப்ப நாடுகளில் அவ்வளவாக பரவவில்லை என்றே தோன்றுகிறது. மாறாக குளிர்ப் பிரதேசங்களான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையே அதிகம் தாக்குகிறது.
அது மட்டுமல்ல, எதற்கெடுத்தாலும், சவர்க்காரம் போட்டு கை கழுவுவதும், கிருமி நாசினியும் கையுமாய் அலையும் மேற்கத்திய கலாசாரமும் இதற்கு ஒரு காரணம். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளின் சுத்தமான கட்டமைப்பு, உடல் உழைப்பில்லாத வசதியான வாழ்கை முறை போன்றவையும் குறைந்த நோய் எதிர்ப்பிற்கு ஒரு காரணமாகும். தெற்காசியா மற்றும் ஆபிரிக்கா போன்ற வளரும் நாடுகளில், மக்கள் கல், மண் என்று பாராமல், இயற்கையோடு இணைந்து உழைத்து வாழ்வதால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் சில கோடி மக்கள் வரை ஃப்ளு பரவுகிறது. அதில் 60 ஆயிரம் பேர் வரை இறந்து போகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு சில ஆயிரம் பேருக்கு மட்டுமே பரவுகிறது. அதில் சில நூறு பேர் இறந்து போகிறார்கள். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு இதற்கு முக்கிய காரணம்
கொரோனா உடலில் பரவியுள்ளதா இல்லையா என்பதை விட, அந்த உடலில் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறதா அல்லது பாதிப்பு இருக்கிறதா என்பதே முக்கியம். இந்தியா உட்பட்ட ஆசிய நாடுகளில் பரிசோதனை செய்து பார்த்தால், அமெரிக்காவை விட அதிகம் மக்களுக்கு கூட பரவியிருக்கலாம். ஆனால் அது தேவையில்லாத ஒன்று. கொரோனா நுண்கிருமி ஒரு ஒடுங்கு காரணியாக உடலில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரிவதில்லை. அறிகுறி இல்லாத வரை எந்த பாதிப்பும் இல்லை. (இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என்கிறது ஐ.சி.எம்.ஆர்).
பாதிப்பு இல்லை எனில் கொரோனாவைப் பற்றிய அச்சமும் தேவையில்லை (அறிகுறி தெரியாத ஆரோக்கியமானவர்கள், அதை, வயதானவர்களுக்கு பரப்பாத வரை).
இந்தியா போன்ற ஆசிய நாடுகள் சமூக விலகலை சிறப்பாகவே கடைப்பிடித்து வருகின்றன. நோய் வேகத்தை குறைக்க இது உதவியது. இருந்தாலும், இந்த தொற்று எப்பொழுது ஆரம்பித்தது என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியாது. சீன அரசாங்கத்தின் கடுமையான சட்டதிட்டங்களை மீறி இந்த உண்மை வெளியே வருவது கடினமே. இருந்தாலும், சமூக விலகல் நடைமுறைக்கு சில மாதங்களுக்கு முன்னரே இந்நோய் மற்ற நாடுகளில் பரவ ஆரமிப்பித்திருக்க வேண்டும். அது சமூக தொடராகவும் இந்நேரம் மாறியிருக்க வேண்டும்.
எனவே கொரோனா பாதிப்பு ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலை மற்றும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே உள்ளது. சமூக விலகல் நோய் பரவலை சற்று தள்ளி போடுமே தவிர, அது முக்கிய காரணியாக இருக்க முடியாது. அது நீண்ட நாள் தீர்வும் ஆகாது. மேலும் கொரோனாவிற்கு அஞ்சி வீட்டிலேயே தொடர்ந்து முடங்கினால், பொருளாதாரம் மட்டுமல்ல நோய் எதிர்ப்பு சக்தியும் சேர்ந்தே முடங்கி விடும்.
கொரோனா வெளவால் போன்ற விலங்குகளில் இருந்து வந்ததா, அல்லது செயற்கையாக ஆய்வகத்தில் இருந்து வந்ததா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இது பல காலமாக மனிதர்களிடம் இருந்திருக்கலாம் ஆனால் நோய் எதிர்ப்பு அதிகம் இருந்ததினால் அப்போது யாருக்கும் தெரியவில்லை, பரவவும் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. மாறி விட்ட வாழ்க்கைச் சூழலால் நோய் எதிர்ப்பு குன்றிய நிலையில் இதன் வீரியம் தலை எடுத்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி உடலில் அதிகரிப்பது என்பதை அறிந்து, அனைவரும் அதற்கான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு துறை வல்லுநர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்து ஆலோசித்து இதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும். உலக நாடுகளின்அரசாங்கங்கள் இதை ஒருங்கிணைத்து மக்களிடம் நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா மட்டுமல்ல இதுபோல் இன்னும் எதிர்காலத்தில் வரக் கூடிய நோய்களுக்கும் இது நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
வி.நடராஜன் - நன்றி தினகரன் 


No comments: