கொரோணா நீ போய்விடு - செனா பாஸ்கரன்

.


 கண்விழித்துப் பார்த்தபோது 
யன்னலை தாண்டிய ஒளிக்கதிர்கள் 
என்னை தழுவிக் கொண்டது 
தூர எறிந்த பார்வையில்  
நீலவானம் அழகு காட்டியது 
எத்தனை காலங்களுக்குப் பின் 
நிர்மலமான வானம் 
ஓ கொரோணா நீ உயிர் கொல்லி  என்கிறார்கள் 
என்னையும் ஒரு நாள் 
நீ பறித்துச்  செல்லக்கூடும் 
இருந்தாலும் உன்னை மதிக்கிறேன் 
மாசு மாசு என்று அங்கலாய்த்தவர்கள் 
ஓசோனில் ஓட்டை என்றவர்கள் 
குளோபல் வோமிங் என்றவர்கள் 
அத்தனை பேரையும் 
வாயடைக்க வைத்து விட்டாய் 
உன்னால் வந்த Lock Down 
பல காலங்களுக்குப் பின் 
பால்வீதியை (Milky Way)
மக்கள்  கண்ணால் பார்த்தார்கள் 
பரவசம் கொண்டார்கள் 
எந்திரமாய் ஓடும் நாங்கள் 
ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம் 
பெற்றோர்களும் பிள்ளைகளும் 
ஒன்றாக இருந்து பேசிச் சிரிக்கிறோம் 
சின்னவள் என்று பார்த்த என் மகள் 
ஈசான மூலை சனிபகவான் பற்றி 
அமேசன் காடுகள் பற்றி 
ஆபிரகாம் லிங்கன் பற்றி 
ஈழத்து அரசியலை கூட 
அகழ்ந்தெடுத்து பேசுகிறாள்  



பெடல் காஸ்ட்ரோவின் 
எனக்கு தெரியாத 
பக்கங்களை எல்லாம் 
தொட்டுச் செல்கிறாள்  
பூரிப்பாக இருக்கிறது 
இத்தனை ஆளங்களையும் 
ஏன் தெரியாமல் இருந்து விட்டோம் 
பொய்யான வாழ்க்கையின்
 புதிய அலைவுகள் 
சுற்றிச்சுற்றி ஓடியபின் 
நின்று நிமிர்ந்தபோது 
வாழ்க்கை தொலைந்திருந்தது 
கண்ணுக்குத் தெரியாத 
சின்னக்  கிருமி 
இத்தனையையும் மீட்டுத்  தந்திருக்கிறது 
கலாசாலையில் கற்க முடியாத 
பல பாடங்கள் 
கற்றுத் தரப்பட்டுள்ளது 
மனிதன் அத்துமீறி 
கைப்பற்றிய காடுகளில் 
மான்களும் மயில்களும் 
சுதந்திரமாய் அலைகிறது 
வழக்குப் போட முடியாத 
ஐந்தறிவு ஜீவனுக்கும் 
வாய்தா  இல்லாத 
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 
புகட்டிய பாடம் காணும் என்றாகிவிட்டது 
கொரோணா நீ போய் விடு 
மனிதர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள் 
இயற்கை தான் இறைவன் என்று 
இனி நீ போய்விடு

No comments: