இலங்கைச் செய்திகள்


பொதுத் தேர்தல் ஜூன் 20, சனிக்கிழமை; வர்த்தமானி வெளியீடு

பாகிஸ்தானில் சிக்கிய மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்

பொலிஸ் நிலையம் நுழைந்து பொலிஸாரை அச்சுறுத்தியவர் கைது

தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் பளை மக்கள்

திருகோணமலை மாவட்டத்தில் எவருக்கும் கொரோனா இல்லை


பொதுத் தேர்தல் ஜூன் 20, சனிக்கிழமை; வர்த்தமானி வெளியீடு
பொதுத் தேர்தல் ஜூன் 20, சனிக்கிழமை; ஆணைக்குழு தீர்மானம்!-EC Decided to Hold General Election on June 20-Mahinda Deshapriya
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி, சனிக்கிழமை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று (20) பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.
மிக நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்றும் (இல 2172/03) வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்த வேட்பு மனுத் தாக்கலை அடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மிகத் தீர்க்கமான முடிவொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் திகதி தொடர்பில் உச்சநீதிமன்றை நாடுமாறு ஜனாதிபதியை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது
இந்நிலையில், தேர்தல் தினம் தொடர்பில் முடிவொன்றை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருப்பதால் உச்ச நீதிமன்றை நாட வேண்டிய அவசியம் இல்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தேர்தலை காலவரையறையின்றி ஒத்திப்போடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினாலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மே 28ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் முன்வைக்கப்பட்ட யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், அதனை ஏற்க முடியாமை தொடர்பில் 7 காரணங்களை முன்வைத்து, ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரத்னஜீவன் ஹூல் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், இன்று (20) காலை இது தொடர்பில் தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்ட, மஹிந்த தேசப்பிரிய தேர்தல் போட்டி சமதளத்தில் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் இன்று (20) இடம்பெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
நன்றி தினகரன் பாகிஸ்தானில் சிக்கிய மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்


அடுத்த கட்டமாக இந்தியா, நேபாளம்
பாகிஸ்தானில் சிக்கியிருந்த  இலங்கை மாணவர்கள் 113 பேரை அழைத்து வருவதற்காக புறப்பட்ட விமானம், மாணவர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL. 1205 இலக்கம் கொண்ட விமானம் இன்று (21) காலை பாகிஸ்தான் கராச்சி நகருக்கு புறப்பட்டு, இன்று மாலை 6.05 மணியளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
மாணவர்களை அழைத்து வருவதற்காக புறப்பட்ட விமானத்தில், விமானி உட்பட 17 பேர் பயணித்துள்ளனர்.
அத்தோடு, பாகிஸ்தானில் பயிற்சிக்காக சென்றிருந்த படை வீரர்கள் குழுவொன்றும் மாணவர்களுடன் சேர்ந்து இலங்கையை வந்தடைந்துள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வருகை தந்த குழுவினர் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக, குறித்த விமானம் இந்தியா, நேபாளத்தில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


பொலிஸ் நிலையம் நுழைந்து பொலிஸாரை அச்சுறுத்தியவர் கைது

பொலிஸ் நிலையம் நுழைந்து பொலிஸாரை அச்சுறுத்தியவர் கைது-Suspect Arrested for Threatening IP of Wariyapola Police Station
வாரியபொல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் வாரியபொல பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாரியபொலவில் உள்ள பொத்துவெல பகுதியில் வசிக்கும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இரவு, பொலிஸார் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டி, அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நபர் ஒருவர், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து, குறித்த நபரை கைதுசெய்ய வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.
இது குறித்து உடனடியாக தனது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு குறித்த பொலிஸ்  பரிசோதகர், அறிவித்துள்ளார்.
இவர் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் குறித்த மதுபான வர்த்தகர் நேற்றையதினம் (19) பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவருடன் தேரர் ஒருவர் உள்ளிட்ட மற்றொரு நபர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்து குறித்த பொலிஸ் பரிசோதகரை அச்சுறுத்தி, அவரை தள்ளி விட்டு தாக்க முயன்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது, குறித்த பொலிஸ் பரிசோதகரின் தலை சுவரொன்றில் மோதியதாகவும் பின்னர் குறித்த சந்தேகநபர் மடக்கிப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, பொலிஸ் நிலையத்திற்கு வந்த தேரர் உள்ளிட்ட மூவரும் போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குடிபோதையில் இருந்தாரா என்பதை ஆராய, குருணாகல் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
தள்ளிவிடப்பட்ட பொலிஸ் பரிசோதகர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21) பொலிஸார் அறிக்கைகளை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த தேரர் மற்றும் குறித்த சட்டவிரோத மதுபான விற்பனையாளர் கைது செய்யப்படாமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, இது தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.     நன்றி தினகரன் 
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் பளை மக்கள்
வடக்கில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதும் கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட பளை பிரதேச மக்களை அங்கிருந்து வெளியே செல்ல அனுமதிக்காத நிலைமை காணப்படுவதாக அப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட  நீதி  மன்ற  வழக்கிற்கு  அரச திணைக்கள தேவைகளுக்கு  அத்தியாவசிய தேவைக்கு அல்லாத பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள என பளையிலிருந்து கிளிநொச்சி நகருக்கு செல்ல முடியாதுள்ளது எனவும் அவ்வாறு வருகின்ற பொதுமக்களை ஆனையிறவில் படையினர்  செல்லவிடாது திருப்பி அனுப்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பளை பிரதேசம் சிவில் நிர்வாக ரீதியாக கிளிநொச்சி மாவட்டத்துக்குள்ளும்  இராணுவத்தின் நிர்வாக எல்லை ரீதியாக யாழ்ப்பாணத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக தாம் கிளிநொச்சிக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் தாம் யாழ்ப்பாணத்திற்கும் செல்ல முடியாது எழுதுமட்டுவாழ் பகுதியிலும்  மறுபுறம் மருதங்கேணியிலும் தடை போடப்பட்டுள்ளதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும் தம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளதாக அம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி குறூப் நிருபர் - நன்றி தினகரன் 


திருகோணமலை மாவட்டத்தில் எவருக்கும் கொரோனா இல்லைதிருகோணமலை மாவட்டத்தில் எவருக்கும் கொரோனா இல்லை-No COVID19 Patient Yet From Trincomalee District
நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் அநுராத ஐயதிலக தெரிவிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் இது வரை எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென திருகோணமலை பொது வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் அநுராத ஜயதிலக தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முகநூல் ஊடாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையில்  இது தொடர்பில் இன்று (24)  கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொரோனா என  சந்தேகத்தின் பேரில்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு நோயாளர்களின்  மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது எவருக்கும் கொரோனா தொற்று இருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன்  70 வயதுடைய பெண்ணொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த போது அவருடைய மாதிரிகள் மட்டக்களப்பு மற்றும் அநுராதபுரம் போன்ற இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டிருந்ததாகவும்  இதனையடுத்து கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் அனுராத ஜயதிலக குறிப்பிட்டார்.
இதேவேளை தொடர்ச்சியாக சந்தேகமான நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும்ல பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும்  பொதுமக்கள் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்படுமாறும் சுகாதாரத் திணைக்களம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்) - நன்றி தினகரன் 

No comments: