கொரோனா சிகிச்சைக்காக மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு
சீன ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்?
கிம்மின் உடல்நல தகவல்; தென்கொரியா மறுப்பு
கிம் ஜாங் உன் நலம் பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து
அமெரிக்காவில் அதிகரித்த மரணங்களுக்கு காரணம் குளோரோகுயின் மாத்திரையா?
அதிக பாதிப்பின்றி கொரோனாவிலிருந்து தப்பிக்கும் ஆபிரிக்கா
அமெரிக்காவில் கொரோனா கோரத் தாண்டவம்
எங்கள் கப்பல்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்
கொரோனா சிகிச்சைக்காக மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு
Monday, April 20, 2020 - 3:47pm
கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்தது.
இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்கவேண்டும் என அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவை கேட்டுக்கொண்டன. இதனால் ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு இருந்து வந்த தடையை இந்திய அரசு நீக்கியது.
இதையடுத்து, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அந்த மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா பெருந்தொற்று நோய் என்பதால் அதை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராடவேண்டும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாடும் தன்னால் இயன்ற உதவிகளை மற்ற நாடுகளுக்கு செய்ய வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேபோல் கொரோனாவை ஒழிக்க மற்ற நாடுகளுக்கு உதவும் நாடுகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.
அமெரிக்கா, மொரீஷியஸ், சீச ல்ஸ், ஆப்கானிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், மாலை தீவு, இலங்கை, பிரான்ஸ், மியன்மர், சம்பியா, உகண்டா, எகிப்து, அர்மீனியா, கஜகஸ்தான், கென்யா, ஜோர்டான், ஜமைக்கா, டொமினிகன் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த மாத்திரைகளால் பலன்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
சீன ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்?
Monday, April 20, 2020 - 3:27pm
அமெரிக்கா விசாரணை நடத்துவதாக டிரம்ப் அறிவிப்பு
சீன ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா விசாரணை நடத்துவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது.இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடிதான் கிடக்கிறது. இந்த நிலையில், “கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல; சீனாவில் வுகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது”
என்று அமெரிக்காவின் ‘பொக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சி அலைவரிசை பிரத்யேக செய்தி ஒன்றை வெளியிட்டு, உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் அது தெரிவித்தது.
இதுபற்றிய செய்தியை பொக்ஸ் நியூஸ் வெளியிட்டபோது, “அவர்கள் (சீனர்கள்) ஒரு குறிப்பிட்ட வகையான வௌவாலைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அந்தப் பகுதியில் அந்த வௌவ்வால் இல்லை. ஈரமான அந்த பகுதியில் அந்த வௌவால் விற்பனை செய்யப்படவும் இல்லை. 40 மைல் தொலைவில் தான் அந்த வௌவால் உள்ளது.
அரசாங்கத்துக்கு தெரிந்த தகவல்களின் கால வரிசையை கருத்தில் கொண்டு, உளவுத் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். என்ன நடந்தது என்று ஒரு துல்லியமான காட்சியை உருவாக்குகிறார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி கூறியது.
வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களை சந்தித்தபோது இந்த விவகாரம் எதிரொலித்தது.
அப்போது அவரிடம் நிருபர்கள், “வுகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்று வெளியான தகவல் தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்துகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் விரிவாக பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதில் அர்த்தம் இருப்பதாக தெரிகிறது. நாங்கள் அதை விசாரிக்கிறோம். நிறைய பேர் அதை விசாரித்து வருகிறார்கள்.நிறைய வினோதமான விஷயங்கள் நடக்கின்றன.
நிறைய விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் நடந்தது என்ன? என்று கண்டுபிடிக்கப்போகிறோம்.
சீனாவில் அந்த வைரஸ் எங்கிருந்து வந்திருந்தாலும், எந்த வடிவத்தில் வந்திருந்தாலும், அதன் காரணமாக இப்போது 184 நாடுகள் பாதித்துள்ளன.
உகானில் உள்ள அந்த 4-ம் நிலை ஆய்வுக்கூடத்துக்கு அமெரிக்கா அளித்து வந்த மானியத்தை நிறுத்திக்கொள்ளும். ஒபாமா நிர்வாகம்தான் அந்த ஆய்வுக்கூடத்துக்கு 3.7 மில்லியன் டொலர் நிதி வழங்கியது.
அந்த நிதியை விரைவில் நிறுத்துவோம்.
இந்த ஆய்வுக்கூடத்துக்கான நிதியை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு சபை தலைவர்களையும் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதற்கு மத்தியில் அமெரிக்க எம்.பி. ஜேம்ஸ் ஸ்மித், “கொரோனா வைரஸ் விவகாரத்தை மூடி மறைப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்த வைரசை தடுக்காமல் சீன கம்யூனிஸ்ட் அரசு பரவ வைத்து விட்டது.இது சுதந்திர உலகின் ஆரோக்கியத்துக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதில் அவர்களை பொறுப்பேற்க வைக்க வேண்டும்” என்று கூறி இருப்பது பரபரப்பை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது. நன்றி தினகரன்
கிம்மின் உடல்நல தகவல்; தென்கொரியா மறுப்பு
Tuesday, April 21, 2020 - 8:55pm
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் தேக ஆரோக்கியம் குறித்து வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கொரிய தலைவருக்கு அண்மையில் இருதய சத்திரசிகிச்சை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரது தேக ஆரோக்கியம் மிக மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் எனவும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் எனவும் தகவல்கள் பரவின.
ஆனால், 36 வயதான கிம் ஜொங் உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவ்வாறான எந்தவித அறிகுறிகளும் வடகொரியாவில் நிலவவில்லை எனவும் தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல.
கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி கிம் ஜொங் உன்னின் தாத்தாவும் வடகொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்ததினக் கொண்டாட்டம் நடந்தது. இதில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் கலந்து கொள்ளவில்லை.
இதுவரையில் இப்பிறந்ததின கொண்டாட்டத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.
ஏப்ரல் 11, 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் பின் பொது இடங்களில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தோன்றவில்லை.
கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படியான தகவல்களையும் வடகொரிய அரசு ஊடகம் வெளியிடவில்லை.
வடகொரியாவில் இதழியல் பணியை மேற்கொள்வது மிகவும் கடினமான ஒன்று. ஏராளமான நெருக்கடிகள் அங்கு உள்ளன.
கொரோனாவை அடுத்து வட கொரியாவில் கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், வடகொரியாவிலிருந்து வெளியேறிய சிலர் நடத்தும் இணையதளத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது.
அவர் இருதய நோயால் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் அவதியுறுவதாகவும், அடிக்கடி பாக்து மலைக்கு சென்றபின் இந்த நோய் அதிகரித்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் என்.கே டெய்லி நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பல்வேறு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. அமெரிக்க ஊடகங்களில் இது தலைப்பு செய்தியானது.
தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் தேக ஆரோக்கியம் குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பி.பி.சி.) நன்றி தினகரன்
கிம் ஜாங் உன் நலம் பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து
Thursday, April 23, 2020 - 1:14pm
வட கொரியா அதிபர் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என கிம் ஜாங் உன் உடல் நலம் குறித்து வெளியான செய்தி தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
'வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக கிம்முக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு கடந்த 12ம் திகதி ஹியாங்சன் கவுண்டி என்ற இடத்தில் வைத்து நடந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதையடுத்து கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உடன் இதுவரை நல்ல நட்புறவு வைத்துள்ளேன். அவரது உடல் நலம் பற்றிய செய்திகள் எப்படி வெளிவந்தாலும் அவர் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும் "அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என நான் நம்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார். நன்றி தினகரன்
அமெரிக்காவில் அதிகரித்த மரணங்களுக்கு காரணம் குளோரோகுயின் மாத்திரையா?
Friday, April 24, 2020 - 6:00am
ஹைட்ரோக்ஸி குளோரோகுயின்... இந்த மருந்தின் பெயர் பலருக்கும் நினைவு இருக்கும். மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து இது. இந்த மருந்துதான் கொரோனா வைரஸ் பாதிப்பை ஓரளவு குணப்படுத்த உதவும் என நம்பினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்காவுக்கு இம்மருந்தை இந்தியா தராவிட்டால் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அமெரிக்கா மட்டுமன்றி மேலும் பல நாடுகளுக்கும் இம்மருந்தை இந்தியா அனுப்பி வைத்தது. சர்வதேச அளவில் திடீரென ஹைட் ரோக்ஸி குளோரோகுயின் மாத்திரையின் பெயர் பிரபலமானது. ஆனால் அந்த மருந்து தொடர்பாக பரபரப்பான தகவல் இப்போது வந்துள்ளது.
ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்தை மட்டுமே கொடுத்து சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள் அதிக அளவில் அமெரிக்காவில் இறந்துள்ளனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிக்கை குறித்து தனக்கு இதுவரை தெரியவில்லை என்றும், அதுபற்றி ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பெருமளவு ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா சேமித்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் பெரிய பகுதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் சிகிச்சையை ட்ரம்ப் அடிக்கடி கூறுவது மிகவும் பொறுப்பற்றது. தேவையற்ற வேதனையையும் துன்பத்தையும் ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ளார் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி தினகரன்
அதிக பாதிப்பின்றி கொரோனாவிலிருந்து தப்பிக்கும் ஆபிரிக்கா
Wednesday, April 22, 2020 - 3:17pm
ஆபிரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 1,164 பேர் பலியாகி உள்ளனர். 24,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரசுக்கு, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் நடுங்கி வரும் நிலையில், ஆபிரிக்காவில் அதன் பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. அமெரிக்காவில் மட்டும் தினமும் 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து வரும் நிலையில், ஆபிரிக்காவில் இதுவரை ஆயிரம் பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.ஆபிரிக்காவில் புதிதாக 1,205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 39 பேர் பலியாகினர். இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 24,171 ஆகவும், மொத்த பலி 1,164 ஆகவும் உயர்ந்தது. எகிப்தில் அதிகபட்சமாக 3,333 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவில் 3,300, மொராக்கோவில் 3,046, அல்ஜீரியாவில் 2,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நன்றி தினகரன்
அமெரிக்காவில் கொரோனா கோரத் தாண்டவம்
Sunday, April 26, 2020 - 6:56am
மொத்த உயிரிழப்பு 52,500க்கும் அதிகம்
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு வைரஸ் தாக்குதலுக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ஆயிரத்து 951 பேர் பலியாகியுள்ளனர் அமெரிக்காவில் நேற்று வரை 52,500 இற்கு மேற்பட்டோர் கொரோனாவுக்குப் பலியாகி விட்டனர். எல்லாமாக 9,25,500 இற்கு மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் புதிதாக 38 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் நேற்றுமுன்தினம் வரை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 432 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அந்நாடு நிலைமையைக் கையாளுவதில் பெரும் திண்டாட்ட நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. அச்சுறுத்தல் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதுஒருபுறமிருக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வியாழனன்று வோஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் “ஒரே நிமிடத்தில் கிருமி நாசினி கொரோனா வைரஸை வெளியேற்றுகிறது. எனவே கிருமிநாசினியை ஊசி வழியாக உடலில் செலுத்தும் முறை குறித்து ஆராயப்பட வேண்டும்” என யோசனை கூறினார்.
இது பெருத்த சர்ச்சையை அங்கு ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல கிருமி நாசினிகளான டெட்டோல், லைசோல் ஆகியவற்றை தயாரிக்கின்ற ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
“எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் கிருமி நாசினிகளை மனித உடலுக்குள் ஊசி வழியாகவோ பிற விதங்களிலோ செலுத்தக் கூடாது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களது எல்லா தயாரிப்புகளையும் போல கிருமிநாசினிகளையும், சுகாதார தயாரிப்புகளையும் அவற்றை என்ன நோக்கத்திற்காக, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வழிகாட்டி இருக்கிறோமோ, அப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இதேசமயம் அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருவது உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகில் நேற்று வரையான 24 மணி நேரத்தில் 1,03,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
எங்கள் கப்பல்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்
Saturday, April 25, 2020 - 11:44am
அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்க படைகள் எங்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நாள்முதல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
உலகமே தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை.
அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்க கடற்படையினர் ஈரானை ஒட்டிய பாரசீக வளைகுடா கடற்பகுதியில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை கடந்த 15-ம் திகதி ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர்.
ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க நாட்டின் கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கி ஏந்திய அனைத்து ஈரானிய படகுகளையும் சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், தங்கள் நாட்டின் கப்பல்கள், ஆயுதம் தாங்கிய படகுகள் மீது அமெரிக்க கடற்படையினர் தாக்குதல் நடத்தினால் அதற்கு விரைவாகவும், ஆக்ரோஷமாகாவும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதி ஜெனரல் ஹாசீன் சலமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஈரான் நாட்டுக்கு சொந்தமான கப்பல்களையும், போர் படகுகளையும் அச்சுறுத்தும் வகையில் செயல்படும் அமெரிக்க கப்பல்களையும் தாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சலமி தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்குவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் இராணுவத்தின் ஒரு அங்கமாக செயல்படும் புரட்சிகர பாதுகாப்பு படையினர் அந்நாட்டின் இஸ்லாமிய நடைமுறைகளை பாதுகாக்கவும், வெளிநாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துதல், ஈரானின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு இராணுவத்தினர் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment