என்றைக்கும் நிலைக்குந் தமிழ் (கவிதை) வித்யாசாகர்!சொல்லில் நயம் பொருளி லெழில்
கண்ணும் காதும் போல; காணவும் கேட்கவும்
இனிப்பு மொழி, கண்டவர் கேட்டவர் போற்றும்
தனித்த மொழி; தமிழ்!

வரலாற்றுக் கொடை வள்ளுவப் பறை
தெல்லுதெளிந்த கிள்ளை நடை
சொல்லும் பாட்டும் சிறக்கும் மொழி
சந்தத் தமிழ்; எங்கள் சுந்தர மொழி; தமிழ்!


சங்கம் பல கண்ட மொழி
சண்டைக்கும் சென்னைக்கும் கூட
அறத்தைப் பயின்ற தமிழ், ஆதிகாலந் தொட்டே
காப்பியங்களால் காதலுற்ற மொழி; தமிழ்!

படிக்கும் மனிதர்க்கு வளத்தைத் தரும்
படிக்கா மனிதர்க்கும் அறிவைப் பெருக்கும்
ஆயிரம் படைகளைப்போல பாயிரமுண்டு
வாழ்வி லுயர வள்ளுவமும் கொண்ட மொழி; தமிழ்!

சுந்தரப்பாட்டன் பாரதி வந்தான், செந்தமிழ் வேந்தன்
பாரதிதாசன் பாடினான், பைந்தமிழ்க் கிழவிகள் அவ்வையும்
ஆண்டாளும் போற்றினர், அறுபத்திநான்கு நாயன்மார்களும்
ஆண்டனர் துதித்தனர்; உள்ளத்தால் எவரும் வணங்கும் மொழி; தமிழ்!

சல்லிக்கட்டு கட்டிய மாட்டிற்கு மதிப்பு
சோறுபோட்ட நிலத்திற்கு விழா, ஏருழுத ஏழைக்குக்
கொண்டாட்டம், வருடம் ஆனால் பழமைக்குத் தீயிட்டு
புதுமைக்கு பொங்கலிட்ட புகழ்மொழி; தமிழ்!

இடதும் வலதும் லெப்ட் ரைட் ஆனாலும்
காலையும் மாலையும் பி.எம் ஏ.எம் ஆனாலும்
ஞாயிறும் திங்களும் சண்டே மண்டே என்றாலும்
வெங்காயமும் வாழைக்காயும் வால்மார்ட் டேபிரஸில் விற்றாலும்

இன்றும் ஹைக்கூவாக, அழகு குறளாக
புதுப் பாவாக, பழகுத் தமிழாக, பார் போற்றும்
மரபு வடிவாக, ஏர் ஊன்றிய ஈர மண்ணைப்போல
யார் மனத்திலும் மணத்தே யிருப்பது தமிழ்!

அகழ்வாராய்ச்சி எதற்கு? அடிமனது அறியும்
டி.என்.ஏ எதற்கு? வள்ளுவம் படி வயது புரியும்
மருத்துவமும் விஞ்ஞானமுமென்ன; தொல்காப்பியமும்
திருமந்திரமும் படி; தமிழ் தானே உயரும்,

எம்மொழி செம்மொழி யது
என்றைக்கும் நிலைக்கும்!!
---------------------------------------
வித்யாசாகர்

No comments: