அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க செல்பேசி அழைப்பு :


நேற்று காலை சுமார் 11 மணி இருக்கும். செல்லிடபேசி மணி ஒலிக்கவே அதனை எடுத்து "வணக்கம்... ஜெயராஜன்" என்றேன். மறு முனையில் பேசியவர் கடகடவென ஏதோ பாடம் ஒப்புவிப்பவர் போல், "சார் வணக்கம்... நாங்க '...... .....  ஜுவெல்லர்ஸ்' இருந்து பேசுறோங்க.... இப்போ டெய்லி தங்கத்தோட விலை ஏறிக்கிட்டே வருது. உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்... அதே நேரம் அட்சய திருதியையும் வருது. ஆனா கொரோனா வைரஸ் காரணமா எங்களால கடை திறக்க முடியலே. அதனாலே நீங்க அட்சய திருதியை அன்னிக்கு நகை ஏதும் வாங்கற மாதிரி அபிப்பிராயம் இருந்தா, இன்னிக்கு ரேட்லே கோல்ட் புக் பண்ணிக்கலாம்... அந்த ரேட் பேசிஸ்லே அட்சய திருதியை அன்னிக்கு நகை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்... ஊரடங்கு முடிஞ்சு கடை திறந்த பின்னாடி நேரிலே வந்து நகை டிசைன் பாத்து வாங்கிக்கலாம். அப்போ பணம் கொடுத்தா போதும்" என்று நிறுத்தி சற்று மூச்சு விட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். .


அவரது பேச்சின் வேகத்திலிருந்து,  "இந்த அட்சய திருதியையை  எப்படியும் மக்கள் விட மாட்டார்கள் ..... ஏதேனும் ஒரு நகையை, குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்க காசையாவது வாங்க கட்டாயம் முயற்சி செய்வார்கள்.... அதை எப்படியாவது ஒரு வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.." என்ற தொழில் வெறி தெரிந்தது.



இந்த காலகட்டத்தில் வழக்கமாக எல்லோரும் என்ன பதில் கூறியிருக்கக் கூடுமோ அதையே நானும், "சார்... நீங்க சொல்றதெல்லாம் புரியுது.... ஆனா இப்போ ஒன்னும் பெருசா தொழில் இல்லே... வருமானம் சைபர்... மேற்கொண்டு எப்படி வாழறதெங்கறதே  இனிமேதான் திட்டம் போடணும் போல இருக்கு... இந்த நேரத்திலே, அதுவும் தங்கத்தோட விலை அதிகமா இருக்குறப்போ நகை வாங்க எனக்கு ஒன்னும் ஐடியா இல்லே சார்" என்று சொன்னேன். அடுத்த முனையில் பேசியவர் தனது குரலின் சுருதியை சற்றே குறைத்து, "நகை வாங்கலேன்னா கூட பரவாயில்லே... ஒன் கிராம் கோல்டு  காய்ன் வாங்கலாமே சார்...  " என்று மற்றொரு தூண்டில் போட்டார். என்ன பேசி என்னவாகப் போகிறது? கையில் பணப்புழக்கம் இல்லை. மனமும் புழுக்கமாக உள்ளது. எனவே, "இப்போ வேண்டாம் தம்பி... பின்னாடி பாப்போம்..நன்றி" என்று கூறி செல்பேசியை அணைத்துவிட்டேன்.

அதிர்ஷ்டக்கல் மோதிரமும் நட்பும்:  
நான் 1985-90 களில் சட்டம் பயின்று கொண்டிருந்த போது, எனக்கு திரு நிஜாமுதீன் என்ற சக மாணவர் நட்பானார்.  நாகூரை சொந்த ஊராகக் கொண்ட அவரது குடும்பத்தினர் நவரத்தினக் கற்கள்  வியாபாரத்தை வழிவழியாக செய்து வந்து கொண்டிருந்தனர். எங்கள் நட்பு, நாளடைவில் நெருங்கிய நட்பானது. காரணம், சேலத்தில் அப்போது சட்டக் கல்லூரி மாணவர்கள் என்றாலே, வாடகைக்கு அறை அல்லது வீடு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. எனது நண்பருக்கும் அறை கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் இதே பிரச்சனை காரணமாக வீடு கிடைக்காத மற்றொரு வகுப்புத் தோழர் திரு தாண்டவன் என்பவருக்கு எனது வீட்டின் அறை ஒன்றை  வாடகைக்கு விட்டிருந்தேன். அந்த நெருக்கடியான நேரத்தில் நண்பர் திரு நிஜாமுதீன் அவர்களையும் அதே  அறையில் தங்க வைத்தேன். பெரிய அறை என்பதாலும், அனைவரும் ஒரே வகுப்பு என்பதாலும்  அந்த அறை  அவர்கள் இருவருக்கும் பிடித்துப் போனது. இப்படி படிப்பு முடிக்கும் 5 ஆண்டு காலம் வரை தொடர்ந்தது. 
ஒரு முறை நண்பர் திரு நிஜாமுதீன் அவர்கள் எனது பிறந்த தேதிக்கு ஏற்ப, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் கூடிய வெள்ளைவெளேர் என்ற அதிர்ஷ்டக்கல் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து, இதை ஒரு தங்க மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளுங்கள் என்றார்.  நானும் அப்படியே செய்து போட்டுக் கொண்டேன். 1987-இல் அவ்வாறு போட்டுக் கொண்டு, இன்று 33 ஆண்டுகள் ஆகிவிட்டன.  காலச்சக்கரம் சுழல, அவர் தனது படிப்பை முடித்து அரசியலில் ஈடுபட்டார். இளம் வயதிலேயே தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாகூர் சட்டமன்ற உறுப்பினராக ஆனார். அவ்வாறே திரு தாண்டவன் அவர்கள் நீதிபதி பதவிக்கு தேர்வானார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் சேலத்தில் சார்பு நீதிபதியாகவும் பணியாற்றினார்.


இந்த மலரும் நினைவுகளுடன்  அந்த மோதிரத்தை சுத்தம் செய்வதற்காக கழற்றினேன். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவிக் கொள்கிறோம். இந்த நிலையில் நாம் அணிந்து கொண்டிருக்கும் நகைகளுக்கும், கொரோனா உள்ளிட்ட பாக்ட்ரியா கிருமிகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா, நகைகளை சுத்தம் செய்வது எப்படி என்ற வினாக்கள் எல்லாம் எனது மனதில் எழுந்தன. இதற்கான விடைகளின் பெரும் பகுதியை எனது தாயார் எனக்கு வழங்கினார். சிலவற்றை நகைக்கடை அதிபர்கள் கூற தெரிந்து கொண்டேன்.

கொரோனா  வைரஸும் நகைகளை சுத்தம் செய்தலும் :

கை கழுவுதல், முகம் கழுவுதல், குளித்தல் ஆகிய இவை யாவும் நமது தினசரி வாழ்வியல் பழக்க வழக்கங்கள். இவ்வாறு நமது உடலின் தூய்மையை பேணும் நாம், நமது உடலை ஒட்டி அணிந்திருக்கும் நகைகளை கழுவ தனியாக முயற்சி ஏதும் எடுப்பதில்லை. நாம் தினமும் அணிந்து கொள்ளும் மோதிரம், வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், பல்வேறு கிருமிகளுக்கு மறைவிடமாக அமைந்துவிடுகின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் இன்று உலகமே மண்டியிட்டு அடிபணிந்து கிடக்கும் கொரோனா வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகள் ஒளிந்து கொள்ள இந்த அணிகலன்கள் ஓர் அடைக்கலமாக உள்ளன. அதாவது மோதிரம், கடிகாரம், பிரெஸ்லெட் ஆகியவற்றை அணிந்து கொண்டு தொற்று நீக்கி திரவத்தால் அல்லது சோப்பால் கை கழுவினால் அந்த அணிகலன்களுக்கு பின்புறம் அல்லது அடியில் உள்ள பகுதியில் அந்த திரவம் அல்லது சோப்பு நீர் படாமல் போய்விடும். பின் கை கழுவி என்ன பயன்? எனவே தங்கமோ, வெள்ளியோ அல்லது  வேறு ஏதேனும் உலோகத்தாலோ ஆன நகை எதுவாக இருந்தாலும், கைகழுவும், முகம் கழுவும், குளிக்கும் முன் கழற்றி வைத்து விடவும்.

அதே நேரம் சிலர் இவ்வாறு பத்திரமாக கழற்றி வைத்துவிட்டு, குளித்து முடித்த பிறகு மீண்டும் அணிந்து கொள்வார்கள். இதுவும் கூடாது.  உடலை சுத்தம் செய்து கொண்டு, நகைகளை சுத்தம் செய்யாமல் மீண்டும் அவற்றை அப்படியே அணிவது என்பது கிருமியை மீண்டும் உடலுக்குள் சேர்த்துக் கொள்வது போல. பாக்டீரியா கிருமிகள் தாங்கள் தொற்றி வாழ வசதியாக இருக்கும் இந்த அணிகலன்கள், முதலில் தோல் ஒவ்வாமையைத் தோற்றுவித்து, பின் கொப்புளங்களை உருவாக்கி, நீண்டகால பிணியைத் தந்துவிடும்.  தற்பொழுது நாம் கொரோனாவின் பிடியில் இருப்பதால் இந்த விடயத்தில் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன்  இருக்க வேண்டியுள்ளது.
எனவே அந்த வகையில் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க இங்கு நான் சில முக்கியக் குறிப்புகளை உங்களிடையே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.


(1) கைகளை கழுவிக் கொள்ளும் பொழுதும் சரி அல்லது குளிக்கும் போதும் சரி நாம் அணிந்து கொண்டிருக்கும் அணிகலன்களையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக நவ இரத்தினக் கல் பதித்த அல்லது அத்தகு கற்களில் ஏதேனும் ஒன்று மட்டும் பிரதானமாக பதித்த மோதிரம் அணிந்து கொண்டிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், அந்தக்கல் விரலுடன் நேரடியாக தொட்டுக் கொண்டு அல்லது உரசிக் கொண்டிருந்தால் பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மோதிரத்தின் அடிப்பகுதியை மூடாமல் விட்டிருப்பார்கள். அந்த திறப்பு பகுதி அழுக்கு சேர்வதற்கான ஓர் இடமாகும்.  எனவே அப்படிப்பட்ட மோதிரங்களை அவ்வப்பொழுது கழற்றி அடிப்பகுதியில் சேர்ந்திருக்கும் அழுக்கை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

(2) வீட்டில் இருக்கும் பொழுது கல் வைத்த வளையல், தோடு, சங்கிலி ஆகியவற்றை அணிவதை கூடுமானவரை தவிர்த்தல் வேண்டும். சிக்கலான வடிவமைப்பு கொண்ட நயப்போக்கு  நகைகளை (ஃபேஷன் ஜுவெல்)  வாங்கினால் அவற்றை விழா, நல்ல நாட்களில் சிறிது நேரம் அணிந்து கொண்டு பின் அப்படியே பத்திரமாக எடுத்து வைத்து விடுவது நல்லது. இம்மாதிரியான நகைகளில் எளிதாக அழுக்கு படியும். சுத்தம் செய்வதும் கடினம்.

(3) முன்கையணி எனப்படும் பிரேஸ்லெட் அணிந்திருப்பவர்கள் கட்டாயம் அதனை கழற்றி வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைத்து, பிறகு ஒரு பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து பின் அணிய வேண்டும். இந்த நடைமுறை தங்க பட்டி கொண்ட கைக்கடிகாரத்திற்கும் பொருந்தும். பிரேஸ்லெட், கடிகாரப்பட்டியை கழற்றி பின்புறம் பார்த்தால் எவ்வளவு அழுக்கு ஒட்டியுள்ளது என்பது கண்கூடாக தெரியும்.

அணியும் நகைகளையும் தொற்றி நீக்கி அணிய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை வலியுறுத்துகிறது. இதில் மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் உங்களுக்கு பழக்கமான நகை விற்பனையாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அட்சய திருதியைக்கு என்ன செய்யப்போகின்றார்கள் ?

ஒருபுறம் கொரோனா. மற்றொரு புறம் வேகமாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை. இவற்றுக்கிடையில் அட்சய திருதியையும் வருகின்றது. ஊரடங்கும் செயல்திறத்தில் உள்ளது. எனவே நகைக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. விந்தையான இந்த நெருக்கடியில் அட்சய திருதியை மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் ?



No comments: