பெண்களின் காதல் ரகசியம் (கவிதை) வித்யாசாகர்!!

னம் வலிக்குமென்றெல்லாம் அவளுக்கு 
கவலையில்லை, 
பிரிவை பொழுதின் மாறுதலாக எடுத்துக் 
கொள்பவள் அவள், 
சட்டை மாற்றும் போது 
காதலும் மாறிப்போகுமா தெரியவில்லை 
அவளொரு காதல் தெரியாதவள்
என்னை ஏதோ பெரிதென்று எண்ணி 
நேசித்தவள் அருகில் வந்ததும் 
லேசாகிவிட்டேன் நான்; காதல் இப்படித்தான் 
தொடும்வரைதான் மின்சாரம் பாயும் 
தொட்டப்பின் கொன்றோ 
விட்டொவிடுகிறது
என்றெல்லாம் எழுதுவோரைக் கொஞ்சம் 
காது திருகி அழைக்கிறேன் வாருங்கள் 
காதல் சொல் அல்ல 
சொல்லுக்குள் இருக்கும் ஈரம் 
அம்பு எய்தும் ஆட்டின் படமல்ல, 
அதற்குள் இருக்கும் மனம் 
மனமும் உயிரும் புரிபவருக்குத் தான்
காதல் புரிகிறது
எனக்கு மிக நன்றாக அவளைத் தெரியும்
அவளை காதலித்த நாட்கள் இதயத்துள் 
சிலுவை அறைந்ததைப் போல நின்று
அறம் பேசுபவை 
உயிருக்குள் ஆணியடித்தாலும் 
நினைவிற்குள் நீங்காது உயிர்தெழுபவை 
காதல் யாருக்கும் மறப்பதேயில்லை 
அவளை மறக்காத நான் 
காதலை நினைப்பவன் தானே ? 
அவளுக்கு நான் எனில் 
உயிரைவிட பெரிது 
என்னை மறக்கவே கூடாதென்று
என்னிடம் வேண்டுவாள் 
உயிர் நான் தான் என்பாள் 
பாவம் அவள், எங்கிருந்தாலென்ன 
என்னை நினைப்பாள் தானே? 
நானும் நினைப்பேனென்று 
யாரேனும் அவளிடம் சொல்வீர்களா ?
அவளுக்குத் தெரியும், 
என்னைப்போலவே, அவளுக்கும் என்னை தெரியும் 
என்றாலும்
நான் நினைப்பேன் என்று சொன்னால் 
சிரிப்பாள், 
மனதால் புன்னகைப்பாள் 
சிலுசிலுவென மழைக் கொட்டுவதுபோலிருக்கும் 
அவளின் புன்னகை, 
அவளின் புன்னகையைத் தேடித்தான் 
நாள்தோறும் உயிர்த்திருக்கிறேன் நான் 
காணுமிடமெல்லாம் தெரிவாள் அவள் 
இந்த காற்று போல
கடலைப்போல எங்குமவள் நிறைந்திருக்கிறாள் 
அவளைத் தேடியெல்லாம் நான் 
அலைவதில்லை 
அவள் நினைவு வரும்போது கொஞ்சம் 
காற்றிற்கு முத்தமிடுவேன் 
அவள் நினைவு வரும்போது கொஞ்சம் 
கடலுக்குச் சென்று அலைதொட்டு வருவேன் 
சன்னல் ஓரம் நின்று வானத்தை
அண்ணாந்து பார்ப்பேன்  
மேகத்தினுள்ளும்
பறவைகளோடும் 
மர இலைகளில் ஒளிந்திருக்கும் ஒரு 
குயிலைப்போல அவள் எங்கோ 
எனக்காக 
என்னை நினைத்து ஒளிந்திருப்பாள்,
இந்த உயிர் அவள் தான் 
இது நான் என்றாலும், இது அவள் தான்
அவளும் இப்படித்தான்
என்னைப்போலத் தான் அவளும்
என்னை நட்சத்திரங்களுள் 
ஒருவனென எண்ணித் தேடுவாள் 
உதிக்கும் சூரியனைக் கண்டதும் 
அதற்குள் என் முகம் தெரியுமென எட்டிப்பார்ப்பாள் 
கோபம் வந்தால் கூட 
கனவை வெறுத்து விழித்திருப்பாள் 
ஆனால் எனக்காகவே காத்திருப்பாள் 
பெண்கள் சாமி போல, அன்பு நெய்தவர்கள் 
அவர்களை காதலால் திட்டாதீர்கள் 
வெறும் கண்களால் தேடாதீர்கள் 
மனதிற்குள் பாருங்கள்,
அவளைப்போலவே உங்களையும் 
பத்திரமாக வைத்திருப்பார்கள் பெண்கள்; மனதிற்குள்!!
-----------------------------------------------------
வித்யாசாகர்

No comments: