இரும்புத் திரையிடப்பட்ட நாடு வடகொரியா!




ஜனாதிபதி கிம் கதியை அறிந்து கொள்வது சர்வதேசத்துக்கு இலகுவான காரியமல்ல!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் என்ன ஆனார் என்பது உலகெங்கும் இன்று பரபரப்பான செய்தியாகியிருக்கிறது. வடகொரிய ஜனாதிபதியின் தந்தை இறந்த செய்தியையே 2 நாட்கள் கழித்துத்தான் வடகொரிய அரசு அறிவித்திருந்தது. எனவே கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கும் செய்தி குறித்து அமெரிக்க உளவுத் துறை அறிய முயற்சித்தாலும் தகவல்கள் கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது.

கடந்த சில நாட்களாக, அதாவது ஏப்ரல் 15-ஆம் திகதி ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் பாட்டனின் பிறந்த நாள் விழாவில் கிம் கலந்து கொள்ளாதது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது. அவர் கடந்த 12-ஆம் திகதி இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாக சியோல் இணையதளம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

எனினும் இதுகுறித்து வடகொரிய தரப்பிலிருந்து சிறு தகவல் கூட கசியவில்லை. இன்று சர்வதேச ஊடகங்களில் கிம்மின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றுள்ளன. ஆனால் வடகொரிய நாட்டு ஊடகங்களில் விளையாட்டுப் பொருட்கள், மல்பெரி இலைகளைப் பறிப்பது, பொருளாதாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட கிம் தற்போது ஒரு விடுதியில் ஓய்வில் இருந்து வருவதாக வேறு நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. கிம்மின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த கருத்துகளை அறிய அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.

ஆனாலும் நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு இதே போல் பொது வெளியில் வருவதை கிம் நிறுத்திக் கொண்டார். அப்போதும் இதே போல் அவருக்கு கணுக்காலில் ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட போது மூளைச் சாவு ஏற்பட்டு விட்டதாக வதந்திகள் கிளம்பின. அது போல் தற்போது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதான வதந்திகளை அவர்களது எதிரி நாடுகளில் ஒன்று கிளப்ப வாய்ப்பிருக்கிறது.
என்னதான் கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்க உளவுத் துறை தெரிந்து கொள்ள நினைத்தாலும் வடகொரியாவிடம் இருந்து ஒரு தகவல் கூடக் கசியாது என்றே சொல்லப்படுகிறது. இத்தனை பெரிய உளவுத் துறையை கொண்டுள்ள அமெரிக்காவுக்கு கிம்மின் தந்தை 2011-ஆம் ஆண்டு இறந்ததே தெரியாது. அவர்களாகவே அவர் இறந்து 2 நாட்கள் கழித்துத்தான் அறிவித்தார்கள்.
எனவே கிம்மின் உடல்நிலை எப்படி இருக்கிறது, அவர் எங்கு ஓய்வெடுக்கிறார், சபதமிட்டபடி எப்போது அணு ஆயுத சோதனை செய்யவுள்ளார் என்பது குறித்தெல்லாம் வடகொரிய அரசாங்கமே கூறினால் ஒழிய அங்கிருந்து தகவல் கசியவதற்கு ஒன்றுமில்லை என்றே கருதப்படுகிறது. அவர் என்ன ஆனார் என்பது குறித்து ஊகங்கள் நிலவுகின்றதே தவிர உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவுமே இதுவரை தெரியவில்லை.
அதற்குள் அவரது தங்கை ஆட்சியைப் பிடிக்கத் தயாராகி விட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் பேச ஆரம்பித்து விட்டன.
இதுஒருபுறமிருக்க அவரது மனைவி குறித்து தற்போது உலக ஊடகங்கள் கிண்டிக் கிளற ஆரம்பித்து விட்டன.
இவரது தங்கை குறித்தே இப்போதுதான் வெளி உலகுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதிலும் கூட பெரிய தெளிவான தகவல்கள் இல்லை. இந்த நிலையில் மனைவி குறித்து பெரிய அளவில் செய்திகளே இல்லை. அதுதான் உண்மை.
கிம்மின் தங்கை பெயர் கிம் யோ ஜாங். மனைவி பெயர் ரி சோல் ஜூ. அண்ணனும் தங்கையும் வெளிநாட்டில் அதாவது சுவிட்சர்லாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்கும் அப்படி ஒரு பாசப் பிணைப்பு.
தந்தை கிம் ஜாங் இல் மரணமடைந்த சமயத்தில்தான் மகள் யோவின் வெளி உலக வருகை ஆரம்பித்தது என்கிறார்கள். அப்பாவின் உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தது மகள் யோதான். கிம் கூட ஒரு ஓரமாகத்தான் இருந்தார். ஆனால் யோ தான் எல்லாவற்றையும் செய்தார். கூடவே அண்ணனுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறியடியும் இருந்தார். அப்பா போன பின்னர் கிம் வசம் ஆட்சி வந்தது. அப்போது அண்ணனுக்கு உறுதுணையாக முழுதாக மாறி விட்டார் யோ. மனைவியை விட யோவிடம்தான் அதிகமாக ஆலோசனை கேட்பார் கிம். காரணம் தங்கை மீது அப்படி ஒரு நம்பிக்கை. அதேபோல யோவும் அண்ணனுக்கு ஆலோசனைகளைக் கூறி அவருக்கு ஆட்சியை முழுமையாக எளிதாக்கியுள்ளார்.
இந்த அன்பான உறவை தள்ளி இருந்தபடியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பவர்தான் ரி சோல் ஜூ. இவர் மிகப் பெரிய அறிவுஜீவி குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது அப்பா ஒரு பேராசிரியர். அம்மா ஒரு டொக்டர். மிகவும் வசதியான குடும்பம். அழகானவர். அருமையாக புன்னகைப்பார். இவரது வசீகரமே இவரது சிரிப்புத்தான். அந்த சிரிப்பில் மயங்கித்தான் கிம் இவரை காதலித்து திருமணம் செய்தார்.
தன்னை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர் ரி. கணவருக்குத் தேவையானதை செய்து கொடுப்பவர். தனது 3 குழந்தைகளையும் சீராக வளர்க்கிறார். கணவரின் வேலைகளில் தலையிடுவதும் இல்லை. குடும்பத்தோடு இருப்பதே அவருக்குப் பிடித்தமானது. அதை கிம்மும் தடுப்பதில்லை.
2011ம் ஆண்டுதான் ரி குறித்து தகவல்களே வெளியுலகுக்கு ஓரளவு தெரிய வந்தன. அதாவது அவரது மாமனார் கிம் ஜாங் இல் மரணமடைந்த சமயத்தில்தான் ரி யின் முகமே வெளியுலகுக்குத் தெரிய வந்தது. நிறைய பேருக்கு அப்போதுதான்கிம் ஜாங் உன்னுக்குத் திருமணமான செய்தியே தெரியவந்தது. அப்படி ஒரு இரகசியமான நாடுதான் வட கொரியா. இவர்களுக்கு 2009ல் கல்யாணம் நடந்துள்ளது. சிலர் 2010 என்று சொல்கிறார்கள். கிம் இதுவரை அது பற்றிப் பேசியதே இல்லை.
வட கொரியா ஆணாதிக்கம் பிடித்த நாடு. அங்கு வீட்டிலும் சரி பொது வெளியிலும் சரி பெண்களுக்கு சம உரிமை கிடையாது. ஆண்களுக்கு அடிமை போலவே அங்கு பெண்கள் நடத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு அதிகாரமும் கிடையாது. ஆண்கள் சொல்வதை மட்டுமே பெண்கள் செய்ய வேண்டும். அப்படி ஒரு நாடு. இதன் காரணமாகவே ரி குறித்தோ, யோ குறித்தோ அங்கு இதுவரை எந்த பெரிய தகவலும் வெளியுலகுக்குக் கசிந்ததில்லை.
விளையாட்டுப் போட்டி ஒன்றில் ரியைப் பார்த்து மெய் மறந்து போன கிம் அவரை காதலிக்க ஆரம்பித்தார். ரியும் தனது சம்மதத்தைச் சொல்ல அவர்கள் கணவன் மனைவியாகியுள்ளனர். இந்தத் திருமணத்தை தனது தந்தை இல்லின் சம்மதத்துடன்தான் நடத்தியுள்ளார் கிம். தந்தை மீது அவ்வளவு மரியாதை. மிகவும் இளம் வயதிலேயே ரியை மணந்து கொண்டுள்ளார் கிம். ரி பன்முகத் திறமையானவர். நன்றாகப் பாடுவார். நடனம் ஆடுவார். அதேபோல வீட்டு வேலைகளிலும் திறமையானவர். குடும்பத்தை நிர்வகிப்பதிலும் திறமைசாலி. சீனாவில் இசை படித்துள்ளார். இவர் வட கொரியாவில் உள்ள உன்ஹாசு ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவிலும் பாடி வந்துள்ளார். பின்னர் இந்தக் குழுவைச் சேர்ந்த அனைவரையும் கிம் சுட்டுக் கொன்று விட்டதாக செய்திகள் வெளியாகின. என்ன காரணம் என்று தெரியவில்லை.
2018ல் தனது மனைவியுடன் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார் கிம். அப்போது சீன ஊடகங்கள் கிம்மை விட்டு விட்டு ரியைப் பற்றியே நிறைய எழுதித் தள்ளின. அவரது புகைப்படங்கள் வைரலாகின. இப்படி ஒரு அழகு தேவதையா கிம்முக்கு என்று அத்தனை பேரும் அதிசயித்தனர்.
தற்போது கிம்மின் நிலை என்ன என்று தெரியவில்லை. ரி எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யோ என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் அது பற்றிய ஊர்ஜிதமான தகவல்களும் இல்லை. இந்த சமயத்தில் ரி அதிரடியாக உள்ளே புகுவாரா அல்லது கணவரின் தங்கைக்கு விட்டுக் கொடுத்து ஒதுங்கிக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுஒருபுறமிருக்க கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி, வடகொரிய ஊடகங்கள் நேற்று வாய் திறக்கவே இல்லை என்பது, அவரது உடல் நிலை பற்றிய சந்தேகத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை எளிதாக கண்டறிய முடியாது. அது இரும்புத்திரை நாடு. எனவே அந்த நாட்டு ஊடகங்கள் இது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியிடுமா என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எதுவுமே நடக்காதது போல ஊடகங்களில் பிற செய்திகள்தான் இடம்பிடித்துள்ளன. வடகொரிய ஊடகங்கள் கிம் உடல்நிலை பற்றி மௌனம் காப்பது, அவரது உடல் நிலை தொடர்பாக சந்தேகத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
ஜாங் உன் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவரது தங்கை ஆட்சிப் பொறுப்பை ஏற்க தயாராக வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் அதிபர் உடல்நிலை மறுபக்கம் அரசியல் மாற்றம் என பல்வேறு விஷயங்களை உலகம் அசை போட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், வட கொரிய ஊடகங்கள், ஏன் மௌனமாக இருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கான விடை எப்போது கிடைக்குமோ தெரியவில்லை.   நன்றி தினகரன் 


No comments: