எனது மனசை அழுத்திய சுமை என்ன..? பள்ளிப்படிப்பு முடிந்தது. வேலை தேடவேண்டிய தேவை வந்துவிட்டது. ஆசிரியப்பணி வேலையும் அடுத்த தவணை தொடக்கம் உறுதி. அதிபர் அருளானந்தம் அந்த உறுதிமொழியையும் தந்துவிட்டார். இதற்கும் மேலும் எதனை எதிர்பார்க்கலாம்..?
இது நண்பன் சத்தியமூர்த்தியின் வாதம்.
நான் வேலை தேடும் படலத்தில் ஈடுபடுதற்கு முன்பே, வேலையொன்று எனது வீடு தேடி வந்தது என்னவோ உண்மைதான். ஆனால்…? தொடர்ந்தும் பன்னிரண்டு ஆண்டுகள் நான் படித்த கல்லூரி. துவக்க வகுப்பு முதல், லண்டன் இனரர் சயன்ஸ் வகுப்புவரை எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அங்கேதான் பணிபுரிகின்றனர்.
அரசாங்கப் பாடசாலைகள் போன்று, அரசியல் தலையீட்டாலும் ஆசிரியர் எண்ணப்படியும் இடமாற்றங்கள் நிகழாத கல்லூரி அது. பலர் அங்கே கற்பிக்கத் தொடங்கி, ஆயுட் காலம் முழுவதும் அங்கேயே பணிபுரிந்து ஓய்வுபெற்றதை நான் அறிவேன். ஆதலால், எனது சங்கடத்தை நண்பன் சத்தியமூர்த்திக்கு விளக்கினேன்.
“ எட சத்தியமூர்த்தி, இந்த மாசம் வரை என்னைப் படிப்பித்த ஆசிரியர்கள் முன்னே, அவர்களில் ஒருவனாக அடுத்த மாசம் முதல் பணிபுரிந்து சமமாகப் பழகுவது எப்படி..? அது என் மனசுக்கு சங்கடமாக இருக்கிறது “ என்றேன்.
“ அம்பி, கூழுக்கும் ஆசை ! மீசைக்கும் ஆசை ! இந்த நிலைதான் உன்னுடைய நிலை. கூழ் குடிக்கத்தான் வேண்டுமென்றால், மீசையை மறந்துவிடு. தானாகத் தேடி வந்த வேலையை விட்டுவிடாதே. அது விவேகமான செயல் அல்ல. இரண்டு வாரம் அங்கே சென்று வேலை செய்ய, நீயும் அவர்களுடன் ஒருவனாகிவிடுவாய். உன் மனச்சங்கடமும் தானாகவே மறையும். “ என்றான் நண்பன் சத்தியமூர்த்தி.
அவன் கூறியதில் உண்மை இருக்கிறது என்ற உணர்வு எனக்கு வந்தது. ஆயினும், மனசு ஏதோ ஒருவிதமான தயக்கத்தையும் இடையிடையே அனுபவித்தது. இந்த நிலையில், சத்தியமூர்த்தியின் மைத்துனர் ஆண்டி மாஸ்டரை நாம் இருவரும் சந்தித்தோம்.
அவரது பெயர் கதிரையாண்டி. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆரம்பப் பாடசாலைப்பிரிவின் அதிபர். நன்மதிப்பும் அரசியல் செல்வாக்கும் சமூகசேவை உணர்வும் உடையவர். எனது மனச்சுமையை ஆண்டி மாஸ்டர் முன்னிலையில் இறக்கிவைத்தான் சத்தியமூர்த்தி.
வீட்டு முற்றத்திலே சுகந்தமான மணம் பரப்பும் மல்லிகைக்கொடி பந்தலுக்கு கீழே ஓர் அகலமான வாங்கு. அந்த வாங்கிலே வெறும் மேலுடன் இருந்தவாறு தாடி இல்லாத தமது நாடியை தடவிக்கொண்டு, ஆண்டி மாஸ்டரும் கதையைக் கேட்டார்.
இடையிடையே தம்மைத் தேடிவருவோருக்கும் பதிலளிக்க அவர் தவறவில்லை.
சுந்தரம் என்று ஒருவர், ஆண்டிமாஸ்டரின் முன்னால் தோன்றினார்.
“ என்ன சுந்தரம்..? நேற்று ஏன் உன்ர மேன் பள்ளிக்கு வரேல்லை…?
“ கொப்பி வாங்கித்தராவிட்டால் பள்ளிக்குப்போகமாட்டேன் என்று அடம்பிடித்தான். என்னிடமும் காசு இருக்கேல்லையாக்கும் “ சுந்தரம் தனது தலையை சொறிந்தபடியே சொன்னார்.
“ சரி, நாளைக்கு மேனை பள்ளிக்கு அனுப்பிவிடு. என்னை வந்து காணச்சொல். நான் கொப்பி வாங்கிக்கொடுக்கிறேன் “ என்றார் ஆண்டி மாஸ்டர்.
இதிலிருந்து ஆண்டி மாஸ்டர் எத்தகைய இயல்புகொண்டவர் என்பதை உடனே புரிந்துகொண்டேன். அவரில் எனக்கு ஒருவித நம்பிக்கை துளிர்விட்டது.
“ எங்கே, உமது அதிபர் அருளானந்தம் தந்த சான்றிதழைத்தாரும் தம்பி “ எனக்கேட்டார்.
நான் அதனை அவரிடம் கொடுத்ததும் வாங்கி வாசித்தார்.
“ அது சரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்கிடைத்தால், அங்கு படிப்பிக்க விருப்பமா..? “ எனக்கேட்டார்.
ஏதோ… எனக்கு வேலையே கிடைத்துவிட்டது போன்ற உணர்வு வந்தது.
“ ஆம் சேர் “ என்றேன்.
“ கணித – விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் எமக்கு அடுத்த தவணை தேவை. ஒரு அப்ளிக்கேஷன் எழுதிக்கொண்டுபோய் அதிபர் ஐ. பி. யிடம் கொடும். நானும் பின்பு அவருடன் பேசுவேன். “ என்றார்.
என் மனசிலே ஒரு நம்பிக்கை முளைத்தது. அதிபர் அருளானந்தம் வழங்கிய ஆசிரிய நியமனத்தை ஏற்பதற்கு முன்பு, யூனியன் கல்லூரியில் நியமனம் பெற முடிந்தால்…!? இந்தக்கனவு எனக்கு.
மீண்டும் அதிபர் அருளானந்தத்திடம் சென்று எனது மனசைத் திறந்து கூறினேன்.
“ பன்னிரண்டு ஆண்டுகள் படித்த கல்லூரியில், உடனடியாகத் தொடர்ந்து ஆசிரியனாகப் பணிபுரியக் கூச்சமாக இருக்கிறது சேர். மாணவர் யாவரும் தெரிந்தவர்கள். ஆசிரியர்களும் அப்படியே… எனவே….” என்று இழுத்தேன்.
“ அப்படியானால், என்னசெய்வதாக எண்ணம்…? “
“ தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடமிருப்பதாக அறிகின்றேன். கணித – விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் அடுத்த தவணையிலிருந்து தேவையாம்.. “
“ நான் ஒரு கடிதம் அதிபர் துரைரத்தினத்துக்கு தருகின்றேன். அவரிடம் அதைக்கொடு. அது உண்மை எனின், உனக்கு அங்கு ஆசிரிய நியமனம் கிடைக்கும். “
இப்படிக்கூறிய அதிபர் அருளானந்தம், “ அங்கே நியமனம் கிடைக்காவிடின், நான் இங்கே நிச்சயமாகத்தருவேன் “ என்று உறுதிகூறி, தமது கடிதத்தையும் தந்தார்.
அந்தக்கடிதத்துடன் செல்லும் வேளையில், என் வாழ்வு பற்றிய சந்தேகம் எழுந்தது. அதை இவ்விடத்திலே எனினும் கூறினால்தான் மன அழுத்தம் சற்று நலிவுபெறும். ஏன் எனின், அரைநூற்றாண்டு காலமாக மனதில் அழுத்தும் சந்தேகம் அது.
கடந்த அரைநூற்றாண்டு காலத்தில், பிறந்த நாட்டிலே ஆசிரியனாகக் கடமையாற்றி, கல்வி வௌியீட்டுத் திணைக்களத்திற் கணிதப்பாட நூல் எழுத்தாளனாகப்பணிபுரிந்து, பின்பு பாட விதான எழுத்தாளனாக வேலை செய்து, சனத்தொகை கல்வித்திட்ட நிகழ்ச்சி அதிகாரியாகவும் கல்வி அமைச்சில் ஊழியஞ் செய்துள்ளேன்.
அது மட்டுமல்ல, கடல் கடந்து பாப்புவா நியூகினிக்குச்சென்று, அங்கு தொலைக்கல்வி கல்லூரியில் கணித பாட நெறி எழுத்தாளன், கணிதத் துறை தலைமை அதிகாரி, அறிவியல் பாட விதான அதிகாரி எனப்பல பதவிகளையும் வகித்துள்ளேன். எனினும்,
அன்று எழுந்த சந்தேகங்களை இன்று வரையில் நான் எவரிடமும் கூறவில்லை. எங்கும் எழுதவும் இல்லை.
சந்தேகம் இதுதான்:
சிறு விவசாயக்கிராமத்திலே, சாதாரண குடும்பம் ஒன்றிலே பிறந்தவன் நான். சைவ சமய நெறியை இறுகப்பற்றி வாழ்பவன் நான். இருந்தும், நாட்டிலேயே பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ மத – ஆங்கில மொழி மூல – கட்டணம் அறவிடும் உயர் கல்வி நிலையத்திலே, பன்னிரண்டு ஆண்டுகள் இலவசமாக பயிலும் வாய்ப்புக்கிடைத்ததே…! அது எப்படி…?
“ எல்லாம் தலை எழுத்து “ என்பார் எனது பெத்தாச்சி.
“ எல்லாம் எப்பவோ முடிந்த காரியம் “ என்பார் சிவஶ்ரீ யோக சுவாமி அவர்கள்.
“ ஒவ்வொரு ஆத்மாவும் தான் தான் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப உலகிற் பிறந்து… தனியாள் கர்மம், கூட்டுக்கர்மம் என்பவற்றுக்கு ஏற்ப அனுபவித்து…. “ என்று விளக்கம் கொடுப்பார் பஞ்சாட்சரம் அங்கிள்.
யாவரும் ஒரே கருத்தை, வெவ்வேறு வகையிலே கூறினர். விதி – அறிவியல் அறிவு பெற்ற எனக்கு, இக்கருத்தை ஏற்கத் தயக்கமாக இருந்தது. பின்பு அறிவியல் முன்னோடி சாமுவேல் பிஸ்க் கிறீன் எழுதிய ஒரு குறிப்பு எனது மனசில் அகல் விளக்கேற்றியது.
“ அன்று நள்ளிரவிலே துயிலின்றி என் அந்தரங்க ஆத்மாவின் உணர்வோடு இயைவு பூண்டதெனத் தோன்றிய அம்மங்கிய நிலவொளியில் வியாகுலத்துடன் நான் உலாவிக்கொண்டிருந்தேன். சந்திரன் கீழ்த்திசையிலே உதயமாகிக்கொண்டிருந்தான். அத்திசையை நோக்கி என் எதிர்காலம் என்னை அழைத்தது. என் விதி எவ்வித தடுமாற்றமும் இன்றித் தங்கக்கரம் சுட்டி என் திசையை அறிவுறுத்தி வழிகாட்டிக்கொண்டிருந்தது. “
அமெரிக்க மிஷன் ஊழியரான சாமுவேல் பிஸ்க் கிறீன் வைத்தியர் 1847 இலே தமது நாட்டை விட்டு யாழ்ப்பாணம் வருவதற்கு முன்னர், தனது மன நிலையைப் பதிவுசெய்யும் வகையில் எழுதிய குறிப்பின் ஒரு பகுதி இது.
இக்குறிப்பு எனக்கும் மன ஆறுதலைக் கொடுத்தது. என் விதிதான் நான் செல்லவேண்டிய திசையைச் சுட்டிக்காட்டுகிறதா..?
( தொடரும் )
No comments:
Post a Comment