நரி முகத்தில் முழித்தால் நாள் முழுக்க நல்ல சகுனம் என்று ஒரு சொலவாடை உண்டு. ஆனால் இந்தச் சொலவாடை ஏன் தோன்றியது என்பதற்கு விளக்கம் இல்லை.

நரிக்குறவர்கள்:
நரி என்றவுடன் நமக்கு நரிக்குறவர்களும் நினைவுக்கு வந்தால் அதில் வியப்பில்லை. நரிக்குறவர் (Narikuravar) எனப்படுவோர், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி பழங்குடி சமூகம் ஆகும். இவர்கள் பாரம்பரிய உண்டிகோலால் குருவி அடிப்பது, நரி பிடிப்பது மற்றும் மலைப்பகுதியில் வாழ்ந்தவர்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக மணிகள் தயாரித்தல் மற்றும் விற்பது போன்ற மாற்றுத் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு அற்றவர்கள். எனினும், சுகாதாரத்தில் கவனம் உடையவர்கள். காண்பதற்கு சுத்தமில்லாமல் இருந்தாலும், இவர்கள் வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்துகள், இவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைத் தருவர். ஆண்கள் துப்பாக்கிச் சுடுவதிலும், கவண்வில்லிலும் (உண்டிவில்) திறமை மிக்கவர். பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தோர் ஆவர்.
வங்காநரி ஜல்லிக்கட்டு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்தூர் வட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 'வங்காநரி ஜல்லிக்கட்டு' மிகப்பிரபலம்.
இந்தக்கிராம மக்கள் பொங்கலுக்கு அடுத்து வரும் காணும் பொங்கல் நாளில் ஊருக்கு மத்தியில் உள்ள கோயில்களில் வங்காநரியுடன் வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இதனால் கிராமத்தில் விவசாயம் செழிக்கும், மழைவளம் பெருகும், நோய்நொடி அகலும்,தீய சக்திகள் அண்டாது செல்வம் செழிக்கும் என்பது தொடரும் நம்பிக்கையாக உள்ளது.
இதற்காக முன்கூட்டியே வனப்பகுதிக்கு சென்று வலை விரிக்கும் விவசாயிகள், குறிப்பிட்ட நாளில் அதில் சிக்கிய வங்காநரியை கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் அதற்கு வண்ணப்பொடிகள் பூசி, அலங்கரித்து மாலை அணிவித்து கோயிலை சுற்றி வலம் வரச்செய்கின்றனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கிராமத்து வீதிகளில் ஊர்வலமாக வங்காநரி அழைத்துச் செல்லப்படுகிறது.
இப்படி தங்கள் முன்னோர்கள் காட்டிய வழக்கப்படி 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் வங்காநரி ஜல்லிக்கட்டு விழாவிற்கு கடந்த சில ஆண்டுகளாக கெடுபிடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விவசாயிகள் வனத்திற்குள் செல்வதற்கு வனத்துறை கடுமையான கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. மேலும் வங்காநரியை பிடிப்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
நரியினம் பருவ காலத்திற்குத் தகுந்தவாறு என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உட்கொண்டு வாழும். எனினும் அவற்றின் உணவில் பெரும்பகுதி எலிகள், முயல், பாம்பு, பல்லி, சிறு பறவைகள் ஆகியன இடம் பிடிக்கும். நரிகள் பழங்களையும் உண்ணும். குறிப்பாக இலந்தைப் பழங்கள், கலாக்காய், நாவற்பழம், சரக்கொன்றை பழங்கள் ஆகியன.
கிராமப்பகுதிகளின் அருகில் தென்படும் நரிகள் அங்குள்ள கோழிகளையும் அவ்வப்போது பிடித்துச் செல்லும். இதனால் அவை கிராம மக்களால் பிடித்துக் கொல்லப்படுவதுண்டு.
நரிகளின் பற்கள் மற்றும் நகங்களுக்காகவும் அவை பெரிதும் கொல்லப்படுகின்றன. இந்தியாவின் சில பாகங்களில் நரிக்கறியை உண்ணும் பழக்கமும் உண்டு. இதனால் நரிகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இப்போது சொல்லுங்கள்.... நரியின் முகத்தில் முழித்தால் நாள் முழுக்க நல்ல சகுனம் என்றால், அந்நரிக்கு?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பி.ஆர்.ஜெயராஜன், வழக்குரைஞர் மற்றும் சுற்றுலாவியல் கல்வியாளர் www.patnamrangachari@gmail.com
No comments:
Post a Comment