வரமா சாபமா மயக்கமா கலக்கமா ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .. அவுஸ்திரேலியா


      அலாரம் அடிக்க அதிகாலை அடித்துப் பிடித்து எழும்பிடுவோம்.குளித்தது பாதி குளிக்காதது பாதியாய் அரைகுறையாய் வாயில் போட்டு வெந்ததா வேகாததா என்று பாராமல் உப்போ ,உறைப்போ ,இனிப்போ  , புளிப்போ எந்தச்சுவையையும் உணராமல் எடுத்திடுவோம் ஓட்டம் எல்லோரும் வேலைக்கு. இது நாளாந்தம் வீட்டில் நடக்கும் திருவிழா !  .... அல்ல...... அல்ல கலக்கும் விழா ! 

   அம்மா அப்பா இருவரும் அடித்துப்பிடித்து வேலைக்குப் போவார்கள். பாட்டியோ தாத்தாவோ இருக்கும் பிள்ளைகளை எழுப்பி குளிக்க வைப்பார்கள். சிலவேளை அதுவும் இருக்காது. இருக்கும் சாப்பாட்டை கொடுப்பார்கள். அவர்களும் வேண்டா வெறுப்பாக  மென்று விழுங்குவார்கள். வாசலிலே வண்டியின் சத்தம் ! கேட்டவுடன் விழுந்தடித்து புத்தகங்கள் கொண்ட சுமையைச் சுமந்து வண்டியில்  போகமனமின்றி ஏறியும் விடுவார்கள். மத்தியானம் சாப்பாட்டை பசியோடு சாப்பிட எடுத்தால் அதில் ஒருவித வாடை வரும். பசி ஒருபக்கம் பிடுங்கும். அம்மாவின் நேற்றைய தயாரிப்போ அல்லது முன்னாள் தயாரிப்போ பசிபிடுங்கும் பிள்ளைகளைப் பார்த்தபடி இருக்கும்.குழாய் நீரைக்குடித்து பசியினுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் கணக்கு வாத்தியாரின் கைகளுக்குள் அகப்பட்டு நிற்பார்கள் அவர்கள்.
  எப்போது மணியடிக்கும் ? எப்போது வீடுவரலாம் ? என்னதைச் சாப்பிடலாம் என்னும் எண்ணமே எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கும். வீட்டுக்கு வந்தால் அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. சமையலும் இல்லை. தாத்தா கதிரையில் பத்திரிகை பார்த்தபடி இருப்பார். பாட்டி தொலைக்காட்சியில் நாடகத்தை தன்னைமறந்து ரசித்தபடி இருப்பார். பிள்ளைகளோ பாட்டியின் உப்பு சப்பற்ற சாப்பாட்டை மென்று விழுங்கும் நிலைக்கு ஆளாகிவிடுவர்.
   மாலை ஐந்து மணிக்கு அம்மா வருவார். இரவு ஏழுமணிக்கு அப்பா வருவார்.வேலைக் களைப்பில் யார் யாருக்கு தேனீர் தயாரிப்பது என்பதே சிக்கலாகி விடும் ! பரிதாபப்பட்டு பாட்டி சுவையோ சுவையில்லையோ தேனீர் என்னும் பெயரில் ஒரு பானத்தைக் குடிக்கக் கொடுப்பார். அப்பா மடக்கு மடக்கென்று குடித்துவிடுவார். அம்மா வாயில் விட்டவுடன் அருவருக்க பாட்டியை ஒரு பார்வை பார்ப்பார். பாட்டியோ மீண்டும் நாடகத்துக்குள் புகுந்து விடுவார்.

   சனி ஞாயிறு எப்ப வரும் என்றுதான் யாவரும் காத்திருப்போம்.ஏனென்றால் அப்பொழுதுதான் அனைவரும் வீட்டில் இருப்போம். மூன்று வேளையும் சுவையான சாப்பட்டை யாவரும் சாப்பிடும் சந்தர்ப்பமும் வாய்க்கும். அப்பாவுடன் சந்தோஷமாகப் பேசலாம். அம்மாவும் மனம்விட்டு சிரித்துப் பேசி எங்களுடன் இருப்பார். தாத்தா பாட்டியும் தங்களின் அன்றாட பணிகளை நிறுத்தி  சேர்ந்து மகிழ்வுறும் தருணமாயும் இருக்கும்.
    இதுகதைபோல இருக்கிறதா ? இது கதை அல்லா ! இதுதான் அநேகமான  வீடுகளில் நடைபெறும் நாளாந்த நிகழ்ச்சி நிரலாகும். ஓய்வறியா உழைப்பு  ! உருசி இல்லா உணவு ! வேலைபற்றி நினைத்தாலே ஒருவிதமான வெறுப்பு !ஓடியோடி உழைக்கா விட்டால் பல சிக்கல்கள் ! பணத்தைத் தேடிப் பறக்கும் நிலை. பெரும்பாலான குடும்பங்களில் இதுதான் நிலை ! சிரித்துக் கதைக்க போதிய நேரமில்லை. உறவுகளுடன் உரையாடவும் உகந்த தருணம் இல்லை. எப்படா நீண்ட விடுதலை வருமென்று மனதில் எண்ணியே பார்க்கும் நிலை.தேவைக்குக் கூட விடுதலை எடுக்க முடியாத வேலைகள் ! விடுப்பு எடுத்தால் வேட்டு வைக்கும் சில வேலைகள். 
   கொரனோ வந்தது. கொடுத்தது விடுதலை ! கொடுத்தது விடுதலை என்பதில் அர்த்தமும் நிறைந்தே இருக்கிறது. ஓடியோடித் திரிந்தவர்கள் ஒரே இடத்தில் ஓடாமல் உட்கார்ந்து இருங்கள் என்று கொரனோ சொல்லி விட்டது. அது நல்ல விடுதலை ! அதேநேரம் இந்த உலக பந்தங்களை  விட்டு மேலுலகம் அனுப்பிவைக்கும் விடுதலை ! இது விடுதலை அல்ல ! கொரனோவின் தறுதலை ஆகும் ! 
   கொரனோ வரமா சாபமா என்றால் ... வரமென்றும் எடுக்கலாம் . சாபமென்றும் எடுக்கலாம். சாபமென்னும் வேளை அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள். அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள். அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை. நாளாந்த வாழ்க்கையினையே புரட்டிப் போட்ட போக்கிரித்தனம் எனலாம். ஆனால் குடும்பத்தைக் கூட்டி வைத்திருப்பது நன்மை யென்றே எடுத்துக் கொள்ளலாம். மனரீதியில் பாதிப்புகள் வருவதாக பல செய்திகள் வந்தாலும் வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டிலே இருக்கின்ற ஒரு நிலை உருவாகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாலை அவசரப்பட்டு எழும்பத் தேவையில்லை. அடித்துப்பிடித்து வேலைக்கு ஓடிப்போக வேண்டியதில்லை. பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியதும் இல்லை. அவர்கள் சுவையற்ற உணவுகளை உண்ண வேண்டியதும் இல்லை. கணவனும் மனைவியும் பிள்ளைகளுடன் சேர்ந்திருந்து மகிழ்வுற நல்ல தருணம். வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டியும் தனிமை என்னும் இருளைக்கடந்து வெளிச்சம் என்னும் மகிழ்வுக்குள் வந்துவிடும் நிலைமை.
   தனித்திருத்தல் என்பது தடுப்புச் சுவராகும். விழித்திருப்பதென்பதும் நம்மையும் காத்து மற்றவர்களையும் காப்பாற்றுவது என்பதாகும்.வீட்டில் இருப்பது என்பது வீட்டையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கு ஒப்பானதாகும்.
    ஓய்வு நேரம் கிடைக்காத என்று ஏங்கிய பலருக்கு கொரனோவின் வரவால் நல்ல ஓய்வு கிடைத்திருக்கிறது. கிடைத்த ஓய்வை சாபமென நினைத்துச் சஞ்சலப்படுவதாகப் பல செய்திகள் நாளும் பொழுதும் வந்த வண்ணம் இருக்கின்றன. வீடற்றவர்கள் பலர் தெருவை வீடாக்கி சீவியத்தை ஓட்டி வருகிறார்கள். அன்றாடம் காய்ச்சிகள் அவர்கள். அவர்களுக்கு வாழ்வதே பெரிய சங்கடம் ! உண்ண உணவு கிடைத்தால் அவர்களுக்கு அதுவே ஆனந்தம் ! தனிமை என்பதை அவர்கள் நினைத்தே பார்ப்பதும் இல்லை. வயிறு பசித்தால் உணவு கிடைக்கவேண்டும் கிடைத்தால் அதுவே நிம்மதி என்றுதான் அவர்கள் நிலை. 
  இருப்பதற்கு வீடு இருக்கிறது. அது சொந்த வீடாக இருக்கலாம். அல்லது வாடகை வீடாகக்கூட இருக்கலாம். எப்படியோ ஒரு வீடு  அமைந்துவிடும். வீட்டில் இருப்பதே பெரிய பாதுகாப்பு ! வீதியை வீடாக்கி இருப்பார்க்கு பாது காப்பு என்பது கேள்விக்குறியே ! அவர்கள் வயிற்றை நிரப்பவே வழி தேடுகிறார்கள். ஆனால் வீடும் இருக்கிறது. வேலையும் இருக்கிறது. கொரனோவால் வீட்டிலே இரு என்னும் நிலையை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது பொருத்த மற்ற ஒரு சிந்தனையே எனலாம். நல்ல ஒரு தருணம் நம்மைக் காத்திட நம்மைச் சார்ந்தவர்களைக் காத்திட வாய்த்திருக்கும் வேளை அதனைச் சாபமாக ஏன் நினைக்க வேண்டும். நல்ல வரமாக நினைத்தால் குறைந்தா போய்விடுவோம். 
   பிள்ளைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லலாம். அவர்களும் அமர்ந்து விரும்பிய விளையாட்டை  விளையாடலாம். எல்லோரும் சேர்ந்து சமைத்து மகிழலாம். நல்ல நூல்களை வாசிக்கலாம். உறவுகளுடன் , நட்புகளுடன் தொலைபேசியில் சுகம் விசாரிக்கலாம். பிராத்தனைப் பாடல்களை ஒன்று கூடிப்பாடலாம். நல்ல இசைநிகழ்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கலாம். கணணியில் பட்டி மன்றங்கள்நற்சிந்தனைகள்பார்க்கலாம். சிரிப்பு நாடகங்களைக் கண்டு எம்மை மறக்கலாம். இப்படி என்ன என்ன நல்லன எல்லாம் இருக்கிறதோ அவற்றைக் குடும்பத்துடன் பார்த்து மனதைச் சிதற விடாமல் பண்ணலாம் அல்லவா ? அதற்கான நல்ல தருணமே இந்தத் தனிமைப் படுத்தல் என்பதை ஏன் மனதில் கொண்டிட  மறுக்கிறோம் ! 
    பசுமையான நல்ல நினைவுகளை மீட்கலாம். அதனைக் குடும்பத்தாருடன் பகிர்ந்து பழைய வாழ்வினுக்கே செல்லலாம் அல்லவா ? இளமையில் செய்த குறும்புத்தனங்களைக் குடும்பத்தாருடன் பகிர்ந்து மனம்விட்டு சிரித்து மகிழலாம் அல்லவா ? 
    கொரனோவின் கொடூரம் ஒருபுறம். வீட்டில் இருக்கிறோமே என்றும் வருந்தினால் அது அதைவிடக் கொடூரமாயும் ஆகிவிடும். அத்தியாவசியத் தேவைகளில் வேலை செய்கின்ற மருத்துவர்கள்காவல்துறை சார்ந்தவர்கள்,அம்புலன்ஸ் சாரதிகள்துப்பரவுத் தொழிலாளர் , இவர்கள் யாவரும் குடும்பத்தை விட்டு கொடூரக் கொரனோவுக்குள் வேலைசெய்யும் நிலைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். அதேவேளை கொரனோ பற்றிய கொடூரத்தில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறும் அறிவுரையால் வீட்டிலே இருக்கின்ற நிலையை எப்படி வெறுக்க முடியும் ? அப்படி இருப்பது மன உழைச்சலைத் தருகிறது என்று சொல்லுவது மனித தர்மமா ? சற்று நிதானித்துச் சிந்திக்க வேண்டும் ! 
                    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா  
                    நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
                    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு 
                    உனக்குக் கீழை உள்ளவர் கோடி
                    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு 
                    மயகமா கலக்கமா மனதிலே குழப்பமா 


No comments: