சுவீடசிக்ஸ்டி - படிக்காத மேதை - சுந்தரதாஸ்

.

  உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு புகழ் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அத்தகைய படங்களுக்கு வசனம் எழுதுவதில் முத்திரை பதித்தவர் இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன், அத்தகைய படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவர் பீம்சிங், இவர்களுடைய கூட்டில் உருவான படம்தான் 1960இல் வெளிவந்த படிக்காத மேதை.

 ஊரிலே செல்வமும் செல்வாக்கும் மிக்கவராக  வாழ்கிறார் ராவ்பகதூர் சந்திரசேகரம், அவருடைய அறுபதாம் ஆண்டு திருமண விழாவினை விமர்சையாக குடும்பத்தினரும், நண்பர்களும் கொண்டாடுகிறார்கள். ஐந்து பிள்ளைகளுடன் ரங்கன் என்ற வளர்ப்பு மகனையும் அவர் வளர்க்கிறார். படிப்பறிவில்லாத ரங்கன் அப்பாவியாக வீட்டு ஏவலாளியாக திகழ்கின்றான். திடீரென ராவ்பகதூர் வியாபாரத்தில் நட்டம் அடைகிறார் குடும்பம் கடனில் மூழ்கியது, பிள்ளைகள், மருமக்கள் நண்பர்கள் எல்லோரும் ஒதுங்குகிறார்கள். வளர்ப்பு மகனான ரங்கன் மட்டுமே அவர்களுக்காக துடிக்கிறான்.

 இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த குடும்ப சித்திரத்துக்கு ரங்கனாக  வரும்  சிவாஜி மட்டும் கதாநாயகன் அல்ல ராவ்பகதூர் சந்திரசேகரமாக  வரும் எஸ்பி ரங்காராவ் மற்றுமொரு நாயகனாக நடிக்கிறார். அவரும் சிவாஜியும் தோன்றும் காட்சிகளில் இருவரும் போட்டி போட்டு தங்கள் நடிப்பை ரசிகர்களுக்கு வாரி வழங்குகிறார்கள் இவர்களுடன் பி கண்ணாம்பா,  டி எஸ் துரைராஜ்,  முத்துராமன் அசோகன்,  சவுகார் ஜானகி , சுந்தரிபாய் என்று பலர் நடித்திருக்கிறார்கள்.








ஏராளமானவர்கள் நடித்தபோதும் எல்லோருடைய பாத்திரங்களும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன பிளவுபடும் குடும்பத்தை எப்படி கட்டிக்காப்பது என்று தவிக்கும் அம்மாவாக கண்ணாம்பா முத்திரை பதிக்கிறார். படத்திற்கு இசையமைத்தவர் கேவி மகாதேவன் எங்கிருந்தோ வந்தாள்,  ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா,  உள்ளதைச் சொல்வேன் போன்ற பாடல்கள் ரசிகர்களை இன்றும் கவர்ந்தன. ரங்காவின் சிவாஜியின் பாசப்பிணைப்பை உணர்த்தும் விதத்தில் எங்கிருந்தோ வந்தான் பாடல் எடுக்கப்பட்டிருந்தது படத்தில் சிவாஜியின் பாத்திரத்தை உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் என்ற பாடல் மூலம் விளக்கி இருந்தார் கண்ணதாசன். ஒரே ஒரு ஊரிலே பாடல் கருத்தாழமிக்கது. 

 சிவாஜியின் நடிப்பில் தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி வந்த பீம்சிங்கிற்கு  இதுவும் நூறு நாட்கள் ஓடி வெற்றி படமானது தமிழ்நாட்டின் படிக்காத மேதை ஆக திகழ்ந்தவர் காமராஜர் அவருடைய அணுக்கத் தொண்டரான சிவாஜி படிக்காத மேதை ஆக படத்தில் தோன்றினார்.





No comments: