அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 11 - தம்பாளம்/டமாரம்


தம்பாளம்/டமாரம் – தோற்கருவி
அமைப்பு
இரு கருவிகள் இணைந்த தோலிசைக்கருவி தம்பாளம்.அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும். இடுப்பில் கட்டிக்கொண்டோ, கழுத்தில் மாட்டியபடியோ இசைப்பார்கள். இரும்பு சட்டிகளில் தோல் கொண்டு வார்த்து தயாரிக்கப்படும் கருவி இது. சற்று கனத்த இரும்பு தகரத்தில் சட்டி போன்ற உருவம் செய்து, மேலே மாட்டுத்தோல் கொண்டு சட்டியோடு சேர்த்து பின்னப்பட்டுள்ளதுகொடுகொட்டி, குந்தளம் போல் இல்லாமல் இந்த கருவியின் இருமுகமும் ஒரே அளவில் தான் இருக்கின்றது. இக்கருவியை வளைவு இல்லாத நேரான புளியங்குச்சி கொண்டே இசைக்கிறார்கள். தடிமனற்ற புளியங்குச்சியை உடைத்து,தண்ணீரில் நன்கு ஊறவைத்து, பின் நெருப்பில் வாட்டி வளைத்த பிறகே வாசிக்கத் தகுந்ததாகிறது.


வட தமிழகத்தில் டமாரம் என்று அழைக்கப்படும் இக்கருவி இரும்பு
, பித்தளை அல்லது குடைந்த பலா மரத்தில் செய்யப்பட்டுள்ளது. ண்மைக் காலங்களில் பாரம் கருதி சில இடங்களில் மண்ணால் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இருமுகங்களும் சம அளவிலேயே உள்ளன. சில டமாரங்களில் ஒரு முகம் சற்று சிறியதாக உள்ளது. பசு அல்லது எருமை அல்லது ஆட்டின் தோல் கொண்டு பின்னப்படுகின்றது. அரளிக்குச்சிக் கொண்டு அடிக்கிறார்கள். குருவிக்குச்சி என்னும் குச்சியும் சில இடங்களில் பயன்படுத்துகிறார்கள். சில இடங்களில் நேரான குச்சியாலும் சில இடங்களில்வடிவில் வளைந்த குச்சியாலும் டமாரம் அடிக்கப்படுகிறது.


இலங்கையில் இக்கருவி தம்பட்டம் என்று அழைக்கப்படுகிறது. மரத்தில் குடையப்பட்டு இருமுகங்களுடன் உள்ள இக்கருவி வடிவ குச்சியால் இசைக்கப்படுகிறது

குறிப்பு

தென் தமிழகத்தில் இக்கருவி தம்பாளம் என்று அழைக்கப்படுகிறது
சென்னை/காஞ்சிபுரம் பகுதிகளில் டமாரம் என்கிறார்கள்.

தம்பாளம் ஏனோ வைணவக் கோவில்களில் மட்டுமே அதிகமாக இசைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் ஆழ்வார் திருநகரி, திருக்குறுங்குடி, நாங்குனேரி மற்றும் பெருங்குளம் ஆகிய கோவில்களில் இக்கருவி ஒலிப்பதை நாம் காணலாம். இக்கருவியை இசைக்கும் பணி(உரிமை??) கம்பர் என்கிற இனத்தாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களே இக்கருவியை பரம்பரையாக இசைக்கிறார்கள். மொத்த தென் தமிழகத்திலும் நான்கே தம்பாளங்கள் தான் உள்ளன என்பதிலிருந்து அதை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.


ஆழ்வார் திருநகரியில் இக்கருவி மிக முக்கிய இடம் பிடித்துள்ளது
. நம்மாழ்வாருக்கு மிகவும் உகந்த கருவியாகக் கருதப்படுகிறது. வைணவ குருபரம்பரை கதைகள் நம்மாழ்வாரை நான்காம் வருணத்தைச் சார்ந்தவராக குறிப்பிடுகிறது. ஒரு வேளை இவ்வாழ்வார் இக்கருவியை இசைக்கும் மரபினராக இருந்திருக்கலாம். இக்கருவி இசைக்கப்டாமல் ஆழ்வார் திருவீதி எழுந்தருளுவது இல்லை. நாதசுரம் தவில் இல்லாமல் புறப்பாடு காணும் ஆழ்வார் இக்கருவி இல்லாமல் கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவது இல்லை.

வைகாசி விசாகத்தையொட்டி நம்மாழ்வாருக்கு நடைபெறும் பெருவிழாவில் ஆழ்வார் திருநகரியில் சுற்றியுள்ள நவ திருப்பதி கோவில் பெருமாள்களும் ஒரே இடத்தில் எழுந்தருளி ஒன்பது கருட சேவை விழா சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் ஆழ்வார் திருநகரி வந்து சேரும் மற்ற ஊர் பெருமாள்களை வரவேற்க மயக்கும் இந்த தம்பாள இசை இசைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெருமாளாக நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் வேளையில் நம்மாழ்வாரின் தமிழ் பாசுரங்களை அரையர் சேவிப்பார், பிறகு சிறப்பான முறையில் தம்பாளம், நாதசுரம் மற்றும் தவில் 
இசைக்கப்படும். திருக்குறுங்குடி கோவிலில் இக்கருவி தினப்பூசையிலும்  புறப்பாட்டை அறிவிக்கவும் பிரம்ம தாளம், நகரா ஆகியவற்றுடன் சேர்ந்து ஒலிக்கின்றது. பெருங்குளம் கோவிலில் புறப்பாட்டின் பொழுது ஒலிக்கின்றது.

காஞ்சிபுரம் மற்றும் சென்னை பகுதி கோவில்களிலும் இக்கருவி இடம்பெற்றுள்ளது. காஞ்சி வரதர் கோவிலில் டமாரம் தொன்றுதொட்டு இசைக்கப்படுகிறது. வரதர் கோவிலில் இசைக்கப்படும் கருவிகள் பற்றிய தொகுப்பை ஒரு சிறு நூலாகவே எழுதலாம். உடல், திருசின்னம், பிரம்ம தாளம், சுத்த மத்தளம், தவண்டை, நகரா, டங்கா, தவில், நாதசுரம், முகவீணை, டமாரம், கௌரிகாளை என்று வரதரின் இசைக்கருவி பட்டியல் மிக நீண்டது. இம்மரபுகளை போற்றும் ஆலய நிர்வாகத்திற்கு நமது நன்றிகள். இருந்தாலும் இக்கோவிலில் 30 ஆண்டுகள் முன்பு இசைக்கப்பட்ட சந்திர வளையம், சூரிய வளையம் ஆகிய கருவிகள் வழக்கொழிந்து விட்டன. வரதர் கோவிலில் டமாரம் சிறப்பாக அதிக அளவில் ஒலிப்பது தாதா தேசிகன் சாற்றுமுறை திணமான கார்த்திகை மாத அனுஷம் அன்று. அன்றைய தினம் சுமார் 10 டமாரங்களை சிறப்பான முறையில் ஒரு கச்சேரி போன்று இசைக்கிறார்கள். டமார கோஷ்டி என்று இதற்கு பெயர். பெருமாள் திருவீதி சென்று வரும் வரை இக்கருவி மிக நேர்த்தியாக இசைக்கபடுகிறது. மணவாள மாமுனிகள் சாற்றுமுறைக்கு இரண்டு டமாரங்கள் ஒலிக்கின்றது. மேலும் வரதருக்கு பங்குனி பெருவிழாவிலும் அதையொட்டி இடம்பெறும் மலையாள நாச்சியார் திருக்கல்யாண விழாவிலும் டமாரம் இசைக்கப்படுகிறது. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மலையாளிகள் என்கிற பழங்குடி இனம் உண்டு. வரதர் ஒருவேளை இவ்வின பெண்னை மணம் செய்து இருக்கலாம். அவரே மலையாள நாச்சியாராக இருக்கலாம்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பெருவிழா நாட்களில் தினமும் இரண்டு டமாரங்கள் இசைக்கப்படுகிறது. விடையாற்றி  நாளில் வழக்கொழிந்த பல இசைக்கருவிகளின் பெயர்களை அர்ச்சகர் சொல்லி இசைக்க சொல்லும் பொழுது அந்த ஒசைகள் இந்த டமாரத்திலேயே ஒலிக்க செய்யப் படுகின்றது. விரைவில் ஒரு நாள் இந்த டமாரமும் வழக்கொழிந்து டமாரத்தின் ஒசையை தவிலில் எழுப்பலாம். காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி நாட்களில் டமாரம் இசைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் கச்சபேச்வரர் கோவிலில் டமாரம் திருமஞ்சனக்(அபிசேக) காலங்களில் இசைக்கப்பட்டு தற்பொழுது கேட்பாரற்று கிடக்கின்றது. ஆலய நிர்வாகம் இதை சீர் செய்து மீண்டும் ஒலிக்க ஆவண செய்ய வேண்டும்.

காஞ்சிபுரம் அடுத்து உள்ள மிகப் பழமையான கரந்தை குந்துநாதர் தமிழ் சமண ஆலயத்தில் டமாரம் இசைக்கப்படுகிறது. கொடியேற்ற நிகழ்வில் 4-5 டமாரங்கள் ஒலிக்கின்றன. நெல் பரப்பி தவில், நாதசுரம், டமாரம் ஆகியவற்றை அதன் மேல் இருத்தி பூசைகள் செய்து பிறகு இசைக்கிறார்கள். சைவ/வைணவ கோவில்களில் பெருவிழா கொடியெற்ற நிகழ்வில் இடம்பெறும் பேரி தாடனம் சடங்கை இது நமக்கு நினைவூட்டுகிறது. வட தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் நிறைய தமிழ் சமர்கள் வசிக்கிறார்கள். பழமையான தமிழ் சமண ஆலயத்தில் கோவில்களும் உள்ளன.

திருக்கடல்மல்லை தலசயன பெருமாள் கோவிலில்(மகாபலிபுரம்) நாள்தொறும் டமாரம் பூசை வேளைகளில் நாதசுரத்துடன் இசைக்கப்படுகிறது. வாசு, சுந்தர்ராஜன் குழுவினர் இசைத்ததாக தெரிவிக்கிறார் இக்கோவில் ஸ்தலத்தார் திரு உ வே ராமானுஜம் பிள்ளலோகம் அவர்கள். பழைய காணொளி காட்சியும் பகிர்ந்துள்ளார் அன்பர். திருநீர்மலை பெருமாள் கோவிலிலும் பெருமாள் வீதியுலாவின் பொழுதும் நாள்பூசையின் பொழுதும் டமாரம் இசைக்கப்படுகிறது. சென்னை மயிலை மாதவப் பெருமாள் கோவிலிலும் இக்கருவி ஒலிப்பதை காணலாம்.

திருப்பெரும்புதுர்(ஸ்ரீபெரும்புதுர்) ஆதிகேசவ பெருமாள் கோவிலில் டமாரம் காலை முதற் பூசையில்(விஸ்வரூபம்) திருச்சின்னதுடன் சேர்த்து இசைக்கப்படுகிறது. மாலை பூசையில் மத்தளம், பிரம்ம தாளம் மற்றும் திருச்சின்னத்துடன் சேர்த்து இசைக்கப்படுகிறது.

சென்னை ஆதம்பாக்கத்தில் நந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆதணி என்கிற சோழ மன்னன் எழுப்பியது இந்த ஆவுடைநாயகி உடனுறை நந்தீஸ்வரர் ஆலயம். கிட்டத்தட்ட 900 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட இக்கோயிலுக்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கிற விதமாக ஒலிக்கிறது டமார இசை. வெறுமனே ஓசையை எழுப்பும் கருவியாகவே சில ஆலயங்களில் இசைக்கப்படுகிற டமாரம், இந்தக் கோயிலில் முறைப்படி வாசிக்கப்படுவது சிறப்பு. டமாரத்தை இக்கோவிலில் நந்தி வாத்தியம் என்கிறார்கள்.

இக்கோவிலில் 6வது தலைமுறையாக டமாரம் வாசிக்கிறார் ஏ.எஸ்.ஏழுமலை. ‘‘தாத்தா, அப்பா, சித்தப்பா, மாமானு எல்லாரும் கோயில்ல வாசிச்சவங்கதான். அவங்ககிட்டருந்து கேள்விஞானத்துல கத்துக்கிட்டு வாசிக்க ஆரம்பிச்சேன். டமாரங்கிறது நம்ம தமிழர் வாத்தியம். சாமி புறப்பாடுக்கு முன்னாடி ரிஷப வாகனத்தின் மேல வச்சு இந்த வாத்தியத்தை வாசிக்கிறது வழக்கம். மார்கழி மாசத்துல அதிகாலைல விசேஷமா வாசிக்கிறதுண்டு. பூஜை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இதை வாசிக்கிறது மூலமா மக்களை கோயிலுக்கு அழைக்கிற அறிவிப்பு வாத்தியம்னுகூட சொல்லலாம் முரசு, தண்டோராகூட அந்தக் காலத்து அறிவிப்பு வாத்தியங்கள்தான். ஆனா, டமாரம் அதுலேருந்தெல்லாம் வேறுபட்டது. முந்தைய ரெண்டும் மக்களுக்கு எதையோ அறிவிக்க வெறுமனே சத்தம் மட்டும் உண்டாக்கக்கூடியவை. டமாரத்துல தாளம் உண்டாக்க முடியுங்கிறதும், அதை கடவுளுக்கு முன்னாடி வாசிக்கிறதும்தான் சிறப்பு!’’ என்கிறார் ஏழுமலை.

மண்ணால் ஆன இரண்டு குடங்கள், அவற்றில் வாசிக்க 2 குச்சிகள் என பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது அந்தத் தாள வாத்தியம். ‘‘எங்க தாத்தா காலத்துல இரும்பால பண்ணின குடம் வச்சுதான் வாசிச்சிட்டிருந்தாங்க. அது மேல எருமைத்தோல் போட்டு, கீழே ஒரு வளையம் கொடுத்திருப்பாங்க. தோல் வார் பிடிச்சிருப்பாங்க. ரொம்ப கனமா இருந்ததால அப்புறம் பலா மரத்துல பண்ணினதை வாசிச்சாங்க. நான் வச்சிருக்கிறது கடம் மாதிரியே மண்ல செய்து சுடப்பட்டது. அதுக்கு மேல எருமைத்தோல் போர்த்தி, கீழே வளையம் வச்சு, நைலான்ல வார் பிடிச்சிருக்கேன். 12 வருஷத்துக்கும் மேல இதைத்தான் வாசிச்சிட்டிருக்கேன்’’ என்கிறவர் மூதாதையர் கால இரும்பு டமாரத்தை பத்திரமாக வைத்திருக்கிறார். டமாரம் வாசிக்க 2 குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. ‘கிணாரம்’ என்பது தட்டுக்குச்சி. ‘கும்காரம்’ என்பது வலது பக்கம் வாசிக்கிற குச்சி. குருவிக்குச்சி என்றும் சொல்கிறார்கள். முதலில் இந்தக் குச்சியிலுள்ள கணுக்களைச் சுத்தம் செய்து, வழவழப்பாக்க வேண்டும். அதில் எண்ணெய் தடவி, லேசாக சூடாக்கி, இரு பக்கங்களிலும் வளைத்து, 2 வளையங்கள் பொருத்தி, நூலால் கட்டி வைப்பார்கள். குறிப்பிட்ட நேரம் கழித்து, நூலை அவிழ்த்தால், குச்சி வளைந்த வாக்கில் அப்படியே நின்று விடும். அந்த வளைந்த குச்சிதான், டமாரத்தின் பிரத்யேக ஒலிக்கு சிறப்பு சேர்க்கிறது.

வளையாமலிருக்கிற குச்சியை ஒரு குடத்திலும், ‘உ’ வடிவத்தில் வளைந்திருக்கிற இன்னொரு குச்சியை தேவைக்கேற்ப இரண்டு குடங்களிலும் அடித்து இசை எழுப்பப்படுகிறது.பார்ப்பதற்கு தபேலா போல இருந்தாலும், தவிலோ, தபேலாவோ வாசிக்கிற எல்லாராலும் டமாரம் வாசிக்க முடியாது என்கிறார் ஏழுமலை.‘‘தவில் அறிமுகமாகிறதுக்கு முன்னாடி, நாதஸ்வரத்துக்குப் பக்க வாத்தியமா டமாரம்தான் வாசிச்சிட்டிருந்தாங்க. தோல் வாத்தியங்கள்ல வாசிக்கக்கூடிய திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீரணம்னு 5 வித தாளங்களையும் டமாரத்துலயும் வாசிக்கலாங்கிறது சிறப்பு’’ என்கிறவர் திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம் என 3 தாளங்களை இதில் வாசிக்கிறார்.  ‘‘அதே மாதிரி தவில்ல என்னென்ன ‘சொல்’ உண்டாக்க முடியுமோ, அது அத்தனையையும் இதுலயும் கொண்டு வரலாம். குறிப்பா ‘ரத்தி’க்கு இது ரொம்பப் பொருந்திப் போகும்’’ என்றபடி வாசிப்பைத் தொடர்கிறார். ஆன்மிகம், பக்தி உணர்வுகளை எல்லாம் கடந்து, வாசிப்பு சுகத்தில் உலகம் மறந்து போகிறது நமக்கு. அடுத்த தலைமுறைக்கு அந்த சுகம் வாய்க்கப் போவதில்லை என்கிற கவலை அப்பிக்கொள்ள மனது கனத்துப் போகிறது. திங்கள்கிழமை தோறும் மாலையில் மட்டும் இக்கருவி ஒலிக்கின்றது.

திருவிடந்தை நித்தியகல்யாணப் பெருமாள் கோவிலில் இக்கருவி சில பத்து ஆண்டுகள் முன்பு வரை இசைக்கப்பட்டு தற்பொழுது வழக்கொழிந்து விட்டது. அழிவின் விளிம்பில் இருக்கும் தம்பாளம்/டமாரம் ஆகிய தொல் தமிழர் இசைக்கருவிகள் பாதுகாக்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் அவை புழக்கத்தில் இருந்து மறைந்த இடங்களில் மீள ஓலிக்க முயற்சி தேவை. புழக்கத்தில் உள்ள இடங்களிலும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.காணொளி பகுதியில் நிறைய காணொளிகள் உள்ளன. கண்டு களியுங்கள். இலங்கையில் தம்பட்டம் என்று அழைக்கப்படும் இக்கருவி ஈழ நாட்டின் தொன்மையான பெரும்பறை இசையுடன் சேர்த்து இசைக்கப்படுகிறது.

புழக்கத்தில் உள்ள இடங்கள்
தம்பாளம்
ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோவில்
திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயில்
பெருங்குளம் மாயக்கூத்தர் கோயில்
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்

டமாரம்
காஞ்சி வரதராசப் பெருமாள் கோவில்
குமரக்கோட்டம் முருகன் கோவில்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்
திருக்கடல்மல்லை தலசயன பெருமாள் கோவில்(மகாபலிபுரம்)
திருப்பெரும்புதுர்(ஸ்ரீபெரும்புதுர்) ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் கோவில்
சென்னை மயிலை மாதவப் பெருமாள் கோவில்
சென்னை ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில்
கரந்தை குந்துநாதர் சமணர் கோவில்

தம்பட்டம்
இலங்கை தமிழர் பகுதிகள்

காணொளி
தம்பாளம்திருநெல்வேலி மாவட்டம்
https://www.youtube.com/watch?v=EynpCoP6NfQ&t=2s
https://youtu.be/GLIBbXCveAE
https://youtu.be/V64CDySTFeo
https://youtu.be/7qmEBZns5Mk
https://youtu.be/uDt9oMB66hE
https://youtu.be/FATtequBdoc
https://www.youtube.com/watch?v=EynpCoP6NfQ&t=2s

டமாரம்சென்னை/காஞ்சிபுரம் மாவட்டம்
https://youtu.be/VzaFfoVcO7Q

-சரவண பிரபு ராமமூர்த்தி
1.     P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai 
2.     ஆர்.வைதேகி,   நந்தி வாத்தியம் என்னும் டமாரம்
3.     Lalitha M/Nandhini M - Proceedings of National Seminar on PRISTINE GLORY of Kanchipuram, Sankara University, Enathur, Kanchipuram




No comments: