மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 33 - முருகபூபதி


கொரோனாவுக்குள் வாழப் பழகிக்கொள்ளவேண்டியதுதான்  விதியென்றால் என்னதான் செய்வது…?
இந்த நான்கு பெண்கள் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டுக்குள் பிரவேசித்து வாழப் பழகவேண்டியது எனது விதியிலும் எழுதப்பட்டிருக்கவேண்டும். அதுதான் வந்துசேர்ந்துள்ளேன். வந்தவிடத்தில், இந்தப்பெண்களின் அவலத்துடன் அலைமோதிக்கொண்டிருக்கும்போது, இந்த லண்டன்காரரும் வந்து தனது தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதற்கு வழிதேடுகிறார்.
மகளை விட்டுவிட்டு ஓடிப்போன அந்த முகம் தெரியாத சிவகாமசுந்தரியும் பிராயச்சித்தம் தேடுவதற்கு தொடர்புகொள்கிறாள்.
தொடர் ஊரடங்கு உத்தரவினால், வெளியே செல்லமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும்போது, மூச்சு முட்டும் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
காற்றுப்புகாத , வெளிச்சம் அண்டாத அடைபட்ட  மூடிய அறைக்குள் சிக்கிக்கொண்டதுபோன்ற உணர்வு தோன்றியிருக்கும்போது, பிராயச்சித்தங்களுக்கும் பாவ சங்கீர்த்தனங்களுக்கும் வழிதேடுகிறார்கள்.
ஜீவிகா, எந்தக்கவலைகளும் அற்று, முகநூலிலும் கணினியிலும் பொழுதை கழிக்கிறாள். அவள் பணியாற்றும் பத்திரிகை அச்சில் வெளியாகாமல்  வடிவமைக்கப்பட்ட பக்கங்கள் அனைத்தும் கணினியூடாக மின்னஞ்சல் மார்க்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் வெளியாகிறது.  அதனால், அவள் தலைநகரத்திற்கு பயணிக்காமலேயே வீட்டிலிருந்து செய்திகளை, கட்டுரைகளை எழுதி அனுப்பமுடிகிறது.
உறக்கம் தவிர்ந்த மற்றநேரங்களில் அவளது பொழுது கணினியிலும் கைத்தொலைபேசியிலும் கரைகிறது.
சுபாஷினி,  லீவு எடுத்தும்  நுவரேலியாவுக்குச் செல்லமுடியாமல்,  அறையிலிருந்துகொண்டும், வீட்டினுள் நடமாடியவாறும் ஹெட் போனில்  பாட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறாள்.  மஞ்சுளாவையும் உடன் அழைத்துச்சென்று, வங்கியில் வேலைசெய்யும் தனது தம்பிக்கு அறிமுகப்படுத்தி, திருமணப்பேச்சுவார்த்தைக்கு அச்சாரம் போடவிருந்த அவளது திட்டத்தையும் கொரோனா குலைத்துவிட்டது.
ஊரிலிருக்கும் கோயில் கும்பாபிஷேகத்திற்காக லண்டனிலிருந்து செலவுசெய்து புறப்பட்டுவந்திருக்கும் சண்முகநாதனின் யாழ்ப்பாணப்  பயணமும் தடைப்பட்டுவிட்டது.
பாடசாலை விடுமுறையை சொந்த ஊருக்குச்சென்று சித்திரைப்புத்தாண்டுடன் கொண்டாடுவதற்கு விரும்பியிருந்த கற்பகம் ரீச்சருக்கும் இந்த கொரோனா தலையில் விழுந்த பேரிடியாகிவிட்டது.
ஊரடங்கு உத்தரவால், வங்கி வேலைக்குச்செல்லாமல், வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் சினிமா பார்த்து நேரத்தை செலவிட்டு, அபிதா செய்துதரும் தின்பண்டங்களை கொரித்துக்கொண்டிருக்கும்  மஞ்சுளாவின் மனதை, விட்டுவிட்டு ஓடிப்போன தாய் கோல் எடுத்து அரித்துக்கொண்டிருக்கிறாள்.
பிதாவுக்கு  முன்னர் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. விதிவசத்தால் வந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் வாழ நேரிட்டிருக்கும்வேளையில்,  அவளது நினைவுத் தொடரில் வந்து விழுந்தது, அவள் என்றோ படித்திருந்த கதை.
 இஸ்லாமியக் கலிபாக்களில் ஒருவரான ஹஜ்ரத் அலியைச் சந்தித்த யூத இளைஞன் விதிக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல முடியுமா? என்று கேட்டானாம்.  ஹஜ்ரத் அலி அவனிடம், “உன் வலதுகாலைத் தூக்கு” என்றார். அவனும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றான்.
“சரி…..இப்போது உனது  வலது காலைக் கீழிறக்காமலேயே இடது காலையும் தூக்கு” என்றாராம்.

“அது எப்படி முடியும்?” என்றான் இளைஞன்.
“ஒற்றைக் காலை மட்டும் தூக்கு என்றதும் உன்னால் முடியும் என நினைத்துச் செய்தாய் அல்லவா? அதுதான் பகுத்தறிவு. இன்னொரு காலையும் தூக்கச் சொன்னபோது அது முடியாது என உணர்ந்தாய் அல்லவா? அதுதான் விதி” என்ற அவர்,  அந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும் என விளக்கினாராம்!
இந்தக்கதையைத்தான் மாலை வேளை தன்னால்  தேநீர் தயாரித்துக்கொடுக்கும் போது வீட்டிலிருப்பவர்களுக்கு சொல்லவேண்டும் என்று மனதிற்குள் அபிதா தீர்மானித்தாள்.
தினமும்   மதியம் உணவருந்திய பின்னர்  குட்டித்தூக்கத்தை அரவணைத்துவிடும் பழக்கத்தையும் இந்த ஊரடங்கு   வாழ்வு அந்த வீட்டில் உருவாக்கிவிட்டது.   அவ்வேளையில்தான் அபிதா, ஜீவிகாவின் மடிக்கணினியில்  எழுதி பயிற்சிபெறுகிறாள்.  இணைய இதழ்களை தேடித்தேடி வாசிக்கிறாள்.
அவளுடைய தேடல்களுக்கு அவை நிறையத்தீணி போட்டுக்கொண்டிருக்கின்றன. அனைத்தையும் படித்து முடிக்க ஆயுளும் போதாதே என்ற மலைப்பும் அவளுக்கு வருகிறது.
மாலை  ஐந்து மணிக்குமேல், குட்டித்  தூக்கம்போட்டவர்கள் ஒவ்வொருவராக எழுந்து வருவதற்கு முன்னர், அந்த மடிக்கணனியில் படித்துவிடவேண்டியவற்றை படித்தும், எழுதிப்பழகவேண்டியதை எழுதியும் முடித்துவிடும் அபிதா, அதன்பிறகு, மாலைநேரத்திற்காக ஏதாவது சிற்றுண்டிகள் செய்வதும் வழக்கமாகிவிட்டது.
அவளைப்பொறுத்தவரையில், வந்திருக்கும் கொரொனா அவளுக்குத்தான் வேலைச்சுமையை அதிகரிக்கச்செய்துள்ளது.
முன்பு, காலையில் வேலைக்குச்சென்றவர்களில் கற்பகம் ரீச்சர் பின்மதிய வேளையிலும் -  மஞ்சுளா, சுபாஷினி, ஜீவிகா, அடுத்தடுத்து மாலை ஆறு மணிமுதல் இரவு எட்டு ஒன்பது மணிக்குள்ளும்  வீடு திரும்புவார்கள்.
ஆனால், இப்போது ஊரடங்கு உத்தரவினால், அனைவரும் வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.  அவர்களுக்கான தினசரி சமையல் வேலைகளுடன், மேலதிகமான அவர்களின் தேவைகளையும் கவனிக்கவேண்டியதாகிவிட்டது.
வாய்க்கு ருசியாக ஏதும் விதம் விதமாக ஆக்கிப்போடவேண்டியிருக்கிறது. போதாக்குறைக்கு இந்த லண்டன்காரரும் வந்து, நிகும்பலையூர் கடல்வாழ் உயிரினங்களை ருசிபார்க்க விரும்புகிறார்.
அன்று மீன்கடையில், நண்டு தெரவுசெய்யும்போது,   “ அபிதா, உனக்கு இறால் வடை செய்யத்தெரியுமா..?  “ என்றும் கேட்டார்.
 “ பருப்பு வடையின் மீது அவித்த இறாலை அழுத்திவைத்து எண்ணெயில் பொரித்து எடுப்பதுதானே அய்யா…. “ என்றாள்.
 “ நீ சொல்லும்போதே வாய் ஊறுது.  ஒருநாளைக்கு செய்து தா  “ என்று கேட்டிருந்தார்.
அந்த நினைப்பு வந்ததும், எழுந்துசென்று குளிர்சாதனப்பெட்டியிலிருந்து முதல் நாள் வாங்கிவந்திருந்த இறால் பொதியை  குளிர்நீங்குவதற்காக வெளியே எடுத்துவைத்துவிட்டு,  கடலைப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, மீண்டும் வந்து மடிக்கணினியின் முன்னமர்ந்து வாசிக்கத் தொடங்கினாள்.
ஜீவிகா, கூடத்திலிருந்த பெரிய ஷோபாவில் உறங்கிக்கொண்டிருக்கிறாள்.
லண்டன்காரரின் மெல்லிய குறட்டை ஒலி, ஜீவிகாவின் அறையிலிருந்து கேட்கிறது.
கற்பகம் ரீச்சர் தற்போது மங்களேஸ்வரி ரீச்சரின்  வீட்டுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்திருப்பதனால், ஜீவிகாவை அந்த அறையை பாவிக்குமாறு சொல்லலாம்தானே..?  என்றும் அபிதா யோசித்தாள்.
ஊரடங்கு தளர்த்தப்படும்போது, கண்டியிலிருக்கும் மஞ்சுளாவின் தாய் சிவகாமசுந்தரி திடுதிப்பென இந்த வீட்டைத்தேடி வந்துவிட்டால் என்ன நடக்கும்….? என்ற யோசனையும் அபிதாவுக்கு வந்தது.
மஞ்சுளாவின் ருத்ர தாண்டவத்தை பார்க்கலாம்.  அந்தத்தாயின் ஒப்பாரியை கேட்கலாம். லண்டன்காரரும் இங்கு நின்றால், அவரது முகபாவனை எத்தகைய கோணங்களில் திரும்புகிறது என்பதையும் அவதானிக்கலாம்.  
 “ இந்தக்  கூறுகெட்ட குடும்பத்திற்குள்தானா எனது தம்பியையும் தள்ளப்போகின்றேன்..?  “  என்று சுபாஷினி, நுவரேலியாவில் வங்கியில் பணியிலிருக்கும் தனது சகோதரனின் எதிர்காலம் பற்றி ஆழ்ந்து யோசிக்கலாம்.
 “ நல்லவேளை அந்தக்காட்சிகளை காணாமல், இங்கே மங்களேஸ்வரி வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கின்றேன்  “  என்று கற்பகம் ரீச்சர் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.
 “ எல்லாம் இந்த அபிதாவால் வந்த வினைதான்  “  என்று வீட்டை பராமரிக்கும் எஜமானி ஜீவிகா,  தன்னை மனதிற்குள் திட்டலாம்.
எது எப்படியோ, விதி விளையாடத்தொடங்கிவிட்டது.  மதியை பாவிக்கவேண்டியதுதான். அபிதாவுக்கு,  முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த நாட்களின் நினைவுகள் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில், அதனையெல்லாம் ஊடறுத்துக்கொண்டு, கண்ணுக்குத் தெரியாத எதிரிவந்து நர்த்தணம் ஆடுகிறது.  செல்வமகள் தமிழ்மலர் பதுங்கு குழியோடு சமாதியாகி,  காதல் கணவன் காணாமல்போய் ஆண்டுகள் பதினொன்றாகியிருக்கும் வேளையில், அவர்களின் நினைவுகள் தொடர்ந்தும் துரத்திக்கொண்டிருக்கும்போது, எந்தவொரு முன் அறிமுகமோ, சொந்த  பந்தமோ  அற்ற பெண்களின் பிரச்சினைகளுக்குள் வந்து சிக்குண்டுவிட்டதும் காலம் செய்த கோலம்தானா..?
அபிதா நேரத்தைப்பார்த்தாள்.
மாலை நான்கு மணியும் கடந்துவிட்டிருந்தது. மடிக்கணினியை  மூடிவைத்துவிட்டு, எழுந்தாள்.  வீட்டுக்குள் இருந்தவரையில் மேலே சுற்றும் காற்றாடியினால் புழுக்கம் தெரியவில்லை. வெளியே வந்ததும் வெய்யிலின் உக்கிரம் முகத்தில் மோதியது.
வாழ்க்கையும் இப்படித்தான்போலும். எதுவும்   அவரவர் உள்ளத்தே  இருக்கும் வரையில் ஒரு வடிவத்திலும், வெளியே வந்ததும் வேறு ஒரு வடிவத்திலும் மாறிவிடுகிறது.  
வெளியே கொடியில் காய்ந்துகொண்டிருந்த ஆடைகளை எடுத்துவந்து, யார் யாருடையது என்பதை தெரிவுசெய்து மடித்துவைத்தாள். ஆடைகளை எடுக்கும்போது கத்தரிச்செடிகளில் ஊர்ந்துகொண்டிருந்த இரண்டு  நத்தைகளை அவதானித்திருந்தாள்.
அவற்றை தொடர்ந்தும் அவ்வாறு நகரவிட்டால், கத்தரிப்பூக்களை அரித்துவிடும் . அதிலிருந்து தோன்றவிருக்கும் கத்தரிக்காய்களுக்குத்தான் ஆபத்து.
ஒரு சிறிய குச்சியை எடுத்துச்சென்று நத்தைகளை பக்குவமாக அகற்றி வெளியே விட்டாள். அவற்றை நசித்துக்கொல்வதற்குத்  தயங்கினாள்.
பாவம். எம்மைப்படைத்தவர்தானே, அவற்றையும் படைத்திருப்பார். நத்தைகள் எதனை விரும்பிச்சாப்பிடும் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றுக்கும் ஏதும் தரலாம் என்ற சிந்தனையும் அபிதாவுக்கு வந்தது. சமையலறையில் எண்ணெயில் பொரிவதற்காக காத்திருக்கும் இறால்களின் உயிரற்ற கோலமும் அவளை வருத்தியது.
எத்தனையைத்தான் யோசிப்பது…?  ஜீவகாருண்யத்தை எத்தனை உயிர்களிடம்தான் காண்பிப்பது…?
அதிகம் யோசித்தால் ஞானியும் ஆகலாம்! விசரும் பிடிக்கலாம்!
 ஊறவைத்திருந்த கடலைப்பருப்பை மிக்ஸியில்  பருப்பு வடைக்காக அரைக்கத்தொடங்கினாள். அவளுக்கு அந்தத்தானியத்தின் மீதும் அனுதாபம் பிறந்தது.
“ எல்லோரும் வரலாம்.  இறால் வடை தயார்.  “  அபிதா சற்று உரத்துக்குரல் கொடுத்தாள்.
ஒவ்வொருவராக எழுந்து வந்தனர். லண்டன்காரர்தான் தாமதமாக வந்தார்.
கூடத்தின் நடுவில் ஒரு ஸ்டுலை நகர்த்திவைத்து, அதன்மீது இறால் வடைகளை தட்டங்களில் பரிமாரி வைத்துவிட்டு, தேநீர் தயாரித்தாள்.
ஏற்கனவே யோசித்து வைத்திருந்த ஹஜ்ரத் அலி, யூத இளைஞனுக்கு விதியைப்பற்றியும் பகுத்தறிவு பற்றியும் நிகழ்த்திய விளக்கத்தை சொல்லத்தொடங்கினாள்.
 “ எங்கட அபிதாவுக்கு ஏதோ நடந்திட்டுது  “ என்றாள் மஞ்சுளா.
“Yes. Something wrong “  என்றாள் ஜீவிகா.
  “ அபிதா, எதைப்பற்றியோ கடுமையாக யோசிக்கிறாங்க என்பது மாத்திரம் தெரிகிறது  “ என்றாள் சுபாஷினி.
முகம் கழுவிக்கொண்டு வந்தமர்ந்த லண்டன்காரர் சண்முநாதன்,   “ இறால் வடை நல்ல வாசமாக இருக்கிறது  “ என்றார்.
அபிதாவுக்கு சிரிப்புத்தான் வந்தது.
( தொடரும் )No comments: