'அமிர்த வருஷினி' - அன்பால் உயர்த்தினர் சிட்னித் தமிழர்கள்


அருள்: "தொடர்புடையார் மாட்டு பாராட்டுவது அன்பு தொடர்பிலார் மாட்டு பாராட்டுவது அருள்.
தொடர்பு பற்றாது இயல்பாக எல்லாவுயிர் கண்மேலும் செல்வதாகிய கருணை" - பரிமேலழகர்

அமிர்த வருஷினி 
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில்
பல வாரங்களாகக் காடு தீய்ந்தெரியும் நிலையில்,
இயற்கையையும் விலங்குகளையும் மக்களையும் மனைகளையும்
காக்கும் பணியில், தம்மைப் பூரணமாக அர்ப்பணித்து செயற்பட்டுவரும்
நியூ சவுத் வேல்ஸ் புறநகர் தீயணைப்புப் படையினரை வாழ்த்தி வணங்கும் நிகழ்வு!
இவ் அமிர்த வருஷினியானது, இப்படையினருக்கான நிதியுதவி  வழங்கும் நிகழ்வாக - இராப்போசனம் ஒன்றை,
சிட்னிவாழ் தமிழ்ச் சமூகத்தினரை, மிகவும்  குறுகிய காலப்பகுதியில் அழைத்து,
சென்ற சனிக்கிழமை நான்காம் திகதி மாலை நடாத்தாயிருந்தனர் அவுஸ்திரேலியக் கம்பன் கழத்தினர்.
"இந்நிகழ்வு சிறப்புற - காலத்தின் தேவைகருதி அமைக்கப்பட்டிருந்ததும், மக்கள் அனைவரும் நன்கு  ஒத்துழைத்து,
உதவியிருந்தார்கள்" எனவும் நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் பகிர்ந்திருந்தார்கள்.

கடவுள் வாழ்த்து
'உலகம் யாவையும்...' எனும் கம்பனின் கடவுள் வாழ்த்தை, செல்வி ப்ரணீத்தா பாலசுப்பிரமணியன் இசைக்க,
இந்நிலத்தில் வாழவழிதந்த 'தரூக்' பூர்வகுடிமக்களுக்கு நன்றி கூறி;
தொடர்ந்து, தேசிய மற்றும் பூர்வகுடி மக்களுக்கான கொடிகளை,
வருகை தந்திருந்த தீயணைப்புப் படைத் தொண்டர்கள் ஏற்றி வைக்க,
நல் எண்ணத்தோடு தொடங்கியது 'அமிர்த வருஷினி'. 
நிகழ்வுகளைச் சிறப்புற ஒருங்கிணைத்திருந்தார் கம்பன் கழக உப தலைவர் செல்வி பூர்வஜா நிர்மலேஸ்வரக் குருக்கள்.

வான்மழை
மழை வேண்டுதலுக்கான வல்லமை படைத்த 'அமிர்த வருஷினி' இராகத்தில் அமைந்த,

'எனை நீ மறவாதே' என்ற பாடலைத் திருமதி சந்தியா சுந்தரராஜன் திறம்பட இசைத்து,

நிகழ்வின் பெயருக்கான காரணத்தை இசையால் கோடிட்டார்.


உரை மழை

மிகவும் அன்போடு உதவ முன்வந்திருந்த கம்பர்லாந்து நகரசபைக் கவுன்சிலர்களில் ஒருவரான,

திரு. சுமன் சாகா அவர்கள் பேசுகையில்,

எமக்காகத் தீயணைப்பில் போராடும் வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில்,

பங்கெடுப்பதில் தம்மகிழ்வினைத் தெரிவித்து உரையாற்றினார்.

'ஒர்ச்சார்ட் ஹில்' தீயணைப்புப் பிரிவிலிருந்து வருகைதந்திருந்த,

எமிலி டல் சாட்டோ என்ற தீயணைப்பு வீராங்கனை,

தமிழ் மக்களினுடைய இவ் ஒருங்கிணைந்த உதவிக்கு நன்றி தெரிவித்து,

சிற்றுரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.

கம்பன் கழகத்தைச் சார்ந்த புகழ்பூத்த பேச்சாளர் திரு. திருநந்தகுமார் அவர்கள்,
'மழையைப் போற்றுதும் மழையைப் போற்றுதும்' எனச் சிலம்பைத் தொட்டு தன் பேச்சை,
மிகத் திறனுடன் காலத்தின் தேவைக்கானவை பற்றிய சிற்றுரையை ஆற்றியிருந்தார்.

இசை மழை
"மழையின் லயம்” (Rhythm of Rain) என்ற பெயரில்,
கிரி-ஜெஸ்னா-வெங்கடேஷ்-டாம்-அபிநயா போன்ற இளம்-திறம் இசைக்கலைஞர்கள், நெஞ்சை இசையால் வருடிச்சென்றார்கள்.

நன்றி மழை
வருகை தந்திருந்த 'ஒர்ச்சார்ட் ஹில்' தீயணைப்பு வீரர்கள் மார்க் - கைலி,
கிரெக் மற்றும் எமிலிக்கு, இருதய மருத்துவ நிபுணர் ‘மாருதி' வை. மனோமோகன் மற்றும்
ஆசான் திரு. திருநந்தகுமார் இணைந்து பொன்னாடை போர்த்த,
அவர்களுக்கான வாழ்த்தும் நன்றிகலந்த வணக்கமும் 'அமிர்த வருஷினியினரும் மக்களும் வழங்கினர்.

நிதி மழை
சிட்னி வாழ் தமிழ்ச் சமூகத்தினர் சார்பாக, சமூக சேவையாளர்கள் கம்பன் கழக அமைப்பாளர் திரு. ஜெ. ஜெய்ராம், 'சான்றோன்' திரு ம. தனபாலசிங்கம் மற்றும் வைத்திய கலாநிதி தெ. பரன். சிதம்பரக்குமார் இணைந்து, 'அமிர்த வருஷினி’யால் ஈட்டிய ஒன்பதினாயிரத்து ஒரு அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியிருந்தனர் - சபையோர் மகிழ்ந்தனர்.


இன்னுமொரு மகிழ்வான செய்தியாக, மனோமோகன் அவர்கள், 'அவுஸ்திரேலிய மருத்துவ நிதியத்தின் சார்பில் பத்தாயிரம் டொலர்களை, எதிர்வரும் புதன்கிழமை கையளிக்கவிருக்கின்றோம்’ என்று, அமிர்த வருஷினி நிகழ்வில் அறிவித்திருந்தமை, இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது.

அப்பமும் தோசையும் கொத்து ரொட்டியும் இரவு உணவாகப் பரிமாறப்பட்டது. இனிய உணவு.

மக்கள் வெள்ளமாக வருகை தந்திருந்ததால் உணவுப் பற்றாக்குறை சிறிது நேரம் இருந்தது. 

பின்னர் 'அமிர்த வருஷினி' இளைஞர்கள் விரைவில் நிவர்த்தி செய்திருந்தனர். 
மக்கள், இளையவர்களின் குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்த திறனையும்,

காலத்தின் தேவைகருதிய இவ்வுண்ணத உதவியையும் நோக்கில்கொண்டு மிகவும் பொறுமையோடும் அமைதி காத்தும் அன்போடு ஒத்துழைத்தமை மிகச்சிறப்பு. 

கழகத்தினர் நன்றியோடு தம் அன்பை அனைவருக்கும் தெரிவித்ததைக் காணக் கூடியதாக இருந்தது. 

இவ் 'அமிர்த வருஷினி' நிகழ்விற்கு உதவிய தொண்டர்கள் பலர். 
அனைவருக்கும் கம்பன் கழகத்தார் தம் நன்றியைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

பல சிட்னித் தமிழ் அமைப்புகளை மிகக்குறுகிய காலத்தில் கழகத்தார் அன்பால் ஒன்றிணைத்து,
'அமிர்த வருஷினி'யை அனைவரது நிகழ்வாக நடாத்தியமை பலராலும் பாராட்டப்பட்டது. 
'நல்லெண்ணத்திற்காக, வந்தாரை வாழவைத்த நாட்டிற்காகத் தமிழர்களாய் ஒன்றிணைதல் சாலவும் நன்றே!' என,
அங்கோர் முதியவர், இணைத்த இளையவர்களுக்கு வாழ்த்தியது, காதோரம் கேட்டதில் மகிழ்ச்சி!
அனைவரும் பாராட்டும் வகையில் உணர்வுபூர்வமாக நிகழ்வு நடந்தேறியிருந்தது.


"காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது"




படங்கள்: திரு. ப. இராஜேந்திரன்




























No comments: