யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு இதய சுத்தியுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் அழைப்பு
வடக்கு மாகாணத்தின் 8 ஆவது ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார் திருமதி சார்ள்ஸ்
டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
ஜனாதிபதியின் நோக்கங்களுக்கு அமைய இலங்கை பாதுகாப்புப்படை செயற்படும் - சவேந்திர சில்வா
இம் மாதம் சீனாவுக்கு புறப்படும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ!
யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்: லொஹான் ரத்வத்த
இணைப்பாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
வட மாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
கிழக்கு மாகாணத்தில் 422 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்
ஜனாதிபதி, பிரதமருடன் சுவாரஷ்யமாக கலந்துரையாடிய சம்பந்தன்
யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு இதய சுத்தியுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் அழைப்பு
02/01/2020 யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக் கட்டியெழுப்பவும் கடந்த காலங்களில் வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வவுனியா மாவட்டத்தில் இருந்து அரசாங்க அதிபராக வெளியேறியபோது லேசான இதயத்துடன் வெளியேறியிருந்தேன். ஏனெனில் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை நிறைவாக செய்தே வெளியேறியுள்ளேன்.பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தேன் அதன் மகிழ்ச்சி மனதை இலோசாக்கியிருந்தது. இன்று வவுனியா மாவட்டத்தின் ஆரம்ப இடத்தை மிதித்திருந்தபோது மக்கள் காட்டிய அன்பும் அவர்களின் ஆதங்கமும் மனதில் இருந்த பல கவலைகளும் அவர்கள் காட்டிய ஆதரவும் அதேபோல் ஆளுநர் அலுவலகத்திற்கு வந்தபோது எதிர்பார்த்திருக்காத அளவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவர் முதல்வர் மற்றும் உங்களது வரவேற்பு என் இதயைத்தை கனமாக்கியுள்ளது.
ஆளுநர் பதவி இலேசான பதவியல்ல கடந்த ஒன்றரை மாத காலமாக புதிய ஜனாதிபதி பதவியேற்றதில் இருந்து பல போராட்டம் இடம்பெற்று வருகின்றது இதனை ஊடகங்கள் ஊடாக நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் பலர் தொலைபேசி ஊடாக இது உண்மையாகவா இது நடக்குமா எனக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் என்னுடைய நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெறவில்லை. அண்மையில் கிடைக்கப்பெற்ற பதவியின் பொறுப்புக்களை ஆரம்பித்திருந்தேன் எனவே ஆளுநர் பதவி என்ற விடயத்தில் அரச அதிகாரியாக நிதானமாக சிந்திக்கவேண்டிய தேவை இருந்தது ஏறக்குறைய 35 வருட அரச சேவையில் இருந்த நான் கடைசிக்காலத்தில் நிறைவேற்றாது வெளியேறுவது என்பது எவ்வாறு இருக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியதன் பலனாக எனக்குரிய அத்தனை விடயங்களையும் தாங்கள் கவனத்தில் கொள்வதாக ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக என்னுடைய சேவைக்கான நன்மைகளைப் பாதுகாத்துக்கொண்டு எனக்கு இந்தப் பதவியை தந்துள்ளார். ஏன் இந்தப் பதவி என்பது எனக்காக மட்டுமன்றி அல்லது நான் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல வடக்கு மாகாண மக்களின் உணர்வுகளுக்காக மக்களின் தேவைகளுக்காக ஏக்கங்களுக்காக ஜனாதிபதியால் தரப்பட்ட பதவியாகத்தான் இதனைப் பார்க்கின்றேன்.
எனவே நான் பதவியேற்றபோது எனக்குக் கூறப்பட்ட விடயம் வடமாகாண மக்கள் நிறைய வேதனைகளுடனும் வலிகளுடனும் காயங்களுடனும் இருக்கின்றார்கள். அவற்றை ஆற்றுப்படுத்தவேண்டிய தேவைதான் இருக்கின்றது.அந்த மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ இது வரை என்ன கிடைக்காமல் உள்ள விடையங்களை அவற்றைஎல்லாம் செய்து முடிப்பதற்கான அதிகாரத்தையும் அதற்கான ஒத்துழைப்புக்களையும் ஜனாதிபதி செயலகம் செய்யும் என்ற உத்தரவாதத்துடன் தான் இங்கு வந்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் கூறியது போல இந்த மண்ணின் நாடித்துடிப்புக்களை .மக்களின் உள்ளங்களை அறிந்து வைத்துள்ளேன் அரசாங்க உத்தியோகத்தர்களின் சிக்கல்களை அறிந்துள்ளேன்.
வவுனியா மாட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மூன்றரை இலட்சம் மக்களையும் வவுனியா மாவட்ட மக்களையும் சேர்த்து நான்கரை இலட்சம் மக்களை அந்நியோன்னியமாகப் பார்த்திருக்கின்றேன். எனவே இந்த மாகாணத்தில் இருக்கின்ற பலருக்கு என்னைத் தெரியும் எனக்கும் பலரைத் தெரியும் அப்படியிருந்தும் கடந்த எட்டரை வருடங்களாக இந்த மாகாணத்திற்கோ அல்லது வவுனியா மாவட்டத்திற்கோ என்னால் வரமுடியாது போய்விட்டது. அதற்கான தேவை இருந்தபோதும் கடமையின் நிமித்தம் வரமுடியாது இருந்தது. சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நான் விரும்பாமலே அந்தப் பதவி தரப்பட்டது. வருமானத்தின் 67 வீத வருமானத்தை பெறக்கூடிய சுங்கத்திணைக்களத்தில் 2019 ஆம் ஆண்டு சுங்கத்திணைக்களத்தின் வரலாற்றில் 975 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டிக்கொடுத்த அதேநேரம் என்னை இடமாற்றுவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு எதிராக வீதியில் இறங்கிய என்னுடைய உத்தியோகத்தர்கள் நான் தடுத்தும் அதனைக்கேளாது போராட்டங்களில் ஈடுபட்டு கொழும்பு மாநகரையே ஸ்தம்பிதநிலைக்குக் கொண்டு வந்து மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கு வழிசமைத்து மீண்டும் அப்பதவியில் என்னை அமர்த்தினார்கள் இப்போது இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது உங்களுக்கான பதவி உயர்வு என்பதாலேயே நாங்கள் அமைதியாக உங்களை அனுப்பி வைக்கின்றோம் என்றார்கள்.
பின்னர் அமைச்சின் செயலாளராக பதவி ஏற்ற நிலையில் ஜனாதிபதியின் செயலாளர்களில் எத்தனையோ செயலாளர்கள் இருக்கும் நிலையில் எனக்கேன் இந்தப் பதவியைத் தந்தீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு சுகாதார அமைச்சில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான ஆளைத்தான் நியமித்துள்ளார். இதைப்பற்றிக் கதைப்பதற்கு ஒருவரும் இல்லை என்றார்.
குறித்த பதவியை ஏற்று நான் அங்கு சென்றபோது மருத்துவர் சங்கம் ஒரு புறம் தாதியர் சங்கம் ஒரு புறம் என பல பிரச்சினைகளை முன்வைத்தார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்கு அவற்றில் 70 வீதமான பிரச்சினைகளை தீர்த்து வைத்துவிட்டுத்தான்.இங்கு வந்துள்ளேன் அதில் ஒருரே ஒரு வேதனை தற்போது அமைச்சரவை அனுமதிக்கப்பட்டு அமைச்சரவைப் பத்திரம் தயாரிகக்ப்பட்டுக்கொண்டிருக்கின்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடப்பிரிவு வவுனியா முல்லைத்தீவு மன்னார் வைத்தியசாலைகளுக்கான கட்டட வசதிகள் போன்றவற்றை முழுமைபெறச் செய்யமுடியாத நிலைக்கு விட்டுவிட்டு வந்துவிட்டேன்
எனினும் அங்குள்ளவர்கள் நீங்கள் இங்கு இல்லாது விட்டாலும் நாங்கள் இதனை செய்து முடிப்போம் வடக்குமாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனக்கூறியுள்ளார்கள் ஜனாதிபதியின் செயலாளர் கூறிய முக்கிய விடையம் வடக்கு மாகாணம் மட்டுமன்றி எந்த மாகாணத்தில் ஆவது முதல் நிலையில் இருக்கும் வைத்தியசாலையின் தேவைகள் கல்வித் துறையின் குறைபாடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் வேலை வாய்ப்பு மற்றும் விவசாயத் தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கான பனிப்புரையை விடுத்துள்ளார்கள். குறித்த வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு குறித்த அதிகாரிகளுடன துணையாக இருப்பேன்.
அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் முரண்பட்ட கொள்கைகளுக்க அப்பால் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால் ஒரு ஆளுநராக மட்டுமன்றி இந்த மாவட்டத்தின் மாகாணத்தின் ஒருவராக இருந்து செயற்படுவேன்.
இளவாலை பத்தாவத்தையைச் சேர்ந்த நான் பிறந்து வளர்ந்து பெற்றோரின் தொழில் வாய்ப்பு காரணமாக பல்வேறு இடங்களுக்கும் சென்று யாழ்.பல்கலைகக்ழகத்தில் படித்து நிர்வாக சேவையில் இணைந்து கொண்டேன் ஆனால் எனது சேவைக்காலத்தில் எனது சொந்தமாவட்டத்தில் சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனை நான் கூறிவருவேன் ஆனால் சேவையைமுடித்துக்கொண்டு சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. உங்கள் அத்தனை பேருடனும் இணைந்து எத்தகைய விடையங்கள் செய்வது என்று ஜனாதிபதி செயலகத்துடனும் கலந்துரையாடி அதனை முடித்து வைப்பதற்கு இயலுமான வரை நடவடிக்கைகளை எடுப்பேன்.
உங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இங்குள்ள மக்களும் அங்குள்ளமக்களுக்கு ஒருஇணைப்புப் பாலமாக நான் செயற்படுவேன் அங்குள்ள அத்தனை உத்தியோகத்தர்களும் வடக்கு மாகாணத்தில் உங்களுடைய கடமைகளைச் செய்வதற்கு எங்களுடை ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள் பெரும்பான்மையின அரச அதிகாரிகள் கவலையுடன் இருக்கின்றார்கள் எப்போது வடக்கு மக்களுக்கு உதவி செய்வோம் என்று அளுத்தங்கள் விமர்சனங்களுக்குஅப்பால் முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் அனைவரும் என்னுடன் இணைந்து செயற்படுவீர்கள் என உறுதியளித்துள்ளீர்கள் இதைத்தான் நானும் எதிர்பார்க்கின்றேன்
உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் நான் இங்கு வந்திருப்பது யாரையும் குறை செல்வதற்கு யாரையும் எனக்காக மாற்றிக்கொள்ள விமர்சிப்பதற்கும் அல்ல தள்ளி வைப்பதற்கும் அல்ல உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு நம்பிக்கை இருக்கவேண்டும் மாகாணத்திற்கு சேவையாற்றத்தான் வந்திருக்கின்றேன்.
பிள்ளைகள் கொழும்பில் படிக்கின்றார்கள் வேலை செய்கின்றார்கள் வயதான தாய் என்னுடன்இருக்கின்றார் இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் நான்இ தனை ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னுடைய குடும்பத்தில் பல சுகங்களை அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துத்தான் இங்கு வந்துள்ளேன் உங்களது ஆலோசனைகள் அறிவுரைகள் ஆதரவு நிச்சயமாகத்தேவை இந்த மாவட்டத்தை நேசிக்கின்றேன் எனது பெற்றோர் உறவினர் பெற்றோரின் பெற்றோர்கள் உறவினர்கள் இந்த மண்ணுக்காக நிறையபோராடியிருக்கின்றார்கள்
அவர்களின் தியாகங்களுக்கு தலைவணங்கி இந்த மாகாணத்திற்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்வேன் இந்த உறவுப் பாலத்தைப் பயன்படுத்தி 30 வருட யுத்த்தில் இழந்தவற்றையும் கடந்தகாலங்களில் அடைந்து கொள்ள முடியாதவற்றை பெற்றுக்கொள்வற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தக் கேட்டுக்கொள்கின்றேன் இதற்காகத்தான் ஜனாதிபதி ஒன்றரை மாத காலத்திற்கு பின்னர் இதனைச் செய்துள்ளார் ஆதரவு எங்களுக்குத் தேவை என்றார். நன்றி வீரகேசரி
வடக்கு மாகாணத்தின் 8 ஆவது ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார் திருமதி சார்ள்ஸ்
(எம்.நியூட்டன்)
02/01/2020 வடக்கு மாகாணத்தின் 8ஆவது ஆளுநராகவும் முதலாவது பெண் ஆளுநராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமனம் பெற்ற திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மதத் தலைவர்களின் ஆசீர்வாங்களைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொண்டார். நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மாகாணநகரசபை முதல்வர் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து ஆளுநர் உரை இடம்பெற்றது.
ஆளுநரின் கடமையேற்பு நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வைத்திய சிவமோகன் வடக்கு மாகாணத்தின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், வடக்குமாகாணத்திலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள் மாகாண அதிகாரிகள் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்படையைச் சேர்ந்தேர் பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
02/01/2020 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழிலுள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க இணைப்பாளர் தாக்கப்பட்டது, மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்து, அவரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் பதாகைகளை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலர் பறிக்க முற்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

அத்துடன் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் உறவுகள் ஈடுபட்டிருந்த வேளை அதீத சத்தத்துடன் அலுவலகத்தினுள் இருந்து பாடல்களை ஒலிக்க விட்டு, ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி.யினர் ஈடுபட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஜனாதிபதியின் நோக்கங்களுக்கு அமைய இலங்கை பாதுகாப்புப்படை செயற்படும் - சவேந்திர சில்வா
(ஆர்.யசி)
02/01/2020 நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் உயரிய மட்ட சேவையினை செய்வோம். அதேபோல் ஜனாதிபதி எதிர்பார்க்கும் விதத்தில் பாதுகாப்பு படைகளை கொண்டு நடத்துவோம் என பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக இன்று பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டப வளாகத்தினுள் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தினுள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக தனது புதிய பதவியை பொறுப்பேற்றார் சவேந்திர சில்வா.

இந்த நிகழ்வு முப்படையினரால் கௌரவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, உபகரன மாஸ்டர் ஜெனரல் எம்.எ.எ டி ஶ்ரீநாக, போர்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்திரசேகர, இராணுவ செயலாளர் நாயகம் பி.ஜே. கமகே மற்றும் முப்படை அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
02/01/2020 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பெரும்பாலும் இம் மாதத்தின் இரண்டாம் வாரம் அளவில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, அவர் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயமாக இது அமைந்துள்ளது.
கடந்த மாதம் சீனத் தூதுவர் மூலம் சீனாவுக்கு வருமாறு அந் நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் விடுத்த அழைப்புக்கு இணங்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலும் பரஸ்பட விடயங்கள், முதலீட்டு நடவடிக்கைகள், சுற்றுலா மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் விடயங்கள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அது மாத்திரமில்லது ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட இலங்கையில் சீனா மேற்கொண்டுள்ள முதலீட்டு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளன. நன்றி வீரகேசரி
02/01/2020 மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின், யாழ்ப்பாணம் வரை அதிவேகப் நெடுஞ்சாலை அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
கண்டி - கொழும்பு மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையான ருவன்புர அதிவேகப் நெடுஞ்சாலையும், குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையான அதிவேகப் பாதையும் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அதிவேகப் பாதைக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயமான இழப்பீட்டு முறை அமுல்படுத்தப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார். நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனிதப் பொருளை தரிசித்ததன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
கண்டி நகரின் வாகன நெருக்கடியைக் குறைப்பதற்காக விலியம் கொபல்லாவ மாவத்தையிலிருந்து தென்னக்கும்புர வரை 5 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுரங்க வழிப் பாதை அமைக்கப்படும். நகரின் வாகன நெரிசலை தவிர்க்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஆரம்பிக்கப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். நன்றி வீரகேசரி
01/01/2020 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (01.01.2020) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனநாயக போராட்டத்தை வன்முறையால் அழிக்கமுடியாது ஐ.நாவே அமைதிகாக்கும் படையை உடனே அனுப்பு, அமெரிக்கா ஜரோப்பிய ஒன்றியம் இந்தியா போன்றவை ஓணாய்களிடம் இருந்து தமிழர்களை பாதுகாக்க உடனேவர வேண்டும். தாக்கியவர்களை கடவுள் தண்டிப்பார் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். நன்றி வீரகேசரி
31/12/2019 வடக்கு மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்போது கடமையாற்றும் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
வடக்கு மாகாணத்திலிருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேனநாயக்கவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடன் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உண்டு என்று மூத்த சட்டத்தரணி ஒருவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையிலேயே தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஒரே மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி இந்த ஆண்டு இடமாற்றம் பெற்று வந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த இடமாற்றத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய தரப்புகளிடம் மேன்முறையீடு செய்துள்ளனர். மேலும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 10 ஆண்டுகள் கடந்தும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லாது யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் சேவையாற்றி வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிட்ட த்தக்கது. நன்றி வீரகேசரி
30/12/2019 கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 422 ஆசிரியர்கள் உள்வாங்கப்படுகிறார்கள். அவர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக கவ்விப்பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள் தமது இடமாற்றத்துக்கு விண்ணப்பித்திருந்தபோதிலும், பல ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவைகள், இடமாற்றத்துக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. நிராகரிக்கப்பட்டமைக்கு அதுவே காரணமாகும்.

இடமாற்றம் பெறுகின்ற ஆசிரியர்களின் முழுவிபரங்களும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கான இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதிலிருந்து தமக்குத் தேவையான தகவல்களை ஆசிரியர்கள் பெற முடியும். இடமாற்றம் பெறுவோர் தங்களுக்கான இடமாற்றக் கடிதங்களை தற்போது கடமையாற்றும் வலயக் கல்விப் பணிமனையிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய பாடசாலையில், அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்பதாக, கடமையிலுள்ள பாடசாலைக்குரிய ஆவணங்களையும் பொருட்களையும் அதன் அதிபரிடம் ஒப்படைத்துவிடல் வேண்டும் என அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
ஜனாதிபதி, பிரதமருடன் சுவாரஷ்யமாக கலந்துரையாடிய சம்பந்தன்
(ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வஸீம்)
03/01/2020 ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜகபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆயியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் மிகவும் சுவாரஷ்யமாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் மிகவும் சுவாரஷ்யமாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் அருகில் இருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு வாழ்த்து தெரிவிக்கும்வகையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கைகொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து மிகவும் அன்னியோன்னியமாக அளவலாடிக்கொண்டிருந்தார்.பின்னர் இவர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பலரும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அத்துடன் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த வெளிநாட்டு தூதுவர்கள் ராஜதந்திர அதிகாரிகள் என பலரும் இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment