மழைக்காற்று -- தொடர்கதை – அங்கம் 17 - முருகபூபதி


முதல்நாள் இரவு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டதனால் உடலோடு ஒட்டிக்கொண்ட பயணச்சோர்வு – டெங்கு காய்ச்சலிலிருந்து மீண்டதனால் வந்திருக்கும் உடல் அசதி யாவும் சேர்ந்திருக்கும்போது,  அந்த மாணவர்கள் குறிப்பிட்ட தான் இருக்கும் வீட்டிலிருக்கும் ஒரு அன்ரிதான் நாவன்மைப்போட்டிக்கான உரையும் எழுதித்தந்து பயிற்சியும் வழங்கியிருக்கும் தகவல், கற்பகம் ரீச்சரை மேலும் அவதிக்குள்ளாக்கியிருக்கிறது.
“ யார் அந்த அன்ரி..? “ என்ற மனக்குழப்பதுடன் வகுப்புகளை கடமைக்காக பார்த்துக்கொண்டிருக்கிறாள். நேரம் மெதுவாக நகர்வது போலிருக்கிறது.
இன்னும் சில நாட்கள் லீவு எடுத்து வீட்டில் நின்றிருக்கலாம். அவசரப்பட்டு வந்துவிட்டேன். கரும்பலகையின் அருகில் எழுந்து நின்று பாடங்களை எழுதி விளக்கவும் விருப்பமற்றிருந்தது.
தமிழ்ப்பாட நூலில் ஒரு அங்கத்தை எடுத்து, அமைதியாக
மனதிற்குள் வாசிக்கச்சொல்லிவிட்டு,  பதிவுப்புத்தகத்தில் ஏதோ எழுதத்தொடங்கினாள்.
பாடசாலைவிடும்  நேரத்தின் மணியோசைக்கு காத்திருந்து,  அன்றைய தனது இறுதிப்பாடம்  எடுக்கவேண்டிய  அடுத்த வகுப்பறைக்குச்சென்றாள்.
அந்த வகுப்பறையில் பாடம் முடித்து வெளியே வந்த மங்களேஸ்வரி ரீச்சர் எதிர்ப்பட்டாள். அம்மாணவர்களின் உரை பற்றி அவள், மீண்டும் தன்னிடம் சிலாகித்துவிடக்கூடாது என்ற வேண்டுதலோடு, மெல்லிய புன்னகையை தவழவிட்டவாறு, உள்ளே சென்றாள்.
மாணவர்கள் எழுந்து ஏககுரலில்,  “ வணக்கம் ரீச்சர் “  என்றனர். அந்த வகுப்பு மாணவர் தலைவி, அருகில் வந்து  “ எப்படி சுகம் ரீச்சர்..?  “ எனக்கேட்டாள்.
 “ அகல்யா,  எனக்கு தலையிடிக்குது.  பெனடோல் போடப்போறன்.  கன்ரீனுக்குப்போய் சூடாக ஒரு கோப்பி எடுத்துவாரியா..?  “ பணம் கொடுத்து அனுப்பினாள்.
 கோப்பியுடன் வந்த மாணவி அகல்யா,   “ வீட்டுக்குப்போய் ரெஸ்ட் எடுங்க ரீச்சர். “  என்றாள்.
 “ தேங்ஸ் அகல்யா.  நீ இம்முறை தமிழ்த் தினவிழா பேச்சுப்போட்டிக்கு ஏன் செல்லவில்லை. நீயும் நல்லாப் பேசுவாய்தானே..?  “ எனக்கேட்டாள் கற்பகம்.

 “ இல்ல… ரீச்சர். ஏ.எல். சோதினை வருது. வீட்டில் வேண்டாம் என்றாங்க.  “ அகல்யாவின் பதிலும் கற்பகத்திற்கு ஏமாற்றமாகவிருந்தது. அவளின் அபிமான மாணவிதான் அகல்யா.

வீட்டிலிருக்கும் அபிதாவுக்கு பாடசாலை முடியும் நேரம் தெரியும். வாசல் கதவை திறந்து வைத்து, கற்பகம் ரீச்சர் வந்தால் கேட்டைத்திறப்பதற்கு காத்திருந்தாள். கேட் எப்போதும் மூடப்பட்டு, சங்கிலியால் பூட்டப்பட்டிருக்கவேண்டும் என்பது வீட்டுக்காரி ஜீவிகாவின் கட்டளை.
தினமும் கேட்டை திறப்பதும், பிறகு  மூடி சங்கிலியை பூட்டினினால் பிணைத்துவிடும் வேலையையும் செய்துகொண்டிருப்பவள் அபிதா.
வெளியே கேட்டருகில் வந்த கற்பகம் ரீச்சர், அதில் தட்டி ஒலிஎழுப்புவதற்கிடையில் அபிதா துள்ளிக்கொண்டு ஓடி வந்து திறந்து,  “ வாங்க ரீச்சர்    அழைத்தாள்.
கற்பகம் பதிலுக்கு ஏதும் சொல்லாமல், வேகமாக வந்து, கூடத்தின் சோபாவில் குடையையும் கைபேக்கையும், டிபன் பொக்ஸையும் போட்டுவிட்டு, சாய்ந்துகொண்டு நெற்றியை அழுத்தி தடவினாள்.
 “ தலையிடிக்குதா ரீச்சர்.  பெணடோல் தரட்டுமா..?  “அபிதா பரிவோடு கேட்கிறாள்.
 “ வேண்டாம். ஸ்கூலில் இரண்டு போட்டுக்கொண்டன்.     எழுந்து தனது அறைக்குச்சென்றாள்.
அபிதா, கற்பகத்தின் டிபன் பொக்ஸை எடுத்து கழுவி வைப்பதற்காக திறந்தாள். அன்று காலை அவள் செய்துகொடுத்திருந்த லெமன் ரைஸ் பாதிதான் குறைந்திருக்கிறது.  அன்றைய உணவு பற்றி கற்பகம் அவளிடம் ஏதும் சொல்லாமலேயே அறைக்குள் புகுந்து கட்டிலில் விழுந்ததும் அபிதாவுக்குச்  சற்று ஏமாற்றமாகவிருக்கிறது.
ஒவ்வொருவரது உள்ளமும் காடு போன்றது. அதற்குள்ளே என்ன இருக்கும் என்பதை அறியமுடியாதுதானே. ரீச்சருக்கு நிகும்பலைக்கு  திரும்பி வந்ததிலிருந்து மூட் சரியில்லை. ஏதும் கேட்கப்போனாலும் எரிந்து விழலாம். அபிதாவுக்கு பசித்தது.
அவள் தானே சமைத்ததை  உண்ணும்போது, பசியிருந்தாலும் வயிற்றில் இறங்குவதில்லை. அவளது தாய் முன்பொரு சமயம் சொன்னது நினைவுக்கு வருகிறது.
உணவு சமைத்தபோது  கையளைந்த கையினால் சாப்பிடுது சிரமம்தான். என்னதான் பசி எடுத்தாலும், மற்றவர்களின் கைப்பக்குவத்தில் சாப்பிட்டால்தான் வயிறு நிறையும். அம்மா, வீட்டில் வளர்க்கப்பட்ட பசுமாட்டில் பால் கறந்து விற்றவள். ஆனால், ஒருநாளும் பசுப்பால் விட்டு தேநீர் குடிக்கமாட்டாள்.
மனித மனங்களின் விசித்திரம் ஆச்சரியங்களையே குவித்துக்கொண்டிருக்கிறதே என எண்ணிக்கொண்டே தனது தட்டில் சோற்றைப்போட்டுக்கொண்டு சாப்பிட்டாள்.
கற்பகத்தின் டிபன் பொக்ஸில் எஞ்சியிருந்ததையும் தனது தட்டில் எஞ்சியதையும் எடுத்துச்சென்று வீட்டின் பின்வளவில் காகங்களுக்கு உணவுவைக்கும் ஒரு கொங்கிறீட் கல்லின் மீதிருக்கும் பழைய அலுமேனிய பாத்திரத்தில் வைத்தாள்.
வைத்துவிட்டு,   “ கா… கா.. கா…. “ என்றாள்.
முதலில் ஒரு காகம் வந்தது. பின்னர் ஒன்று  வந்தது. அவை உணவை கொத்திக்கொத்தி சாப்பிட்டவாறே மற்றக்காகங்களையும் அழைத்தன.  இந்தக்காகங்களின் உள்ளம் காடாக இருக்கமுடியாது. தனது இனத்தை அழைத்து உபசரிப்பதில் எவ்வளவு வெளிப்படையாக இருக்கின்றன.
மனிதர்கள் – ஜீவராசிகளின் படைப்பிலிருக்கும் விசித்திரம் பற்றியே நாள்தோறும் பேசிக்கொண்டிருக்கமுடியும் என்று கணவன் பார்த்திபன் ஒருநாள் சொன்னது அப்போது அபிதாவின் நினைப்பில் வந்தது. தொடர்ந்து குழந்தை தமிழ்மலரின் முகமும் மனக்கண்ணில் தோன்றியதும் விம்மல் வெடித்தது.
குனிந்து, அணிந்திருந்த சோட்டியின் விளிம்பினால் கண்களை துடைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து, திரும்பிப்பார்த்தாள்.
மனிதர்களின் எச்சில் பட்ட உணவை ரசித்து உண்டுவிட்டு, அந்தக்காகங்கள் ஆனந்தமாக பறந்து சென்றுவிட்டிருந்தன.
கற்பகத்தின் அறையிலிருந்து குறட்டை ஒலிவந்துகொண்டிருக்கிறது.  அபிதா, அந்த அறைக்கதவு திரைத்துணியை  சற்று விலக்கிப்பார்த்தாள். அன்று காலை ஸ்கூலுக்கு அணிந்துசென்ற அதே மஞ்சள் நிற நைலெக்ஸ் சாரியை களைந்து வேறு ஆடை அணியாமல் மல்லாந்தவாறு உறங்கிக்கொண்டிருக்கிறாள் கற்பகம்.
அபிதா, அருகே சென்று கட்டிலின் முனையிலிருந்த போர்வையை சரிசெய்து போர்த்திவிட்டுத்திரும்பினாள்.
 ‘ ரீச்சருக்கு டெங்கின் தாக்கம் இன்னமும் குறையவில்லைப்போலும். 
அவள் படுத்துறங்கும்கோலத்தைப்பார்த்தபோது அபிதாவுக்கு வருத்தமாக இருந்தது.  அந்த உறக்கத்திற்குள்தான் எவ்வளவு துயரங்கள் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்..?
அவவை திருமணம் செய்துகொள்வதாக ஜெர்மனிக்கு அழைத்து  ஏமாற்றி,  திருப்பியனுப்பிய மச்சான்காரன் எப்படி இருப்பான்..?
மஞ்சுளாவின் தாயை  இழுத்துக்கொண்டுசென்ற தகப்பனின் சிநேகிதனும், சுபாஷினியை நம்பவைத்து வஞ்சித்துவிட்டு, அவுஸ்திரேலியாவுக்கு படகு ஏறிய நிமால் செனவிரட்ணவும்  தோற்றத்தில் எப்படி இருப்பார்கள்…?
இந்த வீட்டுக்கு வந்து, இங்கிருக்கும் இந்த மூன்றுபெண்களின் கதைகளையும் ஓரளவுதெரிந்துகொண்டாயிற்று. வீட்டின் எஜமானியாக கருதப்படும் ஜீவிகாவுக்கு எப்படியும் நாற்பது வயது கடந்திருக்கும். அவளும் இன்னமும் திருமணம் செய்யாமலிருக்கிறாள். ஏன்…? ஜீவிகாவுக்குப்பின்னாலும் ஏதும் கதைகள் இருக்குமோ..?
அபிதாவின் மனம் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அலைபாய்ந்துகொண்டிருக்கிறது.  கற்பகம் ரீச்சர் எடுத்துச்சென்ற உணவு முழுவதையும் சாப்பிடவில்லை. வீடு திரும்பிய பின்னரும் சரியாக முகம்கொடுத்துப்பேசவில்லை. அபிதா சிறியதொரு பெருமூச்சை விட்டவாறு, ஜீவிகா, மஞ்சுளா, சுபாஷினி அறைகளை சுத்தம் செய்யத்தொடங்கினாள். 
ஜீவிகாவின் அறையில் பத்திரிகைகளும் புத்தகங்களும் கட்டிலிலும் தரையிலும் மடிக்கணினி வைக்கும் மேசையிலும் இறைந்து கிடந்தன.
அவளுடைய அறையை எப்படித்தான் ஒழுங்கு செய்துவைத்தாலும் மீண்டும் அதே இறைந்த கோலத்திற்குத்தான் வந்துவிடும்.
ஜீவிகா பணியாற்றும் பத்திரிகையின் பிரதிகள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து அறையின் தரையில் ஒரு மூலையில்  அடுக்கிவைத்தாள். புத்தகங்களை ஷெல்ஃபில் அடுக்கினாள்.  மேசையில் சிதறிக்கிடந்த விதம்விதமான பேனைகளின் வடிவங்களை ரசித்தாள். தனக்கு ஒன்று தருமாறு ஜீவிகாவிடம் கேட்டுப்பெறவேண்டும்.
அந்த வாரம் ஜீவிகாவின் பெயருக்கு வந்திருந்த மாத இதழ் உறை பிரிக்கப்படாமல் வந்தகோலத்திலேயே கிடந்தது. அதனைப்பிரித்துப்படிப்பதற்கும் அவளுக்கு நேரம் இல்லைப்போலும்.
அபிதா அதனைப்பிரித்துப்பார்த்தாள். கதைகள், கட்டுரைகள், கவிதைகள்.  துணுக்குகள். ஜீவிகாவின் கட்டிலில் அமர்ந்து படித்தாள்.  அந்த அறையை சுத்தப்படுத்த வந்தால்,  அங்கிருந்து வெளியேறுவதற்கு அவளுக்கு நேரம் அதிகம் எடுப்பதன் காரணமும் இதுதான். மஞ்சுளா, சுபாஷினி, கற்பகம் ரீச்சர் அறைகளில் அவள் செலவிடும்  நேரம் குறைவு.
கையிலெடுத்த மாத இதழில் வெளிவந்திருந்த ஒரு போர்க்காலக் கதையை படித்தாள். அதனை எழுதியிருப்பவரின் படமும் வெளியாகியிருந்தது.  அதனை கூர்ந்து பார்த்தாள். எங்கேயோ பார்த்த முகமாகத் தெரிந்தது. கணவன் பார்த்திபனிடம் வந்து சென்றிருக்கும் ஞாபகமும் வந்தது. தானே தேநீர் தயாரித்து கொடுத்திருப்பதும் நினைவுப்பொறியில் தட்டியது.
 ‘ ஓ… இவனுக்கும் கதை எழுதத் தெரிகிறதா…?  போரின் இடரை அதன் வலியோடு எழுதியிருந்தான். அனுபவித்து எழுதிய கதைகளையும்,  அனுபவிக்காமல் கேள்விஞானத்தோடு எழுதப்படும் கதைகளையும் அபிதா முன்னர் படித்திருக்கிறாள்.
இந்தக்கதையை எழுதியிருக்கும், தனது கணவனின் நண்பனான இவன் இதனை எங்கிருந்து எழுதியிருப்பான்…? இங்குதான் இருக்கிறானா..? ஏதும் வெளிநாடு  சென்றிருப்பானா…? அல்லது இவனும் படகு மனிதர்கள் போன்று அவுஸ்திரேலியா கடலை கடந்திருப்பானா..? ஜீவிகாவுக்கு சில வேளை தெரிந்திருக்கும். வந்ததும் கேட்டுப்பார்க்கவேண்டும்.
நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அபிதா, அந்த மூன்று அறைகளையும் சுத்தம் செய்துவிட்டு, பின்வளவுக்குச்சென்று,  கொடியில் காய்ந்திருந்த உடைகளை எடுத்துவந்து மடித்து, அவரவருக்குரியதை தெரிந்தெடுத்து அடுக்கிவைத்தாள்.
அப்போது கற்பகம் சோம்பல்முறித்துக்கொண்டு எழுந்து வந்தாள்.
 “ பகல் சாப்பிடாமல் படுத்திட்டீங்க ரீச்சர். இப்போது சாப்பாடு எடுக்கட்டுமா.. தேநீர் குடிக்கிறீங்களா..?  “ அபிதா கேட்டாள்.
 ‘எதுவும் வேண்டாம் ‘  எனக் கையால் சைகை செய்துவிட்டு குளியலறைக்குச்சென்ற கற்பகத்தின்  மஞ்சள் நிற நைலக்ஸ் சேலை கசங்கியிருந்தது.
இப்போது ஆடை மாற்றியிருந்த  கற்பகம்,   ஒரு டம்ளரில் சுடுதண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்துகொண்டாள்.  இனி அந்த ஆசனத்திலிருந்து அவள் எழுவதற்கு மாலை ஆறுமணியும் ஆகிவிடும். மாறி மாறி ஒவ்வொரு தொலைக்காட்சி நாடகங்களையும் பார்க்கத்தொடங்கிவிடுவாள்.
கேட்டில் தட்டும் ஓசை கேட்டது.
   அபிதா, யாரோ தட்டுறாங்கள். யாரென்று வந்து பார்  “ எனச்சொன்னவாறு தொலைக்காட்சி ரிமோட்டை கையில் எடுத்து ஓடிக்கொண்டிருந்த நாடகத்தை நிறுத்தினாள் கற்பகம்.
அபிதா, தமிழ்த்தினப்போட்டிக்கு பேச்சு எழுதிக்கொடுத்த அந்த இரண்டு மாணவர்களும் வந்திருந்தனர்.
 “ உங்கட மாணவர்கள்தான் ரீச்சர்  “ எனச்சொல்லிக்கொண்டு அபிதா வந்து கேட்டைத்திறந்து அவர்கள் இருவரையும் அழைத்தாள்.
 “ அன்ரி, தேங்ஸ்.  நீங்கள் எழுதித்தந்ததை இன்று ஸ்கூலில்பேசிக்காண்பித்தோம். அதிபரும் மற்ற ரீச்சர்மாரும் நன்றாக இருந்தது என்று சொல்லி பாராட்டினாங்க. அதுதான் உங்களுக்கு தேங்ஸ் சொல்லிட்டு,  இந்த கேக்கும் கொடுத்துவிட்டு வரச்சொல்லி அம்மா அனுப்பினாங்க. இன்றைக்கு எங்கட அப்பாவின் பேர்த்டே.  “ என்றான் ஒரு மாணவன்.
மாணவர்களின் பேச்சரவம்கேட்டு கற்பகம் எழுந்துவந்தாள்.
 அவளைக்கண்டதும்,   “ வணக்கம் ரீச்சர்  “ என்றனர் ஏககுரலில்.
  வணக்கம்.  என்ன இந்தப்பக்கம்…? 
  அபிதாவின் கையில் அந்த மாணவன் தந்த கேக்பொதி இருந்தது.    “ என்ன இது..?  “என்று அபிதாவிடம் கேட்டாள்.
 “ ரீச்சர் இன்றைக்கு எங்கட அப்பாவின் பேர்த்டே. அம்மா இந்த அன்ரிக்கு கேக்  தந்துவிட்டாங்க ரீச்சர்.  இவுங்கதான் எங்கள்  இரண்டுபேருக்கும் தமிழ்த்தினப்போட்டிக்கு பேச்சு எழுதித்தந்து பயிற்சியும் தந்தது.  நீங்கள் ஊருக்குப்போயிருந்தநேரம், இந்த அன்ரிதான்….. “ அந்த மாணவன் சொல்லி முடிக்குமுன்னர் கற்பகம் வெடுக்கென குறுக்கிட்டு,   “ என்ன… அன்ரியா…? இவள் எங்கட வீட்டு வேலைக்காரி… அது என்ன அன்ரி முறை கொண்டாடுற… 
அப்போது அந்த மாணவன்  சொன்னதைக்கேட்டு, கற்பகமும் அபிதாவும் திணறிப்போனார்கள்.
 “ ரீச்சர் உங்களுக்குத்தானே இவுங்க வேலைக்காரி.  எங்களுக்கில்லை. அதுதான் அன்ரி என அழைக்கின்றோம். நல்ல அன்ரி. அதுதான் கேட்காமலேயே எழுதித்தந்து பாராட்டும் கிடைக்கச்செய்தாங்க. 
அந்த மாணவர்கள் இருவரும் அபிதாவைப்பார்த்து,    வாரோம் அன்ரி    எனச்சொல்லிவிட்டு அகன்றார்கள்.
 “ அபிதா, போய் கேட்டை சாத்திப்பூட்டிவிட்டு வா.  கண்டறியாத அன்ரி   “ கற்பகம் கடும் தொனியில் கட்டளையிட்டாள்.
( தொடரும் )
-->
















No comments: