எப்போதும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றிருத்தல் நன்றல்ல - பரமபுத்திரன்

.
இந்த உலகில் தோன்றி விருத்தி அடைந்த மக்களை இரண்டு வகையுள் மட்டும் அடக்கிவிடலாம். ஒன்று காசுக்காக வேலை செய்பவர்கள். மற்றது காசினைக்கொண்டு வேலைசெய்பவர்கள். இந்த உலகில் காசுக்காக வேலை செய்பவர்கள்தான் அதிகம்பேர் வாழ்கின்றனர். அவர்கள்  எப்போதும் காசுக்காக ஓடிக்கொண்டிருப்பார்கள். காசு நிறைந்து விட்டதாய் திருப்தி பெறுவதே  இல்லை. காசு தேவைப்பட்டபடியே இருக்கும்.  வேலை செய்வது அவர்களின் வேலை. எப்போதும் காசு உழைக்க ஒரு வேலை செய்த வண்ணமே இருப்பர். அதாவது வேலைக்குள் தம்மை திணித்து வைத்திருப்பர். அதுமட்டுமல்ல,  ஏதோ ஒரு வகையில் கடனுடன் இருப்பார்கள். அதுவும் பெரும்கடன் அல்ல சிறுகடன். ஆனால் காசினைக்கொண்டு வேலை செய்பவர்களைப் பொறுத்தவரை காசு அவர்களுக்காக வேலை செய்யும். காசுபற்றி எந்தக்கவலையும் அவர்களுக்கு இருக்காது. காசுக்காக வேலை  செய்பவர்கள் அவர்களுக்காக உழைப்பார்கள். காசினைக்கொண்டு வேலை செய்பவருக்கு சிறுகடன் அல்ல பெரும்கடன் இருக்கும். தங்கள் காசை பயன்படுத்தி எல்லோரையும் தமக்காக  வேலை செய்ய வைப்பார்கள். காசுக்காக வேலை செய்பவர்களும், காசினைக் கொண்டு வேலைசெய்பவர்களும் எப்படி பொருளாதார உலகினை  நகர்த்துகின்றது என்று பார்க்கலாம்.

புவி உயிர்கள் மட்டுமல்ல, உயிரற்ற பொருட்களும் நிறைந்துள்ள இடம். இது கடவுளால் படைக்கப்பட்டதோ இல்லை தானாக தோன்றியதோ என்ற வழக்காடல்களை நிறுத்திவைத்துவிட்டு, சுயமாக சிந்தித்துப் பார்த்தால் பூமியானது ஆற்றல்மிக்கவனாக மனிதனைப்படைத்து, புவி  நிலைத்து வாழ தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என்பவற்றையும் படைத்து, நீர், வளி மற்றும்  பிற வளங்களையும் தந்துள்ளது. ஆனாலும் இந்த வளங்களை ஆளுகை செய்யக்கூடிய மனித ஆற்றலின் கீழ் மற்றவை  கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று  கருத்தல்ல. இருப்பினும்  மனித ஆற்றல் அவற்றை கட்டுப்படுத்திவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.  உண்மையில் மனிதனும் மற்ற உயிர்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயற்கையை காத்து, அனுபவித்து வாழந்தால் புவி நிலைக்கும் உயிர்வாழ்வு சுகமாகும். இல்லையேல் மக்கள் அனுபவிக்க கூடிய விளவுகள் என்ன என்று இயற்கை காட்டுகின்றது. அதாவது வெள்ளப்பெருக்கு, வெப்பநிலை ஏற்றம், காட்டுத்தீ, புவிநடுக்கம், வரட்சி போன்றவற்றை குறிப்பிடலாம். இருப்பினும் புவியின் நிலைப்பாடு தொடர்பான எண்ணமின்றியே நாம் வாழ்கின்றோம் என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டிய செய்தி.  
தொடக்க கால வரலாற்றை நோக்கின்,  மனிதனுக்கு பசிதீர்க்க உணவு தேவைப்பட்டது. உணவுண்டு பசிதீர்த்த மனிதனுக்கு வெற்று உடலுடன் இருப்பது நல்லதாக தெரியவில்லை. முழுஉடலையும்  மறைக்காவிடினும் முக்கிய சில பாகங்களை மூடிக்கொண்டான். பசி தீர்த்து, உடல் மறைத்து, இளைப்பாறிய மனிதன் மழை, வெயில், குளிர், காற்று, ஆபத்து விளைவிக்கும் உயிர்கள் என்பவற்றில் இருந்து தப்பிவிட பாதுகாப்பான இடம் ஒன்று தேவைப்பட்டது. ஆரம்பத்தில் இது பாரிய மரத்தின்கீழ், கற்குகைகளினுள் என்று காலம் கழிந்தது. தொடக்கத்தில்  மந்தைகளை வளர்த்து, இயற்கையில் விளைந்த தாவர உணவுகளை உண்டு நாட்களை நகர்த்தினான். இயற்கை உணவுகளிலும் ஆபத்தான உணவுகளை தவிர்த்து உயிர்வாழ உதவும் உணவுகளையும் கண்டுபிடித்து உண்டான். மக்கள் தொகை குறைவு. மனித தேவைகள் குறைவு. மகிழ்வான வாழ்வு. எங்கு செல்வானோ அங்கேயே தங்கலாம். நாட்களை மகிழ்வாய்   கொண்டாடலாம். தமக்கென சொந்தமாக ஒரு இடம் தேவைப்படவில்லை. மற்ற மனிதர்களை தன் கீழ் கொண்டுவர எண்ணவில்லை. எல்லோரும் சமமாக வாழ்ந்தார்கள்.  ஆனால் அது தொடர்ந்து நிலைக்கவில்லை.


நாட்கள் செல்ல நன்னீர் கண்ட இடங்களில் பயிர் செய்ய ஆரம்பித்தான். மந்தை வளர்ப்பை விருத்தி செய்தான். நிரந்தரமாக தங்கி வாழும் வாழ்க்கையை ஆரம்பித்தான். சொந்தமாய் வீடுகள் அமைத்து வாழத்தொடங்கினான். இந்த அடிப்படையில் உணவு, உடை, உறையுள் என்பவை மனிதவாழ்வின் அடிப்படைத்தேவைகள் என முடிவானது. அதிலிருந்து  நிலம், நீர், மலை,  கடல் என்பன   மனிதனால்   உரிமை  கொண்டாட ஆரம்பிக்கப்பட்டன. எனக்கு உனக்கு என போட்டிபோட்டு, போரிட்டு உரிமைகள் பெறப்பட்டன. ஆனால் இன்று அடிப்படைத்தேவைகள் எவை என்று தெரியவில்லை.  கற்கால மனிதன் இன்று இலத்திரனியல்கால   மனிதனாக  மாறிவிட்டான். அதனாலேதான் தேவைகள் பெருகின என்று சொல்லமுடியாது. காரணமின்றிய தேவைகளே எம்மத்தியில் வலிந்து  பெருக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தேவைக்கு மிதமான  சந்தைப் பொருள்களின் நுகர்வு ஊக்குவிக்கப்படுகின்றது.  இங்கு சிறிய உதாரணம் ஒன்றை சொல்லவிரும்புகின்றேன்.

அவுத்திரேலியா சிட்னியில் உண்மையாக நடந்தது. அது ஒரு இறுதிச்சடங்கு நிகழ்வு. இறுதிச்சடங்கு நிகழ்வு முடித்து வீடு திரும்பும் போது ஒருவர் வீடு செல்ல வாகனம் இன்றி நின்றுள்ளார். ஓரளவு வயதானவர். அதாவது ஐம்பது வயதிற்கு மேல் உள்ள ஒருவர். இதனை அவதானித்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் நான் உங்களை அழைத்துச்செல்கின்றேன் என்று கூறியுள்ளார். இருவரும் நடந்து மகிழுந்து வரை சென்றதும் நண்பர் கூறினாராம் வேறு ஒருவர் உள்ளார் நான் அவருடன் வருகின்றேன் என்று. இவருக்கு குழப்பமாக இருந்துள்ளது. இருப்பினும் வீடு சென்றுவிட்டார். பின்பு வேறு நண்பர் மூலம் காரணம் தெரிந்து தனக்குள் சிரித்தேன் என்று எனக்கும் சொல்லிச் சிரித்தார். காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. இவரின் மகிழுந்து பழையது. எனவே தேவை என்பது தகைமையை தீர்மானிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.  இதுதான் காசுக்கு பின் எம்மை ஓடவைக்கும் மனநிலை. இனி தொடர்ந்து பார்ப்போம்.
   

“சாள்சு  டாவின்” எனும் விஞ்ஞானி கூர்ப்பு என்ற செய்தியை புவிக்குச் சொன்னார். கூர்ப்பு என்பது பரிணாமம் என்றும் குறிப்பிடப்படும். டாவினின் கூர்ப்புக்கொள்கைப்படி எந்த ஒரு பொருளும் அல்லது உயிரினமும்  இயற்கை நிலை அல்லது தேவைக்கு ஏற்ப  மாற்றத்திற்கு உள்ளாகிவரும். இயற்கைக்கு ஏற்ப உயிரிகள் தம்மை வளம்படுத்திக்கொண்டு புவியில் வாழ முற்படுதல் தக்கன பிழைத்து  வாழுதல் எனவும்   அல்லவை அதாவது மாற்றத்தை தாங்கமுடியாதவை  மடிந்து  போகும்  என்றும் கூறினார்.  இதையே இன்று எல்லோரும் மாற்றம் ஒன்றே நிலையானது என்று சாதிக்கிறார்கள். மாற்றம் நிலையானது என்பது சரியாக கொள்ளமுடியாது. மாற்றமானது நம்மை அடுத்த படிநிலைக்கு சரியாக நகர்த்திச் செல்லவேண்டும். அவ்வாறு நகர்த்திச் செல்வது என்பது நாம் முன்னேறியிருக்கவேண்டும். தமிழர்களாகிய   நாம் தமிழ்மொழியை விட்டுவிட்டு   நகர்ந்து சென்றால் அது மாற்றமல்ல. எங்கள் கலை கலாசாரத்தை மறந்து  சென்றால் அதுவும் மாற்றமல்ல. அவை சிறந்து சென்றாலே அது மாற்றம். அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வாழ்க்கை நிலை உயர்ந்து செல்லவேண்டும்.


இன்று  சுயசிந்தனை  என்பது பெரும்பாலான  மனிதர்களிடமிருந்து விடைபெற்றுவிட்டது.  எல்லா மனிதர்களும்  ஒரே  நோக்கில் செல்லவும் ஒரேமாதிரி  சிந்திக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.  இலத்திரனியல்  உபகரணங்களின்  வருகையின் பின் உலகமயமாக்கல் எல்லோர்க்கும் சம வாழ்வு என்று கூறியபடிய இந்தநிலை அரங்கேற்றப்படுகிறது. இலத்திரனியல் தொடர்பாடல் ஊடகங்களே மக்களிடம்   செல்லவேண்டிய கருத்துக்களை   சுலபமாக நடைமுறைப்படுத்துகின்றன. தொடர்பாடல் ஊடகங்கள் வலுப்பெற்றுவிட்டன. முதலாளிக்காக உழைப்பவர்கள், சமூக நலன் தொடர்பான சிந்தனையை புறந்தள்ளிவிட்டு, வருவாய்க்கான முறையில்   கருத்துத் திணிப்பை செய்கின்றனர். மக்கள் மீது அக்கறை கொண்டு சரியாக   சொல்லப்படும்  கருத்துகள் தவிர்க்கப்படுகின்றன.  ஊடகங்களின் கருத்துகள்   சரி பிழை  ஆராயாமல்   ஏற்கப்படுகின்றன. தேவை பற்றி சிந்திக்காது மற்றவர்கள் எதனை செய்கிறார்களோ அதனையே நாமும் செய்துவிட துடிக்கிறோம். அதனை ஒரு தகைமை எனவும் நாம் நினைக்கின்றோம்.  சிறிய பிள்ளைகள் கூட விலை உயர்ந்த பொருட்களை வைத்திருக்க விரும்புகின்றான். பெற்றோரும் அதனை நிறைவேற்ற தவறவில்லை. கடன்பட்டாவது வாங்கிக் கொடுக்கின்றார்கள். காரணம் தகைமையை நிலைநிறுத்தல் என்று சொல்லலாம்.  செம்மறிக்கூட்டம் என்ற சொற்தொடரை நாம் அறிந்திருப்போம். அது பற்றியும்  பார்ப்போம்.  


சரியாக சொல்வதானால், செம்மறிக்கூட்டம் என்பதன் கருத்து முன்னே செல்லும் செம்மறி ஆடு ஒன்று செய்வதை தொடர்ந்து அதன் பின்னால் செல்லும் எல்லா செம்மறிகளும் செய்யும்.  உதாரணமாக ஒரு செம்மறி ஆட்டுக்கு முன்னால் குறுக்கே தடி அல்லது கட்டை ஒன்றை பிடித்தால் முதலாவது ஆடு அதனை பாய்ந்து செல்லும். பின்பு குறுக்கே பிடித்த தடி அல்லது கட்டையை எடுத்து விட்டாலும் அதன்பின்னே வரும் எல்லா ஆடுகளும் பாய்ந்தே செல்லும். அது செம்மறிகளின் பழக்கம். அதாவது காரணமின்றி முன்னே ஒருவர் செய்வதை நாமும் செய்தல்.   இதேபோன்று இன்னொன்றையும் கூறலாம். ஆட்டுமந்தை அல்லது மாட்டுமந்தை ஒன்றைக் கருதினால், அது ஒரு குறித்த தொகையான விலங்குகள் கூட்டமாக இருக்கும். இந்த விலங்குகளின் கூட்டத்தை  ஒருவர் அல்லது இரண்டுபேர் மட்டுமே சேர்ந்து வழிநடத்திவிட முடியும்.  அதாவது அந்த விலங்குகளை மனிதர்கள்  தங்கள் எண்ணத்திற்கு ஏற்பவும், விருப்பத்திற்கு ஏற்பவும் பழக்கப்படுத்தி, தங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வைப்பர்.  ஆக  விலங்குகள் மேய்ப்பனுக்கு கட்டுப்பட்டு நடக்கும். தாமாக எதையும் செய்யாது. அவைகளுக்கு ஆற்றல் இல்லை என்று சொல்வது பொருந்தாது, அவற்றின் ஆற்றல்கள் மனிதர்களால் பறிக்கப்பட்டுவிடுகிறது என்பதுதான் உண்மை. அதேவேளை அவற்றிடமிருந்து மனிதனுக்கு தேவையான வளங்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இன்று  எங்களுக்கு தெரியாமல் நாமும் அந்த நிலையில் இருக்கின்றோம். அதாவது நாம் யாரோ ஒருவரால் அல்லது ஒரு கொள்கையால் கட்டுப்படுத்தப்படுகின்றோம். காரணம் காசு  என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு அது மிகவும் முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டதால், எது நடந்தாலும் பரவாயில்லை காசு  வேண்டும்  என்ற மனநிலை எமக்கு ஊட்டப்பட்டுவிட்டது. காசிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கச் செய்யப்பட்டுவிட்டது. எனவே காசு தேடுவதே எமது வாழ்க்கை ஆகிவிட்டது. ஆகவே காசு தேடவே நாம் வாழ்கின்றோம். அதனை பயன்படுத்தி மகிழ்ச்சி அடைந்தோமோ என்பது ஆய்வுக்குரிய ஒன்று. அத்துடன் நாம் நிற்கவில்லை.


ஒரேமாதிரியான சிந்தனை எல்லோரிடமும் விதைக்கப்படுவதால் இன்றைய மனிதர்கள் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதை காணலாம். அதாவது எல்லோரது பேச்சும், செயல்பாடுகளும் பெருமளவில் வேறுபடாமல் ஒன்றாகவே இருக்கும். அதேபோன்று மற்றவர்களையும் தங்கள் வழியில் நடக்க ஊக்கப்படுத்துகின்றனர். இதனை எதிர்காலத்தில் வளமாக வாழவேண்டிய பிள்ளைகள்  மீதும் திணிக்கின்றனர். தன்னால் தீர்மானம் எடுக்க முடியாத பிள்ளை  பெற்றோரை நம்பி இருக்கையில், நாம் அந்தப்பிள்ளையை சரியாக வழி நடத்துகின்றோமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. கல்வி ஒன்றுதான் எதிர்காலம்   என்று  பிள்ளைகளிடம் திணித்து படிபடி என சித்திரவதை செய்கின்றோம். இதனால் படிப்பது மட்டும் பிள்ளைக்கு தொழிலாகிறது.  ஆனால் நாளுக்குநாள் உலகம் மாறுகின்றது என்ற விதியை இந்த வேளையில் மறந்துவிடுகின்றோம். இதனால் எம்முள் ஆழமாக வேரூன்றிய படித்தால் நன்றாக வாழலாம் என்ற அடிமைத்தளையுள் பிள்ளைகள்  தள்ளப்படுகின்றன. இந்த வழியில் வரும் பிள்ளைகள் தங்களைப்பற்றி தாமே தீர்மானித்து வாழ்பவர்கள் ஆவார்கள் என்று சொல்லமுடியாது. படித்ததன் பலனை அனுபவிக்க வேலை தேடவேண்டும். எனவே நாம் வாழ்ந்த அடிமை நிலைக்கு மீண்டும் எங்கள் பிள்ளைகளையும் தள்ளுகின்றோம். அதாவது காசுக்காக வேலை செய்பவராக மாற்றுகின்றோம்.

நாம் தொடர்ந்து ஒரே வழியில் பயணிக்க முடியாது. மாற்றத்திற்கு தயாராகவேண்டும். நாம் இப்போதும்  காசுக்கு பின் ஓடுவதை செய்கின்றோம். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காசு எங்கள் பிள்ளைகளுக்காக வேலைசெய்யவேண்டும். அதற்காக எங்கள் பிள்ளைகளை பயிற்றுவிக்கவேண்டும்.

பரமபுத்திரன்

No comments: