அதி உயர் வெப்ப நிலைக்கு முகம் கொடுக்கும் ஆஸி - கான பிரபா












04/01/2020  சிட்னியின் Penrith நகரத்தில் இன்று மதிய நேர வெப்ப நிலை 48.9 பாகையாக வரலாற்றில் அதி உச்சமாகப் பதிவாகியிருக்கிறது.
இந்த நகரம் சிட்னியோடு அமைந்த முக்கிய  நகரப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அது போலவே தலைநகர் கன்பெராவிலும் வரலாற்றின் அதி உயர் புள்ளி வெப்ப நிலையாக
 43.8 செல்சியல் பதிவாகியிருக்கின்றது.
இன்று மாலை ஏழு மணியை அண்மிக்கும் வரை இன்னமும் அதி உயர் வெப்ப நிலையாக 45.3 பாகை வெப்ப நிலையிலேயே Penrith பகுதி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வெப்ப நிலையின் தாக்கம் கடந்த செப்டெம்பரிலிருந்து தொடரும் காட்டுத் தீ பரவல், வளி மாசடைதல் போன்ற பிரச்சனைகளைப் பல மடங்கு அதிகமாக்கியுள்ள அச்ச நிலை உருவாகியிருக்கிறது. 

நேற்று நிகழ்ந்த அனர்த்தத்தால் தென் அவுஸ்திரேலியாவின் Kangaroo Island என்ற பகுதி 100,000 ஹெக்டெயர் நிலப்பகுதி உள்ளடங்கலாக இதுவரை மூன்றாவது பெரிய அழிவு என்ற காட்டுத் தீ பேரழிவைச் சந்தித்து இரு மனிதப் பலிகளை எடுத்திருக்கிறது. அங்குள்ள வனவிலங்குச் சரணாலயத்தில் இருந்த விலங்குகளைக் காப்பாற்றப் பெரு முயற்சி எடுத்திருக்கிறார்கள். 

ஆஸி பிரதமர் Scott Morrison இன்று நிகழ்த்திய தகவல் பரிமாற்றச் சந்திப்பில் இதுவரை 23 உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களோடு 1500 வீடுகள் தீக்கிரையானதைக் குறிப்பிட்டு இதுவொரு மிகுந்த சவால் மிகுந்த நாள் என்று அறிவித்தார். மேலும் 3000 இராணுவத் துருப்புகளும், 3 கடற்படைக் கப்பல்களும்,  
பல்வேறு இராணுவ விமானங்களும், ஹெலிகொப்டர்களும் இந்தக் காட்டுத் தீ அபாயம் மிகுந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்ப்டிருப்பதைக் குறிப்பிட்டார்.
அத்தோடு 20 மில்லியன் டாலர்கள் மேலும் புதிய தீயணைக்க வல்ல விமானங்களைக் கொள்வனவு செய்யவும் முதலிடப்பட்டிருக்கிறது எனவும் 140 விமானங்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் தனது ஊடக அறிக்கை வழியாகத் தெரிவித்தார் ஆஸி பிரதமர்.

தகவல் நன்றி
RFS, BOM தளங்கள் மற்றும் சுயாதீன ஊடகர்கள். 
பிரதமர் Scott Morrison இன் Twitter பகிர்வு












No comments: