குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மார்கழி கோலங்கள் : கோலமிட்ட பெண்கள் கைது !
அரசகரும மொழிகளில் ஒன்றாக தமிழை பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் கடும் உறுதி
ஈராக்கில் அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை- தூதுவர் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புட்டின்
அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் எலைட் குட்ஸ் படையின் தளபதி பலி!
ஈரானின் மிக முக்கிய தளபதியை கொலை செய்வதற்கான உத்தரவை டிரம்பே வழங்கினார்- வெள்ளை மாளிகை
சொலைமானியின் கொலை முட்டாள்தனமானது- ஈரான்
அணுசக்தி, ஏவுகணைப் பரிசோதனைகள் தொடர்பான இடைநிறுத்தத்திற்கு முடிவு
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மார்கழி கோலங்கள் : கோலமிட்ட பெண்கள் கைது !
30/12/2019 இந்திய நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வல அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதேவேளை, நேற்றைய தினம் திடீரென தமிழ்நாடு பெசன்ட் நகரில் சில வீடுகளின் முன் வேண்டாம் என்.ஆர்.சி., வேண்டாம் சி.ஏ.ஏ. என பெண்கள் கோலமிட்டிருந்தனர். இது போல் கோலம் வரைந்த 6 பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கனிமொழி வீட்டிலும், இன்று காலையும் என்.ஆர்.சி.க்கு எதிரான கோலமிடப்பட்டிருந்தது.
அதேபோல், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும் திமுக தலைவர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் வேண்டாம் சிஏஏ, என்ஆர்சி என கோலமிடப்பட்டது.
அது போல் தமிழ்நாடு முகப்பேர், சேலம் ஆகிய இடங்களில் தி.மு.க. மகளிரணி சார்பில் கோலம் போடப்பட்டது. இன்னும் சில இடங்களில் நோ என்.ஆர்.சி., நோ சி.ஏ.ஏ. என மெஹந்தியில் மக்களின் கைகளில் எழுதப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பூரில் வீதியில் நிறபூச்சால் எதிர்ப்புத் தெரிவித்து வாசகங்கள் எழுதப்பட்டன.
இந்த நிலையில் பெசன்ட் நகரில் கோலமிட்டு கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தனர்.
இதுகுறித்து முகஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
” மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அ.தி.மு.க. அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர்.
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி! ” என கருத்து தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி
31/12/2019 சிங்கப்பூரின் அரசகரும மொழிகளில் ஒன்றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. தமிழ்மொழி சிங்கப்பூர் பாராளுமன்றத்தில், பாடசாலைகளில் தாய்மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் தமிழுக்கு மிகவும் ஆதரவாக இருப்பதுடன், ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலம், சீனமொழி மற்றும் மலே மொழி ஆகியவற்றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்டுக்களில் அச்சிடப்படுகிறது. தமிழுக்குரிய அந்த அந்தஸ்தை எந்தத் தடங்கலுமின்றித் தொடர்ந்து பேணுவதில் அரசாங்கம் முழுமையான உறுதியுடன் இருக்கிறது.
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன் கடந்த ஞாயிறன்று வெளியிட்டுவைத்த 'தமிழ் சமூகமும், நவீன சிங்கப்பூரின் உருவாக்கமும்' என்ற நூலில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நேர்காணலொன்றிலேயே அந்நாட்டின் வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புகள் அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த நூலை அந்நாட்டில் வாழும் இந்தியரான 'ஒன்லைன் வொய்ஸ்' என்ற இணைய ஊடகசேவையின் ஆசிரியரான சௌந்தரநாயகி வைரவனும், மூத்த சிங்கப்பூர் பத்திரிகையாளரான ஏ.பி.ராமனும் கூட்டாக எழுதியிருக்கிறார்கள்.
'தமிழ் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடும், அதற்கு வழங்கப்படுகின்ற ஆதரவும் மிகவும் தெளிவானது. மிகுதி தமிழ்ச் சமூகத்தின், குறிப்பாக எமது இளைஞர்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. அவர்கள் தமிழை ஆரத்தழுவி அன்றாட வாழ்வில் பயன்படுத்தி அதனை வாழும் மொழியாக ஆக்கவேண்டும்.
இளந்தலைமுறையினரையும், பரந்துபட்ட தமிழ்ச்சமூகத்தையும் தமிழின் வளர்ச்சியிலும் அதன் கலாசாரத்திலும் தீவிரமாக ஈடுபடுத்துவதற்குத் தமிழ்மொழி உற்சவங்களை ஏற்பாடு செய்வது ஒரு வழியாகும்' என்று ஈஸ்வரன் நேர்காணலில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நூல் ஆரம்ப நாட்களில் சிங்கப்பூரில் இந்தியர்களின் வருகையை ஆவணப்படுத்துகிறது.
அவ்வாறு வந்த இந்தியர்களில் சிப்பாய்கள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள், கடன்கொடுப்பவர்கள், சிவில் சேவையாளர்களும் அடங்குவர். காலனித்துவ அரசாங்கம் இந்தியாவில் குற்றவாளியாகக் காணப்படுகின்றவர்களை 1787ஆம் ஆண்டு முதல் சுமாத்திராவிலுள்ள பென்கூலன் பகுதிக்கும், 1990ஆம் ஆண்டிலிருந்து மலேசியத் தீபகற்பத்திலுள்ள பினாங்கிற்கும் அனுப்பிக்கொண்டிருந்தது.
1830களில் சிங்கப்பூரும், மலேசியத்தீபகற்பத்தின் மலாக்கா மற்றும் பினாங் துறைமுக நகரங்களும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் காலனிகளாக மாறின என்று ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்ச்சியற்ற தொழிலாளர்களையும், ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களையும் பெறுவதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இந்தியா ஒரு பிரதான மூலமாக இருந்தது. இந்தத் தொழிலாளர்கள் ஆரம்ப நாட்களில் சிங்கப்பூரில் உட்கட்டமைப்பு வசதிகளையும், கட்டிடங்களையும் நிர்மாணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டார்கள்.
தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் இயல்பாகவே தங்களது மேலதிகாரிகளின் உத்தரவுகளைப் பணிவாகக் கேட்டுச் செயற்படுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் கல்விப் பின்புலத்தைக் கொண்டிராதவர்களாகவும், தரங்குறைந்த வாழ்க்கை நிலைமைகளின் கீழ் குறைந்தளவு சம்பளத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருந்தார்களென்றும் நூலில் கூறப்பட்டிருக்கிறது.
காலனித்துவ ஆட்சியாளர்கள் வெளியேறிய பின்னர்தான் சிங்கப்பூர் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டது. தமிழ்ச்சமூகமும் பல்துறைகளில் முன்னேறி சிங்கப்பூரின் சுபீட்சமிகு சமுதாயத்தின் ஓரங்கமாக மாறியது.
நவீன காலத் தமிழ்ச்சமூகத்தினால் சிங்கப்பூருக்குச் செய்யப்பட்ட மிக உயர்ந்த சேவையென்று நோக்குகையில் 1999 செப் டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் 2011 ஆகஸ்ட் 31 ஆம் திகதிவரை சிங்கப்பூரின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய எஸ்.ஆர்.நாதன் என்று பிரபலமாக அறியப்பட்ட செல்லப்பன் நாதனின் சேவையாகும்.
அதேபோன்று ஏனைய இந்தியர்கள் அமைச்சர்களாக, சிரேஷ்ட சிவில் சேவை யாளர்களாக, தனியார்துறையில் வர்த்தகத் தலைவர்களாகவும் சேவையாற்றியிருக்கி றார்கள் என்றும் அந்த நூலில் கூறப்பட்டி ருக்கிறது. நன்றி வீரகேசரி
31/12/2019 ஈராக் சிரியாவில் உள்ள ஈரானிய ஆயுத குழுக்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட விமானதாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் ஈராக்கிய தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் நுழைந்துள்ளது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈராக்கில் கடும்பாதுகாப்பிற்கு மத்தியில் காணப்படும் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள்ளேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்தின் மதில் மற்றும் வாயில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழமையாக தடை செய்யப்பட்ட பச்சை வலயத்தின் ஊடாக ஈரானின் ஆதரவாளர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு பேரணியாக சென்ற பின்னர் தூதரகத்திற்கு வெளியே பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
தூதரகத்தின் ஜன்னல்கதவுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைப்பதையும் தூதரகத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதேவேளை பாதுகாப்பு காரணங்களிற்காக அமெரிக்க தூதுவரும் தூதரக பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களே இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ரொய்ட்டர்ஸ் அவர்கள் தூதரகத்தின் வாயில்கதவில் வாசகங்களை எழுதியதுடன் கற்களால் கண்காணிப்பு கமராக்களையும் ஜன்னல்களையும் சேதப்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
31/12/2019 ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளில் புட்டின் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
1999ஆம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புட்டின் பணியாற்றினார். 1999ஆம் ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி போரிஸ் எல்ட்சின், பொறுப்பு பிரதமராக புட்டினை நியமனம் செய்தார்.
அதன்பின் ஜனாதிபதி பொறுப்பை போரிஸ் எல்ட்சின் 1999ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி ராஜினாமா செய்தார். அப்போது பொறுப்பு ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டினை நியமித்தார்.
அப்போது கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளி தாக்குதலை புட்டின் நடத்தியமையால் ரஷ்ய மக்களிடம் பெரும் புகழ் பெற்றார்.
அன்றுமுதல் புட்டின் ரஷ்யாவில் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகிய 2 பதவிகளில் ஏதாவது ஒன்றை வகித்தபடி தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வந்துகொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் புட்டின் அபாரவெற்றி பெற்றார். அவர் 2022ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருப்பார். ரஷ்ய நாட்டு அரசாங்கத்தை தனது கை விரல் நுனியில் வைத்திருக்கும் புட்டின் இன்று தனது அரசியல் பயணத்தின் 21ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
புட்டின் 20 ஆண்டுகளாக ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளில் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.
புட்டின் மீது பல்வேறு சர்சைகள் கூறப்பட்டாலும் அவர் ரஷ்யாவில் சக்தி வாய்ந்த தலைவராகவே இருந்து வருகிறார். நன்றி வீரகேசரி
03/01/2020 அமெரிக்க இராணுவம் இன்று காலை பக்தாத்தில் உள்ள விமான நிலையம் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் நாட்டின் எலைட் குட்ஸ் படையின் தளபதி ஜெனரல் குவாசிம் சோல்மானி கொல்லப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வந்த கிளர்ச்சிப்படை பாப்புலர் மொபைலைசேஷன் ஃபோர்ஸ்(பிஎம்எப்) படையின் துணைத் தளபதி அபு மஹதி அல் முஹன்திஸும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்
ஈரான் ஆதரவில் செயல்பட்டுவந்த இஸ்லாமிக் ரெவலூஸனரி கார்ட் கார்ப்ஸ் படையின் தலைவராக குவாசிம் சோல்மானி செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் நாட்டின் 2 ஆவது அதிகாரம் படைத்த தளபதியாக குவாசிம் சொலைமணி பார்க்கப்பட்டார். அதாவது மூத்த தலைவரான அயாத்துல்லா அலி காமேனுக்கு அடுத்தபடியாக சுலைமான் கருதப்பட்டார்.
மெத்தமாக இந்த தாக்குதலில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தளபதி குவாசிம் சோல்மானி கொல்லப்பட்டதை அவர் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் பலமுறை சோல்மானி கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகின.
கடந்த 2006 ஆம் ஆண்டு விமான விபத்தில் சோல்மானி இறந்ததாகவும், 2012 ஆம் ஆண்டில் டாமஸ்கஸில் வெடிகுண்டு தாக்குதலில் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
03/01/2020 பக்தாத்தின் சர்வதேச விமானநிலையத்தில் ஈரானின் மிக முக்கிய இராணுவ அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கான உத்தரவினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வழங்கினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரான் முன்னெடுத்த நடவடிக்கைகளிற்கான தளபதியாக விளங்கிய, அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜெனரல் காசெம் சுலைமானி பக்தாத் விமானநிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பிஎம்யூ எனப்படும் ஈரான் சார்பு ஆயுத குழுக்களுடன் ஈரானின் இராணுவதளபதி சென்றுகொண்டிருந்தவேளை இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பிஎம்யூ அமைப்பின் தலைவர் அபுமஹ்டி முகான்டசும் கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானின் இராணுவ அதிகாரியும் ஈரான் சார்பு ஆயுதகுழுக்களை சேர்ந்தவர்களும் இரண்டு கார்களில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.
டிரோனிலிருந்து மேற்கொள்ளப்பட்டபல ஏவுகணைகள் கார்களை தாக்கின என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள அமெரிக்க படையினரையும் இராஜதந்திரிகளையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை ஜெனரல் சுலைமானி வகுத்துக்கொண்டிருந்தார் என பென்டகன் தெரிவித்துள்ளது.
ஈரானின் எதிர்கால தாக்குதல் திட்டங்களை முறியடிக்கும் நோக்கிலேயேஇந்த தாக்குதல் இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ள பென்டகன் உலகம்முழுவதும் உள்ள எங்கள் மக்களையும் நலன்களையும் பாதுகாப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் எனவும்தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
03/01/2020 ஈரானின் முக்கிய இராணுவதளபதியை அமெரிக்கா தனது ஆளில்லா விமானதாக்குதல் மூலம் கொலை செய்துள்ளதை ஈரான் முட்டாள்தனமான மிருகத்தனமான செயல் என வர்ணித்துள்ளது.
தளபதி சொலைமானியை படுகொலை செய்யும் அமெரிக்க பயங்கரவாத படைகளின் முட்டாள்தனமான ஈவிரக்கமற்ற நடவடிக்கை பிராந்தியத்திலும் உலகிலும் அமெரிக்க எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் முகமட் ஜவாட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலை ஆபத்தான முட்டாள்தனமான நிலைமையை கொந்தளிப்பாக்கும் நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
02/01/2020 வடகொரியாவானது தனது அணுசக்தி நிகழ்ச்சித் திட்டங்களை விருத்தி செய்வதை தொடர்ந்து மேற்கொள்வதுடன் விரைவில் புதிய தந்திரோபாய ஆயுதமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் யொங் உன் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.
வருட இறுதிக்குள் வடகொரியாவுடன் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான காலக்கெடுவை அமெரிக்கா தவறவிட்டதையடுத்தே வடகொரிய தலைவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வகையில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின்போது அணுசக்தி மற்றும் நீண்ட தூர ஏவுகணை பரிசோதனைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கிம் யொங் உன் கூறினார்.
எனினும் பேச்சுவார்த்தைகளுக்கான கதவு தொடர்ந்து திறந்தே உள்ளதாகவும் அது அமெரிக்காவின் மனோபாவத்தில் தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
வடகொரியா தனது அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை அந்நாட்டுக்கு எதிரான தடைகளை நீக்க அமெரிக்கா மறுத்திருந்தது.
கடந்த ஆண்டின் இறுதியில் வட கொரியா அமெரிக்காவுக்கு தனது நாட்டுக்கு எதிரான தடைகளை நீக்க அழுத்தம் கொடுக்கும் வகையில் பல சிறிய ரக ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தது.
அணு ஆயுதப் பரிசோதனைகள் மற்றும் அமெரிக்க பிரதான நிலப்பகுதியை சென்றடையக்கூடிய கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமையைக் கொண்ட ஏவுகணைகளை ஏவிப் பரிசோதிப்பது என்பனவற்றை நிறுத்துவதற்கான சுய பிரகடனம் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளங்களில் ஒன்றாகவுள்ளது.
இந்நிலையில் வடகொரியத் தலைநகரில் வழமைக்கு மாறான முறையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் 4 நாள் கூட்டத்தின் முடிவில் கிம் யொங் உன் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு வடகொரியாவால் திரும்பத் திரும்ப விடுக்கப்பட்ட அழைப்பை அலட்சியம் செய்த நிலையில் வடகொரிய தலைவர் தனது கட்சிக்கூட்டத்தை கடந்த சனிக்கிழமை கூட்டியிருந்தார்.
வடகொரிய தலைவரின் மேற்படி எச்சரிக்கைக்கு சில மணித்தியாலங்கள் கழித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தன்னால் வெளியிடப்பட்ட அறிக்கையில், கிம் இந்த விவகாரம் குறித்து உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளார் எனவும் வடகொரிய தலைவர் தனது சொல்லை மீறமாட்டார் எனக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் வடகொரிய தலைவருடன் இணைந்து எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
''அவர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளார். அவர் அணு ஆயுதக் களைவு தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார். அது சிங்கப்பூரில் இடம்பெற்றது. அவர் தனது சொல்லைக் காப்பாற்றுவார் என நான் நினைக்கிறேன்'' என ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இது தொடர்பில் குறிப்பிடுகையில், வடகொரியா மோதல் மற்றும் போர் என்பனவற்றுக்கு பதிலாக சமாதானம் மற்றும் சுபீட்சம் என்பனவற்றை தெரிவு செய்யும் எனத் தான் நம்புவதாக கூறினார்.
தனது எதிர்பார்ப்புக்களுக்கு இணங்கத் தவறினால் புதிய பாதையொன்றைத் தான் நாட நேரிடும் என வடகொரியத் தலைவர் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment