09/12/2019 தனித்துவம், உரிமை, இனத்துவ அடையாளம் என்று பேசிப் பேசியே முஸ்லிம் அரசியல் ஒரு முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் கட்சிகளின் அரசியல் முஸ்லிம் மக்களுக்கான அரசியலாக இல்லாமல் போனதே இதற்கு முழுமுதற் காரணமாகும். முஸ்லிம் கட்சிகள் எனும் போது, முஸ்லிம் தலைமைகளின் கட்டுப்பாட்டிலுள்ள எந்தக் கட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல.
அதுமட்டுமன்றி, முஸ்லிம் அரசியல் வாதிகளும் சமூகத்திற்கான அரசியலும் சீர்கெட்டு நாசமாய்ப் போவதை பார்த்தும் பார்க்காதது போல் அல்லது ‘நமக்கேன் வீண் வம்பு, நாம் சொல்லி கேட்கவா போகின்றார்கள்’ என்ற எண்ணத்தில் வாழாவிருந்த புத்தி ஜீவிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் தொழில்வாண்மையாளர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், சமாதான நீதவானுக்காகவும், பொன்னாடைகளுக்காகவும் அலைந்து திரிந்து கொண்டு ‘சமூக ஆர்வலர்’ என்று தம்மை தாமே அழைத்துக் கொண்டு திரிபவர்கள், பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள், விரிவுரையாளர்கள் போன்ற அனைவரும் இதற்கு வகை சொல்ல வேண்டும்.
விசேடமாக, தமது அரசியல் தலைவர்களை நிதானமாக, நடுநிலையாக நின்று நோக்காமல், அவர்களது சரியை சரி எனவும் பிழையை பிழை எனவும் கூற திராணியற்றவர்களாக, மந்திரித்து விடப்பட்ட மந்தைகள் போல இருக்கின்ற கட்சி ஆதரவாளர்கள், அரசியல் போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வக்காளத்து வாங்கும் பேஸ்புக் போராளிகள், வீராப்புப் பேச்சுக்களையும் உணர்ச்சி கரமான உரைகளையும் பாடல்களையும் கேட்டு தமது ஆதரவு யாருக்கென தீர்மானிக்கின்ற முஸ்லிம் மக்களும் இதற்கு பொறுப்பாளிகள்தாம்.
தெரிந்து ஏமாற்றப்படல்
ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டது என்று நம்பி, சீனத் தயாரிப்பை வாங்கினால் அது அதன் வேலையைக் காட்டியே தீரும் என்பார்கள். இங்கு, சீனத் தயாரிப்புக்களை விற்பனை செய்பவர்களை விட சீன உற்பத்திகளை “ஒரிஜினல் ஜப்பான்” என்று கூறி ஏமாற்றி விற்பனை செய்பவர்கள்தான் மிக ஆபத்தானவர்கள். முஸ்லிம் அரசியலில் 98 சதவீதமானோர் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தான்.
எனவே, போலி பொருட்களை ஒரிஜினல் பொருட்கள் என்று நினைத்தும் நீடித்து நிலைத்திருக்கும் என்று நம்பியும் கொள்வனவு செய்து விட்டு, பின்னர் பொருளில் மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதுபோல, சமூக அக்கறையுள்ள, ஒழுக்க விழுமியங்கள் கொண்ட, தீயபழக்கங்கள் இல்லாத, பணத்திற்கும் பதவிக்கும் பின்னால் அலையாத, தைரியமுள்ள, சூடு சொரணையுள்ள ஒரு அரசியல்வாதியை தமது பாராளுமன்ற உறுப்பினராக, தலைவராக முஸ்லிம் சமூகம் தெரிவு செய்யாமல், எல்லாம் பிழைத்துப் போன பிறகு அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை.
தனது பிள்ளை சந்தோஷமாக வாழ வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு தந்தை கேடுகெட்ட ஒருவனை திருமணம் முடித்துக் கொடுப்பவராக இருக்க முடியாது. அதுபோல, பிழையான தெரிவை மேற்கொண்டு விட்டு சரியான பிரதிபலன்களை எதிர்பார்க்க முடியாது என்ற அடிப்படையில், சித்தசுவாதீனமுள்ள ஒவ்வொரு முஸ்லிம் பொது மகனுக்கும், முஸ்லிம்களுக்கான அரசியல் பிழைத்துப் போனதில் பங்கிருக்கின்றது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
தனித்துவ அடையாளம்
முஸ்லிம் தனித்துவ அடையாள சிந்தனையின் தந்தையாக எம்.ஐ.எம்.முஹிதீனை குறிப்பிடலாம். மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மற்றும் சேகு இஸ்ஸதீன் போன்ற பலர் ஒன்றிணைந்து அந்த சிந்தனையை மிக நுட்பமாக அரசியல் மயப்படுத்தினார்கள் எனலாம். தனித்துவ அடையாள சிந்தனையின் முதற்கட்ட வெற்றிக்கு 1990 இற்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் ஆளுமைகளின் பங்கு முக்கியமானதாகும்.
முன்னதாக, இலங்கையில் முஸ்லிம்கள் பெருந்தேசியத்துடன் இணைந்து அரசியல் செய்தனர். இன்னும் இந்தப் பண்பு இணக்க அரசியலூடாக பிரதிபலிக்கின்றது. பின்னர் தமிழர் அரசியலுடன் இணைந்து பயணித்தனர். ஆனால், இன்னுமொரு இனத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் அரசியல் அணியிலிருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத் தன்மையை பாதுகாப்பதும் அபிலாஷைகளை வென்றெடுப்பதும் கல்லில் நார் உரிக்கின்ற வேலை என்பதை அஷ்ரப் போன்றவர்கள் உணர்ந்தனர்.
இந்தக் காலப்பகுதியில் தான் கிழக்கில் ஆயுத இயக்கங்கள் பெருவளர்ச்சியடையத் தொடங்கியிருந்தன. எனவே, முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களில் நம்பிக்கை வைத்து, வழிகெட்டுப் போய்விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் தமக்கிருப்பதை பெருந்தலைவர் அஷ்ரப் உணர்ந்து கொண்டார். இவ்வாறான காரணங்களை பிரதான வினையூக்கியாகக் கொண்டே தனித்துவ அடையாள அரசியல் கோட்பாடு வலுவடைந்தது. அதன் வெளிப்பாடுதான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும்.
இலங்கை முஸ்லிம்கள் சிங்கள மக்களோடும் தமிழ் சமூகத்தோடும் பின்னிப்பிணைந்து வாழ்ந்தாலும் ஏனைய இனங்களைப் போலவே அவர்களுக்கென்று சில தனியான இலட்சணங்கள் இருக்கின்றன. அவர்கள் இஸ்லாமியத் தமிழர்களோ, அல்லது நையாண்டியாக சொல்லப்படும் சொல்வழக்கினால் அழைக்கப்படும் சமூகமோ அல்லர்.
முஸ்லிம்கள் ஒரு தனியான மத, இன அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பதுடன், சரியாக கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு தேசியமும் ஆகும். எனவே, இவ்வாறான காரணங்களால் தனித்துவமான வழியில் அரசியலை முன்கொண்டு செல்வதன் மூலமே முஸ்லிம் சமூகத்தின் பிரத்தியேக விவகாரங்களை சரியாகக் கையாளலாம் என்பது அன்றைய அரசியல் முன்னோடிகளின் கணிப்பாக இருந்தது.
பேரம்பேசல் சாதனைகள்
இந்தப் பின்னணியில் உருவாகி வளர்ச்சி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கத்தைப் பயன்படுத்தி ஸ்தாபக தலைவர் பல விடயங்களைச் சாதித்தார். அவரிலும் தவறுகள் இருந்தன என்றாலும், இன்றிருக்கின்ற அரசியல் தலைவர்களையெல்லாம் விட அவர் எவ்வளவோ பரவாயில்லை என்பதற்கு நாமே சாட்சியாளர்கள்.
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது 11 வருடங்கள்தான். இதில் 6 வருடங்கள் மாத்திரமே அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. இன்றிருக்கின்ற பல அரசியல்
வாதிகளுக்கு பதவி கிடைத்த காலத்தை விட இது மிகக் குறுகிய காலமாகும். இந்தக் காலப்பகுதியில் அவர் செய்த சேவைகளை இன்றும் நாம் பார்த்து வியக்குமளவுக்கு உள்ளன. அவர் வெறுமனே ஆயிரம் விளக்குடன் ‘ஆதவன் எழுந்து வந்தான்’ என்று பாட்டை போட்டு விட்டு, இந்த சமூகத்தை இருட்டுக்குள் விட்டுச் செல்லவில்லை. முடியுமான இடங்களிலெல்லாம் அவர் விளக்கேற்றி வைத்தார்.
பிரேமதாஸவுடனான பேரம்பேசல் மூலம் பிரதிநிதித்துவத் தெரிவுக்கான வெட்டுப்புள்ளியை குறைத்தது மட்டுமன்றி, சமூகத்திற்கு நீண்டகால அடிப்படையில் பயனளிக்கக் கூடிய மாபெரும் அபிவிருத்தித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினார். ஆயிரக்கணக்கான முஸ்லிம், தமிழ், சிங்கள இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கினார். சுருங்கக் கூறின், மக்களில் ஒருவராக இருந்து பிரச்சினைகளை அணுகும் ஒரு தலைவராக அஷ்ரப் இருந்தமையால்தான், முஸ்லிம் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்றார்.
முஸ்லிம்கள் தனித்துவமானவர்கள் என்பதை போலவே அவர்களது அரசியல் அபிலாஷைகளும், வழிமுறைகளும் தனித்துவமானவை என்பதை எம்.எச்.எம்.அஷ்ரப் உரைக்க வேண்டிய விதத்தில் உரைப்பதற்காக கட்சியை பயன்படுத்தினார்.
சமகாலத்திலேயே தனித்துவ அடையாள அரசியலின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், அபிலாஷைகளுக்காக குரல்கொடுத்துக் கொண்டும், பெருந்தேசியத்துடனான இணக்க அரசியல் மூலம் தான் சார்ந்த சமூகத்திற்கு இந்தளவுக்கு சேவையாற்றிக் கொண்டும் வாழ்ந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அதற்கு முன்னரும் - பின்னரும் யாரும் இல்லை எனலாம்.
திசைமாறிய கட்சிகள்
அவரது மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் தலைவிதியே மாறிப் போனது. இனிவரும் காலங்களில் தனித்துவ அடையாளத்தை வேறு ஒரு வழித்தடத்தில் முன்கொண்டு செல்ல வேண்டும் என்று சிந்தித்தே தேசிய ஐக்கிய முன்னணியை அஷ்ரப் ஆரம்பித்தார் என்பது உண்மையென்றால், அதன் தாற்பரியத்தைக் கூட அவரது சிஷ்யர்கள் பலர் புரிந்து கொள்ளவில்லை.
தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்துவந்த பிள்ளைகள் அவரது மறைவுக்குப் பிறகு போவதற்கு வழி தெரியாமல், ஆளுக்கொரு திசையில் பயணிக்கத் தொடங்கினர். ‘இதுதான் தனித்துவப் பாதை’ என்று அவர்கள் எல்லோருமே ஒற்றையடிப் பாதைகளைச் சொன்னதுதான் இதில் விசித்திரமாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக பதவிக்கு வந்த ரவூப் ஹக்கீம் நினைத்ததுதான் தனித்துவம் என்றானது. அதேவேளை, புதுப்புது ‘காங்கிரஸ்களை’ உருவாக்கியவர்களும் அஷ்ரபின் பெயரைச் சொல்லி இன்று வரையும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளும் ‘தனித்துவ அடையாள அரசியல்’ அல்லது ‘முஸ்லிம்களுக்கான அரசியல்’ என்பதன் அர்த்தத்தையே தமக்கு ஏற்றாற்போல் மாற்றி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
ஆகவே, சரியான தனித்துவ அடையாள அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற புரிதல் இன்றியும், அதன் தாற்பரியத்தை உணராமலும், சமூக அக்கறை இன்றியும், முஸ்லிம் கட்சிகள் மற்றும் அந்தக் கோட்பாட்டை பின்பற்றிய அரசியல்வாதிகள் செயற்பட்டமையால், தனித்துவ அடையாள அரசியல் சோபை இழந்து கனகால மாயிற்று. இன்று பெரும் வீழ்ச்சியுடன் தோல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
முகவர் அரசியல்
முஸ்லிம் கட்சி ஒன்று தனித்துவத் தன்மையுடன் செயற்படுவதோடு, தமது சமூகத்தின் அடையாள அரசியலை முன்கொண்டு சென்றவாறு, பேரம்பேசும் ஆற்றலை பயன்படுத்துவதற்காகவே, இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே முஸ்லிம் காங்கிரஸூம் பின்வந்த முஸ்லிம் கட்சிகளும் உருவாக்கப்பட்டன பெருந்தேசியக் கட்சிகளில் நேரடியாகச் சங்கமமாகி இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்ய முடியாத காரியங்களைச் செய்வதற்காகவே தனிக் கட்சி ஒன்று அவசியமாக இருந்தது.
ஆனால், என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். இன்று எல்லா முஸ்லிம் கட்சிகளும் தனித்துவ முஸ்லிம் அடையாள அரசியலின் தன்மையை இழந்திருக்கின்றன. பெரும்பான்மைக் கட்சிகளின் கிளைக் கட்சிகள் போலவே அநேக கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்தப் பின்னணியில், அஷ்ரபின் மரணத்திற்குப் பின்னரான கடந்த 20 வருட காலத்தில் இணக்க அரசியல், பேரம்பேசும் சக்தி என்பவற்றின் ஊடாக பெரிதாக எதையும் சாதிக்க முடியாமல் போயிருக்கின்றது. அபிவிருத்தி அரசியலில் பாராட்டத்தக்க அனுகூலங்களை இணக்க அரசியல் ஊடாக முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ள முடிந்தாலும், உரிமை சார்ந்த விடயங்கள் இன்னும் அஷ்ரப் விட்டுச் சென்ற இடத்திலேயே நிற்கின்றன.
இதை செய்வதற்கு தனித்துவ அடையாள அரசியல் என்ற கோட்பாடும் இத்தனை கட்சிகளும் முஸ்லிம் விடுதலைக் கோஷமும் தேவையில்லை. இதைவிட சிறந்த சேவைகளை பெருந்தேசியக் கட்சிகளில் இருந்த மூத்த முஸ்லிம் அரசியல்வாதிகளே சத்தமின்றி செய்து விட்டுப் போயிருக்கின்றார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, தனித்துவ அடையாள அரசியலோ அல்லது முஸ்லிம்களுக்கான அரசியலோ எதுவாகினும் அது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அரசியல் கலாசாரத்தை பிரதிபலித்துக் கொண்டு, முஸ்லிம்களின் பிரத்தியேக பிரச்சினைகளை ஆட்சியாளர்களுக்கும் ஏனைய சமூக மக்களுக்கும் எடுத்துரைப்பதற்கான கருவியே என்ற தெளிவு சில முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு மிகக் குறைவாக உள்ளது. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் விளைவாக தனித்துவம் பேசி எதுவுமே சாதிக்க கையாலாகாத முஸ்லிம் அரசியல்வாதிகளின் உணர்ச்சிப் பேச்சுக்களும், தவறான வியூகங்களும் முஸ்லிம் சமூகத்தை சிங்கள மக்களிடமிருந்து தூரமாக்கி தனிமைப்படுத்தும் அறிகுறிகளாக தென்படுகின்றன. ‘தமக்கு எல்லாம் தெரியும்’ என்ற முட்டாள்தனமான மனநிலையில் அநேகமான அரசியல் வாதிகள் இருப்பதும், அவர்களை வாக்காளர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் இதற்கு காரணமாகும்.
இறங்குமுகம்
இந்நிலையில், அனைத்து முஸ்லிம் கட்சிகளினதும் சமூகம்சார்ந்த அடையாள அரசியல் வீழ்ச்சி கண்டுள்ளது. தேர்தலில் வாக்குகள் கூடலாம் குறையலாம். ஆனால் 1990களின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் மக்களின் மனங்களில் மு.கா. இருந்த இடத்தில் இப்போது எந்தக் கட்சியும் இல்லை. இதனால், ஒட்டுமொத்தமாக உண்மைக்குண்மையாக முஸ்லிம்களுக்கான அரசியல் இறங்கு முகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. இந்த பின்னடைவு, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளோடு சம்பந்தப்பட்டதல்ல. நாட்பட்ட வீழ்ச்சியின் விளைவாகும். இதை பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உடனடியாக நாளையோ நாளை மறுதினம் தேர்தல் ஒன்று நடைபெற்றால், அதில் எந்தப் பிரசாரமும் செய்யக்கூடாது என்று ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெற்றால் பல முஸ்லிம் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காணலாம். அதுமட்டுமன்றி, இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் மற்றும் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தற்போதைய முஸ்லிம் எம்.பிகள் தோல்வியடையப் போகின்றார்கள். இதிலிருந்தும் இவ்வீழ்ச்சியை பட்டவர்த்தனமாக அறியலாம்.
எனவே, தனித்துவ அடையாள அரசியல் உருக்குலைந்தது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலும் கிட்டத்தட்ட தோல்வி கண்டிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வீழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் உள்ளடங்கலாக, கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்காளிகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
உண்மையிலேயே, நாம் வீழ்ச்சியடைகின்றோம், தோல்வியடைகின்றோம் என்பதை விடவும் அதை உணராமல் இருப்பதுதான் ஒரு சமூகத்திற்கு பெரும் தண்டனை என்பதை முஸ்லிம் சமூகம் நினைவிற் கொள்வது நல்லது.
- ஏ.எல்.நிப்றாஸ் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment