நிலம் சொல்லும் பாடம் - கானா பிரபா“அண்ணை ! சண்டை முடிஞ்சுட்டு தானே?
 யாழ்ப்பாணம் வந்து குடியேறலாமே”

“முதலில் கொழும்பில குடியேறியிருக்கிற
  யாழ்ப்பாணத்தானை யாழ்ப்பாணம் போகச்    
சொல்லு. பின்னால நான் வாறன்”

கனடாவில் இருக்கும் என் ஊடக நண்பருக்கும், ஊரில் இருந்த அவரின் உறவுக்கும் நடந்த சம்பாஷணை இது. 
வேடிக்கையாகத் தோன்றினாலும், இது தான் யதார்த்தம். 

ஒரு வாடகை வீடடில் நாலைந்து மாசம் இருந்து விட்டுப் புது வீடு போனாலே ஏதோ சூனியம் வைத்தது போல இருண்டு போய்க் கிடப்போம், நித்திரையும் வராது.

நிலத்துக்கும், நமக்குமான பந்தம் உணர்வு பூர்வமானது. இந்திய அமைதிப்படை காலத்தில் ஒரு ஊர் முழுக்க கோயிலுக்குள்ளும், பாடசாலைக்குள்ளும் அடைபட்டுக் கிடந்து ஒரு மாதத்தின் பின் தத்தம் வீடுகளுக்குப் போன போதே எதையோ பறி கொடுத்தாற் போலத் தான் போனோம். ஏனெனில் இடைப்பட்ட காலத்தில் அந்த ஊர்ச் சனத்துக்குள்ளேயே ஒரு பலமான உறவு இன்னும் நெருக்கமாகி விட்டது.

ஒன்றல்ல இரண்டல்ல இருபது, முப்பது ஆண்டுகள் தாண்டி இன்னோர் நிலத்தில் குடியேறியவனைப் போய்த் தன் பூர்வீக நிலத்தில் இருக்க வைப்பது ஆலமரத்தைப் பிடுங்கி பூச் சாடிக்குள் வைப்பது போல.
பலர் தமது பால்யத்திலேயே தாய், தகப்பனோடு இடம் பெயர்ந்தவர்கள். அப்படியானால் தன் சொந்த நிலத்தில் பத்து வருடத்துக்கும் குறைச்சலாக இருந்தவன், இன்னோர் இடத்தில் முப்பது வருடங்களைக் கழித்து விட்டான். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல
ஈழத்துக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.
1991 இல் காங்கேசன் துறையில் இருந்து தெல்லிப்பழை ஈறாக இடம் பெயர்ந்து யாழ்பாணத்தின் ஏனைய பகுதிகளில் குடியேறியவர்கள் இன்று மீளத் தம் நிலத்தில் போய் இருக்க மறுக்கக் காரணம் சொகுசுக்காக அல்ல, ஒரு மணி நேரத் தொலைவில் இருக்கும் இடம் பெயர்தலுக்கே இது தான் யதார்த்தம்.

எனது பள்ளிக்கூட நண்பன் ஒருவன் 
போர்க்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து
இலங்கையின்  மலையகத்தில் போய்க் குடியேறியவன் ஒரு வருடத்தில் மீண்டும் எம் ஊருக்கு வந்த போது அவனின் பேச்சு வழக்கு ஈறாக மாறியிருந்தது.

2000 களின் சமாதான காலத்தில் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றோர் எனக்குத் தெரிந்து பலர் “இனிமேல் நான் ஊருக்குப் போய் அங்கேயே வாழப் போகிறேன்” என்று சொன்னவர்களில் முக்கால்வாசிப் பேர் திரும்பி விட்டார்கள். ஒரு சிலர் நோய்ப் பட்டுச் செத்து விட்டார்கள். இதில் ஒரு வேடிக்கையான விடயத்தையும் சொல்ல வேண்டும்.
குளிர் தேசங்களில் முதலில் குடியேறி ஒரு சில மாதங்கள் “ச்சாய் இதெல்லாம் ஒரு குளிரோ” என்றவர்கள் அடுத்த குளிர் காலத்துக்கு நான்கடுக்கு உடுப்போடு திரிவார்கள்.
உடலுக்கே இப்படியொரு இயைவாக்கம் எனும் போது மனசுக்கு எப்படியிருக்கும்?

ஈழப் போராளிகளோடே தின்று, தண்ணீர் குடித்து, ஈழப் பிரச்சனையின் அடியாழம் வரை அறிந்த ஒரு சமூகம் தமிழகத்தில் இருந்தது. அப்போது தமிழகமும் ஈழமும் பெரியம்மா சின்னம்மா உறவு. அந்த மாதிரியான பந்தம் பாரபட்சமில்லாது எல்லாத் தமிழக அரசியல்வாதிகளுக்கும் கூட இருந்தது. 
ஆனால் இன்று ஒரு பெரிய இடைவெளி இரு சமூகங்களுக்கும் இடையில் வந்து விட்டது.

“ரஜினி அரசியலுக்கு வருவாரா?” 
என்ற கரிசனையோடு இருக்கும் ஈழத் தம்பிமாருக்குத் தன் பக்கத்து வீட்டில் எரியும் கொள்ளி பற்றிய அறிய நேரமில்லை.
அது போலவே அகதி என்று ஏளனப்படுத்தி, இந்த மாவீரர் தினத்துக்கு பிரபாகரனையும், பொட்டம்மானையும் வைத்து மீம்ஸ் போட்டுப் பதிலுக்குக் கொண்டாடுகிறார்கள் தமிழகத்தின் 90s Kids.
இன்னொரு பக்கம் சீமான் அணியினால் ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு பெரிய சேதம் விளைவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது பற்றி நிறைய, தனியே எழுத வேண்டும்.

அகதி வாழ்க்கை என்பது திறந்த வெளிச் சிறைச்சாலை. அது அகதி முகாம் மட்டுமல்ல, வெளி நாட்டுக்கு அகதியாகப் போனவன் நிரந்தர வதிவுடமை பெற்றாலும், அவனது ஆசைகள், அபிலாஷைகள், வாழ்க்கை முறை என்று எல்லாம் சேதப்பட்டுத் தான் தன் வாழ்வைத் தொலைக்க வேண்டும். போர்ச் சூழலில் தமிழர் பகுதிகளில் மட்டும் ஆறேழு மடங்கு ஏறிப் போன விலைவாசியில் தன் குடும்பத்தை, சொந்த பந்தத்தைக் காப்பாற்ற மூன்று நான்கு வேலைக்குப் போய் ஓடாய் உழைத்து, களைப்பை மறக்கக் குடித்துச் செத்தவன் எத்தனை பேர் தெரியுமா?
நாமெல்லாம்  சந்தோஷமாக இருப்பதாக நடிக்கிறோம் என்று எத்தனை பேர் உண்மையை ஒத்துக் கொள்வார்கள்?

தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்த அகதிகள் நிலை மிக மிகக் கொடுமையானது. காரணம் கடல் தாண்டி, படகு கவிழ்ந்து, மன்னார் நேவியிடம் சூடு வாங்கி, ஒரே படகில் இருந்த தன் தாயையோ, தந்தையையோ, அண்ணனையோ, அக்காவையோ  அந்த இடத்திலேயே கடலுக்குள் சமாதியாக்கி விட்டுத் தன் உயிரை மட்டும் தாக்காட்ட நாடு கடக்கும் சாகச விளையாட்டு அது.
இந்த நிலையில் விமர்சனங்களைக் கடந்து இத்தனை ஆண்டு காலங்களும் ஈழ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த் இந்திய அரசை இந்த ஒரு காரணத்துக்காகவே அவமதிக்கக் கூடாது.

தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகள் என்ன செய்யலாம் என்று பாடமெடுக்கும் உரிமை, எங்களால் எந்தவொரு அரசியல் மாற்றத்தையும், உணர்வு ரீதியான ஆளுமையையும் செல்லாத தூரத்தில் இது பற்றிக் கருத்துச் சொல்வது அவர்களை அவமதிப்பது போலாகும். இலங்கையில்
நல்லாட்சி அரசாங்கத்திலேயே துப்பாக்கிச் சூடுகளையும், நில அத்துமீறல்களையும் ஊடகங்கள் வழியாக அறிந்த அந்த அகதி முகாம் சமூகம் இன்னும் இன்னும் அச்சத்தோடு 
தான் தம் எதிர்காலம் குறித்துக் கவலை கொள்வார்கள். தான் குடியேறி வாழப் போகும் இடம் எப்படியிருக்கும் என்று தெரிந்திருக்கக் கூட அவர்களுக்கு நியாயமில்லை.

கொழும்பில் ஒருமுறை ஆட்டோ பயணமொன்றில் ஆட்டோ ஓட்டுநர் தமிழர் என்று தெரிந்து பேச்சுக் கொடுக்கிறேன்.
அவர் திருகோணமலையில் இருந்து 90 களில் யுத்த அனர்த்தத்தால் கொழும்புக்கு இடம் பெயர்ந்தவர். இருபது வருடங்கள் இப்போது கொழும்பில்.

“அண்ணை ! 
இனிமேல் உங்கள் ஊருக்குப் போய்க் குடியேறலாமே?
என்று கேட்டேன் அவரிடம்.

“போகலாம் தம்பி, 
ஆனால் அங்கை இப்ப எனக்கு ஆர் இருக்கினம்?

என்று கேட்டார்.

நமக்கெல்லாம் யார் இருக்கிறார்கள்? என்பதே நிலம் சொல்லும் பாடம்.

கானா பிரபா
13.12.2019No comments: