09/12/2019 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை வெளிப்படுத்தும் வரைபடத்துக்கும், விடுதலைப் புலிகளின் ஈழ வரைபடத்துக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார்.
தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து, கணினி வரைகலை மூலம் தயாரிக்கப்பட்ட, வண்ண வரைபடங்கள் பல ஊடகங்களில் உலாவின. ஆனால் யாரும் அதனை அப்போது ஈழ வரைபடத்துடன் ஒப்பீடு செய்திருக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு, மூன்று வாரங்கள் கழித்து அமைச்சர் ரம்புக்வெலவே, இவ்வாறானதொரு ஒப்பீட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எதற்காக அவர் தேர்தல் முடிவையும், ஈழ வரைபடத்தையும் இணைத்து கருத்து வெளியிட்டிருக்கிறார்? இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருக்கக் கூடும்.
விடுதலைப் புலிகளையும், ஈழத்தையும் இழுத்து வந்து அரசியல் செய்வது சிங்கள அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அவர்கள் கடந்த பல தசாப்தங்களாகவே இத்தகைய அரசியலுக்குப் பழக்கப்பட்டுப் போனவர்கள்.
எதற்கெடுத்தாலும், புலிகள், ஈழம் என்று பிரசாரம் செய்து அதனை வாக்குகளாக மாற்றுவதில் அவர்கள் எப்போதும் கெட்டித்தனம் மிக்கவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். அதிலும், பொதுஜன பெரமுனவினர் இன்னும் வீரியமாகச் செயற்படக் கூடியவர்கள் என்பதை செயலளவில் நிரூபித்தவர்கள்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அவர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஏனென்றால் சிறுபான்மையின மக்கள் இந்தளவுக்கு மோசமான வெறுப்பைக் காட்டுவார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றதாக கூறுவதில் இருந்தே அதனை உணர்ந்து கொள்ள முடியும். சிங்கள பௌத்த வாக்குகளால் பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், அதே வெற்றிநடையைத் தொடர்வதற்கும், பொதுஜன பெரமுனவினருக்கு ஈழம், விடுதலைப் புலிகள் போன்றவை தேவைப்படுகின்றன.
ஜனாதிபதித் தேர்தல் வரைக்கும் அவர்கள், நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது, இந்த நிலையில் நாட்டைப் பாதுகாக்கக் கூடிய ஒரே ரெர்மினேற்றர் கோத்தாபய ராஜபக் ஷ தான் என்று பிரசாரம் செய்தார்கள்.
அதற்கு மக்களின் ஆணை கிடைத்து விட்டது. அவர் ஜனாதிபதியாகி விட்டார், மஹிந்த ராஜபக் ஷ பிரதமராகி விட்டார். அவர்களின் அரசாங்கம் தான் ஆட்சியிலும் இருக்கிறது.
இந்தநிலையில், போய் மீண்டும் பாதுகாப்பு என்ற விடயத்தை முன்னிறுத்தி பிரசாரத்தை செய்ய முடியாது. அவ்வாறு பிரசாரம் செய்தால், ரெர்மினேற்றரை தெரிவு செய்தோம் அவர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்புவார்கள்?
அதனால், பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்துவதில் ரம்புக்வெல போன்றவர்கள் இறங்கியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்ற இடங்கள், வடக்கு- கிழக்கு மற்றும் நுவரெலியா ஆகியவற்றில் தான்.
இதனை அடிப்படையாக வைத்து, சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்ற இடங்களை காட்டும் வண்ண வரைபடமும், விடுதலைப் புலிகளின் ஈழ வரை
படமும், ஒன்றல்ல.
விடுதலைப் புலிகளின் ஈழ வரைபடத்தில், நுவரெலியா போன்ற மலையகப் பகுதிகள் இல்லை. இது முதலாவது விடயம் ஆனால் ஈரோஸ் அமைப்பின் ஈழ வரைபடம், மலையகத்தையும் உள்ளடக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் ஈழ வரைபடத்தை வெளிப்படுத்துகிறது என்ற அமைச்சர் ரம்புக்வெலவின் கருத்து, ஈழம் என்ற கருத்தியல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற அச்சத்தை ஊட்டுவதற்காக உருவாக்கப்படுவதாகவே தெரிகிறது.
தற்போது ஆட்சியில் இருக்கும் மஹிந்த ராஜபக் ஷவும், கோத்தாபய ராஜபக் ஷவும், 2009ஆம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்றும், அவருடன் அவரது ஈழக்கனவும் புதைக்கப்பட்டு விட்டது என்றும் அவர்கள் பிரகடனம் செய்திருந்தார்கள். ஈழக்கனவு என்பது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவு மாத்திரமே என்பது போலவே, அப்போது அரசாங்கம் அறிவித்திருந்தது.
“விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை, தமிழ் மக்களை அவர்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்தார்கள், அவர்களின் பிடியில் இருந்து தமிழ் மக்களை மீட்கவே போரை நடத்தினோம்”, என்றெல்லாம் அரசாங்கம் அப்போது, போரை நியாயப்படுத்தியிருந்தது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் நடத்தப்படுகிறது என்பதை மறைக்கவும், இதனை ஒரு பயங்கரவாதத்துக்கு எதிரான போராக சர்வதேச சமூகத்துக்கு காண்பிக்கவும் இவ்வாறு கூறியிருந்தது.
அதனால் விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களையும் வேறுபடுத்திக் காண்பிக்க முயன்றது. ஈழக்கனவு என்பது தமிழ் மக்களின் நிலைப்பாடு அல்ல, தமிழ் மக்கள் ஈழத்தைக் கேட்கவில்லை, அதற்காக போராடவில்லை என்றொரு நியாயத்தை நிறுவ முயன்றது.
ஈழக்கனவை பிரபாகரனுடன் மட்டும் சுருக்கி, அவருடன் சேர்த்தே புதைத்து விட்டதாகவும் எண்ணியது.
அதே அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் தான், இப்போது ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளின் வரைபடம், ஈழ வரைபடத்தை நினைவுபடுத்துவதாக கூறியிருக்கிறார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அழிக்கப்பட்டு விட்டதாக கூறிய அதே ஈழக்கனவை அவர்களுக்கு இந்த வரைபடம் நினைவுபடுத்துகிறது. அவ்வாறாயின், ஈழக்கனவு என்பது பிரபாகரனுடையது மட்டும் தானா அல்லது தமிழ் மக்களுடையதுமா என்ற கேள்வி எழும். இந்தக் கேள்விக்கு, தமிழ் மக்களின் கனவு என்று கூறுவதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இருக்கமாட்டார்கள். அவ்வாறு கூறினால் ஈழக்கனவை தோற்கடிப்பதற்கு தவறிவிட்டார்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விடும்.
ஆனால், அவர்கள் இந்த ஈழ வரைபடத்தை காண்பித்து, நாடு பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதை கூறி சிங்கள மக்களை உசுப்பேற்றப் போகிறார்கள். தமிழர்கள் இன்னமும், பிரிந்து போய் தனிநாட்டை உருவாக்கும் சிந்தனையில் தான் இருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்வார்கள்.
ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்று விடும் என்றும், அது நாட்டின் இறைமைக்கும், சுதந்திரத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுவார்கள். இதன் மூலம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலையும், மாகாணசபைத் தேர்தலையும் அவர்களால் இலகுவாக எதிர்கொள்ள முடியும். அதுவே அவர்களின் இலக்காகவும் இருக்கிறது.
தேர்தல் முடிவுக்கும் ஈழ வரைபடத்துக்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, தமிழ்ப் பேசும் மக்களின் மனநிலை, சிங்கள பௌத்தர்களின் மனநிலையில் இருந்து வேறுபட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த வேறுபாடு எங்கிருந்து எப்படி உருவாக்கப்பட்டது என்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். போர் முடிவுக்கு வந்த பின்னர், தனிநாட்டுக் கோரிக்கையை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் வலியுறுத்தவில்லை. அதுபற்றி பேசுவதும் இல்லை.
தேர்தல் முடிவு வெளியான பின்னர் கூட, யாருமே தப்பித் தவறியும் ஈழ வரைபடத்துடன் ஒத்திருக்கிறது என்று கூறவில்லை.
ஏனென்றால், அது தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு, நலன்களுக்கு ஆபத்தாக அமையும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஒருமித்த நாட்டுக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை எட்டுவதற்கே எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் முனைகிறார்கள்.
ஆனால், ஒரே நாட்டுக்குள் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்களாக சிங்கள அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அதுவே பிரச்சினைகளுக்கும் பிளவுகளுக்கும் காரணம்.
தமிழ் மக்களோ, தமிழ் அரசியல்வாதிகளோ ஈழவரைபடம் ஒன்றை வெளிப்படுத்தும் எண்ணத்தை கொண்டிருக்கவில்லை.
இன நல்லிணக்கத்தைப் பேசிக் கொண்டே, இனங்களுக்கிடையில் சமத்துவம், நீதி, உரிமைகளுடன் கூடிய ஒரு தீர்வுக்கு இணக்க மறுக்கின்ற சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ் மக்களை நெருங்க முடியவில்லை. அதுவே தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்திருக்கிறது.
தேர்தல் முடிவுகளை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறதோ, அதுபோலவே அவர்களின் கண்களுக்குத் தெரிகின்ற ஈழ வரைபடத்தையும் அவர்களால் மறக்க முடியாமல் இருக்கிறது.
இந்த கோடுகளைப் போட்டது நிச்சயமாக தமிழ்ப் பேசும் மக்கள் அல்ல. அதனை கீறி விட்டது சிங்கள பௌத்த பேரினவாதிகள் தான். அவர்கள் தமது அரசியல் நலன்களுக்காக உருவாக்கிய மாயைகள் இன்று அவர்களையே துரத்துகின்றன.
ஈழக் கனவோ, ஈழ வரைபடமோ எதுவாயினும், அதனை தீர்மானிப்பது தனிநபர்களல்ல மக்கள் தான்.
இதை, தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றும் வாய்ப்பும் சூழலும் இன்னமும் இருக்கிறது என்பதை சிங்கள அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு மாறாக, ஈழ வரைபடத்தை வைத்து தெற்கின் வாக்குகளை அறுவடை செய்வதற்கு முயன்றால், இந்த வரைபடத்தில் உள்ள கோடுகள் அழிக்க முடியாதபடி இன்னும் உறுதிபெற்று விடும்.
- சத்ரியன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment