நீள்புவியில் நல் அருவிகள் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


வள்ளுவரின் குறள் படித்தால்
மனமாசு அகன்று விடும்
தெள்ளுதமிழ் மூலம் அவர்
தேடி எமக் களித்துள்ளார்
அள்ள அள்ள குறையாத
அத்தனையும் தந்த அவர்
அருவி எனப் பாய்ந்தோடி
அனைவரையும் விழிக்கச் செய்தார்

ஆண்டவனை நினைப்பதற்கும்
அமைதியாய் வாழ்வதற்கும்
வேண்டுகின்ற கருத்தெல்லாம்
விதம்விதமாய் தந்த குர் ஆன்
நீண்டதொரு அருவியென
நீள்புவியில் ஓடிநிதம்
ஆண்டவனின் குரலாக
அனைவருக்கும் இருக்கிறது


பைபிள் எனும் வேதநூல்
பலமொழியில் வந்துளது
உள்ளமெலாம் ஒளிஊட்ட
உரமாக நிற்கிறது
தெள்ளுதமிழ் பைபிளிப்போ
சிறப்பான அருவியென
கள்ளமெலாம் கரைந்திடவே
காத்திரமாய் ஓடுதிப்போ


கண்ணனது கீதையினால்
கசடரெலாம் விழிப்புற்றார்
எண்ணமெலாம் சிறப்படைய
எல்லோரும் படிக்கின்றார்
கீதையெனும் அருவியிலே
கிடந்தெழுந்து வந்துவிடின்
போதையெலாம் தெளிந்துவிடும்
பொறிபுலனும் ஒடுங்கிவிடும்


சமயங்கள் பல அருவி
சாத்திரங்கள் பல அருவி
சன்மார்க்கம் குலைந்துவிடின்
சகதியாய் ஆகிவிடும்
அருவிகள் ஓடவேண்டும்
ஆணவம் அழியவேண்டும்
உணர்விலே நல்லெண்ணம்
ஓடிடட்டும் அருவிகளாய்


கண்ணனும் அருவியானார்
கர்த்தரும் அருவியானார்
எண்ணியே பார்க்கும்போது
எம்நபியும் அருவியானார்
மண்ணிலே உள்ளாரெல்லாம்
மாண்புறவே வாழ்வதற்கு
புண்ணியர்கள் யாவருமே
புனிதநீர் அருவியானார்

-->















No comments: