மழைக்காற்று - ( தொடர்கதை ) அங்கம் 14 - முருகபூபதி


மழை வீழ்ச்சி படிப்படியாக குறைந்துகொண்டு வந்தது.
அபிதா, வீட்டின் முற்றத்திலும் , பின்புற வளவிலும்  எங்காவது   மழைநீர் தேங்கியிருக்கிறதா? எனப்பார்த்தாள்.
சுத்தமான நீரில்தான் டெங்கு உற்பத்தியாவதாக  செய்திகளில் படித்திருந்தாள். வீதியோரங்களில்  வீட்டுக் கழிவுகளை பிளாஸ்ரிக் பைகளில் கட்டிப்போட்டாலும், அவற்றை மாநகர சபை சுத்திகரிப்பாளர்கள் வந்து அப்புறப்படுத்துவதற்கு முன்னர், நாய்களும், பூனைகளும், காகங்களும் வந்து கொத்தித் திறந்து தெருவெங்கும்  இழுத்துப்போட்டுவிட்டு செல்கின்றன. அந்தக்கழிவுப்பொதிகளில் ஏதும் தின்னக்கிடைக்குமா எனத் தேடி ஆராய்கின்றன.
மனித மனங்களும் இப்படித்தானே…? மற்றவர்களை ஆராய்கின்றன!
வீதியோரத்தில்  சிதறிக்கிடக்கும் கழிவுகளும் மழையினால்  அள்ளுப்பட்டு எங்காவது சென்று தேங்கிவிடுவதாலும்  அவ்விடத்தில் நுளம்பு உற்பத்தியாகலாம் என்றுதான் அபிதாவும் மற்றவர்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.
ஒரு நாள் டெங்கு தடுப்பு கண்காணிப்பாளர்கள் வந்து, வீட்டு முற்றங்களிலும் பின்புறக் காணிகளிலும் கிடக்கும் தேங்காய் சிரட்டைகளிலும் , இளநீர் குடித்துவிட்டு வீசப்படும் அதன் பாகங்களிலும்  தேங்கும் மழைநீரில் உற்பத்தியாகும் டெங்கு நுளம்புகளை பக்குவமாக சிறிய போத்தல்களில் எடுத்து காண்பித்து, வீட்டுரிமையாளர்களிடம் தண்டப்பணம் வசூலிக்கும் தகவலையும் , அந்த வீதியில் இளநீர் விற்கும் பெண் சொல்லி அறிந்துவைத்திருந்தாள் அபிதா.
டெங்கு நுளம்பிற்கும் சுத்தமான தண்ணீர்தான் தேவைப்படுகிறது என்பதை அறிந்து அபிதாவும் ஆச்சரியமுற்றாள்.
வீட்டினுள்ளே நிறைந்திருக்கும் வேலைகளுக்கு மத்தியில், இந்த மழைக்காலத்தில், வீட்டின் முற்றத்தையும் பின்வளவையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டிய பொறுப்பும் அவள் தலையில் விழுந்துவிட்டது. பகல் பொழுதில் எல்லோரும் வேலைக்குச்சென்ற பின்னர் வீட்டிலிருப்பது அவள் மாத்திரம்தானே?

அன்று எதிர்பாராதவகையில் சுபாஷினி வீட்டில் நிற்கிறாள். அபிதாவுக்கு பேச்சுத்துணை கிடைத்தாலும், பேசப்படும் விடயம் மனதிற்கு உவப்பானதாயில்லையே! வீட்டினுள்ளே இருந்தால் சுபாஷினிக்கு தேறுதல் சொல்வதிலேயே அன்றைய பகல் பொழுது கழிந்துவிடும். அதனால், முற்றத்தையும் பின் வளவையும் கூட்டிப்பெருக்கித்  துப்புரவாக்கினாள்.
அதற்கு வசதியாக மழையும் ஓய்ந்திருக்கிறது. பின்வளவில் உதிர்ந்து கிடக்கும் காய்ந்த இலை சருகுகளை கூட்டிப்பெருக்கி  மூலையில்  ஒதுக்கினாள். சில சருகுகள் ஈரமணலில் புதைந்துகிடக்கின்றன. விளக்குமாறின் ஈர்க்குகளினால் அவற்றையும் கிண்டி அப்புறப்படுத்தும்போது, மனித மனங்களையும் அவற்றோடு ஒப்பீடு செய்துகொண்டாள்.
ஆழ்மனதில் புதைந்துகிடக்கும் அவமானங்கள், கறைகள், குறைகள், குழறுபடிகளும் இவ்வாறு யாராலோ  கிண்டப்படுவதனால்தானே மேற்கிளம்புகின்றன. நிலத்திலிருந்து விளக்குமாறினால் கிளறி எடுக்கப்படும் சருகுகளை கூட்டிப்பெருக்கி குவித்து தீயிட்டுக்கொளுத்திவிட  முடிகிறது. ஆனால், மனித மனங்களில் ஆழப்புதைந்துள்ள அழுக்குகளை அவ்வாறு அழித்துவிடமுடிகிறதா?
வீட்டின் வெளியே அபிதா நடமாடிக்கொண்டிருந்தாலும், மனம் முழுவதும் வீட்டின் உள்ளேதான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. 
குப்பை மேட்டிற்கு தீவைப்பதற்காக சமையலறையில் தீப்பெட்டி எடுப்பதற்கு உள்ளே வந்தாள். சுபாஷினியின் அறையில் படுக்கை விரிப்பு  உதறும் சத்தம் கேட்கிறது.
வந்து பார்த்தாள். சுபாஷினி ஒரு சூட்கேஸில் தனது  உடுபுடவைகளை அடுக்கிக்கொண்டிருக்கிறாள். அவளது கட்டில் விரிப்பு மடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
 “ என்ன விசர் வேலை செய்றீங்க சுபா..? “ விருட்டென வந்து அவளது கையில் மடித்தவாறிருந்த துவாயை இழுத்துப்பறித்தாள் அபிதா.
 “ விடுங்க… அபிதா… எனக்கு இங்கே இனிமேல் இருக்கப்பிடிக்கவில்லை. அவள் ஜீவிகாவின் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கவேணும். அது இனி முடியாது.  காயப்பட்டுப்போனேன். “  விம்மிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள் சுபாஷினி.
 “ யாருக்குத்தான் காயங்கள் இல்லை. இந்த வீட்டுக்கு வந்து இத்தனை நாட்களாகிவிட்டது. வீட்டு வேலை… வேலையே வாழ்க்கையாகிவிட்டது. எனக்கு நேர்ந்த காயங்களை சொல்லிக்கொண்டிருக்கின்றேனா  பாருங்கள். நானும் எவ்வளவோ அவமானப்பட்டிருக்கிறன். அதிலிருந்து தப்பி வருவதற்காகத்தான் இந்த நிகும்பலைக்கே வந்தேன்.  சுபா,  நான் தொழில் முறை வேலைக்காரியோ சமையல்காரியோ இல்லை. ஜீவிகா பத்திரிகையில் போட்டிருந்த சிறுவிளம்பரத்தை பார்த்துவிட்டு புறப்பட்டு வந்தேன். வரும்போதே பொலிஸ்காரங்களும் என்னோடு வந்து அமர்க்களப்படுத்திவிட்டுப் போனாங்கள்.  “
சுபாஷினி கட்டிலில் தலைகுனிந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது முகத்தைத்  தடவி நாடியை உயர்த்திய அபிதா,  “  ஒன்றுக்கும் யோசியாதீங்க.. எல்லாம் வெய்யில் பட்ட பனிபோல மறைந்துவிடும். காலம் காயங்களை மாற்றும் சுபா.  ஒரு விடயத்தை கவனித்தீங்களா..? உங்களுக்கு ஆசைவார்த்தை காண்பித்து ஏமாற்றி வஞ்சித்த அவன், பெயர் என்ன…? , என்னவோ… அவன் காணாமலேயே போய்விட்டான். அவன் படகில் ஏறி அவுஸ்திரேலியா போயிருக்கலாம். அல்லது நடுவழியில் படகு கவிழ்ந்து மூழ்கியுமிருக்கலாம். ஆனால், அவன் இனி உங்கள் வாழ்க்கையில் இல்லை என்பது நிச்சயமாகிவிட்டுது. இனி நீங்க புதியவாழ்க்கையை தொடங்கவேண்டும். வாழ்க்கையில் நீங்கள், நான் இப்படி எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். சுபா…, ஒன்று செய்வோமா..? பாதிக்கப்பட்ட பெண்கள் கழகம் என்று ஒரு அமைப்பை தொடங்குவோமா…? “  எனச்சொல்லிவிட்டு அபிதா கலகலவென சிரித்தாள். சுபாஷினிக்கும் புன்னகை வந்தது.
அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலிருந்து மணியோசை கேட்கிறது. மதியவேளைக்கு முந்திய  பூசை அங்கு தொடங்கியிருக்கும்.  அப்போது கேட்டருகிலிருந்து  சைக்கிள் மணியோசையும் வந்தது.
தபால்காரன் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தான். அபிதா விரைந்து வந்து கடிதங்களை வாங்கினாள். அவற்றுள் ஜீவிகாவுக்கு ஒரு இலக்கிய சஞ்சிகையும் வந்திருக்கிறது.
 “ எனக்கேதும் வந்திருக்கிறதா..?  “ என்று அறையிலிருந்தவாறே குரல் எழுப்பினாள் சுபாஷினி.
 “ இல்லை. எல்லாம் ஜீவிகாவுக்குத்தான். “ எனச்சொல்லி, அவற்றை ஜீவிகாவின் அறையில் வைத்துவிட்டு, மீண்டும் சுபாஷினியின் அறைக்குள் வந்தாள் அபிதா.
சுபாஷினி தொடர்ந்தும் தலைகுனிந்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அவளைத்தட்டி எழுப்பிய அபிதா,  “ எழுந்து வாங்க… வந்து எனக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்யுங்க. பேசிக்கொண்டே வேலை செய்தால், பொழுது போய்விடும். அதற்கு முதல், இங்கேயிருந்து வெளியேறும் எண்ணத்தையே கைவிட்டுவிடுங்க… பிளீஸ்…..  “ சுபாஷினியின் தலையை ஆதரவோடு தடவினாள் அபிதா.
 வற்றாத அன்பு சுரக்கும் இவளை விட்டுத்தான் எப்படி போகமுடியும். தாய்க்குத்தாயாய், சகோதரிக்கு சகோதரியாய், சிநேகிதிக்கு சிநேகிதியாய் வந்திருக்கும் இவளை வீட்டைக்கூட்டிப்பெருக்கும் வேலைக்காரியாகவும்  சமைத்துப்போடும் சமையல்காரியாகவும் மாத்திரம் எப்படி ஏற்றுக்கொள்வது. இவளை விட்டுப்பிரியவே கூடாது என்ற தீர்மானத்துடன் சுபாஷினியும் எழுந்துவந்தாள்.
அவளது முகத்தில் தோன்றிய பிரகாசத்தை அபிதா கூர்ந்து ரசித்தாள்.
“  மழைவிட்டிருக்கு.  வோஷிங் மெஷினில் துணிகளை போடப்போறேன். உங்களதும் ஏதும் இருந்தால் தாங்களேன். போட்டிடுவோம்.  “ அபிதா சுபாஷினியிடம் கேட்டதும் எடுத்துவந்து கொடுத்தாள்.
 “ அபிதா, தொடர்ந்து வீட்டு வேலையே செய்துகொண்டிருக்கிறீங்க… உங்களுக்கு சலிப்பே வருவதில்லையா..?  “
 “ தப்பித்தல் என்று ஒரு சொல் இருக்கிறது. தெரியுமா…?  கவலைகளிலிருந்து, பிரச்சினைகளில் இருந்து தப்பித்தல். அதற்கு ஏதாவது ஒரு உருப்படியான வேலை செய்துகொண்டிருக்கவேண்டும். நானும் அப்படித்தான். அவரும் குழந்தையும் போனபிறகு என்னை நான் ஆற்றுப்படுத்திக்கொண்டது அப்படித்தான்.  “ என்றாள் அபிதா.
வோஷிங் மெஷினில் உடைகளைப்போட்டு சவர்க்காரத்தூளும் இட்டு இயக்கியபின்னர், அந்த அறையை விட்டு வெளியே வந்த அபிதா,  “ நீங்க சூரிய உதயம் – அஸ்தமனம் பார்த்திருக்கிறீங்களா சுபா..? எனக்கேட்டாள்.
இவள் அபிதாவைப்புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். ஆறுதல் சொல்வாள். திடீரென்று  சொல்லவந்த ஆறுதலுக்கான பின்னணிகளை மறந்து வேறு ஏதோ பேசுவாள். வோஷிங் மெஷினுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்…? !
               “ நுவரேலியாவிலிருந்தபோது சிவனொளி பாத மலைக்கு ஏறி  சூரிய உதயம் பார்த்திருக்கிறேன். இங்கே நிகும்பலையில் ஜீவிகா, மஞ்சுளாவுடன் கடற்கரையில் சூரிய அஸ்தமனம் பார்த்திருக்கின்றேன். ஒரு நாள் அவன் நிமாலுடனும் இங்கே  பீச்சுக்கு வந்து நெடுநேரம் இருந்து பார்த்து ரசித்திருக்கிறேன்.  “  என்றாள் சுபாஷினி.
 “ நான் இன்னமும் சூரிய உதயமோ அஸ்தமனமோ,  பார்த்ததில்லை. இன்றைக்கு பின்னேரம் போவோமா..? மழைதான் விட்டிட்டுதே… “ எனக்கேட்டாள் அபிதா.
சுபாஷினிக்கும் அது நல்ல யோசனையாகப்பட்டது. ஜீவிகா வீடு திரும்புவதற்கு நேரம் செல்லும். மஞ்சுளாவிடம் வீட்டுச்சாவி இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
அவளுக்கு போன் எடுத்து சொல்லலாம். வேலையிலிருந்து புறப்படும் நேரத்தை கேட்டுக்கொண்டால், அதற்கேற்ப நேரம் கணித்து கடற்கரையிலிருந்து திரும்பிவிடலாம் என்று சுபாஷினி மணக்கணக்குப்போட்டாள்.
மதியம் கடந்ததும் மஞ்சுளாவுக்கு போன் எடுத்து, இன்று மாலை பீச்சுக்குப்போகவிருப்பதை சொன்னாள். அவளும் வேலை முடிந்து அங்கே நேரே வருவதாகவும். அபிதாவிடம் சொல்லி ஏதும் தின்பண்டம் செய்து எடுத்துவருமாறும் கேட்டுக்கொண்டாள் மஞ்சுளா.
  ‘ ஏன்தான் இவளிடம் இப்போது இதனைச்சொன்னேன் ‘ என்று மனதிற்குப்பட்டது சுபாஷினிக்கு.
 “ பாவம் அபிதா. அவள் இங்கே எத்தனை வேலைகளைத்தான் செய்வது. அபிதாதான் இன்றைக்கு பீச்சுக்குப்போகும் திட்டத்தையே சொன்னது. போகும்  வழியில் ஏதும் வாங்கிக்கொள்ளலாம். வழி நெடுகத்தானே சாப்பாட்டுக்கடைகள் இருக்கிறது.  “ எனச்சொல்லிவிட்டு, சுபாஷினி கைத்தொலைபேசியை அணைத்தாள்.
மதிய உணவுக்குமேல் சுபாஷினி கண்ணயர்ந்தாள். முதல்நாள் இரவின்   தூக்கமற்ற  தவிப்பின் எதிரொலியோடு,  காலையில் எழுந்து தோய்ந்தபின்னர், நெய்த்தோசை சாப்பிட்டதனாலும், அதற்கும் மேல் மதிய உணவுண்டதனாலும்  பின்தொடர்ந்து வந்த உறக்கம்.
இந்த வீட்டுக்கு அபிதா வந்த பின்னர் தனது உடல் சற்றுப்பருத்திருப்பதையும் நிலைக்கண்ணாடி முன்னால் நின்று  இடுப்பை இருபுறமும் திருப்பி அவதானித்தாள்.  ‘ தான் மட்டுமல்ல. மற்ற இருவரும்தான். ஆனால், அபிதா மாத்திரம் வந்தன்று இருந்தது போலவே இருக்கிறாளே…?  முகத்தில் மாத்திரம் சிறிய மினுமினுப்பு தெரிகிறது. உடல் இன்னமும் ஒல்லிதான்.  நாமில்லாத வேளைகளில் ஏதும் தேகப்பயிற்சி செய்கிறாளோ…? வீட்டில் குவிந்திருக்கும் வேலைகளே இவளுக்கு தேகப்பயற்சிதான். அதுவே  போதுமானதாயிருக்கலாம். இவள் இங்கிருக்கும் ஜிம்முக்கும் போயிருக்கமாட்டாள். அது இருக்கும் இடமும்  இவளுக்குத் தெரியாது. ஜீவிகா இடைக்கிடை போய்வருவதுண்டு. அவளது வேலை அப்படி. தொடர்ந்தும் அமர்ந்திருந்து கணினியில் தட்டும் வேலை. மஞ்சுளாவுக்கும் தனக்கும் அப்படி இல்லை.  நடந்து திரியவேண்டும். அப்படியிருந்தும் அபிதாவின் சுவையான சமையலால் உடலில் – இடையில் ஒரு சுற்றுப் பருமன் தெரிகிறது. இனி கவனிக்கவேண்டும்.
வோஷிங் மெஷினில் போட்ட உடைகளை வெளியே காயப்போடுவதற்கும் அபிதாவுக்கு சுபாஷினி உதவினாள். அப்போது மீண்டும் மழைவருமோ என்ற யோசனையும் அவர்களிடம் பேசுபொருளானது.
அப்போது அபிதா,  தனது சிறிய வயதில் நடந்த கதையொன்றை சுபாஷினியிடம் சொன்னாள்.
 “ அப்போது எனக்கு  ஏழு வயதிருக்கும். ஒரு மழைக்காலம். இரவில் குளிராகவிருக்கும்.  பாட்டியை  அணைத்துக்கொண்டு படுத்திருப்பேன்.  பாட்டி தலையை வருடியவாறு கதைகள் சொல்வார். அன்றிரவு,  “ பாட்டி, இரவில் மழைவந்தால் நல்லது. குளிரோடு நல்ல தூக்கமும் வரும். பகலில் மழை வந்தால், ஸ்கூலுக்கு நனைந்துகொண்டு போகவேண்டியிருக்கும். ஸ்கூல் மைதானத்தில் விளையாடவும் விட மாட்டார்கள்.  அதனால்  இரவு மழைதான் எனக்குப்பிடிக்கும்  “ என்றேன்.
அதற்குப்பாட்டி,  “  மழை சொல்லிக்கொண்டு வராது அபிதா. எந்தப்பொழுதிலும் வரலாம். நீ.. இரவில் வரும் மழையை விரும்புகிறாய். ஆனால், எத்தனை ஏழைக்  குழந்தைகள் ஓலைக்குடிசையில் வாழ்கின்றன. மழை ஒழுக்கு வந்தால், அவர்களுக்கு உறங்கத்தான் முடியுமா.. ?  வீதியோரங்களில் படுத்துறங்கி காலத்தைப்போக்கும் ஏழை எளியவர்கள் ஒதுக்கிடம் தேடி ஓடத்தானே வேண்டும். யோசித்துப்பார்  “ என்றாங்க பாட்டி. என்ர பாட்டி அன்றைக்கு சொன்னதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கு பாருங்க சுபா.  “
இதனைக்கேட்ட சுபாஷினி, “ அது சரி… இந்தப்பாட்டி காலத்து கதையெல்லாம் எப்படி உங்களுக்கு நினைவிலிருக்கு..?  “ எனக்கேட்டாள்.
 “ பாட்டி தினமும் தந்த வல்லாறைச்சாறுதான். பூச்சிக்கு நல்லது என்று தந்தாங்க. ஆனா, அது ஞாபக சக்திக்கும் நல்லது என்பதை பிறகுதான் அறிந்தேன்.  “
சுபாஷினி, அபிதாவின் விசித்திரமான கதைகளை நினைத்துக்கொண்டே  மாலை பின்மதிய உறக்கத்தில் ஆழ்ந்துபோனாள்.
மாலை ஐந்து மணிக்குப்பிறகு அபிதாவே வந்து தட்டி எழுப்பினாள்.  அதற்கிடையில் அபிதா, பருப்பு வடையும் செய்து, ஒரு காகிதத்தில் சுற்றி  வைத்திருக்கிறாள். என்ன பெண் இவள்..? இவளால் இதெல்லாம் எப்படி முடிகிறது..? தனது வியப்பை காண்பிக்காமல்,  வடையின் வாசனையை சுபாஷினி நுகர்ந்தாள்.
இருவரும் புறப்பட்டு நிகும்பலை கடற்கரையை நோக்கி நடந்தனர். அந்த வீதி மாலைவேளையில் அமர்க்களமாகியிருந்தது.
கடற்கரையில் சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருந்தனர். அபிதாவின் வாயில்   “ கொக்கு பறபற கோழி பறபற மைனா பறபற…. மயிலே பற… “ சந்திரமுகி திரைப்படப்பாடல் ராகத்துடன் உதிர்ந்தது.
அவள் மீதான வியப்பு சுபாஷினிக்கு கூடிக்கொண்டே இருக்கிறது.
கடல்,  சூரியனின் செங்கதிரால் நிறம்மாறிக்கொண்டிருக்கிறது. அந்தப்பெரிய நெருப்புக்கோளத்தை   இந்து சமுத்திரத்தாய், தனக்குள் இழுத்துக்கொண்டிருக்கிறாள். அபிதா குழந்தையைப்போன்று குதூகலத்துடன் விழி அகல ரசிக்கிறாள்.
அந்த விழியையும் -  செந்நிறமாகிவரும் கடலையும் சுபாஷினி மாறி மாறி பார்க்கிறாள்.  உடல் பாரம் குறைந்து, மனம் இறுக்கம் குறைந்து  காற்றில் பறப்பதுபோன்ற உணர்வைத் தருகிறது.
( தொடரும் )
-->

No comments: