திருவிளக்குத் திருவிழா - ஒரு நோக்கு மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்


    " ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே " என்று இறைவனை மனமெண்ணி துதிப்பதும் , பிரார்த்தனை செய்வதும், பாடுவதும், ஆடுவதும் , நடைமுறையில் இருந்து வருகிறது.இறைவனைக் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை எம்மால் சொல்லிவிட முடியாமலே இருக்கிறோம். ஆனாலும் இறைவன் இருக்கிறான் என்பதைப் பலரும் நம்பியே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இறைவனை கல்லிலும், செம்பிலும், மண்ணிலும், மரத்திலும், பொன்னிலும், நிலத்திலும், நீரிலும், காற்றிலும், தீயிலும், ஒளியிலும் ஒலியிலும், மழையிலும், இடியிலும், என்று பலநிலையில் காண முற்படுகின்றோம். இந்த வகையில் ஒளிவடிவில் இறைவனை மனமிருத்தும் தத்துவார்த்தமான விழாவாக விளங்குவதுதான் கார்த்திகை மாதத்தில் வருகின்ற " திருவிளக்குத் திருவிழா " எனலாம்.
    தீபத்திருவிழா என்றதும் " தீபாவளி " பண்டிகைதான் எங்கள் மனதில் வந்து முதலில் நிற்பதாகும். உண்மையில் கார்த்திகையில் வருகின்ற விழாவினைத்தான் " தீபாவளி " என்று கொள்ளுதல் வேண்டும் என்னும் ஒரு கருத்தும் இன்று பரலாகி வருகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். தீவ + ஆவலி என்றால் தீபங்களை வட்டமாக வைப்பதாகும். கார்த்திகை விழாவிலும் தீபங்கள் வரிசையாயும் வட்டமாயும் வீட்டு வாசல்களில் வைக்கப் படுகிறது. கோவில்களிலும் வைக்கப் படுகிறது. எனவே கார்த்திகையில் வருகின்ற"  திருவிளக்கு விழாவினை " தீப ஒளித் திருநாள் " என்றால் பொருந்தாதா என்று கேட்கும் நிலையும் உருவாகி வருகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தாக இருக்கிறதல்லவா
    தீபாவளி எனும்பொழுது ஆணவம் அடங்கிய நிலை அடையாளப்படுத்தப் படுகிறது. கார்த்திகை தீபத்திருவிளக்கு விழாவும் ஆணவம் அடங்கிய நிலையினயே காட்டி நிற்கிறது. தீபாவளியில் திருமால் இணைக்கப்படுகிறார்.கார்த்திகை தீபத்திருவிளக்கு விழாவில் சிவன் இணைக்கப்படுகிறார்.சிவன் என்பதோ திருமால் என்பதோ முக்கியமல்ல . இறை என்பதுதான் இங்கு முக்கியமாகும். அதாவது ஆணவம் அடங்கினால் இறையின் தரிசனம் கிடைக்கும் என்பதுதான் இதன் உண்மையான தத்துவமாக பொதிந்து கிடக்கிறது எனலாம்.

    அடிமுடி தேடிய வரலாறு, ஆறுமுகப் பெருமான் தோன்றிய வரலாறு, என்று பல வரலாறுகள் கார்த்திகை திருவிளக்குத் திருவிழாவுடன் தொடர்பு படுத்தப் படுகிறது.இங்கெல்லாம் முக்கியத்துவம் பெற்று நிற்பது ஒளியேயாகும் . அடி முடி  வரலாற்றில் இறைவன் ஜோதிப் பிளம்பாக வந்தார் என்பதும், ஆறுமுகன் வரலாற்றில் இறைவனின்  நெற்றிக் கண்ணில் தோன்றிய ஒளிப் பொறியே ஆறுமுகனாக கொள்ளப் பட்டார் என்றும் கருதும் நிலையில் ஒளிதான் முக்கியம் பெற்று நிற்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். 
   ஆதிகாலத்து மனிதன் வாழ்க்கையில் ஒளி மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்தது. இருளைக் கண்டால் பயந்த மனிதன் ஒளியைக் கண்டபொழுது உவகை உற்றான். ஒளி எப்படி வருகிறது என்பதை அவனால் அறிய முடிய வில்லை. இதனால் ஒளி என்பது உயர்வானது என்னும் கருத்து அவனின் உள்ளத்தினுள் இறுக்கமாய் அமர்ந்து கொண்டே விட்டது எனலாம். மனித வரலாற்றில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் பின்னர் அறம் என்றும் நீதி என்றும் கடவுள் என்றும் சமயம் என்றும் ஏற்பட்ட பின்னரும் கூட ஒளியின் இருக்கை என்பதும் முக்கியத்துவத்தை இழக்காமலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதன் நிலையினையே கார்த்திகை திருவிளக்குத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ?
       இந்து சமயத்தில் விளக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்று நிற்கிறது. எந்தவொரு நிகழ்ச்சியானாலும் விளக்கு இல்லாமல் அந்த நிகழ்ச்சி இடம்பெறவே மாட்டாது. மங்கலம் என்னும் அரிய கருத்து விளக்குடன் இணைக்கப்பட்டே விட்டது. விளக்கினை சகல செல்வங்களும் தரும் இலக்குமி ஆகவே ஆக்கியும் விட்டார்கள். இறைவழி பாட்டில் ஒளியின் இடம் மிகவும் இன்றியமை யாததாகும். ஒளியின் அடையாளங்களாக பல விளக்குகள்  கோவில்கள் தோறும் இருக்கின்றன. இறைவனுக்கு நடைபெறும் பூசையின் பொழுது காட்டப்படும் பலவித தீபங்கள் அனைத்துமே ஒளியின் வெளிப்பாடே எனலாம். 
      கார்த்திகைத் திருவிளக்குத் திருவிழா என்றால் எல்லோர் எண்ணங்களிலும் திருவண்ணாமலைதான் முன்வந்து நிற்கும். அங்குதான் இவ்விழா மிகவும் பக்திபூர்வமாக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல பஞ்சபூத தலங்களில் அக்கினிக்குரிய தலமாகக் கொள்ளப் படுவதும் திருவண்ணாமலைத் தலமேயாகும். அக்கினிக்கான தலத்திலே கார்த்திகைத் திருவிளக்கு விழாவினைச் செய்வதுதான் மிகவும் பொருத்தம் என்னும் ஐதீகம் தொடர்ந்து கொண்டே வருவதால் திதுவண்ணாமலைக் கார்த்திகைத் தீப விழா இந்துக்களின் முக்கிய சமயவிழாவாக அமைந்து விட்டது.
   திருவண்ணாமலையின் உச்சியில் மிகப்பெரிய தீபம் ஏற்றப் படுகிறது. மூன்று தொடக்கம் நான்கு நாட்கள்வரை எரியும் இத்தீபம் அறுபது மீட்டர்வரை ஒளியினைக் காட்டி நிற்கும். அண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகைத் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும் எனலாம். இத்தீபங்கள் ஏற்றப் படுவதால் பலனுண்டா என்னும் வினாவும் இல்லாமல் இல்லை. இந்து சமயத்தில் நம்பிக்கைகள் பல இருக்கின்றன. ஆனால் மூட நம்பிக்கைகளை விதைக்க முற்படுவதால்த்தான் கடவுளையோ சமயத்தினையோ கேள்விக்கு ஆளாக்கும் நிலை ஏற்படுகிறது எனலாம். எக்காரியத்துக்கும் அர்த்தம் இல்லாமல் இந்துசமயம் இருக்கவில்லை என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். அர்த்தத்தை மக்கள் மனதில் அமர்த்திட அங்கு இறை நம்பிக்கையை இணைத்திருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டால் எந்தச் சிக்கலுக்கும் இடமிருக்காது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.  
     பெருந்தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் அப்படிப் புயல் தோன்றுமாயின் அதன் வேகம் தணிக்கப்படும் என்று நம்பப் படுகிறது. திருவிளக்குகள் ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையில் உள்ள இணைப்பை உணர்த்தி நிற்கின்றன. விளக்கில் எரிகின்ற சுடரானது  நமக்கு நன்றாகத் தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச் சுடரானது  எண்ணெயை மெல்ல மெல்ல கிரகித்தே எரிகிறது என்பது நாமுணரவேண்டிய அகத் தோற்றமாகும். வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான நுட்பமான புறத்தோற்றத்தையும் உணர்ந்து செயற்பட வேண்டு என்பதை  எடுத்துக்காட்டி நிற்பதே தீபவளிபாட்டின் உட்கருத்தாகும்.
       மிருகத்துடன் காட்டில் வாழ்ந்த மனிதன் நாளடைவில் காட்டைவிட்டு நாட்டுக்கு வருகிறான். நாட்டினை உருவாக்கி தனது வாழ்வினை வளமாக்குகின்றான். அவ்வழியில் சமயம் முகிழ்க்கிறது. கடவுள் நம்பிக்கை எழுகிறது. மனிதனே தனக்கான வழிபாட்டு முறைகளை உருவாக்குகிறான். இங்குதான் நம்பிக்கை என்பது தலைமை வகிக்கிறது. அந்த நம்பிக்கைதான் கடவுளையே தோற்றுவிக்கிறது. நம்பிக்கையின் அடிப்பபடையில் பல கதைகள் உருவாகின்றன. அக்கதைகள் நம்பக்கூடியனவா நம்ப முடியாதனவா என்பது விவாதம் அல்ல. அக்கதைகள் மனிதனை நல்வழிப் படுத்த உதவியாய் அமைந்தன என்பதை மறுத்துவிட முடியாது. 
    இந்த வகையில் உருவான பல புராணங்களை விமர்சனம் செய்வதோ அல்லது கிண்டல் கேலி செய்வதோ பொருத்தம் உடையதாகத் தெரியவில்லை. தத்துவங்களை அப்படியே சொன்னால் ஏற்றுக் கொள்ளுவது என்பது மிகவும் கடினமாகும். அதனால் சாதாரண மக்களும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் உண்மைகளும் தத்துவங்களும் நல்லவடிவில் கதை என்னும் வடிவமாக்கப்படும் தேவை அவசியமானது. அந்தவகையில் கார்த்திகை திருவிளக்கு விழா பற்றி புராணக்கதைகள் பல இருக்கின்றன. அவற்றை நம்புவதா ? அப்படியெல்லாம் நடக்குமா?  என்றெல்லாம் எண்ணும் பாங்கினை விட்டுவிட்டு மனித வாழ்வினை வையத்துள் வாழ்வாங்கவாழ உதவும் நல்ல கருத்துக்களை சமயத்தின் ஊடாகவும் இறையென்னும் மெய்பொருளின் ஊடாகவும் காண்பதும் கருத்திருத்துவதுமே பண்புடை செயலாகும். அந்தவகையில் கார்த்திகைத் திருவிளக்கு விழாவினை மனமிருத்துவோம் ! ஒளிமயமாக இறைவனைக் காண்போம். ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்து இருப்போம். ஜோதிப் பிளம்பாக இறையினைக் காணுவோம் !


   
-->












No comments: