தமிழ் சினிமா - தனுசு ராசி நேயர்களே திரைவிமர்சனம்

பல ஹிட் படங்கள் கொடுத்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ள படம் தான் 'தனுசு ராசி நேயர்களே'. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். படம் எப்படி இருக்கு? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கதை:
ஹீரோ ஹரிஷ் கல்யாண் கார் ஷோரூமில் வேலை பார்க்கிறார். தனுசு ராசிகாரர் என்பதால் அவருக்கு கன்னி ராசி கொண்ட பெண் தான் மனைவியாக வருவார் என ஜோசியர்கள் கூறுகின்றனர். சிறிய வயது முதலே ஜோதிடத்தின் மீது அதிகம் நம்பிக்கை கொண்டவர் அவர், அதனால் ஜோசியர் சொன்னதை நம்பி கன்னி ராசி பெண்ணை தேடி அலைகிறார்.
Facebook, whatsapp என காதல் பல பரிமாணங்களை தொட்டுவிட்ட இந்த காலத்தில் இவர் ராசி பற்றி கேட்டாலே அனைத்து பெண்களும் தெறித்து ஓடுகின்றனர்.
அந்த நேரத்தில் அவரது முன்னாள் காதலி ரெபா மோனிகா தன் திருமணத்திற்கு பெங்களூரு வரும்படி அழைக்கிறார். அங்கு தான் ஹரிஷ் கல்யாண் ஒரு புது பெண்ணை சந்திக்கிறார். அவருடன் காதல், மோதல் என பல விஷயங்கள் நடக்க, இறுதியில் ஹரிஷ் யாரை தான் திருமணம் செய்தார் என்பது மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்:
ஒரு சாதாரண காதல் கதையை எடுத்து மிக நீளமாக படமாக்கியுள்ளார் இயக்குனர். ட்ரைலர் பார்க்கும்போது நமக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது, ஆனால் படம் பார்க்கும்போது அதற்கு நேர்மாறான ரியாக்ஷன் தான்.
ஒன்லைன் நன்றாக இருந்தாலும், திரைக்கதைக்காக இயக்குனருக்கு மார்க் போட்டால் பாஸ் ஆவதே கஷ்டம் தான்.
ஹரிஷ் கல்யாண் வழக்கம் போல சாக்லேட் பாய் தோற்றத்தில் சிறப்பாக நடித்தாலும், பெரிதாக ஸ்கோர் செய்யும் அளவுக்கு அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லை. ஹீரோயின் டிகங்கனா சூர்யவன்ஷி கவர்ச்சியை படம் முழுக்க அள்ளி தெளிக்கிறார். ரொமான்ஸ், டான்ஸ், கவர்ச்சி என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். ஹீரோயின் ரோலை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வடிவமைத்திருக்கலாம்.
ரெபா மோனிகா தன் சிறிய ரோலில் குறைஎதுவும் வைக்காமல் நடித்துள்ளார்.
படத்தின் நடுநடுவே வரும் யோகிபாபு தேவையில்லாத இணைப்பு. படம் முழுக்க வரும் முனிஷ்காந்த் சிறப்பாகவே நடித்துள்ளார்.
பாசிட்டிவ்:
- ஒளிப்பதிவு மற்றும் இசை.
- ஹரிஷ் கல்யாண்-டிகங்கனா கியூட்டான நடிப்பு.
நெகடிவ்:
- சுத்தமாக ஒர்கவுட் ஆகாத காமெடி.
- படத்தின் நீளம் 2 மணி நேரம் தான். ஆனால் படம் முழுக்க ஒரே டோனில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லாமல் இருப்பது சலிப்பை தான் ஏற்படுத்துகிறது.
- பெண்களை கவர்ச்சியாக காட்ட மெனக்கெட்ட அளவுக்கு இயக்குனர் திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம்
உழைத்திருக்கலாம். பல காட்சிகளில் blur ஆக்கி மறைக்கும் அளவுக்கு பெண்களை ஆபாசமாக எடுத்துள்ளனர்.
-சீரியல் தனமாக இருக்கும் சில காட்சிகள், கிளைமாக்ஸ் உட்பட.
மொத்தத்தில் தனுசு ராசி நேயர்களே 'சோதனை' தான். எதிர்பார்ப்பில்லாமல் ஒருமுறை பார்க்கலாம்.  நன்றி CineUlagam

No comments: