09/12/2019 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மிகப் பெரிய சவால்கள் உள்ளன. இலங்கையின் தற்போதைய சூழல் பௌத்த கடும்போக்குவாதிகளின் ஆதிக்கம் நிறைந்ததொன்றாகவே இருக்கின்றது. இனங்களுக்கு இடையே பாரிய சந்தேகங்களும், அச்சமும் இருக்கின்றன. இந்நிலையை மாற்றியமைத்து இலங்கையர் என்ற கொள்கையின் அடிப்படையில் இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.
இவ்வாறு பல சவால்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் முன்னால் இருக்கின்றன. இவற்றை தீர்த்து வைப்பதும் அல்லது பூதாகாரமாக்கிவிடுவதும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் ஆளுமையிலும், கொள்கைகளிலுமே தங்கியிருக்கின்றன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ சிங்கள மக்களின் 70 வீத வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதியாக இருக்கின்றார். அவர் இவ்வாறு சிங்கள மக்களின் வாக்குகளினால் தான் தெரிவு செய்யப்பட வேண்டுமென்று திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தான் சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்று கோத்தாபய ராஜபக் ஷவும், முதற் தடவையாக சிங்களவர்களினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று பௌத்த கடும்போக்குவாதிகளும், பெளத்த அமைப்புக்களும் பெருமை பேசிக் கொள்வதனையும் காண்கின்றோம்.
இருந்தாலும் அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி. அதனால், பாரபட்சமின்றி செயற்பட வேண்டிய கடமைப் பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. இதேவேளை, இதுவரை தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகளுக்கு கிடைத்ததொரு அங்கீகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு கிடைக்கவில்லை என்பதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கவனம் செலுத்த வேண்டும். அதாவது, சிங்கள மக்களின் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்ட போதிலும், தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் அவர் தவறியுள்ளார். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு கொள்கை வரையப்பட்டதனைப் போன்று தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வெல்லுவதற்குரிய கொள்கைகள் அவரால் வகுக்கப்படவில்லை. அதனால், சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற புகழ்ச்சியை விடவும், மூவின மக்களினதும் அமோக ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற புகழ்ச்சியே பெருமைக்குரியதாகும்.
சிறுபான்மையினரின் வாக்குகள் தமக்கு கிடைக்காது என்ற காரணத்தினால் சிங்கள மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து கொள்கைகள் வரையப்பட்டாலும், தமது செயற்பாடுகளின் மூலமாக தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வெல்ல முடியும். அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எடுக்க வேண்டும்.
இலங்கை பல்லினங்களைக் கொண்டதொரு நாடாகும். இங்குள்ள இனங்களுக்கு இடையே வேறுபட்ட அபிலாஷைகளும், தேவைகளும் இருக்கின்றன. முரண்பாடுகளும் உள்ளன. அபிலாஷைகளும், தேவைகளும் வேறுபட்டிருப்பதனை தடுக்க முடியாது. ஆனால், முரண்பாடுகளை தடுக்க முடியும். இனங்களுக்கு இடையே முரண்பாடுகள், சந்தேகங்கள் என்பன அரசியல் தேவைக்காக திட்டமிட்டு வளர்க்கப்பட்ட நச்சு மரமாகும். இந்த முரண்பாடுகளும், சந்தேகங்களும் அரசியல் தலைவர்களினால் மேலும் வளர்க்கப்பட்டு வருகின்றதேயன்றி, அதனை வேரோடு அழிப்பதற்கு எந்தவொரு ஜனாதிபதியும், அரசாங்கமும் இதுவரை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
ஆதலால், சிங்கள மக்களின் 70 வீத ஆதரவைப் பெற்ற ஒரு ஜனாதிபதி என்ற வகையில் அரசியல்வாதிகள், இனவாதிகள் உள்ளிட்டவர்களினால் சிங்கள மக்களிடையே விதைக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களையும், அரசியல் தலைவர்களையும் பற்றிய பீதியையும், சந்தேகங்களையும் இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனங்களுக்கு இடையே புரிந்துணர்வையும், சகிப்புத் தன்மையையும் உருவாக்கக் கூடிய செயற்திட்டங்களை வகுக்க வேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு இருக்கின்ற சிங்கள மக்களின் பேராதரவை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோத்தபய ராஜபக் ஷ நாட்டை பிரித்துக் கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை சிங்கள மக்களிடையே ஆழப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அப்போதே அவர் சிறந்ததொரு அரசியல் தலைவராக திகழ்வார்.
2019இற்கு முதல் சிறுபான்மையினரின் வாக்குகளினால்தான் ஜனாதிபதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு சிறுபான்மையினரின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகள் சிறுபான்மையினரின் அபிலாஷைகளை புறக்கணித்து, சிங்கள மக்களின் அபிலாஷைகளையே நிறைவேற்றியுள்ளார்கள். பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய கோத்தாபய ராஜபக் ஷ தனக்கு பெரும்பான்மையாக வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடியதொரு ஜனாதிபதியாக விளங்கும் போது, எதிர் காலத்தில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமான ஒருவராக திகழ முடியும். அத்தோடு இலங்கையின் அரசியலில் புதியதொரு அரசியல் யுகத்தை ஏற்படுத்தவும் முடியும்.
புதிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கைகள் நாட்டு மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. அதே போன்று சிறுபான்மையினரின் விவகாரங்களிலும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிறுபான்மையினரிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காக தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அவர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
தமிழர்களில் மிகக் கூடுதலானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு எதிராக வாக்களித்த போதிலும், தமது நல்லெண்ணத்தை தமிழர்களுக்கு காட்டுவதற்காக ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா போன்றோருக்கு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வழங்கியமை நல்லதொரு முடிவாகும். அதே போன்று புலிகளின் மாவீரர் நினைவு தினத்திற்கு தடை விதிக்கப்படும் என்று நாடுமுழுவதும் நம்பிய போதிலும், அதற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்தவில்லை. போராட்டத்தில் மரணித்தவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கு சுதந்திரம் அளித்தமை தமிழர்களிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வெளிப்படுத்திய நல்லெண்ணங்கள் என்றே அடையாளங் காண வேண்டியுள்ளது.
ஆனால், இத்தகையதொரு நல்லெண்ணத்தை முஸ்லிம்களிடம் காட்டவில்லை. முஸ்லிம்களில் ஒருவரை அமைச்சராகவோ அல்லது இராஜாங்க அமைச்சராகவோ நியமனம் செய்திருந்தால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாக்களிக்காது போனாலும், நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமனம் செய்துள்ளேன் என்று நல்ல செய்தியை வலியுறுத்தியிருக்க முடியும். இதனால் , நாம் கடந்த அரசாங்கத்தைப் போன்று தொடர்ந்து புறக்கணிக்கப்படுவோமா என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதேவேளை, கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாக்களித்த முஸ்லிம்களும் கவலையடைந்துள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. கடந்த அரசாங்கத்தில் தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. தாம் வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதியும், அரசாங்கமும் துரோகம் செய்து, ஏமாற்றிவிட்டதாக இன்றும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களிடம் காணப்படும் இந்த கவலையை இல்லாமல் செய்வதற்கு முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எடுக்க வேண்டும்.
நாட்டில் இனவாதக் கருத்துக்களையும், மத நிந்தனைகளையும் மக்களிடையே பரப்பும் அமைப்புக்கள், நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் பௌத்த கடும் போக்காளர்களினாலும், பௌத்த இனவாத பிக்குகளினாலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பௌத்த அமைப்புக்கள், பௌத்த கடும்போக்குவாதிகளுடன் மஹிந்த தரப்பினர் நெருக்கத்தை கொண்டிருந்தமையால்தான் முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு வாக்களிக்கவில்லை என்ற உண்மையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களை பொறுத்தவரை தங்களின் மதச் சுதந்திர பாதுகாப்புக்கும், பள்ளிவாசல்களின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுப்பவர்கள். இதற்கு அடுத்ததாகவே அரசியலை வைத்துள்ளார்கள். தங்களுக்கு மேற்படி விடயங்களில் பாதுகாப்பு இல்லாது போனால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், தற்போது பள்ளிவாசல்கள் ஆகியவற்றிக்கு பாதுகாப்பு இருப்பதாகவே இருக்கின்றது. இது தொடர வேண்டும். சிறிது காலம் அமைதியாக இருந்து விட்டு, பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பௌத்த இனவாத அமைப்புக்கள் மேற்கொள்ளும் ஒரு நடைமுறையும் இருக்கின்றது. ஆதலால், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ முஸ்லிம்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும் போது முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களின் மீதும், பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் சட்டத்திற்கு முன் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இலங்கையில் நீண்ட காலமாக இனப் பிரச்சினை இருந்து வருகின்றது. இதற்குரிய தீர்வுகளையும் காண வேண்டியுள்ளது. அதிகாரங்களை பகிர்வு செய்வது என்பது பிரிவினையல்ல என்பதனை சிங்கள மக்களினதும், பௌத்த அமைப்புக்களினதும் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் சிங்களவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அரசியல் அதிகாரங்கள் மேற்கொள்ளும் போது முஸ்லிம்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் அதிகாரம் கேட்பது எல்லாம் ஆட்சியாளர்களின் புறக்கணிப்பு நடவடிக்கைகளே காரணமாகும்.
ஏப்ரல் 21 தாக்குதல் முஸ்லிம்களை அதிகம் பாதித்துள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரம், அரசியல், சமூக வாழ்வியல் ஆகியவற்றில் பாரிய எதிர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முஸ்லிம்களுக்கு தலைக் குனிவு ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் முஸ்லிம் சமூகத்தோடும், முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனும் தொடர்புபடுத்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது கூட முஸ்லிம்கள் அதிலிருந்து மீளவில்லை. சிங்கள மக்களிடையே இத்தாக்குதல் குறித்து மிகுந்த அச்சம் இருக்கின்றது. ஆதலால், ஜனாதிபதி இத்தாக்குதல் குறித்து ஆணைக் குழு ஒன்றினை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையான குற்றவாளிகள் யார் என்று மக்களுக்கு தெரியப்படுத்தி, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் குறிப்பாக ஒலுவில், நிந்தவூர் பிரதேசங்களில் மிகப் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நூறு ஏக்கர் வயல் மற்றும் தென்னந் தோட்டக் காணிகள் கடலினால் காவு கொள்ளப்பட்டுள்ளன. ஒலுவிலில் அமைந்துள்ள துறைமுக நிர்மாணிப்பில் உள்ள குறைபாடுகளே கடலரிப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றன. இப்பிரதேச மக்கள் தாங்கள் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் பல தடவைகள் கடலரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும், அவர்கள் வீதிகளை மாத்திரம் அமைப்பதில் கவனம் செலுத்தினார்கள். இதனால், இப்பிரதேச மீனவர்களும், மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆதலால், இதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுக்க வேண்டுமென்று இப்பிரதேச மக்கள் கேட்கின்றார்கள்.
மேற்படி விடயங்களில் ஜனாதிபதி கவனம் செலுத்தி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, இன்றைய ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் சந்தோஷப்படுவார்கள். அதே வேளை, வாக்களிக்காதவர்கள் நாம் வாக்களிக்கவில்லையே என்று கவலை கொள்வார்கள். அடுத்து வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானம் எடுப்பார்கள். நல்ல சிந்தனைகளே தலைவர்களை வாழ வைத்துள்ளது. அத்தகைய சிந்தனையாளர்களை வெளிப்படுத்தி, மக்களை நல்வழிப்படுத்தியவர்களையே வரலாறுகள் தமது பக்கங்களில் கதாநாயகன் என்று அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
- சஹாப்தீன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment